2025 மே 19, திங்கட்கிழமை

மக்கள் சிந்திக்கும் வரை அரசியல்வாதிகள் மாற மாட்டார்கள்

Kanagaraj   / 2014 ஜனவரி 11 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

இரண்டு மாகாண சபைகளுக்கன தேர்தல்கள் விரைவில் நடைபெறவிருக்கின்றன. இவற்றின் போது மக்கள் நாட்டில் இது வரை நடைபெற்றவற்றையும் அரசியல் கட்சிகளின் கொள்கைகளையும் கருத்திற் கொண்டு வாக்களிப்பார்களா அல்லது சொந்தக் கோப தாபங்கள், குறுகிய லாப நோக்கங்கள் போன்றவற்றை கருத்திற் கொண்டு வாக்களிப்பார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

மேல் மாகாண சபையும் தென் மாகாண சபையுமே அனேகமாக இம் மாதம் 12ஆம் திகதி கலைக்கப்படவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இது தாம் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அங்கீகரிக்கின்றோமா இல்லையா என்பதை அரசாங்கத்திற்கு அறிவிக்க மக்களுக்கு கிடைக்கும் அரிய சந்தர்ப்பமாகும்.

ஏனெனில் எந்தக் கட்சிக்கு வாக்களித்து பதவியில் அமர்த்த வேண்டும் என்று சிந்திப்பது இப்போதைய நிலையில் நடைமுறை சாத்தியம் இல்லை. ஏனெனில் பல முக்கிய கட்சிகள் வெற்றி பெறும் நிலையில் இல்லை. அதன் காரணமாக இந்த மாகாண சபைத் தேர்தல்களின் போது பாரிய மாற்றங்களை எதிர்ப்பார்க்க முடியது. எனவே தான் பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் கொள்கைகiளையும் நடவடிக்கைகளையும் தாம் அங்கீகரிக்கின்றோமா என்பதை சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டியுள்ளது.

நாட்டுக்கு எப்போதும் பலமான எதிர்க்கட்சியொன்று அவசியமாக இருக்கிறது. நிமல் சிறிபால டி சில்வா போன்ற அரசாங்கத்தின் அமைச்சர்களும் அடிக்கடி அதனை கூறுகிறார்கள். ஏனெனில் அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் இருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் சிலவேளைகளில் அவர்களையே பாதிக்கின்றது போலும். அவர்களை பாதிக்கின்றதோ இல்லையோ அது மக்களை பாதிக்கின்றது என்பது உண்மையே.

முறையான குற்ற விசாரணை முறையொன்று இல்லாமல் தமக்கிருக்கும் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்தமை அதற்கு உதாரணமாகும். அரசாங்கம் தாம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்யாது ஒருவருக்கு அப்பதவியில் இரண்டு முறைகளுக்கு மேல் இருக்கக் கூடிய வகையில் 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றியமை மற்றொரு உதாரணமாகும்.

அதிகார பரவலாக்கலைப் பற்றி இந்தியாவுக்கும் வெளி உலகுக்கும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வரும் அரசாங்கம் மாகாண சபைகள் பெறக்கூடிய மிகக் கூடுதலான் வருமானமாக இருந்த மொத்த விற்பனை வரியையும் அந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மத்திய அரசாங்கத்திட்ம் பெற்றுக் கொண்டது.

அண்மையில் அரசாங்கம் இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பாவித்து மாகாண சபை முறையையே ரத்துச் செய்ய முற்பட்டது. இந்திய அரசாங்கமே அதனை தடுத்து நிறுத்தியது.எனவே பலமான எதிர்க் கட்சியொன்று அவசியம் எனபது ஏற்றுக் கொள்ளக்கூடியதே. ஆனால் அவ்வாறானதோர் எதிர்க்கட்சி உருவாகும் நிலைமை நாட்டில் இல்லை. பிரதான எதிர்க்கட்சியாக கருதப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் கட்சித் தலைமைக்காக சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆளும் கட்சியில் இரண்டாம் மட்டத்தில் இருப்பதைப் பார்க்கிலும் எதிர்க்கட்சியின் தலைவராக இருப்பதெ மேல் என்று தான் அக் கட்சியின் பல தலைவர்கள் சிந்திக்கிறார்கள் போலும்.

எனவே மக்களும் ஊடகங்களும் தான் இன்று எதிர்க்கட்சியின் வகிபங்கினை ஆற்ற வேண்டியுள்ளது. மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்கு சேவை செய்வதற்கான சிறந்தவர்களை தேர்வு செய்வதே தேர்தல்களின் நோக்கமாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் இப்போது இலங்கையில் அவ்வாறானதோர் நிலைமை இல்லை. நல்ல முறையிலோ அல்லது கெட்ட முறையிலோ எவ்வகையிலாவது பதவிக்கு வந்து பணம் சம்பாதிப்பதே அரசியல்வாதிகளினது நோக்கமாக தெரிகிறது. எனவே எவ்வகையிலாவது தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உதவக்கூடியவர்களையே அரசியல் கட்சிகள் வேட்பாளர்களாக தெரிவு செய்கின்றன.

