2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் வெற்றிகளும், ஜெயலலிதாவின் பிரதமர் வியூகமும்!

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு வருகின்ற டிசெம்பர் 19ஆம் திகதி கூடுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கூட்டப்படும் இந்தப் பொதுக்குழுவிற்கு ஏற்காடு இடைத் தேர்தல் வெற்றி இனிப்புச் செய்தியாக கிடைத்திருக்கிறது. இங்கு போட்டியிட்ட அ.தி.மு.க.வேட்பாளர் பி.சரோஜா 78116 வாக்குகள் வித்தியாசத்தில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் மாறனை தோற்கடித்துள்ளார். அது மட்டுமல்ல அ.தி.மு.க. பிறந்த பிறகு இங்கு போட்டியிட்ட பத்துமுறையில் இந்த முறைதான் அதிகபட்சமாக 142771 வாக்குகளை அ.தி.மு.க. பெற்றிருக்கிறது. எம்.ஜி.ஆர் காலத்தில் 28000 வாக்குகளாக இருந்த அ.தி.மு.க. இங்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் போட்டியிட்ட நேரத்தில் 142000 வாக்குகளாக உயர்ந்திருக்கிறது.
 
ஏற்காடு தொகுதியில் இப்படிக் கிடைத்த அதிக வாக்கு பலத்துடன் அக்கட்சி தனது பொதுக்குழுக் கூட்டத்தை 19ஆம் திகதி நடத்துகிறது. அ.தி.மு.க.தான் தமிழகத்தில் தனிப்பெரும் கட்சி என்ற தோற்றத்தைக் கொடுத்திருக்கின்ற சூழ்நிலையில், அக்கட்சி பா.ஜ.க.வுடன் "ஒட்டோ, உறவோ" இல்லை என்ற ரீதியில் சமீப காலமாக நடந்து கொண்டிருக்கிறது. அகில இந்திய அரசியலுக்கு தலைமை தாங்க நினைக்கும் முதல்வர் ஜெயலலிதா இடது சாரிக் கட்சிகளை தன் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.விற்கு போதிய பலம் மத்தியில் கிடைக்காத பட்சத்தில், பிரதமர் பதவிக்குரிய வேட்பாளராக தான் இடது சாரிக் கட்சிகளால் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பதே அவரது விருப்பம். அதற்காகவே தன் கட்சிக்கு வர வேண்டிய ராஜ்ய சபை தொகுதியை முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுத்து டி.ராஜாவை எம்.பி.யாக்கினார். அதே மாதிரி, அடுத்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபை எம்.பி.யைக் கொடுக்கப் போகிறார். ஏற்காட்டில் கூட இந்த இரு கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணியாக இருந்தார். அவர்கள் இருவருமே அதிக எண்ணிக்கையில் எம்.பி. தொகுதிகளைக் கேட்க மாட்டார்கள். ஆகவே தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிக எண்ணிக்கையில் போட்டியிட இதுவே வசதியாக இருக்கும் என்றும் அவர் எண்ணுகிறார்.
 
இப்படிப்பட்ட நேரத்தில் தமிழகத்தில் ஏற்காடு தேர்தலால் அவருக்கு மகிழ்ச்சி என்றாலும், அகில இந்திய அளவில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டிஷ்கர், டெல்லி போன்ற மாநிலங்களில் பா.ஜ.க.வின் வெற்றி அவருக்கு வேறு மாதிரியான சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது. அந்த வெற்றிகள் எதுவும் நரேந்திரமோடியின் பிரசாரத்தால் கிடைத்த வெற்றி என்று கூற முடியாது என்பதற்கு வெற்றிப் புள்ளிவிவரங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. உதாரணமாக, மத்திய பிரதேசத்தைப் பொறுத்தமட்டில் ஏற்கனவே பலமாக உள்ள சிவராஜ் சிங் சவுகான் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் கட்சி 2003 சட்டமன்ற தேர்தலில் இங்குள்ள 230 தொகுதிகளில் பெற்ற 173 எம்.எல்.ஏ.க்களைப் பெறவில்லை. அதேபோல் 2008இல் பெற்ற 143 எம்.எல்.ஏ.க்களையும் பெறவில்லை. மாறாக இந்த முறை 165 எம்.எல்.ஏ.க்களைப் பெற்றுள்ளார். இந்த 173 எம்.எல்.ஏ.க்களுக்கு மேல் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே சவுகானின் வெற்றி மோடியின் பிரசாரத்தால் கிடைத்த வெற்றி என்று கருத முடியும். மற்றபடி இந்த மத்திய பிரதேச வெற்றி சவுகானின் நல்லாட்சிக்கும், பா.ஜ.க.விற்கு அங்குள்ள பலமான வாக்கு வங்கிக்கும் கிடைத்த வெற்றியே!
 
