2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஜெயலலிதா போல் கலைஞர் சர்வாதிகாரியாக இருக்க வேண்டும்: ஸ்டாலின்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 16 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

"காங்கிரஸுடன் கூட்டணி இல்லை" என்று திட்டவட்டமாக திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் கலைஞர் கருணாநிதி அறிவித்துள்ளார். அதே நேரத்தில் பா.ஜ.க.வுடன் "கூட்டணி வைக்க முடியாது" என்று கூறியிருக்கிறார். டிசெம்பர் 15ஆம் திகதி காலையிலேயே தி.மு.க. தலைமைக் கழகம் இருக்கும் அலுவலகமான அண்ணா அறிவாலயம் களை கட்டியது. ஏன் அதற்கு முதல் நாள் தி.மு.க. தலைவர் எழுதிய "நெஞ்சுக்கு நீதி" புத்தகத்தின் ஆறாவது பாகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போதே தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தி.மு.க. நிர்வாகிகள் வந்து விட்டார்கள். அதனால் முதல் நாளே களை கட்டி விட்டது என்றே சொல்ல வேண்டும்.
 
தி.மு.க. பொதுக்குழுவில் மொத்தம் 23 தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன. அவற்றுள்  ஆறு தீர்மானங்கள் மட்டுமே காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் தீர்மானங்கள். மீதி அனைத்தும் அ.தி.மு.க. அரசின் மீது குற்றம் சாட்டி கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள். அதிலும் ஒரேயொரு தீர்மானத்தில், அதாவது விலை வாசி உயர்வு பற்றிய தீர்மானத்தில் மத்திய அரசை கண்டனம் செய்து வாசகங்கள் இடம்பெற்றன. இதில் இலங்கை தமிழர் பற்றிய தீர்மானம் 22ஆக இடம்பெற்றது. அதில், "இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தல் முடிந்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் மாகாணக் கவுன்சில் அமைந்துள்ளது. இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் 13ஆவது திருத்தத்தின் படி பல அதிகாரங்கள் தமிழர்களுக்கு வழங்கப்படும் என்பது ஏட்டுச் சுரைக்காயகவே இருந்து வருகிறது. 13ஆவது சட்ட திருத்தத்தின் படி நில நிர்வாகம் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காவல்துறை நிர்வாகம் அனைத்தும் ராஜபக்ஷ அரசின் கையில் உள்ளது. மாகாணக் கவுன்சிலை கூட்டுவதும், கலைப்பதும் ராஜபக்ஷ அரசின் மாகாண ஆளுநரின் கையில் உள்ளது." என்று வடக்கு மாகாணக் கவுன்சிலுக்கு இருக்கும் சங்கடங்களை பட்டியலிட்டு விட்டு, "நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்க பொது வாக்கெடுப்பு, தமிழினப் படுகொலை, போர்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகமான, சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த மத்திய அரசு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்" என்று தி.மு.க. பொதுக்குழுவில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
இது தவிர, நாடாளுமன்ற தேர்தல் சீசன் என்பதால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியை எப்படி வைப்பது, அதற்கான வியூகம் என்ன என்பதில்தான் அதிக கவனம் இந்த பொதுக்குழுவில் செலுத்தப்பட்டது. சுமார் 2200க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வந்திருந்தார்கள். அக்குழுவில் பேசிய அனைவருமே "காங்கிரஸ் எதிர்ப்பில்" தீவிரமாக இருந்தார்கள். இதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் திருச்சி சிவா. இவர் முன்னாள் ராஜ்ய சபை எம்.பி. அவர், "காங்கிரஸுக்கு நாம் விசுவாசமாக இருந்தோம். அந்த விசுவாசத்திற்கு கொடுக்கப்பட்ட பெரிய விலை என்ன தெரியுமா? நம் கட்சி அமைச்சர் ராஜாவை வீண் பழி சுமத்தி (2ஜி அலைக்கற்றை விவகாரத்தில்) சிறையில் தள்ளினார்கள். தலைவரின் மகளை (கனிமொழி) சிறையில் அடைத்தார்கள். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் நடைபெற்ற போது அந்த போரை நிறுத்தச் சொல்லி தலைவர் கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார். உடனே "போர் நிறுத்தம் செய்யப்பட்டு விட்டது" என்று பொய் சொல்லி தலைவரை ஏமாற்றினார்கள். காங்கிரஸுடன் கூட்டணி வைக்கவே கூடாது. அப்படியென்றால் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கலாம் என்றே சிலர் இங்கே பேசினார்கள். அதிலும் கூட்டணி வைக்கலாம். மந்திரி சபையில் சேரக்கூடாது என்றெல்லாம் பேசினார்கள். கூட்டணி வைத்தால் என்ன? மந்திரி சபையில் சேர்ந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான். ஆகவே பா.ஜ.க.வுடனும் கூட்டணி வேண்டாம்" என்று பொதுக்குழுவில் காரசாரமாகப் பேசினார் சிவா.
 
இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு," நான் சமீபத்தில் ராகுல் காந்தியை நாடாளுமான்ற வளாகத்தில் சந்தித்தேன். அவரிடம் நான் ஒரு கேள்வியைக் கேட்டேன். "நீங்கள் நான்கு முறை சென்னைக்கு வந்தீர்கள். ஒருமுறையாவது தலைவரை (கலைஞர் கருணாநிதி) சந்தித்தீர்களா? அவர் ஒரு கூட்டணித் தலைவர். சென்னைக்கு வந்து விட்டு பார்க்காமல் திரும்பிச் செல்கிறீர்கள். இது என்ன கூட்டணி தர்மம்? என்று கேள்வி எழுப்பினேன். அவர் பதில் சொல்லாமல் அப்படியே அமைதியாக இருந்தார். நானும் விடவில்லை. "என் கேள்விக்கு என்ன பதில்?" என்று கேட்டேன். அப்போது அவர் மௌனம் கலைத்தார். "ஐ ஆம் ஸாரி" என்று கூறி விட்டு தலையை குனிந்து கொண்டு விட்டார். இதுதான் காங்கிரஸ் கட்சி. அப்படியா பா.ஜ.க இருந்தது. அக்கட்சியுடன் கூட்டணியாக இருந்தோம். அப்போது நம் முரசொலி மாறன் இறந்து விட்டார். சுடுகாட்டிற்கே வந்த பிரதமர் வாஜ்பாய்" என்று கூறி வாஜ்பாயைப் பாராட்டினார். இவரும் காங்கிரஸுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்பதில் குறியாக இருந்தார். ஆனால் சமாதானமாக சில வார்த்தைகளைக் கூறினார். 
 
இன்னொரு மாவட்டச் செயலாளர் தி.நகர் அன்பழகன் பேசிய போது, "நாம் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க வேண்டாம். பத்திரிகைககளில் பா.ஜ.க.வுடன் நாம் கூட்டணி என்று பேச்சு வருகிறது. செய்திகள் எழுதுகிறார்கள். அவர்களுடன் கூட்டணி வையுங்கள். வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால் டெல்லியில் மந்திரி சபையில் சேராதீர்கள். ஏனென்றால் மந்திரி சபையில் சேர்ந்தால் அந்த மந்திரிகளால் கட்சிக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. கட்சியின் பெயர்தான் கெடுகிறது. இன்னும் சொல்லப்போனால் மத்தியில் அமைச்சராகச் சேர்ந்ததற்காக இங்கே மாநிலத்தில் ஆட்சியை இழந்தோம். ஆகவே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் கூட நாம் அக்கட்சியினர் அமைக்கும் அமைச்சரவையில் சேரக்கூடாது" என்று புதிய வியூகத்தை வெளியிட்டார் பொதுக்குழுவில்.
 
துறைமுகம் காஜா. இவர் தி.மு.க. தலைமை கழகத்தில் கலைஞர் கருணாநிதியுடனேயே இருப்பவர். அவர் பொதுக்குழுவில் பேசும் போது, "நாம் காங்கிரஸுடன் கூட்டணி வைக்கக் கூடாது. அதே போல் பா.ஜ.க.வுடனும் சேரக்கூடாது. இன்று நரேந்திரமோடி, நரேந்திரமோடி என்று பேசுகிறார்கள். அவருக்கு செல்வாக்கு இல்லை. அதாவது மக்கள் செல்வாக்கு இல்லை. பத்திரிகைகளும், பெரும் வர்த்தக நிறுவனங்களும் அவருக்கு பெரிய செல்வாக்கு இருப்பது போல் சித்தரித்துக் காட்டுகின்றன. அவ்வளவுதான். காங்கிரஸ் விஷம் என்றால் பா.ஜ.க. கொடிய விஷம்" என்று இரு கட்சிகளையும் கண்ணை மூடிக் கொண்டு பொதுக்குழுவில் சாடினார். இந்த சாடலுக்கு கைதட்டல் இருந்தது. காங்கிரஸுடன் கூட்டணி வேண்டாம் என்பதற்கு பலத்த கைதட்டல். பா.ஜ.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்று அவர் கூறியதற்கு சுமாரான கைதட்டல்!
 
