2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

புயலைக் கிளப்பி விட்டுப்போன அமெரிக்க அதிகாரி

Menaka Mookandi   / 2014 ஜனவரி 17 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப், இலங்கையில் ஒரு புயலைக் கிளப்பி விட்டுப் போயிருக்கிறார்.

வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25ஆவது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான அடுத்த கட்ட நகர்வுக்கு அமெரிக்கா தயாராகி விட்டது என்ற செய்தியை ஸ்டீபன் ராப்பின் இலங்கைப் பயணம் பெரும்பாலும் உறுதிப்படுத்தி விட்டது.

இது தொடர்பாக ஏற்கனவே அரசாங்கத்துக்கு அமெரிக்கா அறிவித்து விட்டதாகவும் கூட சில தகவல்கள் உள்ளன. ஆனால் இலங்கையோ அமெரிக்காவோ அது பற்றிய எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், ஸ்டீபன் ராப் இந்தப் பயணத்தைப் பயன்படுத்திக் கொண்ட விதம், மற்றும் அவர் வடக்கில் வெளியிட்ட கருத்துகள் என்பன இலங்கைக்கு எதிரான அடுத்த தீர்மானத்தைக் கொண்டு வருவதில் அமெரிக்கா தீவிரமாகப் பங்காற்றி வருகிறது என்பதை உணர்த்தியுள்ளது.

ஜெனிவாவில் ஏற்கனவே இரண்டு தீர்மானங்களை இலங்கைக்கு எதிராக கொண்டு வந்து நிறைவேற்றிய அமெரிக்கா, அந்த இரண்டு தீர்மானங்களையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளதாக குற்றம்சாட்டும் நிலையில், அடுத்த தீர்மானத்தை எப்படியாவது கொண்டு வந்தேயாக வேண்டிய கட்டாயம் அந்த நாட்டுக்கு உள்ளது.

அதற்கு அப்பால் அமெரிக்கா தற்போது கொழும்புடன் அதிகளவில் முரண்படத் தொடங்கியுள்ள சூழலில், ஜெனிவாவில் இன்னும் அதிகமான வேகத்துடன் செயலாற்ற வேண்டிய நிலையில் இருப்பது ஆச்சரியத்துக்குரியதொன்று அல்ல.

ஸ்டீபன் ராப் மேற்கொண்ட பயணத்துக்கும் அவர் அரசாங்கத் தரப்பினருடன் நிகழ்த்திய சந்திப்புகளுக்கும், அரசாங்கம் எந்த முக்கியத்துவத்தையும் கொடுக்கவில்லை. அதுபோலவே,  அரசாங்கத் தரப்பினருடனான சந்திப்புகளுக்கு ஸ்டீபன் ராப்போ, அல்லது அமெரிக்காவோ முக்கியத்துவம் கொடுக்கவும் இல்லை. கடந்த 6ம் திகதி அதிகாலையில் கொழும்பு வந்து இறங்கிய ஸ்டீபன் ராப் முதலில் அரசாங்கத் தரப்பில் சந்தித்தது, பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவைத் தான்.

அண்மைக் காலங்களில், இலங்கை வரும் அமெரிக்க உயர் மட்டப் பிரதிநிதிகள் முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அதற்கு மாறாக, ஸ்டீபன் ராப் முதலில் கோத்தாபய ராஜபக்சவை சந்தித்தார். அதன் பின்னரே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்தார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாகவோ, அதன் பின்னர் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், சட்டமா அதிபர் பாலித பெர்னான்டோ, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம ஆகியோருடன் நடத்திய சந்திப்புகள் தொடர்பாகவோ அரசாங்கத் தரப்பு எந்த அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

அதுமட்டுமன்றி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்கு ஸ்டீபன் ராப் அனுமதி கோரியிருந்ததாகவும், அதனை அரசாங்கம் நிராகரித்து விட்டதாகவும் கூடத் தகவல்கள் வெளியாகின. அதை அமெரிக்காவோ, இலங்கையோ ஏற்கவோ மறுக்கவோ இல்லை.

எவ்வாறாயினும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கியமான ஒரு அதிகாரியின் பயணம் தொடர்பான தகவல்களை இலங்கை அரசாங்கம் இருட்டடிப்புச் செய்ததில் இருந்தே, இதனை அரசாங்கம் விரும்பவில்லை, வேண்டா வெறுப்புடன் தான் அனுமதித்துள்ளது என்பதை உணரமுடிகிறது. ஸ்டீபன் ராப் திடீரென வந்து கொழும்பில் இறங்கியிருக்க முடியாது. இலங்கை அரசாங்கத்திடம் முன் அனுமதி பெற்றே அவரால் கொழும்பு வந்திருக்க முடியும். அவர் எதற்காக வரப்போகிறார் என்பது இலங்கை அரசாங்கத்துக்கு நிச்சயமாக  தெரியாமல் போயிருக்காது.

ஆனாலும், அவருக்கு அனுமதி கொடுத்திருந்தது. அவ்வாறு அனுமதி கொடுக்க மறுத்திருந்தால், அதன் விளைவுகள் என்னவாகும் என்பதை அரசாங்கம் அறியாமல் இருந்திருக்காது. வேண்டாத விருந்தாளியாகவே ஸ்டீபன் ராப்பை அரசாங்கம் பார்த்ததால் தான், அவரது பயணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதேவேளை, அவர் இலங்கையில் பயணத்தை மேற்கொண்டிருந்த சூழலிலேயே, அவருக்கு எதிரான போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.

