2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அரசியல் பேச்சுக்கள் உடனடிச் சாத்தியமா?

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்
 
இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கான பேச்சுக்கள் தொடர்பாக மீண்டும் ஊடகங்களில் செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
 
கடந்தவாரம், வரவு-செலவுத்திட்ட விவாதத்துக்கு பதிலளித்து உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இனப்பிரச்சினைக்கு வெளிநாடுகளிடம் தீர்வைத் தேட வேண்டாம் என்றும், உள்நாட்டில் பேசித் தீர்க்க முன் வருமாறும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். 
 
இதையடுத்து, ஆக்கபூர்வமான முறையில், பேச்சு நடத்த அரசாங்கம் முன் வருமானால், அது குறித்துப் பரிசீலிக்கத் தாம் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.
 
இதையடுத்தே, மீண்டும் பேச்சுக்கள் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் இடம்பிடிக்கத் தொடங்கியுள்ளன.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுக்கள் முறிவடைந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் பேச்சுக்களுக்கான முனைப்புகள் காட்டப்படுகின்றன.
 
இடைப்பட்ட காலங்களில் அவ்வப்போது, பேச்சுக்கள் தொடங்கப் போவது போன்ற சூழல் உருவாவதும், அழைப்புகள் விடுக்கப்படுவதும், பின்னர் அதுவே கலைந்து போவதும் வழக்கமாகி விட்டது.
 
கடந்த காலங்களை விட இம்முறை பேச்சுக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட சூழல் சற்று வித்தியாசமானது. ஏனென்றால், போர் முடிவுக்கு வந்த பின்னர், அரசாங்கத்துக்கு இப்போது அழுத்தங்கள் அதிகரித்து விட்டன.
 
குறிப்பாக, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25ஆவது கூட்டத்தொடர், அரசாங்கத்துக்கு முக்கியமான பிரச்சினையாக மாறி வருகிறது.
 
இம்முறை, ஜெனிவாவில் அரசாங்கத்தை கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தும் முயற்சியில் மேற்குலக நாடுகள் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அழுத்தத்தை சமாளிப்பதற்கு ஏதாவதொரு உருப்படியான உதவுகோல் அரசாங்கத்துக்குத் தேவைப்படுகிறது.
 
2012ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான முதலாவது தீர்மானம் ஜெனிவாவில் கொண்டு வரப்படுவது உறுதியான நிலையில் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் பேச்சுக்கு அழைத்தது.
 
அப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதியை சந்தித்துப் பேசினார். அதை அரசாங்கம், ஜெனிவாவில் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயன்றது.
 
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி வருவதாக, ஜெனிவாவில் அரசாங்கம் அறிக்கை சமர்ப்பித்தது.
 
அதுபோலவே, கடந்த ஆண்டு மார்ச் மாதம், மீண்டும் ஜெனிவாவில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரப்போவதை அறிந்ததும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டது.
 
ஆனால், இத்தகைய பேச்சுக்களை அரசாங்கம் ஜெனிவாவில் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்ற கருத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வலுப்பெற்றிருந்ததால், அரசாங்கத்தின் திட்டம் பலிக்கவில்லை.
 
இப்போது, ஜெனிவா கூட்டத்தொடருக்கு இன்னமும், மூன்று மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், மீண்டும் அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
 
ஆனால், கடந்த ஆண்டைப் போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறையும் கவனமாகவே நடந்து கொள்ளும் என்றே எதிர்பார்க்கலாம்.
 
ஏனென்றால், கடந்தகாலங்களை விடவும், இந்த ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கு ஜெனிவா அழுத்தம் நிறைந்த களமாக இருக்கும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நன்றாகவே உணர்ந்து வைத்துள்ளது.
 
அரசாங்கத்தின் பேச்சுப் பொறிக்குள் சிக்கிவிடக் கூடாது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் என்றே தெரிகிறது.
 
அதனால், தான் ஆக்கபூர்வமான வகையில் பேசுவதானால் மட்டும் பேசுவது குறித்துப் பரிசீலிக்கலாம் என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
 
ஜனாதிபதியினது அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த எடுப்பிலேயே நிராகரித்திருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாததற்கு காரணம் உள்ளது.
 
ஏனென்றால், தாம் பேச்சுக்கு அழைத்தோம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான் அதற்கு ஒத்து வரவில்லை என்று இலகுவாக அரசாங்கம் தனது பொறுப்பைத் தட்டிக் கழித்து விடலாம்.
 
