-கே.சஞ்சயன்
இலங்கையில் புனர்வாழ்வு, புனரமைப்பு, அமைதியைக் கட்டியழுப்புவதற்கான ஜப்பானிய அரசின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி அண்மையில் தனது 23வது இலங்கைப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
விடுதலைப் புலிகளுக்கும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் இடையில், நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த 2002ம் ஆண்டு காலப் பகுதியில் தான், அகாசி முதல்முறையாக இலங்கை மக்களுக்கு அறிமுகமானார்.
அதற்கு முன்னர், ஐ.நாவில் உயர் பதவியை வகித்து வந்த ஜப்பானின் மூத்த இராஜதந்திரியான அகாசி, ஆரம்பத்தில் இலங்கைக்கான ஜப்பானின் சிறப்பு சமாதானத் தூதுவராகவே நியமிக்கப்பட்டார்.
அவர் முதன் முதலாக, புலிகளைச் சந்திக்க கிளிநொச்சிக்குச் சென்ற போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே, நேரில் சந்தித்துப் பேசி, அவருக்கு புலிச்சின்னம் பதித்த நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினார்.
அந்தக் காலகட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தெரிவு செய்யப்பட்ட ஒரு சில வெளிநாட்டுப் பிரமுகர்களை மட்டும் சந்தித்திருந்தார். அவர்களுக்குள் அகாசிக்கு புலிகள் கூடிய முக்கியத்துவத்தை அளித்தனர்.
ஆனால் காலப்போக்கில் அகாசியும் அடிக்கடி இலங்கைக்கு வரத் தொடங்கினார்.
நித்தம் போனால் முற்றம் சலிக்கும் என்பது போல, அவரது சமாதான முயற்சிகளிலும் சலிப்புகள் தோன்றத் தொடங்கின.
இதனால், ஒருகட்டத்தில் அகாசியின் வருகையில் புலிகளும் ஊடகங்களும், இலங்கை மக்களும் அக்கறை காட்டுவதைக் குறைத்துக் கொள்ளத் தொடங்கினர்.
அவ்வப்போது அவர் வருவதும், அரசதரப்புடனும், பிறதரப்புகளுடனும் பேச்சு நடத்துவதும் அவரது வழக்கமாயிற்று.
ஆனால், அகாசிக்கான முக்கியத்துவத்தை, அரசதரப்பு மட்டும் குறைத்துக் கொள்ளவில்லை.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இலங்கைக்கான சமாதானத் தூதுவர் என்ற அடைமொழி அகாசிக்குத் தேவைப்படவில்லை.
அதற்கு முன்னர், அந்த அடைமொழியை வைத்துக் கொண்டு அவர் எதையும் சாதித்திருக்கவும் இல்லை.
போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கைக்கான புனர்வாழ்வு, புனரமைப்பு, மற்றும் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான தூதுவர் என்ற அடைமொழி அவருக்கு கொடுக்கப்பட்டது.
போர் முடிவுக்கு வந்த பின்னரும் அவ்வப்போது, இலங்கைக்கு வந்து போகும் அகாசியை, தமிழ் மக்கள் பெரிதாக கணக்கில் எடுப்பதேயில்லை. ஏனென்றால், தாம் எதிர்பார்க்கும் எதையும் தரத்தக்கவராக அகாசி இல்லை என்ற உண்மை அவர்களுக்குப் புரிந்து விட்டது.
அமெரிக்க, இந்திய இராஜதந்திரிகளின் பயணத்துக்கு தமிழர்கள் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை, அகாசிக்கு அவர்கள் கொடுப்பதேயில்லை.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனர்வாழ்வுக்காகவும், புனரமைப்புக்காகவும், ஜப்பான் குறிப்பிட்டளவு நிதியுதவிகளை செய்திருப்பினும், அகாசி அத்தகைய நிதியுதவிப் பொதியுடன் வருவதாக இருந்தாலும் கூட, அவருக்கு அந்த மதிப்புக் கிடைப்பதில்லை.
ஏனென்றால், சர்வதேச சமூகத்திடம் இருந்து தமிழர்கள் எதிர்பார்ப்பது நிவாரணத்தையோ, நிதியுதவியையோ அல்ல.
அவற்றுக்கும் மேலாக, தமது உரிமைகளை உறுதிப்படுத்துவது, அரசியல் தீர்வுக்கு வலியுறுத்துவது, போர்க்குற்றங்களுக்கு பதிலளிப்பது என்பன போன்ற விவகாரங்களிலேயே சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் உதவியையும் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதனால் தான், அமெரிக்காவின் இராஜதந்திரிகளுக்கோ, ஏனைய மேற்குலக இராஜதந்திரிகளுக்கோ தமிழர்களிடம் கிடைக்கின்ற வரவேற்பும், ஆதரவும் அகாசி போன்ற ஜப்பானிய இராஜதந்திரிகளுக்குக் கிடைப்பதில்லை.
இப்போதும் கூட அகாசி மேற்கொண்ட பயணத்துக்கு தமிழர் தரப்பு அவ்வளவு பெரிய முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கவில்லை.
கடந்த 11 ஆண்டுகளில், அகாசி இலங்கைக்கு 23 தடவைகள் வந்து சென்றிருக்கிறார்.
ஆனாலும், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், கொழும்பு வரும் போதெல்லாம் அகாசிக்காக அலரி மாளிகையின் கதவுகள் எப்போதும் அகலத் திறந்தேயிருக்கும்.
