2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தி.மு.க.விற்கு கை கொடுக்கும் அ.தி.மு.க. வியூகம்?

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 05 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் விஜயகாந்த் மாநாடு எதிர்பார்த்தபடி அமைதியாக முடிந்து விட்டது. "அங்கே கூட்டணி முடிவை அறிவித்து விடுவார்" என்று நினைத்து கடந்த ஒரு மாதமாக பத்திரிகைகள், அரசியல் பார்வையாளர்கள் நடத்திய "வாக்குவாதப் போர்" முடிவுக்கு வந்திருக்கிறது. "கூட்டணி பற்றி முடிவு எடுக்க இன்னும் நேரம் இருக்கிறது" என்பது போல் அமைந்து விட்டது சென்னையிலிருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள உளுந்தூர் பேட்டையில் நடைபெற்ற தே.மு.தி.க.வின் "ஊழல் எதிர்ப்பு மாநாடு"! இக்கூட்டத்தில் அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அ.தி.மு.க.வை கடுமையாக சாடினார்கள். அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, வெங்கடேசன் போன்றோர் தமிழக காவல்துறையை சகட்டுமேணிக்கு விமர்சித்துத் தள்ளினார்கள். தே.மு.தி.க. மாநாடு நடைபெறுவதற்கு அனுமதி வழங்கும் விவகாரம், தே.மு.தி.க.வினர் வழி நெடுகிலும் வைத்த கட் அவுட்கள், பேனர்கள் போன்றவற்றிற்கு நெருக்கடி கொடுத்த விவகாரம் என்று பல விஷயங்கள் அவர்களின் தாக்குதலில் முன்னணி பெற்றுத் திகழ்ந்தது.

இரண்டாம் கட்டத் தலைவர்களில் முக்கியமாக பிரேமலதா பேசும் போது "தே.மு.தி.க.வை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அழிக்கப் பார்கிகறது" என்று குற்றம் சாட்டினார். "அ.தி.மு.க. விற்கு பெங்களூரில் சொத்துக் குவிப்பு வழக்கு என்றால் தி.மு.க.விற்கு டெல்லியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு" என்றார். "அடுத்து வரும் தேர்தலில் நல்ல பிரதமரை தேர்வு செய்வோம்" என்று கூறி அவரும் யாருடன் தே.மு.தி.க. கூட்டணி வைக்கப் போகிறது என்பது பற்றியை தெளிவை ஏற்படுத்தாமல் தன் பேச்சை முடித்துக் கொண்டார். ஆனால் அவர் "ஒன்றுபடுவோம். ஊழலை ஒழிப்போம்" என்று மாநாட்டில் அமர்ந்திருந்த லட்சக்கணக்கான தொண்டர்களை உறுதிமொழி எடுத்துக் கொள்ள வைத்தார். அது மாநாட்டை "கேப்டன்" விஜயகாந்த் சிறப்புரையாற்றும் வரை விறுவிறுப்பாக வைத்துக் கொள்ள உதவியது.

இறுதியில் விஜயகாந்த் உரையாற்றினார். இடையில் ஒரு சில முறை சிலர் செய்த குழப்பத்தால் பேச்சு பாதியில் நின்றது. ஆனால் அவர் அளவுக்கு அதிகமாகவே பொலிஸார் மீது ஆவேசமாக இருந்தது தெரிந்தது. "இனி என் வாழ்நாளில் நான் பொலிஸ் வேடத்தில் நடிக்க மாட்டேன். என் மகனையும் நடிக்க வைக்க மாட்டேன்" என்று சபதம் எடுத்து, தமிழக பொலிஸுக்கும்- தே.மு.தி.க.விற்கும் இடையே உள்ள மோதலை பிரகடனப்படுத்தினார். ஆனால் மாநாட்டிற்கு உரிய நேரத்தில் அனுமதி கொடுக்கவில்லை என்ற நோக்கில் அவரது கோபம் எல்லாம் மாநாடு நடைபெற்ற விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. மனோகரன் மீதுதான் கொப்பளித்தது. எம்.எல்.ஏ. பார்த்தசாரதி போல் தமிழக காவல்துறை தலைவர் ராமானுஜத்தை சாடவில்லை. விஜயகாந்த் பேசும் போது, "எதிரிகளை மன்னிக்கலாம், ஆனால் துரோகிகளை மன்னிக்கமாட்டோம்" என்றார். இது தி.மு.க.விற்கு ஆதரவாகவும், அ.தி.மு.க.வுக்கு எதிராகவும் விடுக்கப்பட்ட செய்தியாக மாநாட்டில் கலந்து கொண்ட முன்னணித் தலைவர்கள் கருதுகின்றனர். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி இந்த அடிப்படையில்தான் இருக்கும் என்பது அவர்களின் எண்ணம்.

