2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அமெரிக்க செனெட் : இலங்கைக்குப் புதிய தலைவலி

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 12 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்
 
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வர அமெரிக்கா தயாராகி வரும் நிலையில், அமெரிக்க செனெட் சபையில் பொறுப்புக் கூறுவதற்கான சர்வதேசப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வலியுறுத்தி, மற்றுமொரு தீர்மான வரைவு முன்வைக்கப்பட்டுள்ளது.
 
குடியரசுக் கட்சியின் வடகரோலினா செனெட்டர் றிச்சர்ட் புர், ஜனநாயக கட்சியின் றொபேட் கசேயுடன் இணைந்து இந்த தீர்மான வரைவை சமர்ப்பித்துள்ளார். இதற்கு மேலும் நான்கு செனெட்டர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
இலங்கையில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு தேவையான, உள்நாட்டு மீள்கட்டமைப்பு, மீள்குடியமர்வு, நல்லிணக்கத்துக்கான ஆதரவை வெளிப்படுத்துதல் என்ற தலைப்பில் இந்த தீர்மான வரைவு முன்வைக்கப்பட்டுள்ளது. 
 
போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போரின் போதும், அதற்குப் பின்னரும் இருதரப்பினாலும் இழைக்கப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்தும் வெளியான அறிக்கைகளை மதிப்பீடு செய்வதற்கு, சுதந்திரமான பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றை அமெரிக்காவும், சர்வதேச சமூகமும் இணைந்து உருவாக்க வேண்டும் என்று இந்த தீர்மான வரைவில் கோரப்பட்டுள்ளது. 
 
இந்த தீர்மான வரைவு, தற்போது செனெட் வெளிவிவகாரக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
வெளிநாடு ஒன்றுடன் தொடர்புடைய, தீர்மான வரைவு என்பதால், முதலில் அது வெளிவிவகாரக் குழுவினால் பரிசீலிக்கப்படுவது வழக்கம். அந்த தீர்மான வரைவு குறிப்பிட்ட நாட்டுடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று வெளிவிவகாரக் குழு கருதினால், அதனை, செனெட்டில் சமர்ப்பித்து விவாதிக்க பரிந்துரை செய்யும்.
 
இப்போது இந்த நடைமுறைக்கே இந்த தீர்மான வரைவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த தீர்மான வரைவை சமர்ப்பித்திருப்பவர், வொசிங்டனில் ஆட்சியில் இருக்கும், ஒபாமாவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த செனெட்டர் அல்ல. எதிர்க்கட்சியான, குடியரசுக் கட்சியின் செனெட்டரே, இந்த தீர்மான வரைவை முன்வைத்துள்ளார்.
 
அதேவேளை, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த செனெட்டர் றொபேட் கசேயும் இதற்கு இணை அனுசரணை வழங்கியுள்ளார்.
 
ஆக, இந்த தீர்மான வரைவு அமெரிக்க செனெட்டில் விவாதத்துக்கு வந்தாலோ, வாக்கெடுப்புக்கு விடப்பட்டாலோ, ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு பக்கங்களிலும் பலமான ஆதரவு இருக்கும் என்று கருதப்படுகிறது.
 
இந்த தீர்மான வரைவு எப்போது செனெட் வெளிவிவகாரக் குழுவின் முன்பாக விவாதிக்கப்படும் என்று இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
 
பெரும்பாலும் இந்த தீர்மான வரைவை, செனெட் விவாதத்துக்கு அனுப்பும் முடிவையே வெளிவிவகாரக் குழு எடுக்கும் என்று கருதப்படுகிறது.
 
ஏனென்றால், ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் முன்னாயத்தங்களில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஏற்கனவே ஈடுபட்டுள்ளது.
 
இத்தகைய கட்டத்தில், ஜெனிவாவில் அமெரிக்காவின் நகர்வுகளுக்கு இந்த தீர்மானம் வலுச் சேர்ப்பதாக அமையும் என்று செனெட் வெளிவிவகாரக் குழுவினால் கருதப்படும் சூழல் உள்ளது.
 
எனவே, செனெட்டில் இந்த தீர்மான வரைவு குறித்து விவாதம் நடத்தப்பட்டாலோ, வாக்கெடுப்புக்கு விடப்பட்டாலோ, பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
 
சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றை உருவாக்க வலியுறுத்தும் இந்த தீர்மானம், அமெரிக்க செனெட்டில், நிறைவேற்றப்படுமானால், அது ஒபாமா அரசுக்கும் நெருக்கடியாக அமையும்.
 
ஏனென்றால், இலங்கை மீது பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை முன்னிறுத்தி, நெருக்கடி கொடுத்து வந்த அமெரிக்கா இதுவரையில், உள்ளகப் பொறிமுறையை மட்டுமே உருவாக்க அழுத்தம் கொடுத்து வந்துள்ளது. அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு இன்று வரை மாறவில்லை.
 
