2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கை மீது சூளும் கருமேகங்கள்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 29 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் கடந்த நவம்பர் 26ஆம் திகதி “ஏசியன் லைட்” இதழில் எழுதியுள்ள பிரத்தியேக பத்தி ஒன்றில், இலங்கை குறித்த தனது கடுமையான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

”2009இல் முடிவுக்கு வந்த போரின் இறுதிக்கட்டத்தில், அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பாக, சுதந்திரமான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் நடத்த வேண்டும்.

2014 மார்ச் மாதத்துக்கு முன்னதாக, இலங்கை அரசாங்கம் சுதந்திரமான விசாரணைகளை முன்னெடுக்கத் தவறினால், சர்வதேச விசாரணைக்கு பிரித்தானியா அழுத்தம் கொடுக்கும்” என்று அவர் அதில் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இது பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், அண்மைக் காலத்தில் இலங்கைக்கு விடுக்கின்ற நான்காவது பகிரங்க எச்சரிக்கையாகும். கொமன்வெல்த் (பொதுநலவாய) மாநாட்டில் பங்கேற்க கொழும்பு புறப்பட சில நாட்கள் முன்னதாக அவர் இதுபோன்ற முதலாவது எச்சரிக்கையை விடுத்திருந்தார்.

பின்னர் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலும், இலண்டன் திரும்பிய பின்னர், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் போதும் அவர் இத்தகைய எச்சரிக்கையை விடுத்திருந்தார்.

கடந்த 12ஆம் திகதி ஐ.நா பொதுச்சபையில் நடந்த வாக்கெடுப்பில், வரும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடாக பிரித்தானியா தெரிவு செய்யப்பட்டுள்ள சூழலில் தான், அவர் இந்த எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், இலங்கைக்கு எதிராக விடுத்து வரும் எச்சரிக்கைகளையும், அவரது இந்த நிலைப்பாட்டையும், தேர்தல் நலனுக்கான நீலிக் கண்ணீர் என்று இலங்கையின் அரச சார்பு ஊடகங்கள் பல விமர்சித்துள்ளன.

புலம்பெயர் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே, அவர் அவ்வாறு நடந்து கொள்வதாக, சிங்கள மக்களைத் திருப்திப்படுத்த அரசாங்கம் முனைகிறது. ஆனால், டேவிட் கமரூன் எத்தகைய காரணத்துக்காக இவ்வாறு கடும் போக்குடன் நடக்கத் தொடங்கியுள்ளார் என்பது முக்கியமானதல்ல.

அவர் என்ன செய்யப் போகிறார் - அவரால் என்ன செய்ய முடியும் என்பதே முக்கியமானது. ஏற்கனவே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக, இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் உருப்படியான எந்த முயற்சிகளையும் முன்னெடுக்காத சூழலில், வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ள 25ஆவது அமர்வு மிகவும் முக்கியமானது.

இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த மீறல்கள் குறித்து, நம்பகமான – நடுநிலையான - சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றே ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா போன்ற நாடுகள், இதுவரை வலியுறுத்தி வந்துள்ளன.

அதாவது நம்பகமான உள்ளக விசாரணைப் பொறிமுறையையே இன்றும் கூட அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் எடுத்துள்ள நிலைப்பாடு, அமெரிக்காவின் தற்போதைய நிலையை விடவும் கடுமையானது.

நம்பகமான விசாரணைகளை அடுத்த நான்கு மாதங்களுக்குள் நடத்தத் தவறினால், சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய அழுத்தம் கொடுக்கும் என்று டேவிட் கமரூன் எச்சரித்துள்ளார்.