அது மட்டுமின்றி விஜயகாந்தின் மாநாட்டிற்கு மூன்று கட்சிகள் வாழ்த்துத் தெரிவித்தன. விஜயகாந்த் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று அ.தி.மு.க. தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பிய அழைப்பிதழுக்கு பதில்தான் அது. வாழ்த்துத் தெரிவித்ததில் முதல் கட்சி பாரதீய ஜனதா கட்சி. அடுத்தது வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். மூன்றாவது கட்சி காங்கிரஸ் கட்சி. மூன்று கட்சிகளின் தலைவர்களான பொன். ராதாகிருஷ்ணன், (பா.ஜ.க.) வைகோ (ம.தி.மு.க.) ஞானதேசிகன் (தமிழக காங்கிரஸ் தலைவர்) மாநாடு சிறக்க வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்கள். அது மேடையிலேயே வாசித்துக் காட்டப்பட்டது. ஆனால் விஜயகாந்த் அனைத்துக் கட்சிகளுக்குமே அழைப்பிதழ் அனுப்பியிருக்கும் போது அந்த மேடையில் கூட்டணி முடிவை அறிவிக்க மாட்டார் என்ற சூழ்நிலையில் இந்த தலைவர்கள் அவசரப்பட்டு வாழ்த்துச் சொன்னதை அவரவர் கட்சியினரே சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். ஆனால் "தே.மு.தி.க. வந்தால் மகிழ்ச்சி" என்று அறிவித்த பிறகும் கூட தி.மு.க. மட்டும்தான் இந்த அழைப்பை ஏற்று மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பவில்லை. "கூட்டணி என்பது முடிவாகும் வரை இன்னொரு கட்சியின் மாநாட்டிற்கு அதுவும் தேர்தல் நேரத்தில் வாழ்த்துச் செய்தி அனுப்புவது முறையாகாது" என்பதுதான் தி.மு.க. முன்னணித் தலைவர் ஒருவரின் கருத்து.

"எதிரிகள், துரோகிகள்" என்ற வியூகத்தை கூட்டணிக்காக வகுத்து மாநாட்டில் அறிவித்து விட்டு விஜயகாந்த் பேசும் போது, அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகள் மீது சகட்டு மேணிக்குப் பாய்ந்தார். முன்பு வாஜ்பாய் ஆட்சி அமைத்த போது, அவருக்கு நிலையான ஆதரவை அ.தி.மு.க. கொடுக்கவில்லை என்பதால் வாஜ்பாய் நிம்மதி இழந்த விஷயத்தை காட்டமான வார்த்தைகளால் கண்டனம் செய்தார். ஆனால் தி.மு.க. பற்றி ஒரு வார்த்தை கூட விமர்சிக்கவில்லை. அனேகமாக அவர் கட்சி ஆரம்பித்த பிறகு நடைபெற்ற பல மாநாடுகளில் தி.மு.க.வை விஜயகாந்த் நேரடியாக விமர்சிக்காத மாநாடு இதுதான் என்று சொல்லலாம். "அ.தி.மு.க. மீது அட்டாக். தி.மு.க. மீது மவுனம்" என்ற நிலைப்பாட்டிற்கு மாநாட்டில் அமர்ந்திருந்த தொண்டர்களை தன் பேச்சால் வசீகரப்படுத்திய விஜயகாந்த், இறுதியில் "கூட்டணி வேண்டுமா அல்லது வேண்டாமா" என்ற கேள்வியை மாநாட்டு தொண்டர்களைப் பார்த்து கேட்க அவர்கள் "வேண்டாம்" என்று உரக்கக் குரல் எழுப்பினார்கள். "தனித்துப் போட்டியிட வேண்டுமா" என்று கேள்வி கேட்க, "ஆம்" என்று குரல் எழுப்பினார்கள். அதை பத்திரிகையாளர்களிடம் காட்டிய விஜயகாந்த், "பாருங்கள். என் தொண்டர்கள் கூட்டணியே வேண்டாம் என்கிறார்கள். தனித்துப் போட்டியிடுவோம் என்கிறார்கள்" என்றார். ஆனால் "என்னையும், கலைஞரையும் திட்டியதற்காக விஜயபாஸ்கர் என்ற ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறது அ.தி.மு.க." என்று தன்னுடன் தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் சேர்த்துக் கொண்டு பேசியிருக்கிறார்.

