2025 மே 19, திங்கட்கிழமை

ஜெனிவா பொறியில் இருந்து தப்பிக்க இது உதவுமா?

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே.சஞ்சயன்
 
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிரான கடுமையான அழுத்தங்களைக் கொடுக்க, மேற்குலகம் தயாராகி வருகின்றது. இந்தநிலையில், இத்தகைய அழுத்தங்களில் இருந்து தப்பிப்பதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கமும் தீவிரமாக இறங்கியுள்ளது.
 
ஜெனிவாவில், கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவே அரசாங்கத்தைக் கோரியிருந்தன. அதற்கு அப்பால், பெரிய அழுத்தங்களை அந்த தீர்மானங்கள் கொடுத்திருக்கவில்லை.
 
ஆனால், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை. ஜெனிவா தீர்மானம் கொடுத்த காலக்கெடு நெருங்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசாங்கம் - நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது போன்று பாவனை காட்டத் தொடங்கியுள்ளது.
 
அண்மைக்காலத்தில் இரண்டு முக்கியமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது. அவற்றில் முதலாவது, வடக்கு, கிழக்கில் போர் நடந்த 1983 தொடக்கம், 2009 மே வரையான காலப்பகுதியில், காணாமற்போனவர்கள் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு.
 
இரண்டாவது, தற்போது, நாடெங்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் போர் நடந்த காலப்பகுதியில் ஏற்பட்ட இழப்புகள் பற்றி மதிப்பிடும் கணக்கெடுப்பு.
 
இந்த இரண்டுமே துல்லியமாகவும் நியாயமாகவும் மேற்கொள்ளப்பட்டால், போர் பற்றிய உலக நாடுகள் பலவற்றினது கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். இந்த இரண்டு விடயங்களையும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்துள்ள காரணத்தினால், அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. அவ்வாறு செய்வதாயின், இதனை எப்போதோ செய்திருக்க முடியும். ஆனால், அரசாங்கம் அவ்வாறு செய்ய முன்வரவில்லை.
 
போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை, காணாமற்போனவர்கள் பற்றிய எண்ணிக்கை குறித்து அவ்வப்போது வெளியாகும் தகவல்கள் தான், அரசாங்கத்துக்கு பெரிய நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
 
ஐ.நா நிபுணர் குழு அறிக்கை, இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறது. வேறு சில தரப்புகள், 10 ஆயிரம் தொடக்கம் 1 இலட்சம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்கின்றனர்.
 
போர் முடிவுக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கழிந்துள்ள போதிலும், உள்நாட்டுப் போரால் இலங்கையில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர், எத்தனை பேர் காயமடைந்தனர், எவ்வளவு தொகையானோர் காணாமற்போயினர் என்ற அதிகாரபூர்வ புள்ளிவிபரங்கள் ஏதும் அரசாங்கத்திடம் கிடையாது. போர் நடந்த காலங்களில் கூட அரசாங்கம் எந்தப் புள்ளிவிபரங்களையும் சரியாக வெளியிட்டது கிடையாது.
 
போரில் கொல்லப்பட்ட படையினரின் எண்ணிக்கை, புலிகளின் எண்ணிக்கை, பொதுமக்களின் இழப்புகள் என்று சரியான பதிவுகளை அரசாங்கம் எப்போதுமே வெளியிட்டதில்லை. இதுபற்றி நாடாளுமன்றத்தில் ஒரு புள்ளிவிபரத்தை அரசாங்கம் வெளியிடும், பாதுகாப்பு அமைச்சு ஒன்றை வெளியிடும், இராணுவத் தலைமையகம் இன்னொரு புள்ளிவிபரத்தைக் கொடுக்கும். இது வழக்கமான முரண்பாடுகளாகவே தொடர்ந்திருந்தன.
 
போர் முடிவுக்கு வந்த பின்னர், அரசாங்கம் போரில் கொல்லப்பட்ட, காயமுற்ற படையினரின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதில் காட்டிய அக்கறையை, பொதுமக்கள் அல்லது புலிகள் விடயத்தில் செலுத்தவில்லை.
 
ஆனால், போரில் கொல்லப்பட்ட பொதுமக்கள் எத்தனை பேர், காணாமற்போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி சர்வதேச அளவில் இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் கேள்விகளாக எழுந்துள்ள நிலையில், இவை பற்றிய ஒரு கணக்கெடுப்பை நடத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
 
குறிப்பாக போரின் இறுதிக்கட்டத்தில் உண்மையில் என்ன நடந்தது, எத்தனை பேர் கொல்லப்பட்டனர், காணாமற்போனோரின் கதி என்ன என்ற கேள்விகளுக்கு விடை காணப்பட வேண்டும் என்பதில் சர்வதேச சமூகம் உறுதியாக இருக்கிறது.
 
