.jpg)
"இதோ, அதோ" என்று எதிர்பார்த்துக் காத்திருந்த அறிவிப்பு இந்தியாவின் சார்பில் வெளிவந்து விட்டது. "இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ள மாட்டார். அவருக்குப் பதில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான குழு கலந்து கொள்கிறது" என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்து விட்டது. தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களின் பிரதிபலிப்பா அல்லது இலங்கையில் நடந்த போரின் போதும் சரி, அதற்குப் பிறகும் சரி தமிழர்களுக்கான அதிகாரங்கள், மனித உரிமை மீறல்கள் போன்ற பல விஷயங்களில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற கோபமா என்பது தெரியவில்லை. கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்காததற்கு என்ன காரணம் என்பதை விளக்கிச் சொல்ல வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அறிவித்துள்ளார். அதுபோல் விளக்க அறிக்கை வந்தால் மட்டுமே என்ன காரணத்திற்காக பிரதமர் பங்கேற்கவில்லை என்பது வெளிச்சத்திற்கு வரும்.
இதற்கிடையில் இந்த அறிவிப்பு தமிழகத்தில் உள்ள "திருப்தி அலைகளை" வீச வைத்திருக்கிறதா? என்றால் அடுத்தடுத்து நடைபெறும் போராட்டங்கள் அப்படியில்லை என்பது போல்தான் தோற்றத்தைக் கொடுக்கிறது. ஏனென்றால் இந்தமுறை கொமன்வெல்த் விஷயத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்துமே ஓரணியில் நின்றன என்பதே அதற்கு காரணம். "பெயரளவில் கூட யாரும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளக் கூடாது" என்று தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த இந்த தீர்மானத்தை ஒரு மனதாக அனைத்துக் கட்சிகளும் இணைந்து நிறைவேற்றின. இன்னும் சொல்லப்போனால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே ஆதரித்த தீர்மானம். அதேபோல் தமிழகத்தில் பிரதான எதிர்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் தலைவர் கருணாநிதி, "இந்தியாவிலிருந்து ஒரு துரும்பு கூட கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது" என்று வற்புறுத்தி வந்தார். தமிழகத்தில் பிரதான கட்சிகளாக இருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து ஒரே கோரிக்கையை அரிய சந்தர்பங்களில்தான் வைப்பார்கள். அந்த இணைப்பு இலங்கையில் நடக்கும் கொமென்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் விஷயத்தில் உருவானது.
பல்வேறு விஷயங்களில் எதிரும் புதிருமாக இருக்கும் இந்த இரு கட்சிகளும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் விவகாரத்தில் ஒரு மாதிரியான முடிவினை எடுத்தது காங்கிரஸ் கட்சியை மட்டுமல்ல, தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்காகப் போராடும் மற்ற கட்சிகளை திணற வைத்தது என்றே சொல்ல வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சினை என்றால், வைகோ, பழ.நெடுமாறன், சீமான், கோவை ராமகிருஷ்ணன், குளத்தூர் மணி போன்றோர்தான் உக்கிரத்துடன் பேசுவார்கள். பிரச்சினையை தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்வார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் ஒரே மாதிரியான கோரிக்கையை கொமன்வெல்த் மாநாடு விவகாரத்தில் முன் வைக்க மற்ற தலைவர்களும், அந்தக் கட்சிகளின் போராட்டங்களும் பிரதானப்படுத்தப்படவில்லை. காங்கிரஸ் கட்சிக்கோ இடியாப்பச் சிக்கலாக மாறியது. தமிழகத்தில் உள்ள வெற்றி பெற வைக்கும் முக்கிய கூட்டணிக் கட்சிகள் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும்தான். இந்த இரு கட்சிகளுமே கொமன்வெல்த் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி காங்கிரஸை தமிழகத்தில் தனிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கியதில் சற்று சங்கடப்பட்டுப் போனார்கள் என்றே சொல்ல வேண்டும்.