சர்வதேச அரங்கில் இதுபோன்று பலமுறை அரசாங்கம் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது.
 
எனவே, அரசாங்கத்தின் அழைப்பையும் நிராகரிக்காமல், அதேவேளை பேச்சுப் பொறியிலும் சிக்கிக் கொள்ளாமலும் தான், மிகவும் கவனமாக இவ்வாறு கருத்தை வெளியிட்டுள்ளார் இரா.சம்பந்தன்.
 
அதேவேளை, ஜனாதிபதி தனது அழைப்பில் வெளிநாடுகளிடம் தீர்வைத் தேடாமல் உள்நாட்டில் பேசித் தீர்க்கலாம் என்று குறிப்பிட்டது, நிச்சயம் சர்வதேச அழுத்தங்களை அவர் விரும்பவில்லை என்பதை உணர்த்துகிறது.
 
அதாவது சர்வதேச அழுத்தங்களுக்குள் அகப்படாமல் தீர்வு ஒன்றைப் பெறும் கட்டாயத் தேவை அவருக்கு எழுந்துள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது. ஏனென்றால், இனப்பிரச்சினைக்கு தெரிவுக்குழு மூலமே தீர்வு காணப்படும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது.
 
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடோ அதற்கு மாறானது.
 
அரசாங்கத்துடன் நடத்தப்படும் பேச்சுக்களில் ஓர் இணக்கப்பாட்டை எட்டிய பின்னர், அதை தெரிவுக்குழுவில் ஆராயலாம் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு.
 
இந்த இரண்டு நிலைப்பாடுகளும் ஒரு புள்ளியில் சந்தித்தால் தான், அதுவே பேச்சுக்கான தொடக்கப்புள்ளியாக அமைய முடியும்.
 
தெரிவுக் குழுவை வைத்து 13ஆவது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்த அரசாங்கம் முனைவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது.
 
எனவே, 13ஆவது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் பொறிக்குள் விழுந்து விடாமல் இருக்க வேண்டுமானால், கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் இருந்து விலகியே நிற்க வேண்டும்.
 
ஆனால் தெரிவுக் குழுவில் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்று அரசாங்கமும் பிடிவாதமாக நிற்கும் நிலையில், ஏதாவதொரு தரப்பு சற்று இறங்கினால் தான், பேச்சுக்களை ஆரம்பிக்க முடியும்.
 
இத்தகைய நிலையில், இழுத்தடிப்புக்கு இடமில்லாமல் - ஆக்கபூர்வமான வகையில் பேச்சுக்களை நடத்த அரசாங்கம் இறங்கி வந்தால், ஒருவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பச்சைக்கொடி காண்பிக்கக் கூடும்.
 
ஆனால், அரசாங்கம் அத்தகையதொரு வாக்குறுதியின் அடிப்படையில் பேச சம்மதித்தாலும் கூட, அவ்வாறு பேச்சுக்களை ஆரம்பிப்பது உடனடிச் சாத்தியமாகுமா என்பது சந்தேகம் தான்.
 
ஏனென்றால், ஜெனிவா பொறியில் இருந்து தப்பிக்க, அரசாங்கம் இதனைத் தாராளமாகவே பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதால், வரும் மார்ச் மாதத்துக்கு முன்னதாக, இத்தகைய பேச்சுக்களில் இறங்குவது கடினமான காரியமாகவே இருக்கும்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் எல்லாம், மார்ச் மாதத்துக்கு முன்னர் பேச்சுக்களை நடத்த இணங்கி வரும் என்று நம்புவது கடினம்.
 
எனவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியாயமான முறையில் பேச்சுக்களை முன்னெடுத்துச் செல்வதற்கு தற்போது உண்மையாகவே விரும்புகிறார் என்று எடுத்துக் கொண்டாலும் கூட, அது உடனடிச் சாத்தியமான காரியமாக இருக்காது.
 
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்தகையதொரு உண்மையான அழைப்பை நெடுங்காலத்துக்கு உதாசீனப்படுத்தவும் முடியாது.
 
சர்வதேச அழுத்தங்கள் தீவிரம் பெறுகின்ற போது, இருதரப்பும் ஏதாவது ஒரு புள்ளியை நோக்கி நகர வேண்டிய நிலை உருவானாலும் ஆச்சரியமில்லை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X