.jpg)
இந்தியாவில் ஊழல் ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை ஊழலைத் தடுக்க உருவாக்கப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டங்களும், விதிகளும் போதும் என்று இருந்த அரசியல் தலைவர்கள் இப்போது "இது போதாது. ஊழலை ஒழிக்க தனியாக லோக்பால் அமைக்க வேண்டும்" என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். அதன் படி சுதந்திரமான லோக்பால் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் (லோக்சபா மற்றும் ராஜ்ய சபா) இந்த லோக்பால் அமைக்கும் மசோதாவை நீண்டதொரு விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றிக் கொடுத்துள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் ஊழல் ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துப் போராட்டங்களை நடத்திய ஆம் ஆத்மி கட்சி இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அசாத்தியமான வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றி மற்ற தேசிய கட்சிகளான பாரதீய ஜனதா கட்சி, ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் கட்சி போன்றவைகளை மிரட்டியிருக்கிறது. உடனே அன்னா ஹசாரே (ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் குரு) தன் சொந்த கிராமத்தில் "லோக்பால் கோரி" சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இதில் ஆடிப்போன அரசாங்கம் உடனடியாக ராஜ்ய சபையில் (இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை) லோக்பால் மற்றும் லோக் அயுக்தா மசோதாவை தாக்கல் செய்தது. அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஊழல் ஒழிப்பில் இந்தியா ஒரு முன்னோடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஒன்பதாவது முறை வெற்றி பெற்ற லோக்பால் மசோதா:
லோக்பால் இந்தியாவிற்கு ஏதோ புதிதாக வந்தது அல்ல. 1966ஆம் வருடமே "நிர்வாக சீர்திருத்த ஆணையம்" இது மாதிரி லோக்பாலை அமைத்து ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரைதான் இப்போது 47 வருடங்கள் கழித்து லோக்பால் உருவாகியிருக்கிறது. இதற்கு முன்பு இந்திய நாடாளுமன்றத்தில் எட்டு முறை லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவை நிறைவேற்றப்படாமல் அப்படியே அவையில் இருந்து அந்த நாடாளுமன்ற பதவிக்காலம் முடியும் போது அந்த மசோதாவும் அப்படியே காலாவதியாகிக் கொண்டிருந்தது. இப்போது 9ஆவது முறையாக லோக்பால் மசோதா 2011ஆம் வருடம் டிசெம்பர் 27ஆம் திகதி இந்திய லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. அங்கே நிறைவேற்றப்பட்டாலும், போதிய மெஜாரிட்டி இல்லாததால் அதற்கான 116ஆவது அரசியல் சட்ட திருத்தம் நிறைவேற்றப்படாமல் தொங்கலில் நின்றது. ஆனாலும் லோக்பால் மசோதா ராஜ்ய சபைக்கு அடுத்த இரு தினங்களில் கொண்டு வரப்பட்டது. அங்கு நள்ளிரவு வரை கூட இதன் மீது காரசார விவாதம் நடைபெற்றது. ஆனாலும் நிறைவேறவில்லை. வேறு வழியின்றி 2012 மே மாதம் 21ஆம் திகதி "லோக்பால் மற்றும் லோக் அயுக்தா" மசோதாவை ராஜ்ய சபை செலக்ட் கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்புவது என்று முடிவாகியது. மசோதாவின் ஷரத்துக்களில் பல்வேறு பிரச்சினைகள் அரசியல் கட்சிகளுக்கு இருப்பதால், அதை சரி செய்யவே இப்படி செலக்ட் கமிட்டிக்கு மசோதா அனுப்பப்பட்டது.
