-கே.சஞ்சயன்
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கடைசி நேரத்தில், கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காமல் ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் இருந்து பல வாரங்களுக்கு முன்னரே, கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருந்தாலும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், எப்படியும் மாநாட்டில் பங்கேற்பார் என்றே இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருந்தது.
புதுடெல்லி செய்தி ஊடகங்களும் கூட, தமிழ்நாட்டின் எதிர்ப்பைத் தந்திரமான முறையில் சமாளித்துக் கொண்டு, அவர் கொழும்பு செல்வார் என்றே நம்பின. அவ்வாறே செய்திகளையும் வெளியிட்டன.
ஒருகட்டத்தில், இந்திய மத்திய அரசும் காங்கிரஸ் கட்சித் தலைமையும் இந்த விடயத்தில் தமது பொறுப்பை விட்டு நழுவிக்கொள்ள முயன்றன. குறிப்பாக, காங்கிரஸ் தலைமை ஏற்கனவே மன்மோகன்சிங், கொழும்பு செல்வதற்கு ஒப்புதல் கொடுத்து விட்டு, பின்னர் அவரே முடிவு செய்வார் என்று நழுவியது.
கொழும்பு செல்ல மன்மோகன்சிங் முற்பட்டிருந்தால், அது அவரது தனிப்பட்ட முடிவு என்று காங்கிரஸ் காலை வாரிவிட்டிருக்கவும் தயங்காது.
ஆனால், மன்மோகன்சிங் ஏற்கனவே ஒருமுறை ராகுல் காந்தியின் கையால் குட்டுப்பட்டு அவமானப்பட நேர்ந்த அனுபவத்தினால், இந்தமுறை தந்திரமாக நடந்து கொண்டார்.
முடிவெடுக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் உயர்மட்டக் குழுவிடம் அவர் விட்டு விட, கடைசியில் வேறு வழியின்றி தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்வது போன்று காட்டிக் கொண்டு, பிரதமர் மன்மோகன்சிங், மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார் என்று முடிவெடுக்கப்பட்டது.
ஒருபக்கத்தில் தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே பிரதமர் மன்மோகன்சிங் கொழும்பு செல்லவில்லை என்று, தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் கூறிக் கொண்டிருக்க, அப்படியில்லை- அவர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்காகவே மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று புதுக்காரணத்தை கூறியுள்ளார் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்.
தமிழ்நாட்டின் அழுத்தங்கள் காரணமாகவே இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கவில்லை என்ற போதிலும், இதனை மாநாட்டுப் புறக்கணிப்பாக அறிவிக்க இந்திய அரசாங்கம் தயாராக இல்லை.
இந்தியப் பிரதமர், மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்றே தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதுமட்டுமன்றி, இந்தியாவே மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று தான் கோரப்பட்டது. இந்த இரண்டுமே நடக்கவில்லை.
இலங்கை அரசாங்கத்தை திருப்திப்படுத்துவதற்காகவே பிரதமர் மன்மோகன்சிங், மாநாட்டைப் புறக்கணிக்கவில்லை என்று அறிவித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்.
ஒரு நிகழ்வில் பங்கேற்காமல் விடுவது வேறு, அதில் பங்கேற்க விரும்பவில்லை என்று கூறி அழைப்பை நிராகரிப்பது வேறு.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, மன்மோகன்சிங் அனுப்பிய கடிதத்தில் மாநாட்டுக்கான அழைப்பை நிராகரிப்பதாகவோ, அதைப் புறக்கணிப்பதாகவோ அல்லது அதற்கான காரணத்தையோ விபரிக்கவில்லை. தனியே, மாநாட்டில் தன்னால் பங்கேற்க முடியவில்லை என்று மட்டும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழ்நாட்டைத் திருப்திப்படுத்துவதை விட, இலங்கையைத் திருப்திப்படுத்துவதிலேயே புதுடெல்லி குறியாக இருந்துள்ளது என்பது உறுதியாகிறது.
அடுத்து, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் - கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதது, இலங்கைக்கு வருத்தமான விடயமாகவே இருந்தாலும், அவரது இந்த முடிவு இலங்கையை நெருக்கடிகள் பலவற்றில் இருந்து காப்பாற்றியுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.
மன்மோகன்சிங் இந்த முடிவை, சில வாரங்களுக்கு முன்னரே எடுத்திருந்தால், மொறிசியஸ், கனடா போன்று பல நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்திருப்பார்கள். அதனால் தான், கடைசி வரை புதுடெல்லி தனது முடிவை அறிவிக்காமல் இழுத்தடித்தது.
இதன் மூலம் இலங்கைக்கு அதிகளவு நெருக்கடி கொடுக்காமல் காப்பாற்றியுள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங், மாநாட்டில் பங்கேற்காவிட்டாலும் அவர் மாநாட்டைப் புறக்கணிப்பதாக அறிவிக்கவில்லை. அதற்குப் பதிலாக, முழுஅளவிலான இந்தியக் குழுவை வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் அனுப்பி வைக்கவுள்ளார்.