அதன் பின்னணியில் அரசாங்க அமைச்சர்கள் சிலரே இருந்தனர் என்பதை அமெரிக்கா நன்றாகவே அறிந்திருந்தது. ஏற்கனவே முடிவெடுத்து விட்டே ஸ்டீபன் ராப் கொழும்பு வந்துள்ளதாக அரசதரப்பில் இருந்து அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அவருக்கும் புலிகளுக்கும் முடிச்சுப் போட்டும் செய்திகள் வெளியாகின. ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சனல் 4 ஊடகவியலாளர் கல்லும் மக்ரே, ஸ்டீபன் ராப் என்று அரசாங்கத்தினால் அழைக்கப்பட்ட பலரும், இதேபோன்று அரசாங்கத்துக்கு பாதகமான கருத்துகளை வெளியிட்ட போது, இத்தகைய விமர்சனங்களைத் தான் எதிர்கொள்ள நேரிட்டது.

அதேவேளை, ஸ்டீபன் ராப்பும், இந்தப் பயணத்தின் போது, போர்க்குற்றங்கள் சார்ந்த சாட்சியங்களை சந்திப்பதிலேயே அதிக கவனம் செலுத்தியிருந்தார். வடக்கிலும், கொழும்பிலும் அவர் பல முக்கிய பிரமுகர்களை சந்தித்திருந்த போதிலும், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், உதயன் நிர்வாகப் பணிப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவன், ஆகியோருடனான சந்திப்புகள் மற்றும் புதுமாத்தளன் பயணம் ஆகியன தொடர்பான படங்களை மட்டுமே அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டது.

இவை அனைத்துமே போர்க்குற்றங்களாக அல்லது மனிதஉரிமை மீறல்களாக வகைப்படுத்தப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவையாகும். உச்சக்கட்டமாக, புதுமாத்தளன் புனித அந்தனீஸ் மைதானத்தை, 2009 ஜனவரியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என்று டுவிட்டரில் அடையாளப்படுத்தியது அமெரிக்கத் தூதரகம்.

இது சர்ச்சையாக எழுந்த போது, அது அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட பதிவு என்றும் அதை மாற்ற முடியாது என்றும் அமெரிக்கத் தூதரகம் கூறி விட்டது. இவையெல்லாம், இலங்கை தொடர்பான இறுக்கமான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளது என்பதன் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் அந்த இறுக்கமான நிலைப்பாடு, சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்பதாக இருக்கும் என்றே கூறப்பட்டாலும், அதில் சிக்கல்கள் உள்ளது என்பதையும் யாழ்ப்பாணத்தில் ஸ்டீபன் ஜே ராப் தெளிவுபடுத்தியுள்ளார்.

சர்வதேச போர்க்குற்ற விசாரணை தீர்மானத்தை முன்வைத்தால், பல நாடுகள் அதற்கு ஆதரவளிக்கத் தயங்கலாம் என்று அவர் கூறியுள்ளார். ஆனாலும், அமெரிக்கா அந்த முயற்சியில் இருந்து பின்வாங்குவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

ஜெனிவா அமர்வு ஆரம்பிக்க இன்னும் ஆறு வாரங்களே உள்ள நிலையில், அமெரிக்காவின் முயற்சிகளை விமர்சிப்பதில் தான் அரசாங்கமும் அக்கறை செலுத்துகிறதே தவிர, மேற்குலகின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி அழுத்தங்களில் இருந்து தப்பிக்க எத்தனிக்கவில்லை.

அமெரிக்காவின் தற்போதைய இறுக்கமான போக்கு, இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்க அல்லது சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை கொண்டு வர காரணமாகலாம் என்று தயான் ஜெயதிலக போன்ற இராஜதந்திரிகள் பலரும் எச்சரித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஜெனிவா அமர்வு குறித்து அரசாங்கத்துகு ஒருவித உதறல் இருந்தாலும் கூட, அதைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயத்தை தேடிக்கொள்வதில் தான் அரசாங்கம முனைப்புக் கொண்டுள்ளது. அதாவது காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் உத்தி இது.

புலிகள் பலம் பெற்றிருந்த காலத்தில் போரை முன்னிறுத்தியும், புலிகளை வெற்றி கொண்ட பின்னர் அதனை முன்னிறுத்தியும், தேர்தல் வெற்றிகளை பெற்று வந்த அரசாங்கத்துக்கு இப்போது ஜெனிவா அமர்வு நல்வாய்ப்பாகியுள்ளது. அதனை குறிவைத்தே மாகாணசபைத் தேர்தல்களில் மட்டுமன்றி தேசிய அளவிலான தேர்தல்களிலும் வெற்றிகளை ஈட்டுவதில் தான் அரசாங்கத்தின் கவனம் உள்ளது.

ஜெனிவா அமர்வில் போடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் சுருக்கு கழுத்தில் விழ முன்னர், அதை அரசியல் வெற்றியாக்கி விட முனைகிறது அரசாங்கம். எவ்வாறாயினும், இம்முறை அரசாங்கம் ஜெனிவாவில் கடுமையான அழுத்தங்களைச் சந்திக்க நேரிடலாம். ஏனென்றால், சர்வதேச சமூகம் விரும்புவது போன்ற நம்பகமானதொரு விசாரணையை மேற்கொள்ளும் திடத்தில் இருந்து அரசாங்கம் முற்றாகவே பின்வாங்கியுள்ளது.

இத்தகைய பின்னணியில், சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் முயற்சிகள் ஜெனிவாவில் தீவிரமடையலாம். அது அரசாங்கத்துக்கு உள்நாட்டில் அரசியல் வெற்றிகளைக் குவித்துக் கொடுத்தாலும், சர்வதேச அளவில் இலங்கையை தனிமைப்படுத்தி விடக் கூடும் என்பதை மறுக்க முடியாது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X