2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவில் நிலையான அரசு அமைய வேண்டும்: பிரணாப் முகர்ஜி

A.P.Mathan   / 2014 ஜனவரி 27 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உரை ஏறக்குறைய வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலின் போது இந்திய வாக்காளர்கள் எப்படிப்பட்ட அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை "மறைமுகமாக" சொல்லும் உரையாக அமைந்திருக்கிறது. இந்தியாவின் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றிப் பேசிய பிரணாப் முகர்ஜி, சில முக்கிய விஷயங்களை கோடிட்டுக் காட்டினார். அதில் முதன்மையானது "நிலையான அரசு அமைய வேண்டும்" என்பதுதான். ஏன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதில் பல பின்னணிகள் உள்ளன. இந்தியாவில் 1989க்குப் பிறகு 25 வருடங்களாக கூட்டணி அரசுகள்தான் மத்தியில் ஆண்டு வருகின்றன. 1989இல் தேசிய கட்சியான பா.ஜ.க.வும், இடதுசாரி கட்சிகளும் சேர்ந்து ஆதரித்து வி.பி.சிங் தலைமையிலான காங்கிரஸ் அல்லாத அரசை உருவாக்கினார்கள். ஆனால் அந்த அரசு "மண்டல் கமிஷன்" "ராமர் கோயில் கட்டும் பிரச்சினை" என்பதில் சிக்கி கவிழ்ந்தது. அது இரு வருடங்கள் கூட நீடிக்கவில்லை. அதன் பிறகு 1991இல் கூட்டணி கட்சிகளின் தயவுடன்தான் மறைந்த நரசிம்மராவ் பிரதமராக இருக்க முடிந்தது. காங்கிரஸ் கட்சி ஆட்சியான அது ஐந்து ஆண்டுகள் கடந்தது. ஆனால் எண்ணற்ற அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் அப்போதும் தலையெடுக்க ஆரம்பித்தன. "பொருளாதார மயத்திற்கு" வித்திட்டவர் நரசிம்மராவ் என்றாலும், "ஊழல் புகார்கள் அதிகம் மத்தியில் கிளம்பியதும்" இவருடைய காலத்தில்தான். அது மட்டுமின்றி இந்தியா எதிர்நோக்கியிருந்த பெரும் பிரச்சினையான ராமர் கோயில் கட்டும் விவகாரம் பெரிய அளவில் எழுந்து, அதனால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் அவருடைய ஆட்சி காலத்தில்தான்!
 
அதன் பிறகு 1996இல் வாஜ்பாய் பிரதமரானார். அவர் 13 நாளில் பதவி விலகினார். பிறகு 1998 பெப்ரவரிக்குள் தேவகவுடா, ஐ.கே. குஜ்ரால் என்று இரு பிரதமர்கள் பதவியேற்று பதவி விலகினார்கள். இதற்கு பிறகு வந்த வாஜ்பாய் அரசு கூட ஒரு வருடத்தில் பதவியை விட்டுப் போக நேர்ந்தது. அக்கட்சிக்கு ஆதரவளித்து வந்த அ.தி.மு.க. போன்ற கட்சிகள் வாபஸ் பெற்றதால், பிரதமர் வாஜ்பாய் மீண்டும் தேர்தலை சந்தித்தார். 1999இல் மூன்றாவது முறையாக பிரதமரான வாஜ்பாய் மட்டும் ஏறக்குறைய முழு காலத்தை ஆட்சி செய்தார். அடுத்த படியாக வந்த பிரதமர் மன்மோகன்சிங் இப்போது பத்து ஆண்டு காலம் ஆட்சி செய்து விட்டார். இதுவும் கூட்டணி அரசுதான். கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தங்களில் சிக்கியதால் பிரதமர் மன்மோகன்சிங்கால் சுதந்திரமாக ஆட்சி செய்ய முடியவில்லை என்ற கருத்து நிலவுகிறது. அதனால் கூட்டணிக் கட்சிகளின் தயவு இன்றி தேசிய கட்சிகளில் இரண்டில் ஒன்றிற்கு (பா.ஜ.க. அல்லது காங்கிரஸ்) நிலைத்த ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது பிரணாப் முகர்ஜியின் விருப்பம். அதைத்தான் தன் குடியரசு தின விழா உரையில் மறைமுகமாக சுட்டிக்காட்யிருக்கிறார். "நிலையான ஆட்சி அமைய வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
 
