.jpg)
புத்தாண்டு பிறக்கும் நேரம் பல அரசியல் கட்சிகளுக்கு "பொல்லாத" நேரமாக மாறியிருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகள் அரசியல் கட்சிகளின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவை என்பதால் "எந்தப் பாதை சிறந்த பாதை" என்பதை கண்டுபிடிப்பதில் சிரமத்தை தங்கள் தோள் மீது சுமந்து கொண்டு வலம் வருகிறார்கள் அரசியல் கட்சி தலைவர்கள். தேர்தல் நெருங்க, நெருங்க இலங்கை தமிழர் பிரச்சினையின் தாக்கத்தை திட்டமிட்டே அரசியல் கட்சிகள் குறைத்துக் கொண்டு வருகின்றன. இப்போதைக்கு தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படுகிறார்கள் என்பதுதான் தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் பிரதானமான குற்றச்சாட்டாக மேலோங்கி நிற்கிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த கைதைத் தடுக்க பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். மீனவ பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதே நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உண்ணாவிரதம் இருந்த "நாகை மீனவர்களை" அழைத்துச் சென்று வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்திக்க வைத்துள்ளார். பிறகு இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கையும் சந்திக்க வைத்துள்ளார். இரு கட்சிகளுமே இப்போது தமிழக மீனவர்கள் பிரச்சினையை மட்டுமே முன் வைத்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றன.
இலங்கை தமிழர் பிரச்சினை என்பது தமிழக மீனவர்கள் பிரச்சினையாக இப்போது அரசியல் கட்சிகள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இதற்கு தமிழக அரசையும், மத்திய அரசையும் சேர்த்து எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. ஆளுங்கட்சியோ மத்திய அரசை குற்றம் சாட்டுகிறது. கடந்த சில மாதங்களாகவே குறிப்பாக வடமாகாண தேர்தல்கள் நடந்து முடிந்த பிறகு இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் அளந்து மட்டுமே கருத்துக்களைச் சொல்லி வருகிறது ஆளுங்கட்சி. நீண்ட நாட்களாக இதுபற்றி கருத்துக் கூறாமல் இருந்த எதிர்கட்சிகள் அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி தேவயானி கைது செய்யப்பட்டது பற்றி பேசினார்கள். தேவயானி விவகாரத்தில் அமெரிக்காவுடன் மோதிய இந்திய சின்னஞ்சிறு நாடான இலங்கையுடன் ஏன் தமிழர்கள் விவகாரத்தில், மீனவர்கள் கைது விவகாரத்தில் மோத மறுக்கிறது என்று சாடினார்கள். அதற்குப் பிறகு கருத்துச் சொன்னது இப்போது "தமிழ் பிரபாகரன்" என்ற தமிழக பத்திரிகையாளர் கைது செய்யப்பட்ட விடயம்தான். அதில் கூட ஆளுங்கட்சியிலிருந்து எந்தக் கருத்தும் வெளிவரவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட மற்ற கட்சி தலைவர்கள்தான் இந்த கைது விவகாரத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்கள். இங்குள்ள அரசியல் கட்சிகளின் போக்கைப் பார்த்தால் இலங்கை தமிழர் பிரச்சினையை மையமாக வைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பார்களா என்ற கேள்வியே எழுகிறது.
தி.மு.க.வைப் பொறுத்தமட்டில் மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளை வைத்தே நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க விரும்பிகிறது. அதற்காகவே பொதுக்குழுவைக் கூட்டி அக்கட்சியின் சார்பில் பல தீர்மானங்களை நிறைவேற்றி மாநில அரசை கண்டித்திருக்கிறது. அதற்காக மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தியிருக்கிறது. இன்னும் தேர்தலுக்கு நான்கு அல்லது ஐந்து மாதங்கள் இருக்கின்ற சூழ்நிலையில், அ.தி.மு.க. அரசுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லவே இப்போது தி.மு.க. முழு மூச்சில் களமிறங்கியிருக்கிறது. ஆனால் காங்கிரஸுடன் இவ்வளவு காலம் இருந்த நட்பை வாக்காளர்களின் மனதிலிருந்து எப்படி மாற்றி அமைப்பது என்பது தெரியாமல் அக்கட்சி தவிப்பது போலவே இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் கூட தி.மு.க.வை கடுமையாக சாடுகிறார்கள். "சுமையை இறங்கி விட்டது போல் உணருகிறோம்" "எங்களைப் பிடித்திருந்த தீய சக்தி போய் விட்டது" என்றெல்லாம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், மத்திய இணை அமைச்சர் சுதர்ஸனன் நாச்சியப்பன் உள்ளிட்டோர் கடுமையாக பேசுகிறார்கள். ஆனால் தி.மு.க.விடமிருந்து காங்கிரஸ் மீது கடும் தாக்குதல் வரவில்லை. இதே நிலை நீடித்தால் காங்கிரஸுக்கும், தி.மு.க.வுக்கும் மறைமுக நட்பு இருக்கிறது என்பதே வாக்காளர்களின் மனதில் பதிவு பெறும். அதனால் காங்கிரஸை விட்டு வெளியேறி எதைச் சாதிக்க முயல்கிறதோ அதை தி.மு.க. சாதிக்க முடியாமல் போகும் என்பது தி.மு.க. முன்னணித் தலைவர்கள் பலரின் கருத்தாக இருக்கிறது. இந்த சங்கடத்தை எப்படிப் போக்கப் போகிறது என்பது தி.மு.க.விற்கு புத்தாண்டில் பிறக்கப் போகும் முக்கிய பிரச்சினை!