அவர் ஒன்றுக்கு நான்கு முறை, இந்தக் கருத்தைக் கூறியுள்ளார். புலம்பெயர் தமிழர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளார். ஊடகங்களிடம் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதாவது கிட்டத்தட்ட ஒரு வாக்குமூலம் போன்ற தனது பிரத்தியேகப் பத்தியில், எழுத்துமூலமும் அதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அடுத்த ஜெனிவா கூட்டத்தொடர் என்பது, உள்ளக விசாரணைப் பொறிமுறை என்று, இலங்கை அரசுக்கு கொடுக்கப்பட்ட காலஅவகாசத்துக்கு அப்பாற்பட்டதாகவே அமையப் போகிறது. அதாவது வரும் மார்ச் மாதத்துடன், பெரும்பாலும் போர்க்குற்றங்கள் குறித்த உள்ளக விசாரணை கோரும், சர்வதேச அழுத்தங்கள் அனைத்தும் ஓய்வுக்கு வந்து விடலாம்.

அதற்குப் பதிலாக, பிரித்தானியா முன்வைத்துள்ள, சர்வதேச விசாரணை என்ற விவகாரம் சூடுபிடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமுள்ளன. பிரித்தானியா தனது நிலையில் இருந்து இனிமேல் பின்வாங்க முடியாது. வரும் மார்ச் மாதத்துக்குப் பின்னர், சர்வதேச விசாரணை அழுத்தங்களை கைவிட்டு, உள்நாட்டு விசாரணைக்கு பிரித்தானியாவினால் வலியுறுத்த முடியாது.

எனவே, அடுத்த மார்ச் மாதம் நடக்கவுள்ள ஜெனிவா கூட்டத்தொடர், இலங்கைக்கு மிகப் பெரிய கண்டமாகவே அமையப் போகிறது. பிரித்தானியா மட்டும் இலங்கைக்குச் சிக்கலைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்றில்லை. இந்தியா கூட, இலங்கையின் காலை வாரி விடலாம் என்று கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் ஊடகங்களிடம் தகவல் வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே, பல்வேறு அழுத்தங்களின் மத்தியில் – வேண்டா வெறுப்பாகவே அமெரிக்கா கொண்டு வந்த இரண்டு தீர்மானங்களையும் இந்தியா ஆதரித்திருந்தது. அதற்கு தமிழ்நாட்டின் அழுத்தங்களே காரணமாக இருந்தன. ஆனால், அடுத்த ஜெனிவா கூட்டத்தொடரில், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் ஏதும், அழுத்தம் கொடுக்காது போனாலும், இலங்கைக்கு எதிராக இந்தியா கடும் போக்கை வெளிப்படுத்தியே ஆக வேண்டிய நிலை உள்ளது.

அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஏற்கனவே இரண்டுமுறை இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை ஆதரித்த இந்தியா- அதற்குப் பின்னர், இலங்கை உரிய நடவடிக்கைகளை எடுத்து விட்டது என்று தனது போக்கை மாற்றிக் கொள்ள முடியாது.

எதையுமே இலங்கை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் போது, இந்தியா மட்டும், அதற்கு முரணான நிற்க முடியாது. அவ்வாறு நிற்கவேண்டுமாயின் அதற்கு ஒரு வலுவான நியாயம் தேவை. அத்தகைய நியாயம் ஒன்றை முன்வைப்பதற்கு, இலங்கை எதையுயே செய்திருக்கவில்லை.

அடுத்தது, வரும் அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். பெரும்பாலும், ஏப்ரல், மே மாதங்கள் தேர்தல் காலமாக அமையலாம்.

இந்தநிலையில், வரும் மார்ச் மாதம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25 வது அமர்வில், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும், எத்தகைய தீர்மானத்தையும், தோற்கடிக்க இந்தியாவினால் எத்தனிக்க முடியாது. அது, தமிழக வாக்காளர்களுக்கு கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தும்.

வரும் தேர்தலில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டாலும் சரி, கூட்டணி அமைத்துக் கொண்டாலும் சரி, தேர்தல் காலத்தில் இலங்கைக்கு ஆதரவாக, களமிறங்கி தனது வாக்கு வங்கியைக் கோட்டை விட காங்கிரஸ் தயாராக இருக்காது.

