2025 மே 19, திங்கட்கிழமை

எங்கும் வாக்கு வங்கிக்காக பாவிக்கப்பட்ட ஷோகம்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 22 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடந்து முடிந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாடு தொடர்பான செய்திகளை வாசிக்கும் போது அது பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாடா அல்லது ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டமா என்று கேட்குமளவிற்கு அச்செய்திகள் பெரும்பாலும் இலங்கையின் மனித உரிமை பிரச்சினைகளைப் பற்றியதாகவே இருந்தன.

இந்த மாநாட்டின் போது எதைப் பற்றி நாடுகளின் தலைவர்கள் பேசக் கூடாது என்று இலங்கை அரசாங்கம் விரும்பியதோ அதுவே ஊடகங்களின் செய்திகளின் தொணிப் பொருளாகியது. இதை அரசாங்கம் எதிர்ப்பார்த்திருக்க வேண்டும். ஆனால் எதிர்ப்பார்த்திருக்காது.

மொரிஷியஸ் நாடு தவிர்ந்த மாநாட்டில் கலந்து கொண்ட சிறிய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெற்ற காலத்தில் மனித உரிமை பிரச்சினையை மையமாக வைத்து எதையும் செய்யவில்லை. அவுஸ்திரேலியா தவிர்ந்த பொதுநலவாய அமைப்பின் பெரிய நாடுகளான இந்தியா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளே இந்தப் பிரச்சினையை பாவித்து இலங்கை அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கின.

இந்த மூன்று நாடுகளிலும் வாழும் தமிழர்களின் நெருக்குதலின் காரணமாகவே அந்நாடுகளின் தலைவர்கள் தாமும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்குதலை ஏற்படுத்தினார்கள். கனேடியப் பிரதமர் ஸ்டீவன் ஹாபரும் மொரீஷியப் பிரதமர் நவீன் ராமகுலாமும் இலங்கையின் மனித உரிமை நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநாட்டை பகிஷ்கரித்தனர். இந்திய பிரதமர் இது பகிஷ்கரிப்பல்ல என்று கூறிக் கொண்டு மாநாட்டுக்கு வருகை தராமல் நின்றுவிட்டார்.

காரணம் தெளிவானது. தமிழகத் தலைவர்களின் நெருக்குதலின் காரணமாகவே இந்தியப் பிரதமர் மாநாட்டுக்கு வருகை தரவில்லை. எதிர்க்கட்சியான தொழில் கட்சிக்கு அதரவாக இருக்கும் பிரிட்டனில் வாழும் இலங்கைத் தமிழர்களின் வாக்குகளை அடுத்த தேர்தலின் போது பெற்றுக்கொள்ளும் நோக்கமே பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் இங்கு வந்து மனித உரிமைப் பிரச்சினையைப் பற்றி பெரும் குழப்பமொன்றையே ஏற்படுத்திவிட்டுப் போக காரணமாகியது.

கனடாவில் புலம்பெயர் தமிழர்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். அவர்கள் அங்கு வாக்காளர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் நெருக்குதலே கனேடியப் பிரதமர் ஸ்டீவன் ஹாபரின் நிலைப்பாட்டை வடிவமைததது.

அவுஸ்திரேலியப் பிரதமருக்கு படகு மூலம் அந்நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களின் பிரச்சினை பெரும் தலையிடியாகியுள்ளது. இலங்கையிலிருந்து அந்நாட்டுக்கு ஆட்களை கடத்துவதை தடுக்க இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

எனவே தான் அவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அபர்ட் மாநாட்டுக்கு வந்து இலங்கைக்கு சாதகமாக பேசிவிட்டுச் சென்றார். ஆட்கடத்தலை தடுக்க இரண்டு நவீன படகுகளை இலங்கை கடற்படைக்கு வழங்கவும் இவ்விஜயத்தின் போது அவர் உறுதியளித்தார்.

எல்லோரும் தத்தமது வாக்க வங்கிக்காகவே மாநாட்டை பாவிக்கறார்கள். இலங்கை  அரசாங்கமும் அதையே செய்கிறது. ஆனால் மொரீஷியப் பிரதமர் நவீன் ராமகுலாம் மாநாட்டில் கலந்து கொள்ளாத காரணத்தினால் பொதுநலவாய அமைப்பின் அடுத்த உச்சி மாநாடு நடைபெறும் இடத்தையும் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

அடுத்த உச்சி மாநாடு மொரிஷியஸ் தீவிலேயே நடைபெறவிருந்தது. ஆனால் மரபு ரீதியாக அந்நாட்டுத் தலைவர் இம்முறை மாநாட்டில் வைத்து அதற்காக ஏனைய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். அது முடியாமல் போகவே அடுத்த மாநாடு மத்தியதரை நாடான மோல்டா தீவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் தமிழக தலைவர்களை திருப்திப்படுத்துவதற்காக மாநாட்டில் கலந்து கொள்ளாதிருந்த போதிலும் கமரனின் நடத்தையால் அவர் தமிழக தலைவர்களிடம் மீண்டும் அடி வாங்கவே நேரிட்டுள்ளது.

