2025 மே 19, திங்கட்கிழமை

‘டெல்லி முற்றுகை’: இந்திய தேசிய கட்சிகள் கண்டுகொள்ளாத இலங்கை தமிழர் பிரச்சினை

Menaka Mookandi   / 2014 ஜனவரி 20 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

"குடியரசுத் தலைவர்" பதவிக்கு நடைபெறும் தேர்தல் போல் இந்தியாவின் 16ஆவது நாடாளுமன்றத் தேர்தல் மாறி வருகிறது. ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் பாரதீய ஜனதாக் கட்சியும், ஆட்சியை தக்க வைக்க நினைக்கும் காங்கிரஸ் கட்சியும் களத்தில் நேருக்கு நேராக மோதிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இரு நாட்கள் காங்கிரஸ் கட்சி தன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தைக் கூட்டியது. அனைத்து மாநிலங்களில் இருந்தும் அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். அதற்குப் போட்டியாக பா.ஜ.க.வும் டெல்லியில் தனது தேசிய கவுன்சில் கூட்டத்தை இரண்டு நாட்கள் நடத்தியது.

சமீபத்தில் வெற்றி பெற்ற மாநில முதல்வர்கள் சிவராஜ் சிங் சவுகான், ராமன்சிங், வசுந்தரராஜே உள்ளிட்ட அனைத்து பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்களும், அனைத்து மாநில பா.ஜ.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள். கடந்த பத்து மாதங்களில் டெல்லியில் கூட்டப்பட்ட இரண்டாவது தேசிய கவுன்சில் கூட்டம் இது. தேசியக் கட்சிகளின் இந்த டெல்லிக் கூட்டங்கள்தான் இருநாள் தலைப்புச் செய்திகளாக டெலிவிஷன் சேனல்களையும், செய்தித் தாள்களையும் ஆக்கிரமித்தது.

இந்திய நாடாளுமன்றத்திற்கு உள்ள 543 எம்.பி.க்களில் 272 எம்.பி.க்களை பெற்று விட வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் இலக்கு. அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் பிரச்சாரமே "272-ப்ளஸ்" என்ற பிரச்சாரம்தான். அவர் மட்டுமல்ல. அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் உள்பட அனைவருமே இதை மனதில் நிலைநிறுத்தி, "ஒரு ஒட்டு. ஒரு நோட்டு" என்ற பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். இதற்கு முன் "வீடுதோறும் தாமரை" பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள்.

"தாமரை" பா.ஜ.க.வின் தேர்தல் சின்னம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பிரச்சாரம் ஒரு புறமிருக்க, தேர்தல் நிதி திரட்டுவதற்காக இப்போது "ஒரு ஓட்டு. ஒரு நோட்டு" பிரச்சாரத்தை கையிலெடுத்துள்ளார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியோ இன்னும் அது போன்றதொரு "அகில இந்திய அளவிலான" தேர்தல் பிரச்சாரம் எதையும் எடுக்காமல் வெறுமனே "நாங்கள் சாதனை செய்தோம்" என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறது. பா.ஜ.க.வின் தேர்தல் யுக்தி ஆரம்பித்து ஒரு ரவுண்ட் சென்று விட்டு இப்போது அடுத்த யுக்தியும் துவங்கி விட்டது. ஆனாலும் காங்கிரஸ் கட்சி இன்னும் "சாதனைப் பிரச்சாரத்தை"யே மேற்கொள்ளவில்லை. இனி எஞ்சியிருக்கும் இரு மாதங்களில் காங்கிரஸால் தன் சாதனை சரித்திரத்தை சந்து பொந்துக்கெல்லாம் கொண்டு சென்று விட முடியுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

பா.ஜ.க.விற்கு இப்போது "ஸ்டார் பிரதமர் வேட்பாளர்" நரேந்திரமோடி. ஆனால் அவர் தன் கட்சியின் அடிப்படைக் கொள்கையான "ராமர் கோயில் கட்டுவது" "காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சட்டப் பிரிவு 370 நீக்குவது" "பொது சிவில் சட்டம்" போன்றவை பற்றி வாய்திறக்க மறுக்கிறார். ஏன் உத்தரபிரதேசத்தில் கலந்து கொண்ட கூட்டத்திலும் மோடி இது பற்றி பேசவில்லை. டெல்லியில் நடைபெற்ற தேர்தலுக்கு முன்பான தேசிய கவுன்சில் கூட்டத்திலும் இது பற்றி கருத்துச் சொல்லவில்லை. "வளர்ச்சி" "ஊழல் ஒழிப்பு" "பொறுப்புள்ள அரசு நிர்வாகம்" என்ற ரீதியில் மட்டுமே "நான் பார்க்கும் ஐடியல் இந்தியா" என்று கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பா.ஜ.க.வின் தலைவர் ராஜ்நாத் சிங் கூட இது பற்றி மவுனம் சாதித்துள்ளார். அவரும் கூட மோடி போலவே பேசியிருக்கிறாரே தவிர, பா.ஜ.க.வின் அடிப்படைக் கொள்கை பற்றி பேசவில்லை.