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் உரை தான் சற்று வித்தியாசமாக இருந்தது. அவர் பேசும் போது, "ஏற்காடு இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு நாம் தண்ணி காட்டி விட்டோம். அவர்கள் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் நாமும் 65000 வாக்குகள் வாங்கியிருக்கிறோம். அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது அ.தி.மு.க. அரசை விட்டே வழக்குப் பதிவு செய்ய வைத்தோம். அதேபோல் முதலமைச்சர் ஜெயலலிதா மீது தேர்தல் கமிஷன் மூலம் எச்சரிக்கையை வாங்கிக் கொடுத்தோம். அவர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் அது சுலபமாகப் பெற்ற வெற்றி அல்ல" என்றவர், "இனி வரும் தேர்தல்காலங்களில் தலைவர் கலைஞர் கவனமாக இருக்க வேண்டும். ஜெயலலிதாவிடம் அரசியல் கூட்டணி பேசப் போகும் தலைவர்கள் அவர் கொடுக்கும் சீட்டுகளை வாங்கிக் கொண்டு வந்து விடுகிறார்கள். அதனால் அ.தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிடுகிறது. அக்கட்சி எதிர்கட்சியாக வந்தாலும் சரி, ஆளுங்கட்சியாக வந்தாலும் சரி மெஜாரிட்டியுடன் வருகிறது. ஆனால் நாமோ ஆளுங்கட்சியாக வந்தாலும் மைனாரிட்டியாக வருகிறோம். எதிர்கட்சியாக வந்தாலும் மைனாரிட்டியாக வருகிறோம். ஆகவே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு விஷயத்தில் தலைவர் கலைஞர் ஜெயலலிதா போல் சர்வாதிகாரியாக இருக்க வேண்டும்" என்று திடீரென்று பேசவே, பொதுக்குழுவில் இருந்தவர்கள் எல்லாம் சற்று திடுக்கிட்டுத்தான் போனார்கள்.
 
இறுதியில் பேசிய தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநி, "காங்கிரஸால் நாம் பட்ட புண்கள் ஏராளம். அந்த வடு இன்னும் மாறவில்லை. அதை மறக்கவும் முடியாது. சி.பி.ஐ (மத்திய புலனாய்வு அமைப்பு) யை ஏவி விடுகிறார்கள். சைபர், சைபர் என்று போட்டு லட்சம் கோடி ஊழல் என்று கூறி நம் அமைச்சர் ராஜாவை சிறையில் தள்ளினார்கள். என் மகள் கனிமொழியை எட்டு மாதம் சிறையில் அடைத்தார்கள். அவர்கள் செய்யாத குற்றத்திற்கு ஜெயிலுக்குப் போனது மட்டுமின்றி, இப்போது வழக்கையும் சந்தித்து வருகிறார்கள். கேட்டால் சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்கிறது. நாம் என்ன செய்ய முடியும் என்று கேட்கிறார்கள். சி.பி.ஐ. யார் சொல்படி கேட்டு நடவடிக்கை எடுக்கிறது அது யாருடையை கொடுவாள் என்பது இவ்வளவு நாள் அரசியலில் இருக்கும் நமக்கு எல்லாம் தெரியாதா? இலங்கை பிரச்சினையில் போர் நின்று விட்டது என்று பொய்த் தகவலைச் சொல்லி என் உண்ணாவிரதத்தை முடிக்க வைத்தார்கள். இன்றும் கூட நம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது குறித்து எதுவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே இனி காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது. அந்த நினைப்பே உங்களுக்கு வேண்டாம். பிறகு ஏன் அந்த அரசின் முடிவுகள் சிலவற்றில் பாராளுமன்றத்தில் ஆதரித்து ஓட்டுப் போடுகிறாய் என்று கேட்கலாம். இருப்பது காங்கிரஸ் அரசுதான். அங்கே வேறு ஓர் அரசு இல்லை. அவர்களிடம் தமிழக மக்களுக்காக சில கோரிக்கைகளை வைக்க வேண்டியதிருக்கிறது. ஏதாவது ஒரு சில கோரிக்கைகாளவது நிறைவேறுகிறதா என்று பார்ப்பதற்காக இப்படி அவர்களின் மக்கள் நலத் திட்டங்கள் சிலவற்றை நாம் ஆதரிக்க வேண்டியதிருக்கிறது. அதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தமில்லை" என்று தெளிவுபடுத்தினார்.
 