"எதிரிகள், துரோகிகள்" வியூகத்திற்கு வலுவூட்ட "தனித்துப் போட்டி" என்ற ஆயுதத்தை முன் வைத்துள்ளார் விஜயகாந்த். அவரைப் பொறுத்தமட்டில் அ.தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலின் இலக்கு என்பதை அவர் மட்டுமல்ல, பிரேமலதா, அக்கட்சியின் முன்னணி எம்.எல்.ஏ.க்கள் எல்லாமே கோடிட்டுக் காட்டிப் பேசினார்கள். விஜயகாந்த் முன்பு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு இருக்கும் ஆப்ஷன் மூன்று. ஒன்று தனித்துப் போட்டி. அது அவர் கட்சியினரை உற்சாகப்படுத்தும் விதத்தில் இருக்காது. 7 எம்.எல்.ஏ.க்கள் விலகி விட்ட நேரத்தில், பன்ருட்டி ராமச்சந்திரன் ராஜினாமா செய்து விட்டு தமிழக அரசின் அண்ணா விருது பெற்று விட்ட நேரத்தில் இது போன்று "தனித்துப் போட்டி" என்ற விஷப்பரீட்சைக்கு விஜயகாந்த் தயாராக மாட்டார் என்பதே அவரது கட்சியினரின் கருத்தாக இருக்கிறது. அடுத்த ஆப்ஷன் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது. அதற்கும் அவர் இஷ்டப்படுவதாகத் தெரியவில்லை. ஏனென்றால் உளுந்தூர்பேட்டை மாநாட்டிலேயே "சாதியையும், மதத்தையும் வைத்து அரசியல் பண்ணக் கூடாது. அந்த சாதிக்கும், மதத்திற்கும் அது மாதிரி அரசியல் பண்ணுவோர் என்ன செய்தீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார். மாநாட்டிற்கு வாழ்த்துச் சொன்ன பா.ஜ.க.வையே "மதத்தை வைத்து அரசியல் பண்ணக்கூடாது" என்று கூறியிருப்பது விஜயகாந்தின் மனச்சாட்சிக்கு ஆதாரம் என்கிறார்கள். அதனால்தான் "ஊழல் எதிர்ப்பு" மாநாட்டின் முக்கியக் கோஷமாக இருந்தாலும், அது காங்கிரஸ் அரசின் ஊழல் எதிர்ப்பு என்று விஜயகாந்த் கூறவில்லை. மாறாக அ.தி.மு.க.வை மையப்படுத்தி "ஊழல் எதிர்ப்பு" என்று மாநாட்டில் முன்னிலைப்படுத்தியிருக்கிறார்.

மூன்றாவது ஆப்ஷன் தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பது. இந்த ஆப்ஷன்தான் நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி.க்கள் கிடைக்கப் பயன்படும் என்று நினைக்கிறார் விஜயகாந்த். ஏன் அவர் கூட்டணி பற்றிப் பேச அமைத்த தே.மு.தி.க.வின் கமிட்டியில் உள்ளவர்களே மெஜாரிட்டியாக அந்த கருத்தில் இருக்கிறார்கள். ஆனால் "என் தொண்டர்கள் கூட்டணி வேண்டாம் என்கிறார்கள். பா.ஜ.க. எனக்கு தூது விடுகிறது. காங்கிரஸ் வாழ்த்துச் சொல்கிறது. ஏன் வைகோவே என் மாநாட்டிற்கு வாழ்த்துச் சொல்லுகிறார். இதையெல்லாம் சமாளித்து நான் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் எனக்கு உரிய தொகுதிகளைக் கொடுங்கள்" என்பதுதான் விஜயகாந்த் வைக்கும் மறைமுகக் கோரிக்கை. தொகுதிப் பங்கீட்டில் தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தவே அவர் "தனித்துப் போட்டி" என்பதை மாநாட்டில் அதிமுக்கியக் குரலாக எழுப்ப வைத்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் "தொண்டர்கள் இப்படிச் சொன்னாலும், பிறகு தலைவர் எடுக்கும் முடிவை தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள்" என்றும் பீடிகை போட்டு மாநாட்டை முடித்து வைத்துள்ளார்.