பொறுப்புக்கூறல் விடயத்தில், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பக்கபலமாக நிற்கும் கொமன்வெல்த் அமைப்பின் செயலர் கமலேஷ் சர்மா கூட, கடந்தகாலத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது வெளிக் கொண்டு வரப்பட்டால் தான், உண்மையான நல்லிணக்கத்தை உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
 
துல்லியமான தரவுகள் சேகரிக்கப்பட்டு, அவை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று கமலேஷ் சர்மா வலியுறுத்தியுள்ளதை அரசாங்கம் எந்தளவுக்கு விரும்பும் அல்லது ஏற்றுக் கொள்ளும் என்பது சந்தேகம் தான்.
 
ஏனென்றால், ஏற்கனவே அரசாங்கம் வடக்கில் இறுதிக்கட்டப் போர் நடந்த காலங்களில் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பான சில கணக்கெடுப்புகளை நடத்தி, அதை ஐ.நா வரை கொண்டு சென்றும் இருந்தது. ஆனால், சர்வதேச சமூகம் அதை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
 
காரணம் என்னவென்றால், சர்வதேச சமூகம் எதிர்பார்த்த கேள்விகளுக்கான விடை அதில் உள்ளடக்கப்படவில்லை.
 
அதுபோன்றதொரு மதிப்பீடாக இப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மதிப்பீடும், விசாரணையும் அமைந்து விடக்கூடாது என்பதில் சர்வதேச சமூகம் நிச்சயம் உறுதியாக இருக்கும். அரசாங்கம் இப்போது ஆரம்பித்துள்ள போரின் இழப்புகள் தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள், அவசர கோலத்தில் நடத்தப்படும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், இதற்கென அளிக்கப்பட்டுள்ள குறுகிய கால அவகாசமே இதனை வெளிப்படுத்துகிறது.
 
வரும் 20ஆம் திகதிக்குள் நடத்தப்படவுள்ள இந்த மதிப்பீட்டுப் பணிகளின் முடிவுகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வெளியிடவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் தான், இலங்கைக்கு மிகவும் நெருக்கடி கொடுக்கும் ஒன்றாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
 
அதில் இந்த மதிப்பீட்டு அறிக்கையை முன்வைத்து, நீங்கள் குற்றம்சாட்டுகின்ற அளவுக்கு இறுதிப் போரில் மரணங்களோ காணாமற்போதல்களோ நிகழவில்லை என்று வெட்டியாட நினைக்கிறது அரசாங்கம்.
 
ஆனால், இந்த மதிப்பீடுகளையும் விசாரணைகளையும் முன்னிறுத்தி – அரசாங்கம் ஜெனிவாவில் தப்பிக்க வேண்டுமானால், துல்லியமான தகவல்களை, உண்மையான தகவல்களை, நேர்மையாக திரட்டி வெளிப்படுத்த வேண்டியிருக்கும். இதையே தான் கொமன்வெல்த் செயலர் கமலேஷ் சர்மா வலியுறுத்தியுள்ளார்.
 
ஆனால் தற்போது முன்னெடுக்கப்படும் மதிப்பீடுகள் அந்தளவுக்கு முழுமையான தரவுகளை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்படுவதாகத் தெரியவில்லை. ஏனென்றால் இந்தக் கணக்கெடுப்புகளை தனியே இலங்கைத் தீவின் எல்லைகளுக்குள் மட்டும் வரையறுப்பதால் உண்மை முழுவதும் வெளிவராது. மூன்று தசாப்த காலப் போர், வேண்டுமானால் இலங்கைத் தீவின் எல்லைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம். அதுவும் கூட சில சமயங்களில், இலங்கைக்கு அப்பாலுள்ள கடல் வரைக்கும் விரிந்திருந்தது.
 
ஆனால், போரின் விளைவுகளில் ஒன்றான இடம்பெயர்வு, பல்லாயிரம் கி.மீற்றர்களுக்கும் அப்பால் தமிழர்களை துரத்தியுள்ளது. உலகின் பல நாடுகளில் தமிழர்கள் அகதிகளாக அடைக்கலம் தேடியுள்ளனர். அதுவும் இந்த மூன்று தசாப்தகாலப் போரின் வடுக்களில் ஒன்று தான்.
 