இதன் விளைவாக மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து "கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும் முடிவை பிரதமர் இன்னும் எடுக்கவில்லை" என்று கூறிவிட்டுச் சென்றார். தமிழகத்தில் தேர்தலில் நின்று ஜெயிக்க வேண்டும் என்று நினைத்த காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் "இந்தியாவின் சார்பில் பிரதமர் பங்கேற்கக் கூடாது" என்பதை வலியுறுத்தி வந்தார்கள். ஏன் எப்போதுமே வேறு கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூட, "பிரதமர் பங்கேற்காமல் இருந்தால் நல்லது" என்று கருத்துச் சொன்னார். காங்கிரஸுக்கு இந்த மாநாட்டின் போது ஏற்பட்ட இன்னொரு பிரச்சினை அக்கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாதது. இதற்கு முன்பு இலங்கையில் போர் நடைபெற்ற காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 35 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்களின் தயவில்தான் அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழக முதலமைச்சராக இருந்தார். அதனால்தான் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக மனித சங்கிலி நடத்தியது, மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவேன் என்ற விடுத்த மிரட்டல், தமிழகத்தில் நடந்த போராட்டங்கள் எல்லாவற்றையும் காங்கிரஸ் கண்டு கொள்ளாமல் இருந்தது. ஏனென்றால் தி.மு.க.வின் உதவி எப்படி மத்திய அரசுக்குத் தேவையோ அதை விட முக்கியமாக காங்கிரஸின் உதவி தமிழகத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள தி.மு.க.விற்கு தேவை என்ற நிலைமை இருந்தது.
ஆனால் இன்றையை நிலைமை அப்படியில்லை. காங்கிரஸ் கட்சிக்கு தமிழக சட்டமன்றத்தின் மொத்த எண்ணிக்கையான 234 உறுப்பினர்களில் 5 பேர் மட்டுமே இருக்கிறார்கள். இவர்களின் தயவில் இன்றைய அ.தி.மு.க. அரசோ அதன் முதலமைச்சர் ஜெயலலிதாவோ இல்லை. அதே போல் தி.மு.க.வும் காங்கிரஸின் தயவில் இல்லை. இப்படி காங்கிரஸிற்கு குறைந்துபோன முக்கியத்துவம் இலங்கை பிரச்சினையில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் ஓரணியில் சேர வைத்தது- அதாவது ஒரே கோரிக்கையை முன் வைக்க வழி வகுத்தது. அதனால் இந்த முறை தமிழகத்தில் உள்ள முக்கியக் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. போன்றவற்றின் கோரிக்கையை நிராகரித்தால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் நிராகரித்தது போலாகிவிடும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்குப் புரிந்தது. அதனால்தான் கொமன்வெல்த் மாநாடு பற்றி இருமுறை கூடிப் பேசி முடிவு எடுக்க முடியாமல் திணறி, இறுதியில் இரண்டாவது முறை, "தமிழ் மக்களின் உணர்வுகளைக் கருதி இப்பிரச்சினையில் முடிவு எடுக்கும் அதிகாரத்தை பிரதமரிடம் விட்டு விடுகிறோம்" என்று கையைத் தூக்கியது அக்கட்சியின் தலைமை. ஏனென்றால் இது வெறும் வெளியுறவுக் கொள்கை என்றால் பிரதமரே முடிவு எடுத்து விடுவார். ஆனால் இது கூட்டணிப் பிரச்சினை. காங்கிரஸ் உருப்படியான கூட்டணி வைத்தால் தேர்தலில் வெற்றி பெறலாம் என்றுள்ள நிலைமையை கெடுத்துக் கொள்ள காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை. அதனால்தான் காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலுடன் பிரதமர் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்ற முடிவை அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தமிழகத்தில் குஷியை ஏற்படுத்த வில்லை. ஏனென்றால் தி.மு.