இந்த மசோதா ராஜ்ய சபை செலக்ட் கமிட்டித் தலைவர் சத்யவ்ரத் சதுர்வேதி முன்பு சென்றது. அவருடன் 15 ராஜ்ய சபை உறுப்பினர்கள் உண்டு. அனைவரும் ஏறக்குறைய 19 கூட்டங்கள் நடத்தினார்கள். 11 மாநிலங்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்று அவற்றை பரிசீலனை செய்தார்கள். பல்வேறு அமைப்புகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், வழக்கறிஞர்கள் போன்றவர்களின் கருத்துக்களையும் அலசி ஆராய்ந்தார்கள். இறுதியில் இந்த லோக்பால் மசோதாவில் ஒரு "கருத்தொற்றுமை" உருவாக்கினார்கள். அப்படித்தான் இப்போது லோக்பால் மற்றும் லோக் அயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டு விட்டது. ஜனநாயக நாடான இந்தியாவில் ஒரு அதிகாரமிக்க லோக்பாலை ஊழலை ஒழிக்க உருவாக்கியிருக்கிறார்கள் என்பது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு. இதற்கு தூண்டுகோல் பல உண்டு. அவற்றுள் முக்கியமானது அன்னா ஹசாரேயின் போராட்டம். இன்னொன்று இந்திய உச்சநீதிமன்றம் ஊழல் விவகாரங்களில் உக்கிரமான முறையில் தீர்ப்புகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்தது. இது தவிர நாட்டு மக்கள் மத்தியில் கிளம்பியுள்ள ஊழல் எதிர்ப்பு முழக்கம்!
லோக்பால் தலைவராக இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி!
புதிய லோக்பால் அமைப்பின் சிறப்பம்சம் என்பது இந்த லோக்பால் அமைப்பில் 9 பேர் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் தலைவர். இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியோ, அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது புகழ்பெற்ற மனிதர் ஒருவரோ இந்த லோக்பாலின் தலைவராக வரலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதை விட மீதியுள்ள எட்டு உறுப்பினர்களில் பாதிப்பேர் அதாவது (நான்கு பேர்) நீதித்துறையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மற்ற நான்கு பேர் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் சமூகம், பிற்படுத்தப்பட்ட சமூகம், சிறுபான்மை சமூகம், பெண்கள் என்ற பிரிவிலிருந்து தேர்வு செய்யப்பட வேண்டும். இதெல்லாம் லோக்பாலின் சிறப்பம்சங்கள். மொத்தத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற லோக்பாலில் மெஜாரிட்டி பேர் நீதித்துறையைச் சார்ந்தவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு. அது மட்டுமின்றி, இதில் அனைத்து சமூகத்தினரும் ஈடுபட்டிருப்பதால், குறிப்பிட்ட இனம் அல்லது சமுதாயத்தைச் சார்ந்த அதிகாரிகளையோ, அரசியல்வாதிகளையோ பழிவாங்க லோக்பாலை பயன்படுத்த முடியாது.
லோக்பால் அமைப்பு இப்படியென்றால், இதற்கு தேர்வு செய்யும் கமிட்டி எப்படியிருக்க வேண்டும் என்றும் வரையறுத்துள்ளது. இந்த செலக்ஷன் கமிட்டியில் ஐந்து பேர் இருப்பார்கள். அவர்கள் பிரதமர், லோக்சபாவின் சபாநாயகர், லோக்சபா எதிர்கட்சித் தலைவர், இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நியமிக்கும் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜோ அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இருவரில் ஒருவர் உறுப்பினராக இருப்பார். இந்த நால்வரும் பரிந்துரை செய்யும் "புகழ்பெற்ற நீதிமான்" ஒருவர் ஐந்தாவது உறுப்பினராக இருப்பார். இந்த செலக்ஷன் கமிட்டிதான் லோக்பாலுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும். அந்த தேர்வு கூட செலக்ஷன் கமிட்டியே செய்ய முடியாது. அவர்களுக்கு உதவ ஒரு "சர்ச் கமிட்டி" அமைத்துக் கொள்ள வேண்டும். அந்தக் கமிட்டி கொடுக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் உறுப்பினர்களை செலக்ஷன் கமிட்டி தேர்வு செய்ய வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேர்வு செய்யும் விதத்தில் லோக்பால் சுதந்திரமான அமைப்பாக இருந்தாலும், ஒரேயொரு நெருடலும் இருக்கிறது. அதாவது சர்ச் கமிட்டி பரிந்துரைக்கும் நபர்களுக்கு அப்பாலும் செலக்ஷன் கமிட்டி உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்று இருக்கும் விதிமுறை சற்று லோக்பாலின் சுதந்திரத்தை சீர்குலைக்கும் என்றே சொல்ல வேண்டும். இந்த "சிறப்பு அதிகாரம்" செலக்ஷன் கமிட்டிக்கு கொடுத்திருப்பது லோக்பாலின் செயல்பாட்டையே கூட செயல் இழக்கச் செய்யும் வாய்ப்பு இருக்கிறது.