இம்முறையும் அப்படித் தான், கடந்த 8ம் திகதி மாலை கொழும்பு வந்த அவர் மறுநாள் காலையிலேயே, அலரி மாளிகைக்குச் சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேசினார்.
அமெரிக்க, இந்திய இராஜதந்திரிகளுடன், அகாசி போன்றவர்கள் இந்த விடயத்திலும் கூட முரண்படுகின்றனர்.
அதாவது, அமெரிக்க, இந்திய இராஜதந்திரிகள், அமைச்சர்கள் இலங்கைக்கு வரும் போது, முதலில், களநிலவரங்களை அறிந்து கொள்வதற்கே முக்கியத்துவம் அளிப்பதுண்டு. நீண்ட பயணம் என்றால், யாழ்ப்பாணம், கிழக்கு போன்ற பகுதிகளுக்கு செல்வதும், சிவில் அமைப்பு பிரதிநிதிகள், அரச அதிகாரிகளை சந்திப்பதும், அவர்களின் முக்கிய இலக்காக இருக்கும்.
அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்டறிந்து விட்டு, கடைசியாக அலரி மாளிகையில் காலடி எடுத்து வைப்பர்.
அது, பிரச்சினைகள், களநிலவரங்கள் குறித்து ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்புவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.
ஆனால், அகாசி அப்படியல்ல. அவர் முதலில், ஜனாதிபதியையும் மற்றும் அமைச்சர்களையும் சந்திப்பார். அரசதரப்பின் விளக்கங்களை கேட்டறிந்து கொண்ட பின்னரே, ஏனைய தரப்பினரைச் சந்திப்பார்.
அவர்கள் கூறும் குறைநிறைகளைப் பற்றியெல்லாம், அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக கூறிவிட்டு, அப்படியே விமானமேறிச் சென்று விடுவார். இது தான் அகாசியின் அண்மைக்காலப் பயண வழக்கங்கள்.
இந்தமுறை, அதாவது 23வது தடவை மேற்கொள்ளப்பட்ட அவரது பயணமும் அந்த விதமாகவே அமைந்திருந்தது.
அவர் தனது பயணத்தின் இறுதிக்கட்டத்தில், கொழும்பில், வைத்து கடந்த 10ம் திகதி இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
ஆனால், இந்தமுறை அவர் வடபகுதிக்குச் செல்லவில்லை.
அண்மைக்காலத்தில், அதாவது கடந்த செப்டெம்பர் மாதம் வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டுத் தலைவர்கள், இராஜதந்திரிகள் யாழ்ப்பாணம் செல்வதை முக்கியமான திட்டமாக கொண்டிருந்தனர்.
அதாவது வடக்கு மாகாணத்தின் புதிய முதலமைச்சரை சந்தித்துப் பேசுவதற்காக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், உள்ளிட்ட பலரும் யாழ்ப்பாணம் சென்றனர்.
ஆனால், தமிழர் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட அகாசி மட்டும் வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்திக்க முனையவில்லை.
அதேவேளை, கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அகாசி நடத்திய சந்திப்பில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பங்கேற்கவுமில்லை.
வடக்கு மாகாணசபையின் வரவு-செலவுத் திட்டத்தை அவர் சமர்ப்பித்து, அது தொடர்பான விவாதத்தில் பங்கேற்க வேண்டிய தேவை இருந்ததால், அவரால் கொழும்பு வரமுடியவில்லை.
ஆனாலும், விக்னேஸ்வரனை சந்தித்து புதிய மாகாணசபை நிர்வாகம் குறித்து, அறிந்து கொள்ளும் ஆவல், ஒரு பழுத்த இராஜதந்திரியாக கருதப்படும் அகாசிக்கு இல்லாமல் போனது ஆச்சரியமே.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது, எல்லா விபரங்களையும் கேட்டு விட்டு, பொறுமையுடன் இருக்குமாறு ஆலோசனை கூறியிருந்தார் அகாசி.
அது இரா.சம்பந்தனுக்கு சினத்தை ஏற்படுத்தியதால் தான், அவர் 23வது தடவை என்ன நிலை இருக்கிறதோ அதே நிலை தான் 24வது தடவை இங்கு வரும் போதும் இருக்கும் என்று பதிலடி கொடுக்கும் நிலையை உருவானது.
சர்வதேச சமூகம் அடுத்த மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் அடுத்தகட்ட நகர்வுக்குத் தயாராகும் சூழலில், தான் அகாசியின் இந்த பயணம் இடம்பெற்றது.
சர்வதேச சமூகத்தின் கரிசனைகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அகாசி கூறியிருந்தாலும், அவரது பயணம், அடுத்த ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான நகர்வுகளைப் பலவீனப்படுத்தும் ஒரு முயற்சியாகவே கருதப்படுகிறது.
அதாவது அரசாங்கத்தின் ஒரு தடைநீக்கியாக இப்போது அகாசி மாறியிருக்கிறார்.
மேற்குலக அழுத்தங்களுக்கு உள்ளாகி வரும் இலங்கை, அதிலிருந்து விடுபடுவதற்கான தனது பலமுனை நகர்வுகளில் ஒன்றாகவே அகாசியையும் களமிறக்கியுள்ளது.
வரும் மார்ச் மாத ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்வதில் அகாசியின் பங்கு எத்தகையதாக இருக்கப் போகிறது – அவரால் அரசாங்கத்தை காப்பாற்ற முடியுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.