2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஜெனிவாவில் அமெரிக்காவை மடக்க இலங்கை வைத்துள்ள ஆயுதம்

A.P.Mathan   / 2014 ஜனவரி 23 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்
 
ஜெனிவாவில் மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25ஆவது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வருகின்றன.
 
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் இந்த தீர்மானத்துக்கு முக்கியமான காரணமே, போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
 
போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்பது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகினது கண்டிப்பான நிலைப்பாடாக உள்ளது.
 
நம்பகமான - சுதந்திரமான பொறுப்புக்கூறும் முயற்சிகளை உள்நாட்டிலேயே முன்னெடுக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த மேற்குலகம், இப்போது தமது கருத்துக்கு இலங்கை அரசாங்கம் மதிப்புக் கொடுக்கத் தயாராக இல்லை என்பதை மெல்ல மெல்ல உணர ஆரம்பித்துள்ளது.
 
மேற்குலகின் கருத்துகளைப் புறக்கணிப்பது என்பது இலங்கையின் கொள்கையல்ல, ஆனால், படையினருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இல்லை. அதாவது போரில் வெற்றியீட்டித் தந்த படையினரை நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது என்பதே அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளது.
 
அந்தக் கொள்கையை அரசாங்கம் உறுதியாக கடைப்பிடிக்க விரும்புவதால் தான், மேற்குலகுடன் விரோதப்போக்கை கடைப்பிடிக்க நேரிடுகிறது. அதனால் தான் மேற்குலகின் அழுத்தங்களுக்கும் உள்ளாகிறது.
 
சில நாட்களுக்கு முன்னர், கண்டியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய, மனிதஉரிமை விவகாரங்களுக்கான இலங்கை அரசின் முதன்மைப் பிரதிநிதியாக செயற்படும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜெனிவாவில் எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும், படையினரைக் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
 
தீவிரவாதத்துக்கு எதிரான போரில் ஈடுபட்ட படையினர் ஒருபோதும், தவறுகளை இழைக்கவில்லை என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
 
அண்மையில், இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஸ்டீபன் ராப், போர்க்குற்றங்கள் குறித்து கருத்து வெளியிட்ட போதும் சரி, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இங்கு வந்திருந்த போது தெரிவித்த கருத்துகளுக்கும் சரி அரசாங்கம் கூறிய பதில் ஒரே மாதிரியானது. முன்னே தீர்மானம் எடுத்து விட்டே இங்கு வந்துள்ளார்கள் என்பதே அது.
 
வெளிநாட்டுப் பிரதிநிதிகள் முன்னரே தீர்மானித்து விட்டே, களநிலைமைகளை ஆய்வு செய்ய வருவதாக, குற்றம்சாட்டுவதே அரசாங்கத்தின் வழக்கம். இது தனியே ஸ்டீபன் ராப்புக்கோ, நவநீதம்பிள்ளைக்கோ மட்டும் எதிரான குற்றச்சாட்டு அல்ல.
 
இலங்கையில் பயணம் மேற்கொண்ட பெரும்பாலான ஐ.நா பிரதிநிதிகளும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகப் பிரமுகர்களும் அரசாங்கத்தின் இந்தக் குற்றச்சாட்டில் இருந்து தப்ப முடியவில்லை.
 
ஆனால், அரசாங்கமும் படையினர் விவகாரத்தில் அதே முன் தீர்மானத்துடன் தான் செயற்படுகிறது. படையினர் தவறுகளை செய்யவில்லை, குற்றங்களில் ஈடுபடவில்லை, மீறல்களைப் புரியவில்லை என்றே அரசாங்கம் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது.
 
இதுவரை மீறல்கள் குறித்த ஆதாரங்கள் பல வெளியான போதிலும், அதனை முறைப்படி விசாரிப்பதற்குப் பதிலாக, அவற்றைப் போலி என்று முன் தீர்மானம் எடுத்து, ஓரம்கட்டி விடும் வழக்கமும் அரசாங்கத்திடம் உள்ளது.
 
எடுத்த எடுப்பிலேயே, ஒரு குற்றச்சாட்டை நிராகரிப்பதும், ஆதாரங்களைப் போலியென்று தூக்கியெறிவதும், இந்த அரசாங்கம் நியாயமான உள்ளக விசாரணைகளில் ஈடுபடுமா என்ற  சந்தேகம் ஏற்படக் காரணமாயிற்று.
 
சனல்4 வெளியிட்ட போர்க்குற்ற மீறல் வீடியோக்களைப் போலியானது என்று கூறிய அரசாங்கம், அதனை எந்த வகையில் போலியானது என்று தொழில்நுட்ப ரீதியாக நிரூபிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
 
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணை நீதிமன்றம், முதற்கட்டமாக, பொதுமக்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியதான குற்றச்சாட்டு பொய் என்று ஓர் அறிக்கையை முன்வைத்தது.
 
அடுத்து சனல் 4 ஆவணப்படம் குறித்து விசாரணை நடத்துவதாகவும், கூறியது. ஆனால், பல மாதங்களாகியும், சனல் 4 ஆவணப்படத்தின் உண்மைத் தன்மை குறித்த இராணுவ விசாரணை நீதிமன்றத்தின் இறுதி அறிக்கை இன்னமும் கையளிக்கப்படவில்லை.
 
அந்த விசாரணை நடத்தப்பட்டதா - நடத்தப்படுகிறதா அல்லது கைவிடப்பட்டு விட்டதா என்று எதுவுமே தெரியாது. எந்தக் குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதிலேயே அரசாங்கம் இதுவரை கவனம் செலுத்தி வந்துள்ளது.
 