மன்மோஹன் சிங் இலங்கை அரசாங்கத்திற்கு தலையையும் தமிழர்களுக்கு வாலையும் காட்டி ஏமாற்றிவிட்டார் என்றும் கெமரூன் தமிழர்களின் மனதில் இடம்பிடித்துக் கொண்டார் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி கூறியிருக்கிறார்.

தமிழகததில் ஏனைய தலைவர்களும் கமரனை பாராட்டியுள்ளனர். மன்மோஹன் சிங்கின் அரசாங்கத்தின் கப்பல்துறை அமைச்சர் ஜீ.கே.வாசனும் அவரை பாராட்டியுள்ளார். மாநாட்டின் முழுமையான பயனை பெற்றவர் கமரன் என்றே கூற வேண்டும். கெமரூன் தமது நாட்டில் வாழும் தமிழர்களை வென்றெடுப்பதற்காக திட்டமிட்டே செயற்பட்டதாகவே தெரிகிறது.

ஈராக்கில் பாரிய அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் இருப்பதாக பொய்யைக் கூறி அந்நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொண்று குவித்த பிரட்டனின் தலைவர்கள் மனித உரிமைகள் விடயத்தில் அக்கறையுள்ளவர்கள் என்று கூற முடியாது. எனவே கெமரூன் தமிழ் வாக்குகளுக்காகவே இங்கு வந்து குரலெழுப்பிவிட்டுச் சென்றார் என ஊகிக்க வேண்டியுள்ளது.

அவர் இங்கு வந்தவுடன் அவரை வரவேற்பதற்காக ஏற்பாடு செய்திருந்த நடன நிகழ்ச்சியை அவர் புறக்கணித்தார். மாநாட்டின் பிரதான கலந்துரையாடலை புறக்கணித்து யாழ்ப்பாணத்திற்குச் சென்றார். அதற்காக அவர் வேறு நேரமொன்றை ஒதுக்கிக் கொண்டிருக்கலாம்.

பொதுநலவாய விடயங்களைவிட இலங்கையின் மனித உரிமை விடயங்களை உயர்த்திக் காட்டுவதில் கெமரூனின் முயற்சி வெற்றியளித்தது என்றே கூற வேண்டும். யாழ்ப்பாணததில் வைத்து அவர் காணாமற்போனவர்களின் உறவினர்களை சந்தித்தார். பல முறை குண்டர்களின் தாக்குதலுக்கு இலக்கான உதயன் பத்திரிகை நிறுவனத்தின் அலுவலகத்திற்குச் சென்று பார்வையிட்டார்.

அவ்விடங்களின் படங்களை தமது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு அச்சம்பவங்களை உலகம் முழுவதிலும் பரப்பினார். இவை அனைத்தும் தமிழ் வாக்குகளை மனதில் வைத்தே அவர் செய்திருக்க வேண்டும்.

அவருடன் இலங்கைக்கு வந்திருந்த சனல் 4 நிறுவனத்தின் ஊடகவியலாளர்களும் இந்த விடயத்தில் அவருக்கு உதவினர். அவர்களின் வருகையே இலங்கையின் மனித உரிமை விடயங்களை தூண்டிவிட்டது. அவர்களும் இரகசியமாக யாழ்ப்பானத்திற்குச் செல்ல முயற்சித்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அதிரடிக் கேள்விகளை கேட்டும் இலங்கையின் மனித உரிமை மற்றும் ஊடகச் சுதந்திரம் ஆகிய விடயங்களின் பால் உலகக் கவனத்ததை ஈர்க்க நடவடிக்கை எடுத்தனர்.

தம்மை வரவேற்பதற்கான நடன நிகழ்ச்சியை புறக்கணித்த கெமரூன் தம்மீதான கவனத்தை அதிகரித்துக்கொள்ள இலங்கையில் இருந்த காலத்;தில் புகழ்பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனுடன் கிரிக்கெட்டும் விளையாடினார். அப்போது முரளிதரன் அரசாங்கத்தை பாதுகாத்துக் கூறிய சில விடயங்கள் இப்போது முரளிதரனை வாட்டுகின்றன. அவர் தெரியாத விடயங்களைப் பற்றி பேசாது கெமரூனுடன் கிரிக்கெட் மட்டும் விளையாடியிருக்கலாம்.