நிலையான ஆட்சி அமைய வழி விடுவதில் குடியரசுத் தலைவருக்கு இந்திய அரசியல் சட்டப்படி அதிகாரம் இருக்கிறது. அதனால்தான் ஒரு கட்டத்தில் குடியரசுத் தலைவர்களாக இருந்தவர்கள் "இருக்கின்ற கட்சியில் எந்தக் கட்சிக்கு அதிக எம்.பி.க்கள் இருக்கிறதோ" (அது மெஜாரிட்டிக்குத் தேவையான 272 எம்.பி.க்கள் இல்லையென்றாலும் சரி) அவர்களை ஆட்சியமைக்க அழைப்பது என்ற மரபைக் கொண்டிருந்தார்கள். முதன் முதலில் வாஜ்பாயை இப்படித்தான் ஆட்சி அமைக்க அன்றைய குடியரசுத் தலைவர் அழைத்தார். அதனால் "நிலைத்த ஆட்சி அமையவில்லை" என்று புரிந்து கொண்டார்கள்.  பிறகு "அதிக எம்.பி.க்கள் இருந்தால் மட்டும் போதாது. அந்தக் கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கு போதுமான தனி மெஜாரிட்டி இருக்க வேண்டும். அதற்குரிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்" என்று முடிவு செய்தார்கள். அந்த பரிசோதனையும் இப்போது சரிவரவில்லை. ஆட்சி அமைக்க ஒப்புதல் அளித்து விட்டு பிறகு அந்தக் கூட்டணிக் கட்சிகள் எல்லாம் ஆளுக்கு ஒரு நிர்ப்பந்தத்தை உருவாக்குகிறார்கள். இதனால் "ஆட்சி நிலைத்து இருக்கிறது. ஆனால் நிர்வாகம் கெட்டுப் போய் விடுகிறது". இப்போது பிரதமராக இருக்கும் மன்மோகன்சிங்கிற்கு இதுதான் பிரச்சினை. ஆகவே இனி வரும் காலங்களில் குடியரசு தலைவர் "அதிக எம்.பி.க்களுடன் தனி மெஜாரிட்டிக்கு தேவையான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு மட்டும் முக்கியமல்ல. அந்தக் கட்சிகளுக்குள் ஒரு புரிந்து கொள்ளப்பட்ட செயல்திட்டம் வகுத்துக் கொள்ள வேண்டும். அதையும் ஆட்சி அமைக்கக் கோரும் கடிதத்துடன் குடியரசுத் தலைவரிடம் கொடுக்க வேண்டும்" என்ற ஒரு சூழ்நிலை வந்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதனால்தானோ என்னவோ இந்த குடியரசுத் தலைவர் உரையில் வரப்போகும் தேர்தலில் நிலைத்த ஆட்சி அமைய வேண்டும் என்ற கவலை தெரிகிறது.
 
இது தவிர அரசியல் கட்சிகளுக்கும் "அட்வைஸ்" பண்ணியிருக்கிறார். சமீபத்தில் டெல்லியில் அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடத்திய போராட்டத்தையும் கண்டித்துள்ளார். "மக்கள் வாக்களித்திருப்பது அரசியல் சாசனம் அங்கிகரித்துள்ள நிறுவனங்களுடன் மோதுவதற்கு அல்ல" என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார். இதற்கு முன்பு மாநில முதல்வர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்டம் சற்று வித்தியாசமானது. "பொலிஸ் காவலர்கள் லீவு போட்டு விட்டு தன் போராட்டத்தில் வந்து பங்கேற்க வேண்டும்" என்ற ரீதியில் போராடினார். இதன் மூலம் அவர் பதவியேற்கும் போது அரசியல் சட்டப்படி எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்தையும் மீறினார். அதையெல்லாம் மனதில் வைத்துத்தான் அரவிந்த் கெஜ்ரிவாலை சாடினார் குடியரசுத் தலைவர். அவர் அவரை முன்னிறுத்திய காங்கிரஸ் கட்சியையும் விடவில்லை. 
 
