2025 மே 19, திங்கட்கிழமை

பேரறிவாளனின் வாக்குமூலத்தை திருத்தினேன்; சி.பி.ஐ. அதிகாரியின் கருத்தால் பரபரப்பு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 25 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

"பேரறிவாளனின் வாக்குமூலத்தை அப்படியே நான் பதிவு செய்யவில்லை" என்று இந்தியாவின் அதிமுக்கியமான விசாரணை அமைப்பான சி.பி.ஐ.யின் எஸ்.பி.யாக இருந்த தியாகராஜன் அறிவித்திருக்கிறார். இது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பயங்கரமான திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கு தயாரிக்கப்பட்ட மனிதவெடிகுண்டை இயக்க பேட்டரி வாங்கிக் கொடுத்தார் பேரறிவாளன் என்பதுதான் சி.பி.ஐ. சுமத்திய குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் பேரறிவாளன் தண்டிக்கப்பட்டு, தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

இப்படி வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை எதிர்த்து பேரறிவாளன் தாக்கல் செய்த கருணை மனு விவகாரம் இப்போது இந்திய சுப்ரீம் கோர்ட்டின் முன்பு நிலுவையில் இருக்கிறது. அரசியல் சாசன பெஞ்ச் அந்த வழக்கை விரைவில் விசாரிக்கப் போகிறது. தமிழகத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் எதிரொலிக்கிறது. ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள் கூட்டி இந்த கோரிக்கை வலியுறுத்தப்படுகிறது. இந்த நிலையில் சி.பி.ஐ. எஸ்.பி.யின் பேட்டி பேரறிவாளன் உள்ளிட்டோரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தப் போகிறது.

இந்த விஷயத்தில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது "எதற்காக பேட்டரி வாங்கி வரச் சொன்னார்கள் என்று எனக்குத் தெரியாது" என்று பேரறிவாளன் சொன்னதை நான் அப்படியே பதிவு செய்யவில்லை என்று எஸ்.பி. கூறியிருப்பதுதான். இதன் அடிப்படையில் பார்த்தால், இந்தக் கொலைக்கு உதவ வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்று பேரறிவாளனின் வாக்கு மூலம் உறுதி செய்திருக்கிறது. அந்த வாக்குமூலத்தில் உள்ள "எனக்குத் தெரியாது" என்ற வார்த்தையை மட்டும் விட்டு விட்டு, பேரறிவாளனின் மற்ற வாக்குமூலத்தை பதிவு செய்தது ஏன் என்ற கேள்வி எழுவது நியாயம்தான். தியாகராஜன் எஸ்.பி.யின் பேட்டி ராஜீவ் கொலை வழக்கை 22 வருடங்களுக்குப் பிறகு திசை திருப்புகிறது.

ராஜீவ் கொலை வழக்கில் இந்த எஸ்.பி. மட்டுமல்ல. இதுவரை ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த பல அதிகாரிகளும் இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசி இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற விதம் மீது கடும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். முதலில் இந்த வழக்கை விசாரித்த ரகோத்தமன் என்ற எஸ்.பி, ராஜீவ் கொலை வழக்கில் இந்திய உளவுத்துறையை சாடியிருந்தார். சில விஷயங்களை மேற்கொண்டு விசாரிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்காக ஒரு புத்தகமே தனியாக எழுதி அதை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அது போதாது என்று ராஜீவ் கொலையாளிகளின் தூக்குத்தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதி தாமஸும், "தவறு செய்து விட்டோம்" என்ற பாணியில் சில கருத்துக்களை வெளியிட்டார்.

