2025 மே 19, திங்கட்கிழமை

டெசோவிற்கு தீனிபோட்ட டேவிட் கெமரூனின் பேச்சு

A.P.Mathan   / 2013 நவம்பர் 18 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெசோ கூட்டம் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நவம்பர் 17ஆம் திகதி நடந்து முடிந்திருக்கிறது. கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றது குறித்த கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள இந்த டெசோ கூட்டத்தில் மொத்தம் ஐந்து தீர்மானங்கள் போடப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று தமிழக அரசை கண்டிப்பது. மீதியுள்ள நான்கும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கு கண்டனமும் கோரிக்கையும் வைக்கும் தீர்மானங்கள்.
 
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் ஒரு குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்றது என்பதால் மத்திய அரசுக்கு கண்டனம். இது முதல் தீர்மானம். இதில் "2014 மார்ச் மாதத்திற்குள் மனித உரிமைகள் மீறல் விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியில்லையென்றால் சர்வதேச விசாரணை கோருவோம்" என்ற பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூனின் கருத்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் பிரதமருக்கு பாராட்டு. சல்மான் குர்ஷித்தை கொமன்வெல்த்திற்கு அனுப்பிய இந்திய பிரதமருக்கு கண்டனம் என்ற அளவில் டெசோ தீர்மானம் அமைந்திருக்கிறது.
 
இந்திய நாடாளுமன்றத்திலும் சர்வதேச விசாரணை கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் டெசோ முன் வைத்துள்ளது. இது இரண்டாவது தீர்மானம். சென்றமுறை ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் கூட்டத்தின்போது இந்த கோரிக்கையை முன் வைத்தது தி.மு.க. அதை ஏற்க மறுத்ததால்தான் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறியது. அன்று இதற்காக டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஓர் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது. அதாவது நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதற்காக ஆலோசிக்க கூட்டப்பட்ட கூட்டம் அது. அதை எடுத்த எடுப்பிலேயே எதிர்த்த கட்சி பாரதீய ஜனதா கட்சி. இப்போது அக்கட்சியின் நிலைப்பாட்டில் அதிரடி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கையை தமிழக பா.ஜ.க.வே முன் வைத்து பேசியிருக்கிறது. தஞ்சாவூரில் கட்டப்பட்ட "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை" திறந்து வைத்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் பொன். ராதாகிருஷ்ணனே பங்கேற்றுப் பேசியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்திய நாடாளுமன்றத்தில் இது போன்றதொரு தீர்மானம் நிறைவேற்றப்படும் வாய்ப்பு இருப்பதால்தான் இப்படியொரு கோரிக்கையை டெசோ தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.
 
மூன்றாவது தீர்மானம் இலங்கையில் உள்ள வடக்கு, கிழக்கு மாகாண அரசுகளுக்கு அனைத்து அதிகாரங்களும் கிடைத்திட வேண்டும். அதற்கு 13ஆவது அரசியல் சட்டம் மட்டுமின்றி அதற்கு மேலும் கொடுக்கத் தயார் என்று சொன்ன இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வார்த்தையைப் பிடித்துக் கொண்ட டெசோ, அந்த வகையில் இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மூன்றாவது தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. இதில் தமிழர்களுக்கு நிலம் மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள 356ஆவது பிரிவை (மாநில அரசுகளை மாநில ஆளுநரின் அறிக்கை பெற்றோ அல்லது அறிக்கை இல்லாமலேயே கலைக்கும் மத்திய அரசின் அதிகாரம்) எப்படி தி.மு.க. எதிர்க்கிறதோ அதே மாதிரி இலங்கையில் உள்ள மாநில ஆளுநருக்கு மாகாணக் கவுன்சிலை கூட்டும் மற்றும் கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதை இந்த தீர்மானம் எதிர்க்கிறது. "ஆட்டுக்குத் தாடி எப்படி தேவையில்லேயோ அதேபோல் மாநிலத்திற்கு கவர்னர் பதவி தேவையில்லை" என்ற பிரசாரத்தை மேற்கொண்ட கட்சி தி.மு.க. என்ற நிலையில் அக்கட்சியின் தலைமையில் அமைந்திருக்கும் டெசோவும் மாநில ஆளுநருக்கு உள்ள இந்த அதிகாரத்தை எதிர்க்கிறது.
 
நான்காவது தீர்மானம் இந்திய அரசு பல்வேறு வகையில் ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்பட்ட நிதி முற்றிலுமாக தமிழர்களுக்கே போய்ச் சேர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் தீர்மானம். இந்த நான்கு தீர்மானங்களில் முதல் தீர்மானத்தில் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றது கண்டனத்திற்குரியது என்று கூறிவிட்டு, மற்ற மூன்று தீர்மானங்களில் இலங்கை அரசை வற்புறுத்தி தமிழர்களின் நலன் காக்க வேண்டும் என்று கோரிக்கை வாக்கப்பட்டுள்ளது. இதுதான் டெசோ தீர்மானத்தின் சுருக்கம்.
 