நாடு திரும்பிய கெமரூன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, 'இப்போது இலங்கை ஒரு மாதத்திற்கு முன்னர் இருந்ததை பார்க்கிலும் மனித உரிமை விடயத்தில் நெருக்குதலில் உள்ளது' எனக் கூறியிருக்கிறார். மாநாட்டின் இறுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கூடுதலாக மனித உரிமை விடயங்கள் தொடர்பான கேள்வி எழுப்பியதன் மூலம் இது தெரிய வருகிறது எனவும் அவர் கூறியிருந்தார்.

அது உண்மை தான். பொதுநலவாய அமைப்பின் தலைவர்களின் மாநாட்டினால் அரசாங்கம் எதனை எதிர்ப்பார்த்தாலும் நாடு எந்த நன்மையை அடைந்தாலும் மாநாடு மனித உரிமை விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு தலையிடியாக மாறிவிட்டது போலும். அதனால் என்ன பயனை நாடு அடைந்தது என்பதை விளக்க அரசாங்கத்தின் தலைவர்கள் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கும் நிலையில் அடுத்த மார்ச் மாதத்திற்கு முன்னர் மனித உரிமை விடயத்தில் முன்னேற்றம் காணப்படாவிட்டால் சர்வதேச விசாரணையை கோருவோம் என்று கெமரூன் கூறிவிட்டுச் செல்கிறார்.

இவ்வாறு கட்டளையிட கெமரூன் யார் என இலங்கைத் தலைவர்கள் கேட்கிறார்கள். அது உண்மை தான். எமது நாட்டு மனித உரிமை நிலைமையைப் பற்றிப் பேசும் பிரிட்டன் 1818ஆம் ஆண்டு இலங்கையில் ஊவா- வெல்லஸ்ஸ கிளர்ச்சியின் போது பதுளை மற்றும் மொனராகலை மாவட்டத்தில் அனைத்து வயல்வெளிகளையும் தீயிட்டுக் கொழுத்திவிட்டு அங்கு 14 வயதுக்கு மேற்பட்ட சகல ஆண்களையும் கொலை செய்ய ஆணையிட்டிருந்தது என்றும் அவ்வாறானவர்களுக்கு இலங்கையின் மனித உரிமை நிலைமையைப் பற்றிப் பேச என்ன தார்மிக உரிமை இருக்கிறது என்றும் அவர்கள கேட்கிறார்கள். அதுவும் உண்மை தான்.

பலஸ்தீனம், ஈராக், லிபியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பல தசாப்தங்களாக பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்படுகிறார்கள். பலஸ்தீனத்தில் வருடாந்தம் ஆயிரக்கணக்கான வீடுகள் இஸ்ரேலியர்களால் புல்டோஸர்கள் மூலம் இடித்துத் தள்ளப்படுகின்றன. இவை அனைத்துக்கும் பிரிட்டனின் உதவி வழங்கப்படுகிறது. இவற்றைச் சுட்டிக்காட்டியும் சிலர் பிரிட்டனுக்கு மற்றவர்களின் மனித உரிமை பிரச்சினைகளைப் பற்றிப் பேச என்ன தார்மிக உரிமை இருக்கிறது எனக் கேட்கிறார்கள் அதுவும் உண்மை தான்.

கடந்த மர்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை கொண்டுவரப்பட்ட போது உலகம் பூராவிலும் மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்துக் கொண்டு இருக்கும் அமெரிக்காவிற்கு இவ்வாறான பிரேரணைகளை கொண்டு வர என்ன உரிமை இருக்கிறது என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கேட்டார். அதுவும் உண்மை தான்.

ஆனால் நடைமுறையில் இந்தக் கேள்விகள் செல்லுபடியாவதில்லை. கெமரூன் அல்லது ஒபாமா நினைத்தால் அடுத்த மார்ச் மாதத்தில் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கான பிரேரணையை ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிரைவேற்றலாம். அப்பேரவையானது வல்லரசுகளின் கைப்பொம்மையாகவே இருக்கிறது. எனவே இலங்கை அரசாங்கமானது டேவிட் கெமரூனை ரணில் விக்கிரமசிங்கவாகவோ அல்லது கரு ஜயசூரியவாகவோ அல்லது சோமவன்சவாகவோ நினைத்து செயற்படுவது புத்திசாலித்தனமல்ல.        

You May Also Like

  Comments - 0

  • R.A.N. V.rajah Friday, 22 November 2013 03:49 PM

    மனித உரிமை என்பது இனம் மதம் மொழி நாடு எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. பொதுவானது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X