இப்போது அந்த வழக்கை விசாரித்த இன்னொரு எஸ்.பி.யான தியாகராஜன் தான் ரிக்கார்டு பண்ணிய ஸ்டேட்மென்டே சரியாகச் செய்யவில்லை. வழக்கிற்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு, தான் குற்றவாளி அல்ல என்பதற்காகச் சொன்னவற்றை விட்டு விட்டு வாக்குமூலம் பதிவு செய்தேன் என்று பட்டவர்த்தனமாக பேட்டியளித்துள்ளார். "வழக்கில் கிடைத்த அனைத்து க்ளூக்களும் விசாரிக்கப்படவில்லை" "குற்றவாளியின் வாக்குமூலம் திரித்து எழுதிக் கொள்ளப்பட்டது" என்ற இரு முக்கியமான விஷயங்களை சுதந்திரமான அமைப்பு என்று சொல்லப்படும் சி.பி.ஐ.யில் பணியாற்றிய இரு எஸ்.பி.க்கள் கூறியிருக்கிறார்கள்.

போதாக்குறைக்கு தூக்குத்தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதியே மாற்றுக் கருத்தை சொல்லி விட்டார். ஒன்றல்ல, இரண்டல்ல- இந்த ராஜீவ் கொலை வழக்கு விவகாரத்தில் சி.பி.ஐ. அமைப்பு செய்த குழப்பங்கள் எண்ணற்றவை என்பதே ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக வெளிவந்துள்ள பல புத்தகங்கள், பல பேட்டிகள் வெளிப்படுத்தும் உண்மையாக இருக்கிறது. "தடா" "பொடா" போன்ற சட்டங்களில் போலீஸ் அதிகாரிகள் பதிவு செய்து கொள்ளும் வாக்குமூலத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது.

பயங்கரவாதச் சட்டங்களின் கீழ் போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த சிறப்பு பாதுகாப்பு வழக்குகளில் போதிய சாட்சியங்களை சுட்டிக்காட்டி, நிரூபிக்க பேருதவியாக இருக்கின்றன. ஆனால் அப்படி பெறப்பட்ட வாக்குமூலத்தையே இவ்வளவு அஜாக்கிரதையாக ஒரு எஸ்.பி பதிவு செய்திருப்பார் என்றால், ராஜீவ் கொலை வழக்கில் பதிவு செய்யப்பட்ட பல வாக்குமூலங்களின் கதி என்ன? அந்த வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்ட தூக்குத்தண்டனை பற்றி என்ன சொல்வது? இது எல்லாமே ராஜீவ் கொலையாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகளுக்கு மேலும் வலுவூட்டுகிறது. வெறும் வாயைப் போட்டு மெல்லுவோருக்கு தியாகராஜன் எஸ்.பி. போன்றோரின் பேட்டி அவலைப் போட்டு மெல்லுவது போன்ற வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது.

இந்திய அரசமைப்பில் சி.பி.ஐ. என்ற அமைப்பு சுதந்திரமானது. தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட வேண்டிய அமைப்பு. ஆனால் காலப்போக்கில் இந்த அமைப்பின் சுதந்திரம் சிதைக்கப்பட்டு விட்டது. மத்தியில் ஆட்சியில் இருப்போருக்கு முற்றிலும் "ஆமாம் சாமி" போடும் அமைப்பாக சி.பி.ஐ. மாறி விடுமோ என்ற அச்சம் அனைவருக்குமே ஏற்பட்டிருக்கிறது. சி.பி.ஐ. எஸ்.பி.க்கள் தாங்கள் விசாரிக்க வழக்குகளின் தரம் பற்றி இப்படி அவ்வப்போது பேட்டிகள் கொடுப்பதும், புத்தகங்கள் எழுதுவதும் இதை வெளிப்படுத்துகின்றன.

இதனால்தானோ என்னவோ பிரதமராக நரசிம்மராவ் இருந்த காலத்தில் ஒரு வழக்கில், "இனி பிரதமர் அலுவலகத்திலிருந்து எந்த உத்தரவும் பெறக்கூடாது" என்றே இந்திய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதுவும் நிலைமையில் முன்னேற்றத்தைக் கொண்டு வரவில்லை. நிலக்கரி விவகார விசாரணையின் போது இந்திய சட்ட அமைச்சரிடம் சென்று உத்தரவு பெற்ற சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டிய வாக்குமூலத்தையே மாற்றியது என்ற குற்றச்சாட்டு கிளம்பியது. அதை முன்னிட்டு இந்திய சட்ட அமைச்சர் அஸ்வினிக்குமார் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை எழுந்தது.