அதாவது போர்க்குற்றங்கள், மனிதஉரிமை மீறல்கள் குறித்து நம்பகமான- சுதந்திரமான உள்ளக விசாரணைப் பொறிமுறை நடத்த அமெரிக்கா கோரி வந்துள்ள போதிலும், அரசாங்கம் அதை நிறைவேற்றவில்லை.
 
ஆனாலும், அடுத்த கட்டம் குறித்து அமெரிக்கா சிந்திக்க வேண்டிய நிலை உள்ள போதிலும், சர்வதேச விசாரணைப் பொறிமுறை குறித்தோ, இலங்கை மீதான தடைகளை விதிப்பது குறித்தோ, அமெரிக்கா இன்னமும் ஆராயவில்லை என்று அண்மையில் கொழும்பு வந்த உதவி இராஜாங்கச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்திருந்தார்.
 
இம்முறை, ஜெனிவாவில் அமெரிக்கா எத்தகைய தீர்மானத்தைக் கொண்டு வரவுள்ளது என்றோ, அதில், சர்வதேச விசாரணைக் கோரிக்கை இடம்பெறுமா என்றோ, இன்னமும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
 
இத்தகைய கட்டத்தில், செனெட் சபையில், சுதந்திரமான சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறையை ஏற்படுத்த வலியுறுத்தும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுமானால், அது ஜெனிவா தீர்மானத்தில், சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதற்கான அழுத்தங்களைக் கொடுக்கும்.
 
இலங்கையுடன், அதிகம் முரண்படாத போக்கைக் கடைப்பிடிக்க ஒபாமா நிர்வாகம் இம்முறையும் முடிவு செய்திருந்தாலும், இந்த தீர்மானம் அதற்கு கடும் அழுத்தங்களைக் கொடுப்பதாக இருக்கும். 
 
ஏனென்றால், சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றை உருவாக்க வலியுறுத்தும் தீர்மானத்தை செனெட் நிறைவேற்றிய பின்னர், ஒபாமா நிர்வாகத்தினால் அதிலிருந்து பின்வாங்குவது சிக்கலானது.
 
அதேவேளை, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தி வந்த அமெரிக்கா, இம்முறை ஜெனிவாவில், சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்த திட்டமிட்டிருக்குமேயானால், அதற்கு செனெட்டின் தீர்மானம் இன்னும் வலுச் சேர்ப்பதாக அமையும்.
 
எது எவ்வாறாயினும் இந்த தீர்மான வரைவு, அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது, இலங்கைக்கு ஒரு சாதகமற்ற சமிக்ஞையையே வெளிப்படுத்தியுள்ளது.
 
ஏனென்றால், இலங்கைக்கு சாதகமான கருத்தை வொசிங்டனில் உருவாக்கும் நோக்கில் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க மேற்கொண்ட பயணம் தோல்வியில் முடிந்துள்ளதை இது மீண்டும் நிரூபித்துள்ளது.
 
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் நிஷா பிஸ்வாலை, லலித் வீரதுங்க சந்தித்து, அரசாங்கத்தினது நிலைப்பாட்டையும் இலங்கையின் உள்நாட்டு நிலைவரங்களையும் எடுத்துக் கூறிய அடுத்தடுத்த நாட்களிலேயே அவர் கொழும்புக்கு புறப்பட்டார்.
 
இது லலித் வீரதுங்கவின் கருத்துகளை நிஷா பிஸ்வால் எந்தளவுக்கு செவிமடுத்தார், அவர் கூறியவற்றை எவ்வளவு நம்பினார் என்ற கேள்வியை எழுப்பியிருந்தது.
 
வொசிங்டனில் பல நாட்கள் தங்கியிருந்து பிரசாரங்களை மேற்கொண்ட போதிலும், நிஷா பிஸ்வால் தவிர்ந்த இராஜாங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த வேறெந்த அதிகாரிகளும் அவரை சந்திக்கவில்லை.
 
ஆனால், லலித் வீரதுங்க, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அரசாங்கத்தின் நிலையை தெளிவுபடுத்துவதில் கூடிய அக்கறை காட்டியிருந்தார். அதற்காக, பொதுசனத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் ஆதரவுடன் பெருமளவு பணம் செலவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
 
ஆனால், அத்தகைய பிரசாரங்களை பிசுபிசுக்க வைக்கும் வகையில் இந்த தீர்மான வரைவு செனெட்டின் வாசற்படியை எட்டிப் பார்த்துள்ளது.
 
இதிலிருந்து அமெரிக்காவின் முடிவில் மாற்றங்களை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் நகர்வுகள் இதுவரை தோல்வி கண்டுள்ளதையே உணர முடிகிறது.
 
அதேவேளை, இந்த தீர்மான வரைவு செனெட்டில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் சூழல் ஒன்று உருவானால், அது இலங்கை அரசாங்கத்தின் தலைவலிகளை அதிகரிக்கச் செய்யும்.
 
ஏனென்றால், செனெட் ஊடாக கொடுக்கப்படும் அழுத்தங்களை ஒபாமா நிர்வாகம் தானே சுமந்து கொண்டிருக்காது, அதனை இலங்கை மீதே சுமத்த முற்படும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X