இந்த சூழ்நிலையில் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையிலாவது அந்த அடிப்படைக் கொள்கைகள் இடம்பெறுமா அல்லது ஏற்கனவே 1999 களில் வெளியிடப்பட்ட "சென்னை பிரகடனம்" அடிப்படையில் இந்த "அடிப்படைக் கொள்கைகளுக்கு" கொஞ்ச காலம் ஓய்வு கொடுக்கப்படுமா என்பது தெரியவில்லை. அதனால் பா.ஜ.க. தனது அடிப்படைக் கொள்கைகளையே ஒதுக்கி வைத்து விட்டு, இந்தியாவின் வளர்ச்சி என்ற கோணத்தில் தேர்தலை சந்திப்பது வாக்காளர்களை வசீகரப்படுத்தவே என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

குறிப்பாக இளம் வாக்காளர்களை மனதில் வைத்தே இப்படியொரு "கொள்கை விலகல்" முடிவை எடுத்து அக்கட்சியின் தலைமை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் பா.ஜ.க. "எங்கள் கொள்கைகளை கிளற மாட்டோம்" என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால் மவுனமாக வெளிப்படுத்துகின்றன. அதுதான் நரேந்திரமோடி, ராஜ்நாத் சிங் போன்றோரின் பேச்சுக்களிலும், அந்தக் கட்சி வெளியிட்டுள்ள அரசியல் தீர்மானத்திலும் எதிரொலிக்கிறது.

ஆனால் இந்த சிக்கல் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. அவர்கள் தங்கள் கொள்கை என்ன என்பதை வெளிப்படையாக தீர்மானத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். அக்கட்சி வெளியிட்டுள்ள 23 தீர்மானங்களில் ஒன்றில், "இப்போது நடக்கும் தேர்தல் இரு சித்தாந்தங்களுக்கு இடையே நடக்கும் மோதல். ஒன்று இந்தியாவை ஒற்றுமையாக வைத்துக் கொள்வது. அது காங்கிரஸுடையது. இன்னொன்று இந்தியாவை பிரித்தாளுவது. அது பா.ஜ.க.வுடையது. நாம் மதசார்பற்ற தன்மைக்கு உறுதி பூண்டுள்ளோம். பா.ஜ.க.வோ மதவாதத்திற்கு துணை போகிறது" என்று பளிச்சென வெளியிட்டுள்ளார்கள்.

ஆகவே மதசார்பற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது காங்கிரஸின் இலக்கு. இந்த அடிப்படைக் கொள்கைக்கு கை கொடுக்க நினைக்கும் அரசியல் சக்திகளும், சமூக சக்திகளும் காங்கிரஸுடன் வர வேண்டும் என்று மனம் திறந்த அழைப்பு ஒன்றை கூட்டணிக் கட்சிகளுக்கு விடுத்துள்ளது. பத்து வருட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி இந்த அடிப்படையில் கூட்டணிக் கட்சிகளை பேணிப் பாதுகாக்கவில்லை. ஆனால் மீண்டும் தேர்தல் என்று வந்தவுடன் இப்போது மதசார்பின்மையைக் காட்டி மற்ற கூட்டணிக் கட்சிகளையும், அரசியல் கட்சிகளையும் காங்கிரஸ் அழைக்கிறது என்ற எண்ணமே பல்வேறு மாநிலக் கட்சிகள் மனதில் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே ஒரு புறம் தனது அடிப்படைக் கொள்கைகளை மறைத்து வைத்து விட்டு ஆட்சிக்கு வர பிரச்சாரம் செய்யும் பா.ஜ.க. இன்னொரு பக்கம் தனது அடிப்படைக் கொள்கைகளை வெளியிட்டு ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்யும் காங்கிரஸ் கட்சி- இதுதான் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் எதிர்நோக்கியுள்ள பரபரப்பான களம்.