அதன்பிறகு சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த சி.பி.ஐ. டைரக்டர், "எனக்கு அரசு செயலாளர் அந்தஸ்து வேண்டும். தன்னாட்சி தர வேண்டும்" என்ற விதத்தில் சில அதிகாரங்களை சுப்ரீம் கோர்ட் மூலமாகவே கோரினார். அதற்கும் மத்திய அரசு ஒப்புக் கொள்ளவில்லை. இது போன்ற பரபரப்பான சூழ்நிலையில், "சி.பி.ஐ. சட்டபூர்வ அங்கீகாரம் பெற்ற அமைப்பு அல்ல" என்று அனைவரும் தூக்கி வாரிப் போடும் தீர்ப்பு ஒன்றை அஸ்ஸாம் உயர்நீதிமன்றம் வழங்கியது. இந்தத் தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல. அதிகார வட்டாரத்திலும் அதிர்வு அலைகளை பாய விட்டது. சி.பி.ஐ. விசாரிக்கும் அல்லது ஏற்கனவே விசாரித்து தீர்ப்புச் சொன்ன வழக்குகள் எல்லாம் என்ன ஆகும் என்ற அச்ச உணர்வு தொற்றிக் கொண்டது. இது போன்ற நேரத்தில் அவசர அவசரமாக சுப்ரீம் கோர்ட்டை அணுகிய மத்திய அரசு அஸ்ஸாம் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஸ்டே பெற்றது. இனி "சி.பி.ஐ. அமைப்பு சட்ட பூர்வ அங்கீகாரம் பெற்ற அமைப்பா? இல்லையா?" என்ற வாதம் இந்திய சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

இது மாதிரியான விஷயங்களால் மட்டுமின்றி, சி.பி.ஐ.யில் பணிபுரிந்து வெளியில் வந்த அதிகாரிகளின் பேட்டிகளாலும் சி.பி.ஐ. அமைப்பின் தனித்துவம், மகத்துவம் எல்லாம் சீர்குலைக்கப்படுகிறது. 22 வருடத்திற்கு முன்பு விசாரித்த வழக்குகளில் எல்லாம் எஸ்.பி.க்கள் அளிக்கும் பேட்டிகள் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுவூட்டும் அதே நேரத்தில், "எடுப்பார் கைப்பிள்ளை போல் இருக்கும்" சி.பி.ஐ. அமைப்பு என்பது ஒன்று தேவையா என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்பியிருக்கிறது. ஒரு புறம் சி.பி.ஐ. அமைப்பு பற்றிய விவாதம் என்றால் இன்னொரு புறம் ராஜீவ் கொலையாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை பற்றிய விவாதம். எல்லாம் இனி தமிழகத்தில் என்ன? அகில இந்திய அளவிலேயே சூடுபிடிக்கத் தொடங்கும்.

தியாகராஜனின் பேட்டியை மனதில் வைத்து ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை விடுத்து விட்டார். அவர், "பொதுவாக குற்றவழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்கு மூலங்கள் சாட்சியங்களாக கருதப்படுவதில்லை. ஆனால் பேரறிவாளனை கொடுமைப்படுததி பெறப்பட்ட வாக்குமூலத்தை ராஜீவ் கொலை வழக்கில் சாட்சியமாக ஏற்றுக் கொண்டு அவருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை அளித்தது. ஆனால் இப்போது அந்த வாக்குமூலமே திரித்து பதிவு செய்யப்பட்டது என்று சி.பி.ஐ. எஸ்.பி. தியாகராஜனே ஒப்புக் கொண்டுள்ளார்.