அதேவேளை, ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நிலையெடுத்தால், அதைவைத்தே, தமிழ்நாட்டில் காங்கிரசை முகவரி தெரியாமல் ஆக்கிவிட ஏனைய கட்சிகள் காத்திருக்கின்றன.

இலங்கைப் பிரச்சினை, இந்திய தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறிக் கொண்டாலும், தேர்தல் நலனை விட்டுக் கொடுத்து, இலங்கைக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் ஒருபோதும் தயாராக இருக்காது.

அவ்வாறு நடந்தால், அது ஒரு அதிசயிக்கத்தக்க நிகழ்வாகவே இருக்கும். இத்தகைய பின்னணியில், கடந்த காலங்களை விடவும், இந்தியா முந்திக் கொண்டு இலங்கைக்கு எதிரான நகர்வுகளில் இறங்கலாமே தவிர, கடைசி நேரம் வரை இழுத்தடிக்க வாய்ப்புகள் குறைவு.

இது இலங்கைக்கு இன்னும் சிக்கலை ஏற்படுத்தக் கூடிய விடயம். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்குள், வரும் ஜனவரி மாதம், சீனா, ரஷ்யா, கியூபா, சவூதி அரேபியா, வியட்னாம், மாலைதீவு போன்ற நாடுகள் நுழையப் போவது இலங்கைக்கு பெரிய பலம் தான் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், அதேசமயம், கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த ஆறு நாடுகள், வரும் டிசெம்பர் 31ம் நாளுடன் பதவியிழக்கவுள்ளன. எனவே, கூட்டல் கழித்தல் கணக்குகளின் அடிப்படையில் பார்த்தால், புதிய 14 உறுப்புநாடுகளின் தெரிவு என்பது, இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் உள்ள களச் சூழலை எந்தவகையிலும் மாற்றியமைக்கத் தக்கதொன்றாக அமையப் போவதில்லை.

அதேவேளை, கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானங்களுக்கு முறையே, 23 மற்றும் 25 நாடுகள் ஆதரவு அளித்திருந்தன. ஆனால், அடுத்த ஆண்டில் அந்தளவுக்கு ஆதரவு கிடைக்காது என்ற கருத்தும் உள்ளது. கடந்த முறை தீர்மானத்தைக்  கொண்டு வந்த போது அமெரிக்கா, எப்படியாவது, முன்னைய ஆண்டை விட அதிகமான நாடுகளின் ஆதரவைப் பெற வேண்டும் என்று முனைப்புக் காட்டியது.

அடுத்த ஆண்டில் அதற்கான வாய்ப்பு இல்லாத நிலையில், பிரித்தானியாவை முன்னிறுத்தி, சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கான அழுத்தம் கொடுக்கும் தீர்மானத்தைக் கொண்டு வர அமெரிக்கா முனையலாம். இது இலங்கைக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மெல்லமெல்ல சர்வதேச அரங்கில் இலங்கை ஒரு தப்பிக்க முடியாத வியூகத்துக்குள் சிக்கி வருகிறது. போர்த்திட்டமிடலில், எந்தவொரு வியூகத்தை வகுக்கும் போதும், எதிரி தப்பிச் செல்வதற்கு ஒரு சிறிய வழி விடப்படும்.

அதுதான், போரின் போக்கைத் தீர்மானிப்பதாக இருக்கும். அதுபோன்று, சர்வதேச விசாரணை அழுத்தங்களில் இருந்து தப்பிக்க இலங்கைக்கும் ஒரு சிறிய வழி விடப்படலாம். அது தென்னாபிரிக்காவின் முன்முயற்சியிலான, உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவாகவும் அமையலாம்.

எவ்வாயினும், வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர், பொறுப்புக்கூறல் தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு நகர்விலும் இறங்காமல் இருக்குமேயானால், சர்வதேச சமூகத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் இலங்கைக்குப் பெரும் அச்சுத்தலாகவே அமையலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X