2025 மே 19, திங்கட்கிழமை

ஊடகப் போராக மாறிவிட்ட 'ஷோகம்'

Kanagaraj   / 2013 நவம்பர் 16 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டினால் இலங்கை அரசாங்கம் எதிர்ப்பார்க்கும் பயனை அடைய முடியுமா என்பது இப்போது சந்தேகமாக இருக்கிறது. மாநாட்டில் கலந்து கொள்ளும் பல முக்கிய தலைவர்கள் இலங்கையில் நிலவும் மனித உரிமை நிலைமையைப் பற்றி வெகுவாக அக்கறை செலுத்துவதனாலேயே இந்த சந்தேகம் ஏற்படுகிறது.

இலங்கை அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் சர்வதேச ரீதியாக வெகுவாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடைபெறுவதால் தமக்கு சர்வதேச ரீதியில் அங்கீகாரம் கிடைக்கும் என்றும் அதனால் தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சமாளிக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் இலங்கை அரசாங்கம் கருதுகிறது.

அது நியாயமான எதிர்ப்பார்ப்பு தான். மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்த ஒரு அரசாங்கம் இருக்கும் நாட்டில் இந்த மாநாட்டை நடத்துவதனால் அந்த அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் அங்கீகாரம் கிடைக்கும் என்று கூறியே தமிழ் நாட்டுத் தலைவர்களும் புலம் பெயர் தமிழர்களும் மாநாடு இலங்கையில் நடைபெறுவதை எதிர்த்தனர். ஆனால் பொதுநலவாய அமைப்பின் தலைமை நாடான பிரிட்டன் உட்பட முக்கிய நாடுகள் அதனை ஏற்கவில்லை.

இது இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என்பது உண்மை தான். ஆனால் அத் தலைவர்கள் அதே மாநாட்டை இலங்கையின் மனித உரிமை நிலைமையைப் பற்றி பேசுவதற்காக பாவிக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதால் தான் அரசாங்கத்தின் நோக்கம் நிறைவேறுமா என்ற சந்தேகமான நிலைமை உருவாகியிருக்கிறது.

இப்போது மாநாட்டின் நோக்கம் ஒரு புறம் இருக்க இலங்கையின் மனித நிலைமை தொடர்பான ஊடக விவாதமொன்று உருவாகியிருக்கிறது. அரசாங்கமும் சில அரச மற்றும் தனியார் ஊடகங்களும் ஓரளவுக்கு இந்தியாவும் இந்த ஊடக சண்டையில் ஒரு புறத்தில் இருக்கின்றன. பிரிட்டன் மற்றும் கனடா போன்ற பொதுநலவாய அமைப்பின் சில பலம் வாய்ந்த நாடுகளும் இலங்கையிலும் தமிழகத்திலும் ஏனைய நாடுகளிலும் வாழும் சில தமிழர்களும் சில சர்வதேச ஊடகங்களும் சில சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்ளும் மறு புறத்தில் இருக்கின்றன.

பொதுநலவாய அமைப்பில் பலம் வாய்ந்த நான்கு நாடுகள் இருக்கின்றன. பிரிட்டன்இ கனடாஇ அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அந்த நான்கு நாடுகளாகும். அவற்றில் இந்தியா மட்டுமே இந்த ஊடகப் போரில் இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமாக நடந்து கொள்கிறது. அல்லது இலங்கைகக்கு பாதகமாக நடந்து கொள்ளாமல் இருக்கிறது. அவுஸ்திரேலியா இலங்கையை ஆதரிக்காத போதிலும் ஏனைய இரண்டு நாடுகளைப் போல் மனித உரிமை விடயத்தில் இலங்கைக்கு அழுத்தத்தை கொடுக்க முன்வரவில்லை.