தண்டனை வழங்க அடிப்படையாக அமைந்த சாட்சியமே தகர்ந்து விட்ட பிறகு பேரறிவாளனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியிருக்கும் அவர், "இதையும் மீறி தூக்கிலிட்டால் நீதியை தூக்கிலிடுவதற்கு சமம்" என்று வேதனையுடன் கருத்துச் சொல்லியுள்ளார். பேரறிவாளன் மட்டுமல்ல, முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள ராமதாஸ், "வாக்குமூலத்தை திரித்துப் பதிவு செய்த அதிகாரிகள், அவர்களுக்கு துணையாக இருந்த அதிகாரிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஆக்ரோஷமான அறிக்கை விடுத்துள்ளார்.

 தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ள கருத்தில், "சில குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என்பதுதான் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நெறியாகும். அந்த அடிப்படையில் தற்போது வெளியாகியுள்ள இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை (எஸ்.பி. தியாகராஜனின் பேட்டி) காணும் போது, நடந்து முடிந்த வழக்கு விசாரணையிலும், அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பிலும் மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. எனவே இனியாவது இது பற்றி முழு விசாரணை நடத்திட அரசு முன்வர வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இத்தனை ஆண்டுகள் சிறையிலே தன் இளம்பிராயத்தைச் செலவிட்ட பேரறிவாளனுக்கு நியாயத்தை வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்று முதல் முறையாக ராஜீவ் கொலை வழக்கு பற்றி முழு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பகிரங்கமாக வைத்திருக்கிறார்.

பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், "இந்த பேட்டி எங்களுக்கு நம்பிக்கை தருகிறது. எஸ்.பி.யின் பேட்டியை வரவேற்கும் அதே நேரத்தில் என் மகனுக்கும் கொலைக்கும் சம்பந்தமில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது" என்று கூறியிருக்கிறார். ஆனால் சி.பி.ஐ. முன்னாள் டைரக்டர் கார்த்திகேயன் (ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு அமைப்பின் தலைவர்), "ராஜீவ் கொலை வழக்கு விசாரணை என்பது இது வரை நடைபெற்ற விசாரணைகளிலேயே மிகவும் நியாயமானது. நீதிமன்றம் பாராட்டியுள்ளது. "இந்த விசாரணை எதிர்கால வழக்கு விசாரணைகளுக்கு ஒரு முன்மாதிரி" என்று இன்டர்போல் பாராட்டியிருக்கிறது.

இவ்வழக்கில் உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்று எங்களுக்கு எதுவும் இல்லை. நாங்கள் எங்கள் கடமையை மட்டுமே செய்தோம்" என்று பிரபல ஆங்கில நாளேடான "தி இந்து" விற்கு பேட்டியளித்துள்ளார். ஆனால் அவரே, " தூக்குத் தண்டனை பெற்றவரை 20 வருடங்களுக்குப் பிறகு தூக்கிலிட வேண்டுமா?" என்பது விவாதத்திற்குரியது. அந்த விஷயத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் கே.டி.தாமஸ். வி.ஆர். கிருஷ்ண அய்யர் போன்றோரின் கருத்துக்களுடன் நான் உடன்படுகிறேன் என்று கூறியிருக்கிறார் கார்த்திகேயன்.

சி.பி.ஐ.எஸ்.பி. தியாகராஜனின் பேட்டி ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் மீண்டும் "புதிய சந்தேகத்தை" கிளப்பியிருக்கிறது. அதுவும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை எதிர்த்து வழங்கப்பட்ட கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அப்படி நிராகரிக்கப்பட்டது செல்லாது என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் முன்பு வரும் நேரத்தில் வெளியாகும் இந்த "ஒப்புதல் வாக்குமூலங்கள்" மூன்று தூக்குத்தண்டனை கைதிகளின் வாழ்விலும் வெளிச்சத்தைக் காட்டும் கைவிளக்கு போல் அமைந்திருக்கிறது என்பதுதான் தமிழகத்தில் நிலவும் கருத்து. இந்த விஷயத்தில் ஏற்கனவே இவர்களின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றமே ஒரு மனதாக தீர்மாணம் நிறைவேற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X