இப்போது அரசாங்கத்தின் போக்கில் புதிய மாற்றம் ஒன்றை அவதானிக்க முடிகிறது. குற்றச்சாட்டுகளை சுமத்தினால், அதுகுறித்த குறுக்கு விசாரணைகளுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.
 
நீதி அமைச்சர் என்ற வகையில், அவரது இந்தக் கருத்து முக்கியமானது.
 
போர்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் போது, அதுதொடர்பான சாட்சிகளையும் முன்வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார். அரசதரப்பிடம் சாட்சிகளைக் கேட்கின்ற போக்கு அதிகரித்து வருவதைக் காணலாம்.
 
அண்மையில் ஸ்டீபன் ராப் புதுக்குடியிருப்புக்குச் சென்றிருந்த போது, சென். அந்தனிஸ் மைதானத்தை, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படையினரின் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என்று குறிப்பிட்டு டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது அமெரிக்கத் தூதரகம்.
 
அதை நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும் அது பயனளிக்கவில்லை.
 
அத்தகைய சம்பவம் தொடர்பாக சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக கூறி, அரசாங்கத்தின் கோரிக்கையை நிராகரித்து விட்டது அமெரிக்கா.
 
உடனடியாகவே, அந்த சாட்சிகளை வெளிப்படுத்துமாறு கோரியிருந்தார் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ. ஆனால் அதற்கு அமெரிக்கத் தூதரகம் மறுத்து விட்டது.
 
அமைச்சர் ஹக்கீமின் கருத்தும், கிட்டத்தட்ட சாட்சிகளை முன்னிறுத்தி விசாரிக்க கோரும் வகையில் தான் இருந்தது. ஆக, அடுத்த ஜெனிவா கூட்டத்தொடரில், தனக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் ஓர் ஆயுதமாக அரசாங்கம், சாட்சிகளைக் கோரும் இந்த உத்தியைக் கையாளலாம் என்று தெரிகிறது.
 
இலங்கையில் சண்டைக்காரனை விட சாட்சிக்காரனுக்குத் தான் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
 
அதாவது, அரசாங்கத்துடன் மோதிய விடுதலைப் புலிகள் கூட குறிப்பிட்ட கால சிறைவாசம், புனர்வாழ்வுடன் வெளியே வர முடிந்துள்ளது. ஆனால், அவர்களுக்கு உதவியவர்களும், பல சம்பவங்களுக்கு சாட்சியாக இருந்தவர்களாலும் அவ்வாறு வெளியே வர முடியவில்லை.
 
மீறல்களுக்கு சாட்சியாக இருப்பவர்களால், நிம்மதியாக இருக்கவும் முடியவில்லை.
 
அதனால் தான், ஐ.நா நிபுணர் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை 2031ஆம் ஆண்டு வரை பகிரங்கப்படுத்தக் கூடாது என்று, அந்த நிபுணர் குழுவே ஐ.நா பொதுச்செயலருக்கு பரிந்துரைத்தது.
 
ஐ.நா அவ்வாறு தடுத்து விட்டதால், மீறல்கள் குறித்து சாட்சிகளிடம் விசாரிக்க முடியாமல் போய் விட்டதாக, அரசாங்கம் பல முறை கூறியதுண்டு.
 
ஆனால், போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் பல படங்கள், வீடியோக்கள் வெளியான போதிலும், அவற்றிலுள்ள படையினர் யார் என்ற விசாரணைகளை அரசாங்கம் மேற்கொண்டதாக எந்த தகவலும் இல்லை.
 
அத்தகைய சம்பவங்கள் குறித்து அரசாங்கம் விசாரிக்க முனைந்திருந்தால், தேவையான சாட்சிகள் கிடைத்திருக்கலாம்.
 
ஆனால், படையினரை குற்றக்கூண்டில் நிறுத்தக் கூடாது என்ற ஒரே முடிவுடன் இருந்து கொண்டு, அரசாங்கத்தினால் எந்த வகையிலும் சாட்சிகளையோ, ஆதாரங்களையோ கண்டுபிடிக்க முடியாது. குற்றங்களை மறைக்கத் தான் முடியும்.
 
அதேவேளை, சாட்சிகளை காரணம் காட்டி ஜெனிவாவில் போர்க்குற்ற விசாரணை அழுத்தங்களில் இருந்து தப்பிக்கும் அரசாங்கத்தின் திட்டம் எந்தளவுக்கு வெற்றிபெறும் என்று கூற முடியாது.
 
சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டம் இலங்கையில் இன்னும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படாத நிலையில், அரசாங்கத்துக்கு அல்லது படையினருக்கு எதிரான எத்தகைய குற்றங்களுக்கும் சாட்சிகளை தேட முடியாது.
 
அந்தளவுக்கு சாட்சிகளுக்கு பாதுகாப்பற்ற நாடாக இலங்கை உள்ளது.
 
சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தி விட்டு, அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க விட்டு, சாட்சிகளைக் கேட்டால் மட்டுமே, சர்வதேச சமூகம் அதற்கு சாதகமான பதிலைக் கொடுக்கும்.
 
தன்னிடமுள்ள சாட்சிகளை வெளிப்படுத்தும் துணிச்சல் அதற்கு வரும்.

You May Also Like

  Comments - 0

  • SAaDU Friday, 24 January 2014 05:25 PM

    இராணுவம் அல்ல இராணுவத்திற்கு உத்தரவு வழங்குகிறவர்களுக்கு...

    Reply : 0       0

    SAaDU Monday, 27 January 2014 08:43 PM

    எல்லாம் பொய்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X