இவற்றில இந்தியாஇ பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு இருந்த போதிலும் அந் நாடுகளில் வாழும் தமிழர்களில் பெரும்பாலானோர் புலிகளுக்கு சாதகமாகவே செயற்பட்டு வருகின்றனர். எனவே இந்த மூன்று நாடுகளிலும் தலைவர்கள் ஓரளவுக்கு இந்த தமிழர்களின் நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

ஆனால் இந்தியா முடிந்த வரை இலங்கை அரசாங்கம் அசௌகரியத்திற்குள்ளாகாமல் பார்த்துக் கொள்ள முயற்சிக்கிறது. மாநாட்டை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற தமிழகத் தலைவர்களின் கருத்தை இந்திய அரசாங்கம் ஆரம்பத்திலிருந்தே நிராகரித்தது. தமிழக தலைவர்களின் நெருக்குதல் அதிகரிக்கவே பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டுக்கு வரும் முடிவை மாற்றிக் கொண்டார். ஆயினும் இலங்கை அரசாங்கம் அசெகரியத்திற்குள்ளாகும் என்பதனால் பிரதமரின் முடிவு பகிஷ்கரிப்பாகக் கொள்ளக்கூடாது என இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் ஊடகங்களுக்குக் கூறினார்.

புலம் பெயர் தமிழர்களின் செல்வாக்கு அதிகமாக உள்ள கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளும் இந்த மாநாட்டை பாவித்தே மனித உரிமை விடயத்தில் இலங்கையை நெருக்க முன்வந்துள்ளது. மாநாட்டை பகிஷ்கரிக்குமாறு தமிழ் குழுக்களினதும் எதிர்க்கட்சியான தொழிற் கட்சியினதும் வற்புறுத்தல் அதிகரிக்கவே அதனை நிராகரித்த பிரிட்டிஷ் அரசாங்கம் ஆனாலும் நாம் கடும் செய்தியுடனேயே இலங்கைக்குச் செல்கிறோம் என அறிவித்தது.

அந்த விடயம் தொடர்பாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்து இருந்தார். பிரிட்டிஷ் பிரதமருக்கு அதற்காக நாம் அழைப்பு விடுக்கவில்லை என அவர் கூறினார். ஊடகப் போரை கை விடாத பிரிட்டன் அதற்கும் பதிலளித்து இருந்தது. பி.பி.சி.க்கு கருத்து தெரிவித்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரன் நான் அதற்காகவே தான் அங்கு செல்கிறேன் என்றார்.

கனேடியப் பிரதமர் மாநாட்டை பகிஷ்கரித்த போதிலும் கனடாவைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். அதில் ஒருவரான கன்ஸர்வேடிவ் கட்சி உறுப்பினர் தீபாக் ஒப்ராய் இவ்விஜயத்தின் போது யாழ்ப்பாணத்திற்குச் சென்று வரும் வழியில் ஆனையிறவில் வைத்து போரில் இறந்தவர்களுக்காக மலர் வளையம் ஒன்றை வைத்தார்.

கனேடியப்பிரதமரின் பிரதிநிதி புலிகளுக்காக மலர் வளையம் வைத்ததாக அப்போது இலங்கையில் வெளியாகும் ஆங்கில பத்திரிகையொன்று கூறியது. கனேடியப் பத்திரிகையொன்று அதற்கு பதிலளிக்க முன்வந்தது. அங்கு வெளியிடப்படும் நெஷனல் போஸ்ட் பத்திரிகை ஒப்ராய் மலர் வளையத்தின் அருகே இருப்பதையும் போரில் பாதிக்கப்பட்ட 'அனைவரையும்' நினைவு கூறுவதாக குறிப்பிடப்பிடும் மலர் வளையத்தின் லேபிளை அவர் கையில் வைத்திருப்பதையும் காட்டும் படமொன்றை வெளியட்டு அப் பத்திரிகை தமது மறுப்பை வெளியிட்டு இருந்தது.