இதன் காரணமாக போதைப் பொருள் விற்றேனும் பணம் சம்பாதித்துள்ள செல்வந்தர்கள், குண்டர்கள் போன்றவர்களுக்கும் அரசியலில் வாய்ப்பு கிடைக்கின்றது. இப்போது அரசியல்வாதிகள் ஜனரஞ்சகமான விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா, தொலைக்காட்சி நடிகர்கள் போன்றவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நெருங்கிய உறவினர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தி வருகிறார்கள். அவர்கள் நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களாக இருந்தால் இவ்வாறானவர்களை வேட்பாளர்களாக நிறுத்த மாட்டார்கள்.

ஏற்கனவே பல சினிமா நட்சத்திரங்கள் ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் இருக்கிறார்கள். போதாக்குறைக்கு மேலும் பலர் இருகட்சிகளிலும் சேர்கிறார்கள். ராஸ்கல் என்ற தெலுங்கு படத்தில் நடித்து தென்னிந்தியாவிலும் பெயர் பெற்ற பிரபல சிங்கள நடிகை நதீஷா ஹேமமாலி அன்மையில் ஐக்கிய தேசியகட்சியில் சேர்ந்தார். அவர் தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார்.

தமக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியன் சார்பில் தேர்தலில் போட்டியிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என முன்னாள் இலங்கை அழகு ராணியும் சினிமா நட்சத்திரமுமான கயேஷா பெரேரா கூறியிருக்கிறார். ஏற்கனவே பிரபல நடிகை கீத்தா குமாரசிங்க ஆளும் கட்சியன் பெந்தர எல்பிட்டிய தொகுதி அமைப்பாளராக இருக்கிறார். அனார்கலி ஆகர்ஷா மற்றும் உபேக்ஷா சுவர்ணமாலி ஆகிய நடிகைகளும் ஏற்கனவே களத்தில் இருக்கிறார்கள்.

தோல்வியே வாழ்க்கை என்ற நிலையில் செய்வதறியாது இருக்கும் ஐ.தே.க. அவ்வாறானவர்களை தேர்ந்தெடுப்பதில் ஏதாவது நியாயத்தை காணலாம். ஆனால் ஆளும் கட்சி எதற்காக அவ்வாறானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்? வெறும் தேர்தல் வெற்றியை மட்டுமே அக் கட்சி வேட்பாளர்களிடம் எதர்ப்பார்க்கிறது என்பதும் வேட்பாளர்களிடம் பொருளாதார பிரச்சினைகளையோ அல்லது இனப்பிரச்சினையையோ தீர்ப்பதற்கான் அறிவு, ஆற்றல் மற்றும் தேவை இருக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் சிந்திக்காமையையுமே இது எடுத்துக் காட்டுகிறது.

மறுபுறத்தில் அவர்கள் அரசியல்வாதிகளின், குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் அமைச்சிர்களினதும் நெருங்கிய உறவினர்களை தேர்தலில் நிறுத்துகிறார்கள். சில தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் இவ்வாறு செய்கிறார்கள். பிரதி அமைச்சர விநாயகமூர்த்தி முரளிதரனின் சகோதரியும் காலஞ்சென்ற ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் டீ. மகேஸ்வரனின் மனைவியும் சகோதரரும் அதற்கு உதாரணமாகும். இவ்வாறானவர்களை போட்டியில் நிறுத்துவதனால் மற்றைய வேட்பாளர்களைப் பார்க்கிலும் அவர்களுக்கு கூடுதலான விளம்பரம் கிடைத்துவிடுகிறது.

மறுபுறத்தில் அரசியல் என்பது பணம் சம்பாதிக்கும் கருவியாக இருப்பதனால் உறவினர்களையும் அரசியலில் சேர்த்துக் கொள்ள அரசியல்வாதிகள் முயற்சிக்கிறார்கள்.ஆனால் இன்று நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகளை அறிந்து அவற்றை திர்ப்பதற்காக குரல் கொடுக்கக்கூடியவர்களே அரசியலுக்குத் தேவையாக இருக்கிறது. பொது மக்கள் இதனை உணர்ததாக தெரியவில்லை.

அவர்களும் சினிமா நட்சத்திரங்களை வேட்பபாளர்களாக கண்டால் கண்ணை மூடிக் கொண்டு அவர்களுக்கு வாக்களிக்கிறார்கள். உதாரணமாக, கடந்த பொதுத் தேர்தலின் போது கம்பஹ மாவட்டத்தில் போட்டியிட்ட ஐ.தே.க.வின் அப்போதைய பிரதித் தலைவர் கரு ஜயசூரியவை விட முதன் முறையாக தேர்தல் ஒன்றில் போட்டியிட்ட உபேக்ஷா சுவர்ணமாலி என்ற பிரபல நடியை விருப்ப வாக்குகளை பெற்றார்.

நாட்டில் சமயப் பாகுபாடு இடம்பெறுகிறது என்றும் சமயச் சிறுபான்மையினர் தொடர்ந்து இம்சிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் ஐ.நா.வே தொடர்ந்து கூறிவரும் நிலையிலும் அவ்வாறானவர்கள் பின்புலமாக இருக்கும் கட்சிகளை சமயச் சிறுபான்மை இனமாக இருக்கும் மக்களும் ஆதரிக்கிறார்கள். மக்களிடமுள்ள இந்த நிலைமை மாறும் வரை அரசியல்வாதிகளிடம் நல்ல மாற்றத்தை எதிர்ப்பார்க்க முடியாது. மக்களில் மாற்றம் ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டால் இந்த இம்சையாளர்களும் மாற வேண்டிய நிலை ஏற்படும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X