2025 மே 19, திங்கட்கிழமை

தேர்தல் தமிழகத்தில், பிரசாரம் யாழ்ப்பாணத்தில்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பிரதமர் மன்மோஹன் சிங் விரைவில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவிருக்கிறார் என அந்நாட்டு நிதி அமைச்சர் பி. சிதம்பரம் அண்மையில் சென்னையில் நடைபெற்ற இலங்கைத் தமிழர்கள் தொடர்பான கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போது கூறியிருக்கிறார். இந்தச் செய்தி இலங்கையிலும் சில எதிரொலிகளை உருவாக்கியிருக்கிறது.

இந்த எதிரொலிகளில் காணப்படும் முக்கியத்துவம் என்னவென்றால் கடந்த மாதம் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும் எனப் பிரார்தித்தவர்கள் இப்போது அவர் இலங்கைக்கு வரக்கூடாது என்று நினைப்பதும் அன்று அவர் வரக்கூடாது என்று நினைத்தவர்கள் இப்போது அவர் வருவதை ஆவலாய் எதிர்ப்பார்த்து இருப்பதுமே.

இலங்கை அரச தலைவர்கள் இந்திய பிரதமர் கடந்த மாதம் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்றே நினைத்தார்கள், பிரார்த்தித்தார்கள். இப்போது அவர் இலங்கைக்கு வருவதாக இருந்தால் அவர் யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்காகவே வருகிறார் என்பதால் அரச தலைவர்கள் அதனை விரும்புவதாக தெரியவில்லை. எதிர்க்கட்சிக் கொறடா ஜோன் அமரதுங்க இந்திய பிரதமரின் உத்தேச யாழ்ப்பாண விஜயம் தொடர்பாக இந்தியா விரும்பாத விதத்தில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு அரச ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் அவ்விஜயத்தை அரசாங்கம் விரும்பவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

இந்திய பிரதமர் கொழும்புக்கு மட்டும் விஜயம் செய்வதாக இருந்தால் அரச தலைவர்கள் அதனை விரும்புவார்கள். ஆனால் சிதம்பரத்தின் கருத்துப்படி அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவே விரும்புகிறார். அவ்வாறானதோர் விஜயம் பிரிட்டிஷ் பிரதமரின் யாழ்ப்பாண விஜயத்தைப் பொல் தமிழ் மக்களின் மனித உரிமைப் பிரச்சினைகள் விடயத்தில் மீண்டும் உலகக் கவனத்தை திருப்பிவிடலாம் என்பதால் அரசாங்கம் அதனை விரும்பாது என்றே ஊகிக்க முடிகிறது.

அமரதுங்கவின் உரை விமல் வீரவன்சவின் உரைப் போல் அமைந்து இருந்தது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வர முடியாதவர் இப்போது எவ்வாறு வர முடியும் என அவர் கேள்வி எழுப்பியிருந்தார். வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் அழைப்பை மட்டும் ஏற்று ஜனாதிபதியின் அழைப்பின்றி இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்ய முடியாது என்றும் இந்த விஜயம் நாட்டை பிரிப்பதற்கான முயற்சியாக இருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த உரையை செவிமடுத்த எவரும் இந்திய பிரதமர் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாததையிட்டு ஐக்கிய தேசிய கட்சி ஆத்திரத்தில் இருப்பதாகவே நினைக்கலாம். ஆனால் ஐ.தே.க. அம்மாநாட்டை பகிஷ்கரித்தது. எனவே இந்திய பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளாததையிட்டு அக்கட்சி அந்நாட்களில் மகிழ்ச்சியடைந்து இருக்க வேண்டும். அதேவேளை இந்தியா நாட்டை பிரிக்க முயற்சிப்பதாக அரசாங்கத்தில் உள்ள வீரவன்ச மற்றும் சம்பிக்க ரணவக்க போன்றவர்களே கூறி வருகிறார்கள்.

எனவே அமரதுங்கவின் உரையைப் பற்றி அரச தலைவர்கள் மகிழ்ச்சியடைவதில் ஆச்சிரியப்படுவதற்கில்லை. அரச தலைவர்கள் எவரும் அதனை எதிர்த்து எதனையும் கூறவும் இல்லை. எதிர்க் கட்சிகளின் கூட்டணியில் இருக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனே அதனை கண்டித்து இருந்தார்.

இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதாக இருந்தால் அரசாங்கம் அதனை விரும்புவதாகவும் அவ்வாறானதோர் விஜயத்தின் மூலம் அவர் வடக்கின் தற்போதைய நிலைமையை நேரில் காணலாம் என்றும் பிரதமர் டீ.எம். ஜயரத்ன கூறியிருந்தார். ஆனால் வெளிநாட்டவர்கள் வட பகுதிக்குச் செல்வதை இலங்கை அரசாங்கம் அவ்வளவாக விரும்புவதில்லை என்பதே உண்மை.