ஊடகங்களுக்கு தீனி போடும் வகையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பி. நெடுமாரனின் தலையீட்டில் தமிழகத்தில் தஞ்ஜாவூரில் முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த மண்டபம் என்ற மண்டபம் ஒன்று பொதுநலவாய மாநாடு நடைபெறும் நாட்களிலேயே திறந்து வைக்கப்பட்டது. ஆனால் தமக்கு அதனால் 'மார்க்ஸ்' கிடைக்காது என்று ஜெயலலிதா நினைத்தனாலோ என்னவோ மாநில அரச அதிகாரிகள் அம் மண்டபத்தின் மதில் சுவறை இடித்துத் தள்ளினர்.

பிரிட்டனை தளமாக் கொண்ட சனல்-4 தொலைக்காட்சி சேவையே ஊடகப் போரில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பக்கத்தில் முன்னணியில் இருக்கிறது எனலாம். இலங்கை அரசாங்கத்தை கண்டித்து இதற்கு முன்னர் மூன்று தொலைக்காட்சி ஆவணப் படங்களை தயாரித்த அத் தொலைக்கட்சி சேவையின் தயாரிப்பாளர் ஒருவரான கலம் மக்ரே உட்பட சில ஊடகவியலாளர்களும் மாநாட்டின் செய்திகளை திரட்ட இலங்கைக்கு வந்தார்கள்;.

அவர்களுக்கு விஸா வழங்க அரசாங்கம் நிரப்பந்திக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வட பகுதிக்குச் செல்வதை அரச ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி நிறுத்திவிட்டனர். அது அரசாங்கத்திற்கு பாதகமான பிரசாரத்திற்கே வழிசமைத்தது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற காணாமற் போனவர்களின் உறவினர்களின் ஆர்ப்பாட்டத்தை வெளி உலகம் காணாமல் இருப்பதற்காகவே அரச ஆதரவாளர்கள் தம்மை தடுத்தனர் என சனல-4 செய்திச் சேவை செய்தியொன்றை வெளியிட்டு இருந்தது.

சனல்-4 செய்திச் சேவை நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை என்றே அரசுக்கு சாதகமான வாதமாக முன்வைக்கப்படுகிறது. முதலில் அவர்கள் வெளியிட்ட 'நோ பயர் ஸோன்' ஆவனப் படத்தில் பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரனினதும் இசைப் பிரியாவினதும் சடலங்கள்  காட்டப்பட்ட போதிலும் அவற்றைப் பற்றி மீண்டும் மீண்டும் தனித்தனி படங்கள் தயாரிக்கப்பட்டு முக்கிய சர்வதேச நிகழ்வுகளின் போது திரையிடப்படுவதாக கூறப்படுவது அரசுக்கு சாதகமாக முன்வைக்கப்படும் வாதமாகும்.

புலிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக மக்ரே அப் படத்தின் ஆரம்பத்தில் கூறிய போதிலும் புலிகள் மக்களை கேடயமாக பாவிப்பதற்காக தாம் பின்வாங்கும் போது அவர்களையும் அழைத்துச் செல்வதைப் பற்றியோ அல்லது அங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்கும் மக்களை நோக்கி புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதைப் பற்றியோ அல்லது புலிகள் சிறுவர்களை படையில் சேர்த்திருப்பதைப் பற்றியோ எவ்வித காட்சியையும் மக்ரே தமது படங்களில் சேர்த்துக் கொள்ளவில்லை என்பது மற்றொரு வாதமாகும்.

எனினும் மொத்தத்தில் அரசாங்கம் 'ஷோகம்' மாநாட்டின் மூலம் எதிர்ப்பார்த்த பிரசார பயன் கிடைத்ததா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் இந்த மாநாடு இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பாக பேசுவதற்காக சர்வதேச ஊடகங்களுக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளது. அவ்வூடகங்கள் நடு நிலையாக செயற்படுகின்றனவோ இல்லையோ அவை அரசாங்கத்திற்கு பாதகமான செய்திகளையும் கட்டுரைகளையுமே கூடுதலாக வெளியிட்டு வருகின்றன. எனவே மாநாடு வெற்றி பெற்றாலும் ஊடகப் போரில் அரசாங்கம் பின்வாங்கியே இருக்கிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X