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலை எடுத்துக் கொண்டால், சென்றமுறையே அதாவது 2008இலேயே காங்கிரஸ் கட்சி இங்குள்ள 200 தொகுதிகளில் ஒன்றும் அபரிமிதமாக வெற்றி பெற்றுவிடவில்லை. அம்மாநிலத்தை ஆண்ட அசோக் கெலட்டிற்கு வெறும் 96 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கிடைத்தார்கள். அப்போதே பா.ஜ.க. 78 எம்.எல்.ஏ.க்களை பெற்று பலமான எதிர்கட்சியாகவே இருந்தது. அதைவிட அப்படி ஆட்சிக்கு வந்த காங்கிரஸுக்கு பா.ஜ.க.வை விட வெறும் 1.70 சதவீத வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றிருந்தது. அசோக் கெலட் அரசின் மீதிருந்த அதிருப்தி அனைவருக்கும் தெரிந்ததே. அதனால் அப்படியொரு பலமுடன் இருந்த பா.ஜ.க.விற்கு நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார். மற்றபடி ராஜஸ்தான் வெற்றியும் பெரும்பாலும் அக்கட்சியின் தலைவர் வசுந்தரா ராஜேவிற்கும், அக்கட்சியின் பலத்திற்கும் கிடைத்த வெற்றியே என்றால் சரியாகவே இருக்கும்.
 
சட்டிஷ்கர் மாநிலம் இதே மாதிரி காங்கிரஸை விட குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்திலேயே சென்ற முறை (2008) ஆட்சிக்கு வந்தார் பா.ஜ.க. முதலமைச்சர் ராமன்சிங். 2003 தேர்தலில் 50 எம்.எல்.ஏ.க்கள் பெற்றார். 2008இல் 50 எம்.எல்.ஏ.க்களைப் பெற்றார். இந்த தேர்தலில் அவர் அதே 49 எம்.எல்.ஏ.க்களைப் பெற்றார். நரேந்திரமோடி சென்றதால் சட்டிஷ்கரில் உள்ள 90 தொகுதிகளில், பா.ஜ.க. ஏற்கனவே வெற்றி பெற்ற இடங்களுக்கு மேல் அதிகமாக வெற்றி பெற்றுவிட முடியவில்லை. காங்கிரஸிற்குள் உள்குத்து சண்டையும், ராமன்சிங்கின் நல்ல நிர்வாகமும் இந்த வெற்றியை பா.ஜ.க.விற்கு பெற்றுக் கொடுத்தது. "பா.ஜ.க. அரசின் வளர்ச்சிப் பணிகளின் மீது மக்கள் வைத்த நம்பிக்கைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று டாக்டர் ராமன்சிங் பேட்டி அளித்திருப்பதில் இருந்தே இது தெரிகிறது.
 
இந்தியாவின் தலைநகரான டெல்லி சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தமட்டில் பா.ஜ.க.விற்காக கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டார் நரேந்திரமோடி. இன்னும் சொல்லப் போனால் இளைஞர்களின் நாயகன் நரேந்திரமோடி என்றே பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால் டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் பா.ஜ.க. 31 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே பெற்று ஆட்சி அமைக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. அங்கே ஆம் ஆத்மி கட்சி சார்பில் நின்று அரவிந்த் கெஜ்ரிவாலை ஏற்றுக் கொண்ட இளைஞர்கள், நரேந்திரமோடியின் பிரசாரத்தை நம்பி பா.ஜ.க.விடம் ஆட்சியைக் கொடுக்கத் தயாராக இல்லை. 28 இடங்களில் ஜெயித்து இரண்டாவது இடத்திற்கு வந்து விட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். காங்கிரஸின் ஊழலை எதிர்த்து பிரசாரம் செய்த மோடியின் பிரசாரத்திற்கு டெல்லி கை கொடுக்கவில்லை. ஆனால் அதே பிரசாரத்தைச் செய்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கை கொடுத்திருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் நரேந்திரமோடிக்கு தனிப்பட்ட செல்வாக்கு ஏதுமில்லை. வெறும் இமேஜ் மட்டுமே இருக்கிறது. அந்த இமேஜை வைத்து பா.ஜ.க செல்வாக்குள்ள இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை டெல்லி சட்டமன்ற தேர்தல் மட்டுமல்ல- மற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டிஷ்கர் போன்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களும் எடுத்துக் காட்டுகின்றன. ஆகவே பிரதமர் வேட்பாளர் என்ற இமேஜில் நரேந்திரமோடியை விட தான் ஒன்றும் சளைத்தவரல்ல என்பதை நிரூபிக்க இந்த நான்கு சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் உதவியிருக்கிறது என்றே தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைப்பார். அதனால்தான் "இது நரேந்திரமோடியின் பிரசாரத்திற்கு கிடைத்த வெற்றி" என்றோ, "பா.ஜ.க. வெற்று முகாம்" என்றோ எந்தக் கருத்தையும் அ.தி.மு.க.வின் சார்பில் இதுவரை தெரிவிக்கவில்லை.
 