அரச ஆதரவாளர்களே பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெற்ற நாட்களில் சனல் 4 ஊடக நிருவனத்தின் ஊடகவியலாளர்களின் யாழ்ப்பாண விஜயத்தை தடுத்தனர். அந்நாட்களில் கமரனின் யாழ்ப்பாண விஜயம் தொடர்பாகவும் அரச தலைவர்கள் திருப்தியடையவில்லை. அந்நாட்களில் வட பகுதிக்கான தனியார் விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

'இலங்கையின் தமிழ் மக்கள், உயிர் வாழ்வதங்கான உரிமை மற்றும் இந்திய நிலைப்பாடு' என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே சிதம்பரம் இந்தியப் பிரதமரின் உத்;தேச யாழ்ப்பாண விஜயத்தைப் பற்றிக் கூறியிருந்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய வேண்டும் என்ற வட மாகாண முதலமைச்சரின் அழைப்பு இன்னமும் செல்லுபடியாகவே உள்ளது என்றும் அதன் பிரகாரம் பிரதமர் யாழ்ப்பாணத்திற்குச் சென்று விக்னேஸ்வரனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் அவர் கூறியிருந்தார்.

மன்மோஹன் சிங் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார் என்றே பலர் எதிர்ப்பார்த்தனர். அந்த நிலையில் இலங்கைக்கு வரும் பட்சத்தில் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யுமாறு விக்னேஸ்வரன் அம் மாநாடு நடைபெறவிருக்கும் நாட்களிலேயே இந்திய பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனையே சிதம்பரம் இங்கு குறிப்பிடுகிறார். ஆனால் தமிழகத் தலைவர்களின் எதிர்ப்பின் காரணமாக அவர் வரவில்லை.

இப்போது நிலைமை என்னவென்றால் இந்திய லோக் சபா தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. அத்ஆதர்தலின் போது தமிழகத்திலும் 40 தொகுதிகளுக்காக தேர்தல் நடைபெறும். எனவே கொங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தின் முக்கியத்தை மறந்து விட முடியாது. எனவே தான் கொங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தி வருகின்றன. அதிலும்இலங்கையின் தமிழ் மக்களின் பிரச்சினைகனே முக்கியமாக கலந்துரையாடப்படுகின்றன.

இந்தியா பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதை தமிழகத்தில் எந்தவொரு கட்சியும் விரும்பவில்லை. ஆனால் இந்தியா மாநாட்டை பகிஷ்கரிக்கவேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்கவில்லை. பின்னர் இந்திய பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என தமிழகத் தலைவர்கள் வற்புறுத்தினர். அதனை இந்திய பிரதமரால் தட்டிக் கழிக்க முடியவில்லை.

அதன் மூலம் தமிழக அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தலாம் என சிங் நினைத்திருக்கலாம். கமரன் இலங்கைக்கு விஜயம் செய்திருக்காவிட்டால் உண்மையிலேயே காங்கிரஸ் கட்சியின் இந்த நோக்கம் நிறைவேறியிருக்கலாம். ஆனால் கமரன் இங்கு வந்து சர்வதேச விசாரனை கோருவேன் என்றெல்லாம் கூறி இலங்கை அரசாங்கத்தை மிரட்டி தமிழக மக்கள் மத்தியில் பெரும் வீரனாகிவிட்டார்.

எனவே இந்திய தலைவர்களும் இலங்கை தமிழர்கள் விடயத்தில் மேலும் ஏதாவது செய்து தமிழக மக்களின் மனதை கவர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்திய பிரதமரின் உத்தேச யாழ்ப்பாண விஜயத்தின் உண்மையான நோக்கம் அதுவாகத் தான் இருக்க வேண்டும்.

இலங்கை ஜனாதிபதயின் அழைப்பின்றி இந்தியப் பிரதமருக்கு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய முடியாது என அமரதுங்க கூறுகிறார். அது உண்மை தான். ஆனால் இந்திய தலைவர்கள் விரும்பினால் இலங்கை தலைவர்கள்; மூலம் வேண்டிய அழைப்பை வரவழைத்துக் கொள்ளவும் இந்திய தலைவர்கள் நடவடிக்கை எடுப்பர். இதனை மற்றவர்களை விட அமரதுங்கவின் ஐ.தே.க.விற்கே விளங்கிக் கொள்ள முடியும்.

அக் கட்சிக்கு 1987ஆம் ஆண்டு அது தொடர்பானதோர் அனுபவம் கிடைத்தது. 1987அம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன இலங்கைக்கு வருமாறு இந்தியப் படைகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் உண்மையிலேயே இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி ஜயவர்தனவிடம் அருந்து அந்த அழைப்பை வரவழைத்துக் கொண்டார் என்பது உலகம் அறிந்த விடயமாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X