அரசியல் வாடை அடிக்காத "லோக்பால்"!
லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர் எந்த வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டு, தண்டிக்கப்பட்டவராக இருக்கக்கூடாது. 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எம்.பி அல்லது எம்.எல்.ஏ.க்களை இந்த பதவிகளில் நியமிக்கக்கூடாது. ஒரு பஞ்சாயத்துத் தலைவராகவோ அல்லது முனிசிபாலிட்டி சேர்மனாக இருப்பவர் கூட லோக்பாலுக்கு உறுப்பினராக நியமிக்கக் கூடாது. ஏன் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு உடையவராக இருக்கக் கூடாது. "அரசியல்வாசமே" அடிக்கக் கூடாது என்பதுதான் இந்த லோக்பால் அமைப்பின் சிறப்பம்சம். அதுவேதான் சீர்மிகு அம்சமும் கூட! முதல் முறையாக அரசியல் வாதிகள் எவரும் பங்கேற்காமல் ஒரு லோக்பால் அமைப்பு உருவாகியிருக்கிறது!
அதிகாரங்கள் குவிந்த லோக்பால்!
பப்ளிக் சர்வென்ட் மீது ஊழல் தொடர்பாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் முன்பு விசாரணை அதிகாரி "அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும்" என்ற விதி இருக்கிறது. அரசிடம் இருந்த இந்த அதிகாரம் தற்போது லோக்பால் அமைப்புக்குப் போகிறது. இது சிறப்பான முன்னேற்றம். இனி லோக்பால் அமைப்பு ஊழல் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய அரசின் அனுமதியை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டியதில்லை. இந்த அனுமதி விவகாரம்தான் பல்வேறு ஊழல் வழக்குகளை கிடப்பில் போட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்திய சுப்ரீம் கோர்ட்டே கூட "மூன்று மாதங்களுக்குள் இந்த அனுமதியை இனிமேல் கொடுக்க வேண்டும். அப்படியில்லையென்றால் அதற்குள் ஏன் கொடுக்கவில்லை என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும்" என்று கெடு விதித்தது. ஆகவே இப்போது இது லோக்பால் வசமே வந்திருப்பது நல்ல அறிகுறி. அதேபோல் ஊழல் புரிந்தோரின் சொத்துக்களை இடைக்கால பறிமுதல் செய்ய முடியும். அதே மாதிரி இறுதியிலும் பறிமுதல் செய்ய முடியும். அந்த அதிகாரமும் லோக்பாலிடமே கொடுக்கப்பட்டுள்ளது. ஊழல் வழக்கை விசாரிக்கும் அதிகாரியை அரசாங்கம் தன்னிச்சையாக மாற்ற முடியாது. இனிமேல் அதற்கு லோக்பாலின் அனுமதியை வாங்க வேண்டும். ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அதிகாரியை மாற்றவோ, சஸ்பென்ட் செய்யவோ லோக்பால் பரிந்துரைக்க முடியும்- இப்படி எண்ணற்ற அதிகாரங்கள் லோக்பாலுக்கு வழங்கப்பட்டுள்ளன.