இந்தக் களத்திற்கு ஏற்றவாறு காங்கிரஸ் கட்சி தனது பத்தாண்டு கால ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டுள்ளது. எடுத்த எடுப்பிலேயே பிரதமர் மன்மோகன் சிங்கை பாராட்டி விட்டது. அவரது புத்தி கூர்மையான ஆட்சியால் பொருளாதார ரீதியாக இக்கட்டான காலகட்டத்திலும் சிறப்பாக ஆட்சி செய்துள்ளார் என்று புகழ்ந்திருக்கிறது. அதே போல் அவர் "ஏழ்மையை விரட்டப் போராடுகிறார்" "பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்கிறார்" என்றெல்லாம் பாராட்டியிருக்கிறது. தகவல் பெறும் உரிமை சட்டம், ஊழலை ஒழிக்க வந்த லோக்பால் சட்டம், கிராமப் புற மக்களுக்காக கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி கிராம வேலை வாய்ப்புத் திட்டம், உணவுக்கு உரிமை சட்டம், கல்வி பெறும் உரிமை சட்டம்- என்று பலவற்றை அக்கட்சி தனது அரசியல் தீர்மானங்களில் விளக்கிச் சொல்லியிருக்கிறது.

அது தவிர "ஊழல்" என்பது காங்கிரஸுக்கு கெட்டப் பெயரைச் சம்பாதித்துக் கொடுத்து விட்டது என்பதால், அந்த ஊழலை ஒழிக்க கொண்டு வந்த சட்டங்கள், இன்னும் பாராளுமன்றத்தில் நிலுவையில் உள்ள ஆறு ஊழல் ஒழிப்பு தொடர்பான மசோதாக்களை நிறைவேற்றுவது போன்றவை பற்றியும் பிரகடனம் செய்திருக்கிறார்கள். இதன் அடிப்படையில், "மதசார்பற்ற தன்மையைக் காப்போம்", "வளர்ச்சியுடன் கூடிய சமூக நீதி வழங்குவோம்" "வெளிப்படையான, பொறுப்புள்ள அரசாங்கத்தை அடுத்த ஐந்தாண்டுகளுக்குக் கொடுப்போம்" என்பதுதான் காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் யுக்தி. இதை பிரச்சாரம் செய்யவே ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பா.ஜ.க.வைப் பொறுத்தமட்டில் காங்கிரஸ் அரசின் ஊழல் புகார்கள் பற்றி உரக்கப் பேசியிருக்கிறார்கள். இந்த பத்தாண்டுகளில் 5.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியிருக்கிறது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்த 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 5 சதவீதத்திற்கு கொண்டு வந்து விட்டது என்று சாடியிருக்கிறார்கள். வெளியுறவுக் கொள்கையில் தடுமாற்றம், உள்நாட்டில் முடிவுகளை எடுப்பதில் தடுமாற்றம் என்று பட்டியலிட்டுள்ள அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியும் சரி, தலைவர் ராஜ்நாத் சிங்கும் சரி, "எங்களிடம் நிலையான ஆட்சியைக் கொடுங்கள். நாங்கள் சாதித்துக் காட்டுகிறோம். எங்களைப் பொறுத்தமட்டில் இந்தியா ஃபர்ஸ்ட்" என்பதுதான் இலக்கு" என்று கூறியிருக்கிறார்கள்.

மத்திய தர மக்களை குறி வைத்து அவர்களின் வருமான வரி செலுத்தும் விதத்தில் சில சலுகைகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவிர, வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்பது, உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதில் அதிக முதலீடு செய்வது, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு திட்டம், இயற்கை வளங்களை வெளிப்படையாக ஒதுக்கீடு செய்வதற்கு கொள்கை முடிவு, ஒவ்வொருவரும் நோயின்றி இருக்கும் உரிமை என்றெல்லாம் பல அறிவிப்புகளை மோடியும் வெளியிட்டுள்ளார். ராஜ்நாத் சிங்கும் பட்டியலிட்டுள்ளார். இவற்றின் அடிப்படையில் ""நல்ல நிர்வாகம், வளர்ச்சி, நிலைத்த தன்மை, பாதுகாப்பு" இந்த நான்கையும் மேம்படுத்துவோம் என்று "டெல்லி பிரகடனம்" செய்திருக்கிறது பா.ஜ.க.

ஆனால் இரு கட்சியனருமே இலங்கை விவகாரத்தில் "சர்ச்சைக்குரிய" கருத்து எதையும் சொல்லவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி அமைவதே சிக்கல் என்ற நிலையில் அக்கட்சி இலங்கை தமிழர் பிரச்சினை பற்றியோ, தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றியோ அதன் பிரகடனத்திலோ, அரசியல் தீர்மானங்களிலோ எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை. ஆனால் பா.ஜ.க.விற்கு அப்படியில்லை. தமிழ்நாட்டில் வைகோ, விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் ஆகியோருக்கு வலை வீசி காத்திருக்கிறது. இலங்கை தமிழர் விஷயத்திலும், மீனவர்கள் விஷயத்திலும் காங்கிரஸை விட பா.ஜ.க. வித்தியாசமான கட்சி என்று பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக வைகோ இதை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார். ஆனால் இப்போது வெளிவந்துள்ள பா.ஜ.க.வின் அரசியல் தீர்மானத்தில் இது பற்றி இலங்கை அரசின் மீது கண்டனம் எதையும் தெரிவிக்கவில்லை.