ஆக, இந்தியா மாநாட்டைப் புறக்கணிக்கவுமில்லை, இதனை வைத்து கொழும்புக்கு அழுத்தம் கொடுக்க முனையவுமில்லை.
கொமன்வெல்த் மாநாட்டை இலங்கைக்கு எதிராக அழுத்தம் கொடுக்கும் கருவியாக இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இது ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
கொமன்வெல்த் மாநாட்டை வைத்து, இலங்கையை வளைப்பதற்கான காலஅவகாசத்தை இந்தியா எப்போதோ தவற விட்டு விட்டது.
மன்மோகன்சிங் கொழும்பு வந்திருந்தாலும் கூட, இந்தியாவின் எதிர்பார்ப்புக்குரிய 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில், பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்க முடியாது.
தனக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று, இந்தியா பலமுறை வலியுறுத்தியும், இலங்கை அரசாங்கம் தனது போக்கில் எந்த மாற்றத்தையும் காட்டவில்லை.
இந்தநிலையில், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் - கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றிருந்தாலும் கூட, இந்தியா எதிர்பார்ப்பதைப் போன்று 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வாக்குறுதியை நிறைவேற்றச் செய்திருக்க முடியாது.
எனவே, வாக்குறுதிகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுப்பதற்காகவே- தமிழர்களின் நலனை உறுதி செய்து கொள்வதற்காகவே, கொமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியப் பிரதமர் கொழும்பு சென்றார் என்ற காரணத்தை புதுடெல்லியால் நீண்டநாளைக்கு கூறிக் கொண்டிருக்க முடியாது.
கொமன்வெல்த் மாநாட்டுக்குச் சென்றாலும், தமிழர் பிரச்சினை விடயத்தில் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்பது இந்தியாவுக்கு தெரியும். இத்தகைய நிலையில், மன்மோகன்சிங் - மாநாட்டில் பங்கேற்காதது இந்தியாவுக்கு மிகவும் வசதியாகி விட்டது.
இனி, காலம் பூராவும் காங்கிரஸ் கட்சி, பிரதமரை கொழும்பு செல்ல விட்டிருந்தால் இலங்கை அரசாங்கத்தை வழிக்கு கொண்டு வந்திருக்க முடியும் என்று காரணம் கூறித் தப்ப முனையும்.
பிரதமர் மன்மோகன்சிங்கினால் அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தினால் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. அவர், இந்தியாவினது பிரதிநிதியாக வந்தாலும் இலங்கைக்குத் தலைவலியாக இருக்கமாட்டார்.
எனவே, 13ஆவது திருத்தச்சட்டம், இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் இலங்கை அரசாங்கத்தினால் நிம்மதியாக மாநாட்டை நடத்த முடியும். இது இலங்கைக்கு சாதகமான விடயம். இந்தியாவுக்கும் கூட இது பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை.
இன்னொரு விடயம், தமிழ்நாட்டின் எதிர்ப்புகள் எழுந்தபோது, பிரதமர் மன்மோகன்சிங் - யாழ்ப்பாணம் செல்வதான ஒரு திட்டமும் முன்வைக்கப்பட்டது. அந்தத் திட்டம் செயற்படுத்தப்பட்டிருந்தால், இலங்கைக்கு மிகப்பெரிய நெருக்கடிக்கான வாயிலைத் திறந்து விட்டிருக்கும்.
இலங்கைத் தீவில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் அப்பால், உலகின் அங்கீகாரத்தைப் பெற்ற இன்னொரு அரசாங்கம் இருப்பதை அது வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும். தமிழர் தரப்பின் இராஜதந்திர காய்நகர்த்தல்களுக்கு அது வலுச் சேர்ப்பதாகவும் அமைந்திருக்கும். அது சிங்கள அரசியல் சக்திகளுக்கு கண்டிப்பாக எரிச்சலையும் அதிர்ச்சியையும் கொடுத்திருக்கும்.
ஆனால், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் - இலங்கைப் பயணத்தைக் கைவிட்டுள்ளதால், அத்தகைய வாய்ப்பும் நழுவிப் போயுள்ளது. இந்தவகையில், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கொழும்பு வராததையிட்டு இலங்கை அரசாங்கம் பெரிதாக கவலைப்படப் போவதில்லை. ஏனென்றால் அவர் வந்திருந்தால் தான் அதிக சிக்கல்களை சந்தித்திருக்க வேண்டியிருக்கும்.
ஆக, இந்தியப் பிரதமரின் முடிவு இலங்கைக்கு ஏமாற்றத்தைக் கொடுத்ததோ இல்லையோ, இலங்கை அரசாங்கத்தை பல விடயங்களில் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.