லோக்பால்- பாதுகாக்கப்பட்ட இந்திய பிரதமர்!
ஆனால் இந்தியப் பிரதமர் மட்டும் இதில் பாதுகாக்கப்பட்டுள்ளார். பிரதமருக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்க வேண்டும் என்றால் 9 பேர் கொண்ட முழு லோக்பால் பெஞ்சும் அமர்ந்து அதை பரிசீலிக்க வேண்டும். அப்படிப் பரிசீலித்த பிறகு அதை விசாரிக்க வேண்டும் என்றால் அதற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அனுமதி அளிக்க வேண்டும். அது மாதிரி நடைபெறும் விசாரணை கூட "இன் கேமிரா" விசாரணையாக இருக்க வேண்டும். அதாவது நான்கு சுவற்றுக்குள் மூடிய அறையில் இந்த விசாரணை நடைபெற வேண்டும். அதே நேரத்தில் வெளிநாட்டு உறவுகள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு, பொது அமைதி, அட்டாமிக் எனர்ஜி, விண்வெளி போன்ற விவகாரங்களில் பிரதமர் எடுத்த முடிவுகளில் ஏதேனும் ஊழல் புகார்கள் வந்தால் அதை லோக்பால் விசாரிக்கக்கூடாது. இதையெல்லாம் விட முக்கியமாக பிரதமருக்கு எதிரான புகார்களை விசாரித்து, அந்தப் புகார் தவறு என்று தெரிய வந்தால் அந்த விசாரணை விவரங்களை வெளியிடவும் கூடாது. வேறு யாருக்கும் கொடுக்கவும் கூடாது. இப்படி இந்திய நாட்டின் பிரதமருக்கு மட்டும் அடுக்கடுக்கான பாதுகாப்புகள் இந்த லோக்பால் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பாதுகாப்பு ஏதும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்குக் கிடையாது! இதையே காரணம் காட்டி இனி மாநில முதலமைச்சர்களும் லோக் அயுக்தாவிலிருந்து இதுபோன்ற பாதுகாப்பைக் கேட்கப் போகிறார்கள். தங்கள் மாநிலங்களில் நிறைவேற்றும் லோக் அயுக்தாவில் அது போன்ற பாதுகாப்புகளை ஏற்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்பது நிச்சயம்.
லோக்பால் உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட தடை!
லோக்பால் சுதந்திரமான அமைப்பாக இருக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி இன்னொரு முக்கிய ஷரத்து இந்த சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுதான் லோக்பால் தலைவராகவோ அல்லது உறுப்பினர்களாகவோ இருப்போர் வேறு பதவிகளுக்குப் போக முடியாது என்ற கிடுக்கிப்பிடி. லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து வருடம் அல்லது 75 வயதை நிறைவு செய்ய வேண்டும். இதில் எது முன்போ அதன்படி ஓய்வு பெறுவார்கள். அப்படி ஓய்வு பெற்ற பிறகு அவர்களை வெளிநாட்டுத் தூதுவர்களாகவோ, கவர்னர்களாகவோ நியமிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.- ஏன் குடியரசுத் தலைவரின் பெயரில் வழங்கப்படும் எந்த நியமனத்திலும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கக் கூடாது என்று "தடை" விதிக்கப்பட்டுள்ளது. அதை விட முக்கியமாக இவர்கள் தங்கள் பதவியிலிருந்து விலகி நாளிலிருந்து ஐந்து வருடத்திற்கு குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், எம்.பி., எம்.எல்.ஏ, முனிசிபாலிட்டி சேர்மன், பஞ்சாயத்து தலைவர் போன்ற பதவிகளுக்கு நடைபெறும் தேர்தல்களில் போட்டியிடக்கூடாது. லோக்பால் அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அரசின் பதவியை எண்ணியோ அல்லது அரசியல் கட்சிகள் பதவி கொடுக்கும் என்று நினைத்தோ ஏதும் தீர்ப்புச் சொல்லக்கூடாது என்பதை நிலைநாட்ட இந்த "தடை" பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, லோக்பால் சுதந்திரக் காற்றை சுவாசிக்கவும் இது பெருமளவில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியில் "லோக்பால்", மாநிலத்தில் "லோக்அயுக்தா"!