அ.தி.மு.க.வின் சென்ற பொதுக்குழுவிலேயே "தனித்துப் போட்டி" என்பதை அறிவித்தார் ஜெயலலிதா. அதை இந்தப் பொதுக்குழுவிலும் அறிவிப்பார் என்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் இருக்கின்றன. இதில் இன்னொரு சிறப்பம்சம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டிஷ்கர் போன்ற மாநிலங்களில் டெல்லியைப் போன்று மூன்றாவது பலமான கட்சி ஒன்று நிற்கவில்லை. அங்கு பா.ஜ.க.விற்கு போட்டியாக காங்கிரஸ் மட்டுமே களத்தில் நின்றது. ஆனால் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி நின்றது. மற்ற மூன்று மாநிலங்களில் காங்கிரஸுக்கு போட்டியாக பா.ஜ.க.வை தேர்வு செய்த வாக்காளர்கள், டெல்லியில் காங்கிரஸுக்குப் போட்டியாக ஆம் ஆத்மி கட்சியை தேர்வு செய்து விட்டார்கள். இது மூன்றாவது அணிக்கு இந்திய அரசியலில் ஓர் இடம் எதிர்வரும் தேர்தலில் இருக்கிறது என்பதும், அந்த இடத்தில் மாநிலக் கட்சிகள் குறிப்பாக அ.தி.மு.க. போன்ற மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் இருக்கும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைக்கிறார். இதுவும் அவரை இடது சாரிக் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி வைத்துக் கொண்டு தனியாக தமிழக தேர்தல் களத்தை சந்திக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை உருவாக்குகிறது. ஏனென்றால் அகில இந்திய அளவில் மூன்றாவது அணிக்கு பாசிட்டிவான களம் அமைவது தனது பிரதமர் பதவி விருப்பத்திற்கு ஊக்கம் கொடுக்கும் விதத்தில் அமையும் என்று கருதுகிறார் ஜெயலலிதா.
 
இப்படியொரு பரபரப்பான பின்னணியில்தான் அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூடுகிறது. அந்தக் கூட்டத்தில் "ஏற்காடு வெற்றி" பெற்றி அதிரடிப் பேச்சுகள் இடம் பெறும். நாடாளுமன்ற தேர்தல் வியூகங்கள் பற்றி முடிவு செய்யும் அதிகாரம் பொதுச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதாவிடம் கொடுக்கப்படும். ஆட்சியின் சாதனைகள் பட்டியலிடப்படும். ஏனென்றால் பொதுக்குழு முடிந்த கையோடு நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் முழு வீச்சில் ஈடுபடப் போகிறது அ.தி.மு.க. ஏற்கனவே நாடாளுமன்றத் தொகுதி வாரியாக குழுக்களை நிர்வகித்து கட்சி நிர்வாகிகளை முடுக்கி விட்டுள்ள அ.தி.மு.க. இனி அ.தி.மு.க.வின் பிரசார வியூகம் என்ன என்பதை தமிழகம் முழுவதுமிருந்து வரும் அ.தி.மு.க. பேச்சாளர்களுக்கு சொல்லித் தரும் அரங்கமாக 19ஆம் திகதி நடக்கப் போகும் பொதுக்குழு அரங்கம் திகழும். அதனால்தான் "இதயதெய்வம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலில் இந்த அரசு செயல்படுகிறது" என்று ஏற்காடு வெற்றிக்கு வாழ்த்துச் சொல்லி, அதே பாணியில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வியூகம் வகுத்துள்ளார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X