க. தரப்பில் "துரும்பு கூட கலந்து கொள்ளக் கூடாது" என்றார்கள். அரசு தரப்பிலோ, "பெயரளவிற்கு கூட கலந்து கொள்ளக் கூடாது" என்றார்கள். இப்போது இரண்டுமே மீறப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான குழு கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கிறது. தமிழக கூட்டணியை மனதில் வைத்து காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்தாலும், இது பாதிக் கிணறைத் தாண்டியது போல்தான் நிற்கிறது. ஏனென்றால் இப்போதே அனைத்து தமிழ் அமைப்புகளும் 12ஆம் திகதி தமிழக பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அது மட்டுமின்றி, இந்தியாவே பங்கேற்கக் கூடாது. இலங்கையை அந்தமாநாட்டிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சென்டிமென்டை இந்தியாவிற்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டே மேலெழுந்து நிற்கிறது. பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்றாலும், வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொள்வதை தமிழ் அமைப்புகள் எதிர்க்கவே செய்கின்றன. அதற்கான தொடர் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
தமிழகத்தில் "கொமன்வெல்த் போராட்டங்கள்" இன்னும் கடுமையாகவே இருந்திருக்கும். ஆனால் இந்தமுறை போராட்டக்காரர்கள் ஒரு எல்லைக் கோட்டைத் தாண்டி போராடும் போது பொலிஸ் களத்தில் குதித்து அவர்களை கைது செய்தது. குறிப்பாக கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று பல்வேறு இடங்களில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் பெற்றோல் குண்டு வீசியவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உடனடியாக கைது செய்தது. அதற்கு காரணகர்த்தாவாக இருந்தார் என்று குளத்தூர் மணியை (இலங்கைத் தமிழருக்காக தீவிரமாக போராடி வருபவர்) தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்தது. நவம்பர் 8ஆம் திகதி தஞ்சாவூரில் உள்ள விளார் கிராமத்தில் உருவாக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்ற திறப்பு விழாவை தடுக்க முடிந்த அளவு சட்ட வழிகளை மேற்கொண்டது காவல்துறை. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் அந்த விழாவினை தடுக்க முடியாமல் போனாலும், உலக தமிழர் கூட்டமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது காவல்துறை. ஏன் மூன்று நாட்கள் நடைபெற்ற அந்த விழாவில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் கூட்டம் நடத்தியதற்காக சிலரையும் கைது செய்து, அங்கு இருந்த லவுடு ஸ்பீக்கர்களை எல்லாம் பறிமுதல் செய்திருக்கிறது பொலிஸ். தமிழக காவல்துறை எடுத்த இந்த அதிரடி நடவடிக்கைகளால் கொமன்வெல்த் போராட்டம் கொஞ்சம் கட்டுக்குள் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. தமிழக அரசைப் பொறுத்தவரையில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை தனி, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு என்பது தனி என்ற நிலைப்பாட்டிற்கு வந்திருக்கிறது என்பதைத்தான் இந்த நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.
கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாததற்கு "வெளிப்படையான காரணங்கள்" என்ன என்பதை அவர் அறிவித்தால் ஒருவேளை தமிழகத்தில் காங்கிரஸின் மீதும், அவரது தலைமையின் மீதும் ஏதேனும் மதிப்பு வரலாம். அதில் குறிப்பாக மனித உரிமை மீறல், தமிழர்களுக்கான அதிகாரம், குறிப்பாக 13ஆவது அரசியல் சட்டத்திருத்தம் மற்றும் அதற்கு மேல் அதிகாரம் கொடுக்கும் விஷயம், தமிழர் பகுதிகள் புணரமைப்புப் பணிகள் போன்றவற்றில் இலங்கை அரசின் நடவடிக்கை திருப்தி தரவில்லை என்பது போன்ற அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் எண்ணுகிறார்கள். பிரதமர் அலுவலக அமைச்சர் நாராயணசாமி கூட இதே தொணியில் கருத்துச் சொல்லியிருந்தாலும், இது போன்ற கருத்துக்கள் பிரதமரின் அறிக்கை வாயிலாக வர வேண்டும் என்பதே தமிழக தலைவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதை வெளிப்படுத்தும் வகையில்தான் மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லக்கண்ணு போன்றோர் அப்படியொரு பேட்டி கொடுத்தார். பிரதமர் கலந்து கொள்ளாதது ஒரு புறமிருக்க, பிரதமரின் அறிக்கை இது போன்ற விஷயங்களைச் சுட்டிக்காட்டினால் காங்கிரஸுக்கும் தேர்தல் கூட்டணி அமைவதில் புதிய திருப்பம் ஏற்படும் என்றே தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள். ஆனால் அறிக்கை விடுவது அவர்கள் கையில் இல்லையே என்பதுதான் இப்போது எஞ்சியிருக்கின்ற ஒரே கேள்வி!