அ.தி.மு.க.வைப் பொறுத்தமட்டில் தங்கள் ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்குச் சேகரிக்க முனைகிறது. இது வரை அதற்காவகே அனைத்துப் பகுதிகளிலும் கூட்டங்களை நடத்தியிருக்கிறது. இன்னமும் நடத்தி வருகிறது. "டெல்லிக்குச் செல்லும் செங்கோட்டை எக்ஸ்பிரஸை வழிநடத்திச் செல்பவராக நான் இருப்பேன்" என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததைத் தொடர்ந்து " அம்மாவே பிரதமர்" என்ற பிரச்சாரத்தை அ.தி.மு.க.வினர் அனைத்து மட்டத்திலும் எடுத்துச் செல்கிறார்கள். எங்கு பார்த்தாலும் வைக்கப்படும் கட்அவுட்களில் நாடாளுமன்றப் படங்களும், பிரதமராகப் போகிறார் என்ற வாசகங்களும், "கச்சத்தீவை மீட்க டெல்லிக்கு நீங்கள் போக வேண்டும்" என்ற வாசகங்களும் கலர்புல்லாக இடம்பெறுகின்றன. "பிரதமர் ஜெயலலிதா" என்ற பிரச்சாரம் தமிழகத்தில் கேட்காத ஊர் இல்லை. தெரியாத மக்களும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அ.தி.மு.க. அமைச்சர்கள், நிர்வாகிகள் இந்த கோஷத்தை தூக்கிப் பிடித்து பிரசாரத்தில் களமிறங்கியிருக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க.வுடன் இப்போது இருப்பது இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே. அந்த இரு கட்சிகளையும் வைத்துக் கொண்டு நாற்பது தொகுதிகளில் எப்படி ஜெயிக்க முடியும்? அப்படியே நாற்பது தொகுதிகளிலும் ஜெயித்தாலும், பிரதமராக 272 எம்.பி.க்கள் தேவைப்படும் பட்சத்தில் அ.தி.மு.க.வால் எப்படி முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்க முடியும்? என்ற கேள்வியே எதிர்கட்சிகள் எழுப்புகின்றன. குறிப்பாக "எங்களுக்கு இயற்கையான கூட்டணிக் கட்சி" என்று ஒரு காலத்தில் அ.தி.மு.க.வை பாராட்டிய பா.ஜ.க. கூட "20 அல்லது 30 இடங்களில் ஜெயிப்பதை மனதில் வைத்துக் கொண்டு எப்படி பிரதமர் பதவிக்கு வர முடியும்" என்று கேள்வி எழுப்பியிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆகவே "எங்கள் பிரதமர் அம்மா" என்பது அ.தி.மு.க.வின் பிரசாரமாக இருந்தாலும், அதை வாக்காளர்கள் மத்தியில் நம்ப வைத்து வாக்குகளை வாங்குவது அ.தி.மு.க.விற்கு உள்ள புத்தாண்டு சவால்.