"செயல்படவில்லை என்றால் மக்கள் புறக்கணித்து விடுவார்கள். அதுதான் தேர்தல்" என்ற ரீதியில் சுட்டிக்காட்டினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் பிரச்சினையைத் தீர்க்க போராடவில்லை என்ற ரீதியில் வெளியான அவரது பேச்சு காங்கிரஸ் தரப்பினருக்கே சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும். பா.ஜ.க.விற்கும் பாடம் சொல்லிக் கொடுத்துள்ளார் குடியரசுத் தலைவர். "மதவாத சக்திகளும், தீவிரவாதிகளும் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைப்பதில் வெல்ல முடியாது" என்று எச்சரித்திருக்கிறார். அது மட்டுமின்றி, "மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி எடுபடாது" என்றும் வார்னிங் கொடுத்துள்ளார். இந்த விஷயத்தில் முக்கிய அரசியல் கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் இரண்டிற்குமே பாடம் எடுத்துள்ளார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி என்றுதான் சொல்ல வேண்டும்.
 
இது தேர்தல் நேரம். பாராளுமன்றத் தேர்தல் நடக்கப் போகிறது. இது போன்ற காலகட்டத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசப் போகிறார்கள். அதை நிறைவேற்ற முடியுமா அல்லது முடியாதா என்பது வேறு விஷயம். கண்டபடி வாக்குறுதிகளைக் கொடுத்து விடுவோம் என்று அனைத்துக் கட்சிகளுமே இனி தேர்தல் சந்தையில் படையெடுக்கும். ஏற்கனவே "இலசவ டி.வி" இலவச லேப்டாப்" "இலவச மிக்ஸி கிரைண்டர்" என்றெல்லாம் போய் விட்டது. இப்போது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கூட இலவச மொபைல் போன் கொடுக்கப் போகிறது என்ற செய்தியும் அடிபடுகிறது. சமீபத்தில் இந்திய சுப்ரீம் கோர்ட்டே இலவசங்கள் அடங்கிய வாக்குறுதிகள் அளிப்பது பற்றி தேர்தல் கமிஷன் அரசியல் கட்சிகளை கலந்து ஆலோசித்து ஒரு "மாதிரி நடத்தை விதிகள்" கொண்டு வர வேண்டும் என்று கூறியிருக்கிறது. அதையொட்டி தேர்தல் கமிஷனும் அரசியல் கட்சிகளை அழைத்துப் பேசியிருக்கிறது. அது பற்றியும் குடியரசுத் தலைவர் பேசி, "பொய் வாக்குறுதிகளை, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் கொடுக்கக் கூடாது" என்று அட்வைஸ் பண்ணியிருக்கிறார். "இலவசம்" ஒரு புறமிருக்க, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுக்காதீர்கள் என்பதுதான் குடியரசுத் தலைவரின் முக்கிய கோரிக்கை.
 
தேர்தல் நடந்து முடிந்தவுடன் அடுத்த அரசு அமைவதில் குடியரசுத் தலைவரின் பங்கு மிக முக்கியமானது. "எந்தக் கட்சியின் ஆட்சி நிலைத்து நிற்கும்" என்பதை முடிவு பண்ணும் உயரிய அதிகாரம் அவரிடம்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தின் படி அளிக்கப்பட்டிருக்கும் இந்த அளப்பறிய அதிகாரத்தை செயல்படுத்தும் முன்பு அவர் அரசியல் கட்சிகளுக்கும், வாக்காளர்களுக்கும் இந்த குடியரசு தின விழாவில் அரிய ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். அதை அரசியல் கட்சிகள் ஏற்று நடக்குமா, வாக்களிக்கப் போகும் வாக்களார்கள் எந்த அளவிற்கு குடியரசுத் தலைவரின் உரையைக் கேட்டு மதித்து நடக்கப் போகிறார்கள் என்பதை வைத்தே அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமையும்!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X