2025 மே 19, திங்கட்கிழமை

கொமன்வெல்த் மாநாடு: பொல்லைக் கொடுத்து வாங்கிய அடி

A.P.Mathan   / 2013 நவம்பர் 20 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

பொல்லைக் கொடுத்து அடிவாங்கியது போல என்று கூறுவது போலத் தான், கொமன்வெல்த் மாநாட்டை நடத்தப் போய், இலங்கை அரசாங்கம் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 
2009இல் போர் முடிவுக்கு வந்த சில மாதங்களில் ரினிட்டாட் அன் டுபாகோ நாட்டில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டில், 23ஆவது கொமன்வெல்த் உச்சி மாநாட்டை கொழும்பில் நடத்த விருப்பம் தெரிவித்திருந்தது இலங்கை.
 
அப்போது, அது இலங்கைக்குப் பெரும் புகழையும், உலகளாவிய அந்தஸ்தையும் தேடித் தரும் என்றும், போரினாலும் தமிழர் பிரச்சினையாலும் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கறைகளை கழுவிவிடும் என்றும் கணக்குப் போட்டிருந்தது அரசாங்கம்.
 
அந்தக் கற்பனை, கொழும்பில் 23ஆவது கொமன்வெல்த் உச்சி மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் வரை நீடித்தது.
 
ஆனால், கடந்த வெள்ளிக்கிழமைக்கு சில நாட்கள் முன்னதாகவே, இது ஒரு சிக்கலான நிலைக்குள் தம்மைத் தள்ளப்போகிறது என்ற உண்மை அரசாங்கத்துக்கு விளங்கி விட்டது.
 
கனடா எழுப்பிய போர்க்குரலும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வருகைக்கு எழுந்த எதிர்ப்பும், இந்த மாநாடு சர்ச்சைக்குரியதாக மாறப் போகிறது என்ற சமிக்ஞையை வெளிப்படுத்தி விட்டது.
 
இலங்கை அரசாங்கம் போட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால், பிரித்தானியா செயற்படத் தொடங்கிய போது, கிட்டத்தட்ட ஒட்டுமொத்த கொமன்வெல்த் மாநாட்டின் பார்வையுமே அதன் மீது திரும்பி விட்டது.
 
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கைப் போலவே, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூனும், மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளினதும், ஊடகங்களினதும், புலம்பெயர் தமிழர்களினதும் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தார். ஆனால், மாநாட்டைப் புறக்கணிக்கும் அழைப்புகளை உறுதியாக நிராகரித்து விட்ட டேவிட் கமரூன், தனது பயணத்தை கொமன்வெல்த் மாநாட்டுக்கான பயணமாகவோ அல்லது இலங்கையின் எழிலைத் தரிசிப்பதற்கான ஒரு சுற்றுலாப் பயணமாகவோ கருதாமல், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு கருவியாக மாற்றிக் கொண்டார்.
 
அவரது அந்த முடிவும், தற்துணிவும், இன்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனை, உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் ஓர் உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
 
குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல்வாதிகளால், டேவிட் கமரூன் ஒரு ஹீரோவாகவே போற்றப்பட்டிருக்கிறார்.
 
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் - இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள்- டேவிட் கமரூனின் பயணத்தை ஆகா ஓகோ என்று பாராட்டுகிறார்கள், கொண்டாடுகிறார்கள். அதற்குக் காரணம், டேவிட் கமரூன் - கொமன்வெல்த் மாநாட்டை பயன்படுத்திக் கொண்ட விதமும், அதற்காக பிரித்தானிய வகுத்த வியூகமும் தான்.
 
போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்து நான்கு மாதங்களுக்குள் - அதாவது வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர், விசாரணை நடத்தத் தவறினால், சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்ற டேவிட் கமரூனின் எச்சரிக்கை, ஒட்டுமொத்த கொமன்வெல்த் மாநாட்டையுமே, புதிய தளத்துக்குள் கொண்டு போய் விட்டது.
 
அதாவது கொமன்வெல்த் மாநாட்டின் பிரதான கருப்பொருள் எதுவாக இருந்தாலும், மாநாட்டு அரங்கங்களுக்குள் பேசப்பட்ட விடயங்கள் எதுவாக இருந்தாலும், இலங்கையின் மனிதஉரிமை மீறல் விவகாரமே உலகளாவிய பேச்சுக்குரிய விவகாரமாக மாறியது.
 
இந்த மாநாட்டுக் காலகட்டத்தில், உலகளாவிய ஊடகங்கள் அனைத்துமே இதைப் பற்றித் தான் விவாதித்தன. எழுதிக் குவித்தன.
 
கொமன்வெல்த் மாநாட்டின் அடிப்படை அம்சங்கள், இருதரப்பு பேச்சுக்கள், வர்த்தக இணக்கப்பாடுகள், தலைவர்களின் சந்திப்புகள், மாநாடு நடத்தப்படும் நாட்டின் எழில், மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்தெல்லாம், விவாதிப்பதில் உலகளாவிய ஊடகங்கள் கவனம் செலுத்தவில்லை.
 