விஜயகாந்திற்கு இப்போது "கூட்டணி வேண்டாம்" என்ற சிந்தனை இல்லை. அதுவும் தி.மு.க.வுடன் போகவே கூடாது என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. ஆனால் அவர் நினைப்பது ஒன்றே ஒன்றுதான். தனது திருமண மண்டபத்தை இடித்ததை சமாளித்து தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டுமென்றால், அதற்குரிய தொகுதிகளை தி.மு.க. தர வேண்டும் என்பதுதான். தி.மு.க. மீது "ராஜீவ் கொலைப் பழி" சுமத்திய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி மறைந்த மூப்பனார் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். அவர் 1996இல் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தார். ஆனால் அவருக்கு அன்று கொடுக்கப்பட்ட 20 நாடாளுமன்றத் தொகுதிகளும், 40 சட்டமன்றத் தொகுதிகளும் அதை மறைத்தது. அதேபோல் 19 மாதம் பொடா சிறையில் தன்னை அடைத்த கட்சியான அ.தி.மு.க.வுடன் வைகோ 2006 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்தார். அப்போது அ.தி.மு.க. அவருக்கு அளித்த 35 சட்டமன்ற தொகுதிகள் அந்த விமர்சனத்தை சமாளித்தது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துப் பிரசாரம் செய்து வந்த விஜயகாந்த் 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தார். அதற்கு அவரது கல்யாண மண்டபத்தை தி.மு.க. ஆட்சியில் இடித்ததும், விஜயகாந்திற்கு அ.தி.மு.க. அளித்த 41 தொகுதிகளும் அந்தக் கூட்டணிக்கு இமேஜைப் பெற்றுத் தந்தது. அதே மாதிரிதான் இப்போது தி.மு.க.விடமிருந்து அதிக நாடாளுமன்ற சீட்டுகளை எதிர்பார்க்கிறார் விஜயகாந்த். அப்படியொரு எண்ணிக்கையை தி.மு.க. கொடுக்க முன் வந்தால், தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க விஜயகாந்த் தயங்க மாட்டார். இதுதான் மாநாட்டில் விஜயகாந்த் பேசிய பேச்சிலிருந்து வெளிவந்துள்ள அரசியல் மர்மங்கள்!

விஜயகாந்த் இப்படியொரு எதிர்பார்ப்புடன் மாநாட்டை முடித்துள்ள சூழ்நிலையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமோ வேறு மாதிரி வியூகத்தை வகுத்துள்ளது. வருகின்ற தேர்தலில் ஏதாவது ஒரு காலகட்டத்தில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி வந்து விடும் என்ற பிரசாரம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் விஜயகாந்த் மாநாடு நடக்கும் போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஏ.பி. பரதன் உள்ளிட்டோரை அழைத்துப் பேசி அக்கட்சியுடனான கூட்டணி முடிவை அறிவித்தார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா. அதைபோல் மாநாடு முடிந்த மறுதினம் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் பிரகாஷ் காரத்தை அழைத்துப் பேசி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி என்று அறிவித்துள்ளார் ஜெயலலிதா. இரு கம்யூனிஸ்டுகளுடன் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கிறது என்பதை பிரகடனப்படுத்தியுள்ளது விஜயகாந்தின் "தொகுதிப் பேரத்திற்கு" சற்று சிக்கலை ஏற்படுத்தும். தி.மு.க.வின் முதல் கவலை விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. அ.தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி வைத்து விடக் கூடாது என்பதுதான். "அது இல்லை" என்பதை மாநாட்டில் அறிவித்து விட்டார் விஜயகாந்த். இரண்டாவது கவலை அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி சேர்ந்து விடக் கூடாது என்பதுதான். "அதுவும் இல்லை" என்று நிலைமை தெளிவாகி விட்டது. இந்நிலையில் "தே.மு.தி.க. விரும்பினால் தி.மு.க.விற்கு வரட்டும். இல்லையென்றால் பா.ஜ.க.வுடன் போகட்டும்" என்ற எண்ணவோட்டத்திற்கு தி.மு.க. தலைமை வந்து விட்டது போல் தெரிகிறது. அதனால்தான் "யார் வந்தாலும் வராவிட்டாலும் மக்களுடன் கூட்டணி அமைத்து தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும்" என்று தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஒரு திருமண விழாவில் பேசியிருக்கிறார். அது மட்டுமல்ல, "தி.மு.க.வின் அழைப்பினை தே.மு.தி.க. ஏற்காமல் போனால் அதற்கு நான் பொறுப்பல்ல" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியும் கூறியிருக்கிறார். இன்றைய தேதியில் விஜயகாந்தின் "அதிக தொகுதி பெறும்" பேரத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி செக் வைக்கிறாரோ இல்லையோ, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா செக் வைத்து விட்டார்! கம்யூனிஸ்டுகளுடனான அ.தி.மு.க.வின் கூட்டணி வியூகம் தி.மு.க.விற்கு கை கொடுத்திருக்கிறது!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X