அவ்வாறு இடம்பெயர்ந்தவர்களும் தமது குடும்பங்களை, உறவுகளை சொத்துக்களை, உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். அவற்றையெல்லாம் கணக்கிடாமல், வெறுமனே இலங்கைத்தீவின் எல்லைகளுக்குள் இந்த மதிப்பீடுகளை மேற்கொள்வதால், மூன்று தசாப்தகாலப் போரின் உண்மை வெளிவரப் போவதில்லை.
 
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினரின் மரணத்தைப் பதிவு செய்யப்போவதில்லை என்றும், ஏனென்றால் அவரது குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதால், பதிவு மேற்கொள்ளப்படாது என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.
 
வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும், முற்றாக அழிக்கப்பட்டவர்களின் கணக்குகளும் சேர்க்கப்படாத புள்ளிவிபரங்களை, எவ்வாறு போரின் முழுமையான இழப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியும்?
 
அந்த முழுமையான விபரம் வெளியாவதை தவிர்ப்பதற்காகவே அரசாங்கம் சூட்சுமமான முறையில் வீடுவீடாக சென்று பதிவுகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
 
இதன்படி, வலி-வடக்கிலும், சம்பூரிலும் இருந்து உயர்பாதுகாப்பு வலயங்களால் இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலை எவ்வாறு உள்ளடக்கப்படவுள்ளது என்ற கேள்வியும் எழுகிறது. இவை தவிர, இழப்புகளை ஆவண ரீதியாக உறுதிப்படுத்த வேண்டும் என்று போருக்குள் இருந்து தப்பிய சமூகத்திடம் கோருவதைப் போன்ற அபத்தம் வேறேதும் இருக்க முடியாது.
 
முள்ளிவாய்க்காலில் அவசர அவசரமாக இறந்து போனவர்களின் உடல்களை புதைத்து விட்டு வந்தவர்களிடம் மரணச்சான்றிதழ் கேட்பதும், உடுத்த உடையுடன் ஓடியவர்களிடம் பிறப்புச் சான்றிதழ் கேட்பதும், தொட்டிலில் தூங்கிய குழந்தையை காப்பாற்ற முனைவதற்குள் எல்லாவற்றையும் தொலைத்து விட்டவர்களிடம் போய் காணி உறுதி கேட்பதுவும், நடுநிசியில் இழுத்துச் செல்லப்பட்டவர்களின் அல்லது எங்கோ வைத்து கடத்தப்பட்டவர்களின் உறவினர்களிடம் உறுதிச் சீட்டும், சாட்சியமும் கேட்பதும், இந்த மதிப்பீட்டை இன்னும் சர்ச்சைக்குள்ளாக்குகின்றன.
 
ஆவண ரீதியாகவும் சாட்சிய ரீதியாகவும் தான் இழப்புகளை பதிவு செய்யவும், மதிப்பீடு செய்யவும் முடியும் என்றால், அது மூன்று தசாப்தப் போரின் அழிவுகளை முழுமையாக வெளிப்படுத்தாது.
 
ஒட்டுமொத்தப் போரிலும் எதிர்கொண்ட அழிவுகளை முழுமையாக ஒன்று விடாமல் பதிவு செய்தால் தான், அந்த மதிப்பீடு முழுமை பெறும் என்பதுடன் சர்வதேச சமூகத்தையும் திருப்திப்படுத்தும்.
 
அரசாங்கத்தினால், தனது நிர்வாக அதிகாரத்தைக் கொண்டு, இந்த மதிப்பீட்டை வலுவானதாக்கவும் முடியும், வலுவற்றதாக்கவும் முடியும். இதில் அரசாங்கம் எதைச் செய்யப் போகிறது?
 
ஜெனிவாவில் அரசாங்கம் முன்வைக்கப் போகும் இந்த மதிப்பீடு முழுமையானதாக இல்லாது போனால், அது வெறும் காகிதமாக குப்பைக்குள் தான் வீசப்படும். அதுமட்டுமன்றி, அது உண்மையான நல்லிணக்கத்துக்கான கதவுகளையும் திறந்து விடாது.

You May Also Like

  Comments - 0

  • pathmadeva Friday, 06 December 2013 04:35 PM

    மேலதிகமாக ஒரு தகவல் - இந்தக் கணக்கீட்டில் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ள தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் இணையத்தளங்களில் இக்கணக்கீடு தொடர்பான எத்தகவல்களையும் பெற முடியவில்லை!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X