இந்த லோக்பால் மத்திய அரசுக்கு முழுக்க முழுக்கப் பொருத்தம். மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும். வருடத்திற்கு பத்து லட்சத்திற்கு மேல் வெளிநாட்டு உதவிகள் வாங்கும் நிறுவனங்களும் இந்த லோக்பாலின் அதிகார வரம்பிற்குள் வரும். ஆனால் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு இந்த லோக்பால் பொருந்தாது. அதற்காகவே தனியாக லோக் அயுக்தா உருவாக்கும் கட்டாயத்தை மாநில அரசுகளுக்கு இந்த லோக்பால் ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் லோக்பால் சட்டப்படி ஒவ்வொரு மாநிலமும் இந்தச் சட்டம் நிறைவேறிய தினத்திலிருந்து ஒரு வருடத்திற்குள் லோக்அயுக்தாவை உருவாக்க வேண்டும். இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் இன்னும் ஐந்து மாநிலங்களில் மட்டுமே லோக் அயுக்தா உருவாக்கப்படவில்லை. அதில் தமிழ்நாடும் ஒன்று. இந்த மாநிலங்களும் இன்னும் ஒரு வருடத்திற்குள் லோக் அயுக்தாவை உருவாக்கும் கட்டாயத்தில் இருக்கின்றன.
2014 தேர்தலும்- லோக்பாலும்!
ஊழல் ஒழிப்பில் இதுவரை பொதுநல அமைப்புகள் போராடின. நீதிமன்றங்கள் கறார் தீர்ப்புகளை வழங்கின. நேர்மையான அமைச்சர்கள் தங்கள் கீ்ழ் உள்ள ஊழல் அதிகாரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால் இப்போது அதற்காக மத்திய அரசுக்கு "லோக்பாலும்", மாநில அரசுகளுக்கு "லோக் அயுக்தாவும்" இந்தியாவில் உருவாகியிருக்கிறது. ஊழலை மையமாக வைத்து ஒவ்வொரு பொதுத் தேர்தலும் நடந்திருக்கிறது. "போபர்ஸ் ஊழலை மையமாக வைத்து பிரசாரம் செய்து" 1989இல் வி.பி.சிங் பிரதமரானார். "ஊறுகாய் ஊழல், எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் போன்றவற்றை மையமாக வைத்து பிரசாரம்" செய்து பா.ஜ.க. 1996இல் தனிப்பெருங்கட்சியாக தேர்தலில் வென்றது. "கார்கில் ஊழல்" "பங்காரு லட்சுமணன் டேப்பில் பணம் வாங்கினார்" என்ற பிரசாரத்தை எல்லாம் செய்து 2004இல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. பிரதமர் மன்மோகன் சிங் பிரதமரானார். இப்போது "ஆதர்ஷ் ஊழல்" "2-ஜி அலைக்கற்றை ஊழல்" "நிலக்கரிப் பேர விவகாரம்" "கொமன்வெல்த் விளையாட்டு ஊழல்" போன்றவற்றை மையப்படுத்தி பா.ஜ.க. பிரசாரம் செய்கிறது. அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பிரதமராக நாடுமுழுவதும் சூறாவளிப் பிரசாரம் செய்கிறார். இதுபோன்ற நேரத்தில் ஊழல் ஒழிப்பிற்காக "லோக்பால்" கொண்டு வந்திருப்பது, 2014 நாடாளுமன்ற தேர்தல் வியூகம் என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது. ஆனால் எஜமானர்கள்- இந்திய வாக்காளர்களே!