அதற்கு மாறாக, இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனிதஉரிமை மீறல்கள் குறித்தும், இந்த மீறல்கள் பற்றிய விசாரணைகள் நடத்தப்படாதது குறித்தும், போருக்குப் பின்னர் தமிழர்கள் எதிர்கொள்ளும், ஊடகங்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் குறித்தும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனின் கருத்துகள் குறித்தும், கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பரின் புறக்கணிப்புக் குறித்தும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வராதது குறித்தும், மொறிசியஸ் பிரதமரின் நவீன் ராம்கூலமின் புறக்கணிப்புக் குறித்துமே ஊடகங்கள் கவனம் செலுத்தின.
 
போர் முடிவுக்கு வந்த பின்னர், கடந்த நான்கரை ஆண்டுகளில், ஊடகங்களில் இலங்கை இந்தளவுக்கு முக்கியத்துவப்படுத்தப்பட்டு முதன்மைப்படுத்தப்பட்டு விமர்சிக்கப்பட்டது இதுவே முதல் முறை எனலாம்.
 
போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கைக்கு எதிராக இரண்டு தீர்மானங்கள் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட போது இலங்கையின் மனிதஉரிமைகள் நிலை குறித்து உலகளவில் செலுத்தப்பட்ட கவனத்தை விடவும், ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டதை விடவும், அதிகமாகவே கொமன்வெல்த் மாநாட்டின் போது விமர்சனங்களை இலங்கை எதிர்கொண்டது. 2009இல் முடிந்து போன போரின் அவலங்கள் மறக்கப்பட்ட விகாரமாகி விடுமோ என்று தமிழர் தரப்பிலுள்ள பலரும் பயந்து கொண்டிருந்த சூழலில், தான் இன்று அதை உலகளவில் பேசப்படும் விவகாரமாக மாற்றி விட்டுள்ளது கொமன்வெல்த் உச்சி மாநாடு.
 
அதற்கும் அப்பால், இலங்கையில் நடந்த மனிதஉரிமை மீறல்களுக்கு எதிராக, சர்வதேச நடவடிக்கையைத் தூண்டுவதற்கான ஒரு கருவியாகவும் இந்த மாநாடு பயன்பட்டிருக்கிறது.
உண்மையில், கொமன்வெல்த் மாநாடு, கொழும்பில் நடத்தப்பட்ட நிலையில், இலங்கையின் மேன்மையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகழும் தான் சர்வதேச அளவில் உயர்த்திப் பிடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
 
வழக்கமாக எந்தவொரு சர்வதேச மாநாடு நடத்தப்பட்டாலும், அந்த மாநாட்டை நடத்தும் நாட்டுக்கும் நாட்டின் தலைவருக்கும், உயர்ந்தளவிலான கௌரவம் அளிக்கப்படும். ஊடகங்களில் அதிகளவு முக்கியத்துவம் கிடைக்கும்.
 
ஆனால், கொழும்பில் நடந்த கொமன்வெல்த் மாநாடு அத்தகைய பெருமையை இலங்கைக்கோ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ கொடுத்திருக்கவில்லை. மாறாக, கடுமையான விமர்சனங்களையும் அவப்பெயர்களையும் தான் தேடிக் கொடுத்திருக்கிறது.
 
சில சர்வதேச ஊடகங்களில், “மஹிந்த ராஜபக்ஷ போர்க்குற்றவாளியா – கதாநாயகனா” என்ற தலைப்பில் அலசல்கள் வெளியாகின.
 
இத்தகையதொரு நிலையைத் தேடித் தருவதற்காக இலங்கை இந்த மாநாட்டை நடத்தியிருக்கவும் இல்லை. இதை நடத்த ஆசைப்பட்டிருக்கவுமில்லை. இப்படியொரு நெருக்கடியான நிலை ஏற்படும் என்று தெரிந்திருந்தால், நிச்சயமாக இலங்கை அரசாங்கம் கொமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் நடத்த விரும்பியிருக்கவும் மாட்டாது. அரசாங்கம் எதிர்பார்த்தது ஒன்று, நடந்தது ஒன்றாகி விட்டது. 
 
அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகள் அனைத்தையுமே கொமன்வெல்த் மாநாடு தவிடு பொடியாகியுள்ளது. இந்த மாநாடு, இலங்கைக்கு பொருளாதார முதலீடுகளைக் கொடுக்கலாம், வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கலாம். ஆனால் நற்பெயரையோ புகழையோ கொடுக்கத் தவறிவிட்டது.
 
அதுமட்டுமன்றி, அரசாங்கம் கழுவிவிட நினைத்த போரின் கறைகளையும், காயங்களையும் இந்த மாநாட்டினால் கழுவி மறைத்துவிட முடியவில்லை. இவற்றுக்கெல்லாம் அப்பால், இந்த மாநாடு, இலங்கை மீதான சர்வதேச பிடியை மேலும் இறுக்கிக் கொள்வதற்கான களமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அரசாங்கம் சற்றும் எதிர்பாராமல் நடந்து விட்டது.
 
கொமன்வெல்த் மாநாட்டில் இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதற்கு போர்க்குற்ற விவகாரங்களும், மனிதஉரிமைமீறல் விவகாரங்களும், வாய்ப்பளித்து விட்டன. அரசாங்கம், பெருமளவு பணத்தை வாரியிறைத்தும், உலகத் தலைவர்களை அழைத்து வந்தும், தனக்குத் தானே நெருப்பு வைத்துக் கொண்டது தான் மிச்சம்.

You May Also Like

  Comments - 0

  • VICTOR Wednesday, 20 November 2013 04:35 PM

    தமிழன் கதறல் சும்மாவிடுமா...???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X