பொதுக்குழுவில் சில உறுப்பினர்கள் பா.ஜ.க.வுடனும் கூட்டணி வைக்கலாம் என்ற ரீதியில் பேசினார்கள். அதற்கும் பதிலளித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, "நாம் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தோம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அன்றைய தினம் பா.ஜ.க.வை வழி நடத்தியவர் வாஜ்பாய். அவர் ஒரு மிதவாதத் தலைவர். நேர்மையாளர். தோழமைக் கட்சிகளை மதித்தவர். தோழமைக் கட்சி சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்தவர். அவர் ஆட்சி காலத்தில் இஸ்லாமிய மக்களுக்கு ஒரு துரும்பு கூட தொந்திரவு செய்யவில்லை. அப்படியே ஏதாவது அவர்கள் தொந்திரவு செய்தால் நம்மால் அவரைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் அவர் ஒரு மனித நேய மிக்க தலைவர். தமிழர்களின் உணர்வுகளை மதிப்பவர். தமிழ்நாட்டிற்கு என்று வைக்கும் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிக் கொடுப்பவர். நாகர்கோயிலில் காமராஜர் மணி மண்டபம் அமைக்க அதிகாரிகளின் மறுப்பையும் நிராகரித்து எப்படி உத்தரவு போட்டார் என்பது எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். முரசொலி மாறன் மறைந்த போது நேராக இறுதிச் சடங்கு நிறைவேறும் சுடுகாட்டிற்கே வந்து அஞ்சலி செலுத்தியவர் வாஜ்பாய். அதையெல்லாம் என்னால் மறக்க முடியாது. ஆனால் இன்று இருக்கும் பா.ஜ.க. வாஜ்பாய் தலைமையில் இருந்தது போன்ற பா.ஜ.க. அல்ல. இது தீவிரவாத எண்ணம் கொண்ட பா.ஜ.க. அதுவும் இந்தக் கட்சி இப்போது முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்- ன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சுருங்கச் சொன்னால் இன்றைய பா.ஜ.க.வை நாம் ஆர்.எஸ்.எஸ். என்றுதான் பார்க்க வேண்டும். ஆகவே அக்கட்சியுடன் நாம் "கூட்டணி வைக்க முடியாது" என்று பொதுக்குழுவில் விளக்க உரை நிகழ்த்தினார்.
 
எல்லாம் முடித்து விட்டு இறுதியில், "நம்முடன் இருந்தால் நாட்டுக்கு நன்மை என்று கருதும் கட்சிகளுடன் கூட்டணி வைப்போம். அதுவும் இல்லை என்றால் நாம் தனியாகவே நிற்போம். நீங்கள் உள்ளுக்குள் உள்ள கோஷ்டி பூசல்களை மறந்து ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள். நீங்கள் இருக்கும் போது நான் எதற்காக கவலைப்பட வேண்டும்" என்று பொதுக்குழுவை நிறைவு செய்தார். இந்த கூட்டத்தில் " காங்கிரஸுடன் கூட்டணி இல்லை" என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார். ஆனால் பா.ஜ.க.வுடன் "கூட்டணி வைக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது" என்று குறிப்பிட்டு இருக்கிறார். அவருக்கு இருக்கும் ஒரே கவலை இப்போது பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் நரேந்திரமோடி தி.மு.க.வின் மதசார்பற்ற கொள்கைக்கு ஏற்று வர மாட்டார். அவரே ஒப்புக் கொண்டாலும், அவரை இயக்கும் ஆர்.எஸ்.எஸ். அப்படியொரு கொள்கைக்கு உடன்படாது என்பதும்தான். அதனால்தான் "இன்றைய பா.ஜ.க. வேறு. வாஜ்பாய் காலத்துப் பா.ஜ.க. வேறு" என்பதை விலாவாரியாக விவரித்துப் பேசியுள்ளார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.
 
இந்த தி.மு.க. பொதுக்குழு விடுத்திருக்கும் செய்தி இதுதான். "காங்கிரஸ் அறவே கிடையாது" என்பது முடிவு செய்யப்பட்டு விட்டது. வட மாநிலங்களில் அக்கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி, இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்காமல் தன்னிச்சையாக ஒரு கொள்கையை காங்கிரஸ் கடைப்பிடிப்பது, நிலக்கரி முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸ் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எடுத்த முயற்சியை, 2-ஜி அலைக்கற்றை முறைகேடு விவகாரம் எழுந்த போது எடுக்காமல் ஒட்டு மொத்தமாக தி.மு.க. மட்டுமே அதற்கு காரணம் என்று குற்றம் சாட்டியது போன்ற பின்னனிகளே இந்த முடிவிற்கு காரணம். இது அதிரடியாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கடந்த 2011 மே மாதம் 16-ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரதித்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இல்லத்தில் ஓர் அவரசக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், "2-ஜி, இலங்கை தமிழர் பிரச்சினை எல்லாவற்றையும் வைத்து காங்கிரஸ் நம்மை ஆட்சி இழக்க வைத்து விட்டது. இனிமேல் அக்கட்சியுடன் ஒட்டோ உறவோ வைத்துக் கொள்ளக் கூடாது" என்றார் கலைஞர் கருணாநிதி. அப்படிச் சொன்னதற்கு 2013 டிசெம்பர் 15ஆம் திகதி செயல்வடிவம் கொடுத்துள்ளார். மற்றபடி காங்கிரஸை விட்டு வெளியேற வேண்டும் என்பது தி.மு.க. இரண்டரை வருடங்களுக்கு முன்பே எடுத்து விட்ட திட்ட வட்ட முடிவு!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X