இன்னும் சொல்லப்போனால் "இந்தியாவிற்கும், இலங்கைக்கும் நீண்ட கால நல்லுறவு இருந்தது. அது இந்த அரசால் இரு நாடுகளுக்கு இடையில் அவநம்பிக்கை ஏற்பட்டு விட்டது" என்று பா.ஜ.க.வின் தலைவர் ராஜ்நாத் சிங் தன் பேச்சிலேயே சுட்டிக்காட்டியுள்ளார். அதே போல் பா.ஜ.க.வின் தீர்மானத்தில், "இலங்கை படைகளால் தொந்திரவுகள் இருந்தால், தமிழக மீனவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்" என்று மட்டுமே கூறியிருக்கிறது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுகிறார்கள் போராட்டம் நடத்தும் பா.ஜ.க., தன்னுடைய அரசியல் தீர்மானத்திலேயே அது பற்றி கண்டனம் எதையும் தெரிவிக்கவில்லை. "ஏதேனும் தொந்திரவுகள் இருந்தால்" என்று கூறி, அந்த விவகாரத்தையே பிசுபிசுக்க வைத்துள்ளது.

இது மட்டுமல்ல. இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி பேசும் போது அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், "இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனை காக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தூதரக முயற்சிகள் தோற்று விட்டன" என்று இந்திய அரசைச் சாடுவதோடு நிறுத்திக் கொண்டு விட்டது. ஆகவே இதுமாதிரி சூழ்நிலையில் வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் போன்றோர் இலங்கை தமிழர் பிரச்சினையில் பா.ஜ.க. வித்தியாசமான கட்சி என்று எதை வைத்து பிரச்சாரம் செய்யப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகள் வேண்டும் என்பதற்காக தங்கள் கட்சியின் வெளியுறவுக் கொள்கையில் "தியாகம்" செய்யத் தயாராக இல்லை என்பதையே பா.ஜ.க. தலைவர்களின் பேச்சும், அரசியல் தீர்மானங்களும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

இந்திய பாராளுமன்றத் தேர்தல் இந்த முறை வித்தியாசமாக இருக்கிறது. காங்கிரஸின் மீது ஊழல் புகார்கள், மோசமான நிர்வாகம் போன்றவற்றை சுமத்தி அவர்களுக்கு விடை கொடுத்து விட பா.ஜ.க. முனைகிறது. அந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட "பா.ஜ.க. மதவாத கட்சி" என்ற பழைய பிரச்சாரத்தையே மீண்டும் தூக்கிப் பிடிக்கிறது காங்கிரஸ் கட்சி. இக்கட்சியின் தலைவர்களான சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ "ஆட்சியின் சாதனைகளை" முழு வீச்சில் கொண்டு போய்ச் சேர்த்து வாக்குக் கேட்க தயங்குவது போலவே தெரிகிறது. ஆனால் தங்களுடையை அடிப்படைக் கொள்கைகளை ஒதுக்கி வைத்து விட்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலைமை பா.ஜ.க.விற்கு ஐந்தாவது முறையாக நேர்ந்திருக்கிறது என்பது இந்தத் தேர்தலின் இன்னொரு தனிச்சிறப்பு.

நரேந்திரமோடிக்கு எதிராக ராகுல் பிரதமர் வேட்பாளர் என்றால் ஜெயிப்பது கடினம் என்பது காங்கிரஸ் கட்சிக்குப் புரிகிறது. அதே நேரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கை முன்னிறுத்தியும் ஜெயிக்க முடியாது என்பதை உணருகிறது. அதனால்தானோ என்னவோ கடந்த பத்தாண்டு சாதனைகளைக் கூட முழு வேகத்தில் பிரச்சாரம் செய்யாமல் அமைதி காக்கிறது காங்கிரஸ் கட்சி. இருந்த கூட்டணிகளை விலக்கி வைத்த காங்கிரஸ் இப்போது "மதசார்பற்ற இந்தியா" என்ற நோக்கில் கூட்டணிக் கட்சிகளுக்கு வலை விரிக்கிறது. பா.ஜ.க.வோ கூட்டணி கிடைக்காததால் "வளர்ச்சித் திட்டங்கள். ஊழல் ஒழிப்பு" என்ற நோக்கில் கட்சிகளை திரட்ட நினைக்கிறது. இருவருக்கும் இந்திய வாக்காளர்கள் என்ன மாதிரி பதிலைச் சொல்லப் போகிறார்கள் என்பதுதான் வரும் நாட்களில் தேர்தல் பிரச்சாரக் களத்தின் முக்கிய அம்சங்களாகத் திகழப் போகின்றன!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X