முக்கியக் கட்சிகளான அ.தி.மு.க.விற்கும், தி.மு.க.விற்கும் இப்படி இடியாப்பச் சிக்கல் என்றால் இவர்களுக்குப் போட்டியாக வந்த விஜயகாந்திற்கு இந்த புத்தாண்டு பெரும் சோதனை. அவருக்கு முன்பு இருந்த கூட்டணிக் கதவுகள் அ.தி.மு.க.வைப் பொறுத்தமட்டில் மூடியிருக்கிறது. பா.ஜ.க. தலைமையில் அமையப் போகும் அணியில், "நான் விஜயகாந்த்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன்" என்று ஏற்கனவே டாக்டர் ராமதாஸ் இலைமறைவு காய் மறைவாக கூறி விட்டார். இது அவர் அக்கூட்டணிக்குப் போவதிலும் சிக்கலைத் தோற்றுவித்துள்ளது. காங்கிரஸைப் பொறுத்தமட்டில் விஜயகாந்துடன் கூட்டணி வைக்க ரெடியாக இருக்கிறது. ஆனால் "தூக்கி சுமக்க வேண்டியதிருக்கும். அதனால் தேர்தல் வெற்றியும் கிடைக்காது" என்று விஜயகாந்தின் உள்மனது நெருடிக் கொண்டிருக்கிறது. ஆனால் கட்சி நிர்வாகிகளோ, "இனி ஒரு முறை தனித்துப் போட்டி என்பதெல்லாம் நடக்காது. நம்மால் செலவு செய்ய முடியாது. ஆளை விடுங்க சாமி" என்ற ரீதியில் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அது மட்டுமின்றி "தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும்" என்ற எண்ணம் கட்சிநிர்வாகிகளின் அனைத்து மட்டங்களிலும் புறப்பட்டு விட்டது. விஜயகாந்திற்கோ தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் தங்களுக்கு வேண்டிய தொகுதிகளைக் கொடுப்பார்களா என்ற கேள்வி. இதுவரை தே.மு.தி.க. 2006 மற்றும் 2009 தேர்தல்களை தனியாக சந்தித்தது. அப்போது கட்சி துவங்கிய நேரம். அதனால் அனைவரும் ஒரு விறுவிறுப்புடன் களத்திற்கு வந்தார்கள். ஆனால் 2011ல் கூட்டணி வைத்து விட்ட பிறகு இனி தனியாக நிற்பது சரியாக வராது என்பதே அக்கட்சி நிர்வாகிகளின் எண்ணமாக இருக்கிறது. இவ்வளவு இடர்பாடுகளையும் சமாளித்து அவருடையை இலக்கான "என்னால்தான் அ.தி.மு.க. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது" என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் விஜயகாந்த் இருக்கிறார். ஆகவே அவருக்கு "கூட்டணியா" அல்லது "தனித்துப் போட்டியா" என்ற கேள்விக்கு பதில் தேட வேண்டிய கட்டாயம் புத்தாண்டில் பிறந்திருக்கிறது.
இவையெல்லாம் ஒரு புறமிருக்க நிதியமைச்சர் ப.சிதம்பரம் சொன்னது போல், "தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டிருக்கிறது" என்பதுதான் உண்மை. பா.ஜ.க.வோ அ.தி.மு.க.வை பகைத்துக் கொள்ளாமல் தேர்தல் வியூகம் வகுப்பது எப்படி என்ற சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், "கடைசி வரை அ.தி.மு.க. நம்மை கூட்டணியில் வைத்துக் கொள்ளுமா?" என்ற கேள்விக்கு இன்னும் நிச்சயமான பதில் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்டுகளின் வாழ்வில் இது ஒரு சோதனை காலம். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தி.மு.க., அ.தி.மு.க.வை விட்டு வெளியேறி வெகுதூரம் வந்து விட்டார். ஆனால் அவரது முக்கியத்துவத்தை (நல்ல பிரச்சார பீரங்கி அவர்) உணர்ந்து பா.ஜ.க. உரிய சீட்டுகளைக் கொடுக்குமா என்பது ஒரு புறம். இன்னொரு புறம் ஒரு வேளை அதே கூட்டணியில் பா.ம.க. இணைந்தால், அந்தக் கட்சிக்கும் தனக்கும் ஒதுக்கப்படும் சீட்டுகள் மலைக்கும், மடுவுக்கும் உள்ள இடைவெளி போல் அமைந்து விடக்கூடாது என்ற கவலையும் அவருக்கு இருக்கிறது. இது தவிர, ஒரு வேளை பா.ஜ.க. தலைவர்கள் அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ தமிழகத்தில் வெற்றிக்கூட்டணிக்கு முதலில் தேவை என்று முடிவு எடுத்து விட்டால், ம.தி.மு.க.வின் பாதை எது என்பது பற்றியெல்லாம் ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் புதுவருடத்தை அவர் சந்திக்கிறார். ஆக மொத்தம் தமிழக அரசியல் கட்சிகளுக்கு புதுவருடமும், பொல்லாப்புகளும் சேர்ந்தே பிறக்கிறது என்பதுதான் உண்மை! அதில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் எடுக்கும் முடிவைப் பொறுத்தே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் கட்சியின் ஜாதகம் எப்படி ஒர்அவுட் ஆகப் போகிறது என்பது தெரிய வரும்.