ஆனாலும் இந்த டெசோ தீர்மானம் ஒருவிதத்தில் தமிழக அரசின் நவம்பர் 12ஆம் திகதி தீர்மானத்தை ஒட்டியே போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மனித உரிமை மீறல்களை நடத்தியதாக கூறப்படும் இலங்கை ஜனாதிபதியை காப்பாற்றும் முயற்சியிலேயே கொன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றுள்ளது என்பதை தமிழக அரசு தீர்மானமும் சுட்டிக்காட்டுகிறது. டெசோ தீர்மானமும் எடுத்துக் காட்டுகிறது. அதேபோல் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையிலும் தமிழக அரசும், டெசோவும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. "வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொண்டது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ஆகி விட்டது" என்பது டெசோ தீர்மானம் என்றால், தமிழக அரசின் தீர்மானத்தை தாக்கல் செய்த பேசிய முதல்வர் ஜெயலலிதா, "மத்திய அரசு தமிழர்களை வஞ்சித்து விட்டது" என்று காட்டமாகப் பேசினார். இப்படி இரு பெரும் கட்சிகளான அ.தி.மு.க. தலைமை தாங்கும் தமிழக அரசும், தி.மு.க. தலைமை தாங்கும் டெசோ அமைப்பும் இலங்கை தமிழர் பிரச்சினையில் ஓரணியில் நிற்பது மத்திய அரசுக்கு பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது.
 
அதே சமயத்தில் "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை" இடித்த விவகாரத்தில் மட்டும் தமிழக அரசை கண்டித்துள்ளது டெசோ தீர்மானம். ஆனால் இந்தக் கூட்டத்திற்கு முதல் நாள் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பத்திரிக்கை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "நினைவு முற்ற விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட பழ. நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்" என்று கூறினார். அவரும் பங்கேற்ற டெசோ கூட்டம் ஏனோ இது பற்றி எந்தத் தீர்மானத்தையும் போடவில்லை. நினைவு முற்றச் சுற்றுச் சுவர் மற்றும் பூங்காவை இடித்த தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்த டெசோ தீர்மானம் உலக தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறனை விடுதலை செய்வது பற்றி எந்தக் கருத்தும் சொல்லவில்லை. ஒருவேளை "மத்திய அரசின் தூண்டுதலில் நினைவு முற்றச் சுற்றுச் சுவரை இடித்திருக்கிறார் முதல்வர்" என்ற ரீதியில் நெடுமாறனும், அவருக்கு வேண்டியவர்களும் பேசியதால், டெசோ கூட்டம் இது பற்றி கண்டுகொள்ளவில்லையா என்று தெரியவில்லை.
 
எது எப்படியோ, தமிழகத்தை மையம் கொண்டிருந்த "கொமன்வெல்த் புயல்" இன்றைய திகதியில் கரை கடந்து விட்டது. கடந்த ஒக்டோபர் மாதமும், நவம்பர் மாதமும் இந்தப் புயல் தமிழக அரசியல் கட்சிகளை திணறடித்து விட்டது என்றே சொல்ல வேண்டும். "யார் எப்படி முடிவு எடுப்பார்கள்?" என்பதை எதிர்பார்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திலேயே அனைத்துக் கட்சி தலைவர்களின் அறிக்கைகள் வெளியாகிக் கொண்டிருந்தன. மெயின் ஹீரோகாக்களான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் போட்டி போட்டுக் கொண்டு கொமன்வெல்த் மாநாட்டை முன்னிறுத்தி இலங்கை தமிழர் பிரச்சினையை தூக்கிப் பிடித்தது, மற்ற அரசியல் கட்சிகளின் அரசியல் பயணத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக விழுந்தது. பெரிய கட்சிகள் விடும் அறிக்கைகளுக்கே பத்திரிக்கைகளில் போட இடமில்லை என்பதால், சின்னஞ்சிறு கட்சிகளின் அறிக்கைகள், பேட்டிகள் பனிமொட்டுக்கள் போல் மறைந்து போய் விட்டன. ஆனால் அவர்கள் குறையையும் போக்கும் விதத்தில் தஞ்சாவூர் அருகில் உள்ள விளார் கிராமத்தில் நிறுவப்பட்ட "முள்ளிவாய்க்கால்" நினைவு முற்றத்தை இடித்து, அந்த சிறிய கட்சிகளும் "வொய்ஸ்" கொடுக்கும் வாய்ப்பை வழங்கியது தமிழக அரசு என்றாலும், கொமன்வெல்த் போராட்டத்தில் முதன் முதலில் தியாகு இருந்த உண்ணாவிரதம் கடந்த இரு மாதங்களாக தமிழகத்தில் கொமன்வெல்த் அனல் குளிரையும் மீஞ்சு வீச வைத்து விட்டது என்பதே உண்மை.
 
ஆனால் பிரச்சினை இத்துடன் முடிந்து விடவில்லை. இனிமேலும் இருக்கிறது என்பதைத்தான் டெசோ தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூனின் சர்வதேச விசாரணை கோருவோம் என்ற பேச்சையே டெசோவின் முதல் தீர்மானத்தில் பிரதானமாகச் சுட்டிக்காட்டியிருப்பதில் இன்னொரு அஜெண்டா இருக்கிறது. அதுதான் மார்ச் 2014இல் வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தையொட்டி தமிழகத்தில் மையம் கொள்ளப் போகும் இன்னொரு புயல் பற்றிய வானிலை அறிக்கை. அத்துடன் "சர்வதேச விசாரணை வேண்டும்" என்று கோரி இந்திய நாடாளுமன்றமும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டுள்ளது. "டேவிட் கெமரூனின் பேச்சும்" "இந்திய நாடாளுமன்ற தீர்மானமும்" வருகின்ற பெப்ரவரி மாதத்திலிருந்தே தமிழகத்தில் எதிரொலிக்கத் தொடங்கி விடும். ஐ.நா. சபை கூட்டம் நடக்கும் நேரத்தில்தான் இந்திய பொதுத்தேர்தலுக்கான களமும் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கும் நேரமாக இருக்கப் போகிறது. ஆகவே "மார்ச் அஜெண்டா" டெசோ வடிவில் இப்போதே உருவாக்கப்பட்டு விட்டது!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X