2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஜெனிவா: இலங்கையைக் காப்பாற்றுமா இந்தியா?

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 20 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் எப்போதெல்லாம் இலங்கை விவகாரம் தலையெடுக்கிறதோ, அப்போதெல்லாம் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுவது வழக்கம். இது போருக்குப் பிந்திய நிலை மட்டுமல்ல, போரின் போதும் கிட்டத்தட்ட இதே நிலை தான் இருந்தது.

1980களின் நடுப்பகுதியில் போர் தீவிரம் பெறத் தொடங்கிய காலத்தில், இலங்கையின் பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு பிரித்தானியா பயிற்சி அளித்தது. இந்தியப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி, பிரித்தானியப் பிரதமர் மார்க்கிரட் தட்சருக்கு அந்தப் பயிற்சிகளை நிறுத்தும்படி அப்போது அழுத்தம் கொடுத்திருந்தார்.

இலங்கை அந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்குலகின் பக்கம் நின்றது. இந்தியாவோ, ரஷ்யாவின் பக்கம் சார்ந்திருந்தது.

இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. கிட்டத்தட்ட அமெரிக்காவின் பக்கம் இந்தியா நிற்கிறது. ரஷ்யா, சீனாவின் பக்கத்தில் இலங்கை இருக்கிறது.

என்றாலும், 1987ஆம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் கையை மீறி எதுவுமில்லை என்ற நிலை உருவாகி விட்டது.

இந்தியாவின் கருத்தை அறியாமல், இலங்கையில் போரின் போதும் சரி, சமாதான முயற்சிகளின் போதும் சரி, எந்தவொரு நாடும் நேரடியாகத் தலையிட விரும்பியதில்லை. இப்போதும் கூட, இலங்கை மீது தனக்கு எந்த ஆளுமையும் கிடையாது என்று இந்தியா கூறினாலும், இலங்கை விவகாரத்தில் எத்தகைய நகர்வுகளில் இறங்க முன்னரும், இந்தியாவைக் கலந்தாலோசனை செய்ய முனைகின்றன.

அதனால் தான், ஜெனிவாவில் இலங்கை விவகாரத்தை தூக்கிப் பிடிக்க முனையும் போதெல்லாம், இந்தியா எந்தப் பக்கம் நிற்கிறது, அதன் நிலைப்பாடு என்ன என்று கேள்விகள் எழுகின்றன.

அண்டை நாடான இலங்கை மீது இந்தியா, பெரியளவில் செல்வாக்குச் செலுத்தும் நிலையில் உள்ளதாக குறிப்பிட முடியாவிட்டாலும், இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை அறிவது பெரும்பாலான நாடுகளினது எதிர்பார்ப்பாக உள்ளது.

இலங்கை விவகாரத்தில் இந்தியா எடுக்கும் முடிவை மதிக்கும் நிலையில், வேறும் பல நாடுகள் இருப்பதும், இத்தகைய கேள்விகள் எழுவதற்கு இன்னொரு காரணம்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்வைக்கும் அமெரிக்காவைப் பொறுத்தவரையில், இதற்கு முந்திய இரண்டு முறை தீர்மானங்களை முன்வைத்த போதும், இந்த முறையும் இந்தியாவினது கருத்தை அறிவதில் - அதன் ஆதரவைத் திரட்டுவதில் முக்கிய கவனம் செலுத்தியது. இப்போதும், அப்படியே செய்து வருகிறது.

கடந்த மாத இறுதியில், ஜெனிவா தீர்மானம் குறித்த ஆலோசனைகளுக்காக கொழும்பு, லண்டன், ஜெனிவா நகரங்களுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், புதுடெல்லிக்க்குப் பயணம் மேகொள்ளாதது பலரது புருவங்களையும் உயர்த்தியது.

ஆனால், ஜெனிவா சென்று, அவர் முக்கியமாக கலந்துரையாடியது இந்தியப் பிரதிநிதி திலிப் சின்ஹாவுடன் தான் என்பது பெரும்பாலும் வெளியே வராத இரகசியம்.

நிஷா பிஸ்வால் தம்மைச் சந்தித்ததை மட்டும், இந்தியன் எக்ஸ்பிரசிடம் உறுதிப்படுத்திய ஜெனிவாவுக்கான இந்தியப் பிரதிநிதி திலிப் சின்ஹா, மேலதிகமாக ஒரு வார்த்தையையும் கூட வெளியிட மறுத்து விட்டார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியாவினது ஆதரவைப் பெறுவது தான், இந்தச் சந்திப்பின் நோக்கம் என்பதில் எவ்விதம் சந்தேகமும் இல்லை.

இந்தியாவினது ஆதரவை உறுதிப்படுத்திக் கொண்டால், இந்த தீர்மானத்தை நிறைவேற்றும் முயற்சியில் பாதிக்கிணறைத் தாண்டி விடலாம் என்றே அமெரிக்கா கருதுகிறது.

இத்தகைய பின்புலத்தில் தான், கடந்த வாரம் புதுடெல்லிக்கு அழைக்கப்பட்ட கொழும்பு ஊடகவியலாளர்களுடன், சவுத் புளொக் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது.

ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், சில விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

அவை அனைத்தும், ஜெனிவாவில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்காது என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்தவை. இந்தியாவில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. அதில், இந்த ஜெனிவா தீர்மானம் தாக்கம் செலுத்தும் ஒன்றாக இருக்கும். எனவே, ஜெனிவா தீர்மானம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில், நாடாளுமன்றத் தேர்தலின் நிழல் கவிந்திருக்கும் (தாக்கம்) என்று சல்மான் குர்ஷித் குறிப்பிட்டிருந்தார்.

அவர் அவ்வாறு கூறியது, இந்தமுறையும் இந்தியா கொள்கை ரீதியான முடிவை எடுப்பதற்குப் பதிலாக முற்றிலும் அரசியல் ரீதியான முடிவையே எடுக்கும் என்பதை தான்.

கடந்த இரண்டு முறை, கூட்டணிக் கட்சிகளின் அழுத்தங்களுக்கு அடி பணிந்தே, இந்திய அரசாங்கம் ஜெனிவா தீர்மானத்தை ஆதரிக்கும் முடிவை கடைசி நேரத்தில் எடுத்தது.

இருந்தாலும், இந்தியா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அமெரிக்கத் தீர்மான வரைவை நீர்த்துப் போகச் செய்து விட்டதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆனால் இந்தியா அதை மறுத்தே வந்துள்ளது.

இந்தமுறை, தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தமக்கான கூட்டணி ஒன்றை அமைத்துக் கொள்வதற்கும், தேர்தலில் பெருந்தோல்வி ஏற்படாமல் தவிர்த்துக் கொள்வதற்கும், ஜெனிவா விவகாரத்தில், புதுடெல்லி அனுசரித்தே போக வேண்டிய நிலையில் உள்ளது.

அதேவேளை, ஜெனிவா தீர்மானத்தை இந்தியா நீர்த்துப் போகச் செய்து விடும் என்று இம்முறையும் இலங்கை அரசாங்கம் பலமாக நம்பியதாகத் தெரிகிறது.

ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானவராகி விட்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, சில நாட்களுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில், அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா நீர்த்துப் போகச் செய்து விடும் என்று உறுதியான நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் வெளியிட்ட கருத்துகள், அரசாங்கத்தின் இந்த நம்பிக்கையில் மண் அள்ளிப்போட்டு விட்டதாகவே தெரிகிறது.

அரசாங்கத்தின் ஏமாற்றத்தை, கடந்தவாரம் அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல வெளிப்படுத்தியிருந்தார்.

சல்மான் குர்ஷித்தின் கருத்துகள், இந்தியா மற்றொரு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுவதான சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறியிருந்தார்.

இப்போதைய நிலையில், ஜெனிவா என்பது இலங்கைக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் பொறி தான்.

ஜெனிவா குறித்து புதுடெல்லி எடுக்கப் போகும் முடிவு, இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நலன் சார்ந்த ஒன்றாகவே இருக்கும் என்ற கருத்து ஏற்கனவே வலுவடைந்திருந்த சூழலில் தான் அதனை இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜெனிவா தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா முடிவு செய்தால், அது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் சிக்கலடையச் செய்யும் என்று கொழும்பு கருதுவதாகத் தெரிகிறது.

இது இந்தியாவுக்கு சிக்கலானது. அது சீனா பற்றிய பயத்தை இந்தியாவுக்கு மேலும் அதிகரிக்கச் செய்து விடும்.

இலங்கையில் சீனத் தலையீடுகள் குறித்து, இந்தியா அச்சம் கொள்ளவில்லை என்றும் அதைப் பெரிய விவகாரமாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்றும், இந்திய வெளிவிவகார செயலர் சுஜாதாசிங் அண்மையில் கூறியது உண்மையான கருத்தல்ல.

இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளிக்க மறுத்தால், அவர்கள் சீனாவுக்கு அனுப்பப்படுவார்கள், இலங்கைக்கு இந்தியா உதவ மறுத்தால் அதற்குள் சீனா நுழைந்து விடும் என்றெல்லாம் கூறி, இலங்கைக்கான இராணுவ, அரசியல் உதவிகள் அனைத்தையும் நியாயப்படுத்தி வந்தது இந்திய அரசாங்கமும் அமைச்சர்களும் தான்.

திடீரென இப்போது, சீனா பற்றி அச்சமில்லை என்று இந்தியா கூறுவது வேடிக்கையானது.

எவ்வாறாயினும், இலங்கைக்கு எதிரான அணியில், வரிசை கட்டப்போகும் இந்தியாவுக்கு எதிரான அணியிலேயே சீனாவும் நிற்கிறது.

ஆனாலும், இந்த முறையும் சீனாவுக்காக உள்ளூர் அரசியல் நலன்களைத் தியாகம் செய்வதற்கு புதுடெல்லியில் ஆளும் காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை.

ஜெனிவா விவகாரத்தில் இந்திய நிலைப்பாடு, அமெரிக்காவுக்கு சாதகமாக மாறி வருவதையே சல்மான் குர்ஷித்தின் கருத்துகள் புலப்படுத்தியுள்ளன.

அதிலும், தீர்மானம் குறித்து மேற்குலகுடன் இலங்கை பேச வேண்டும் என்றும், அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளது.

இதன் மூலம், சர்வதேச நம்பகத்தன்மையை பெறுவதற்கு இலங்கை தவறிவிட்டது என்பதை சல்மான் குர்ஷித் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவையெல்லாம் இலங்கை அரசுக்கு கசப்பான விடயங்களாகவே தெரிகின்றன.

ஆனாலும் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு இருக்கும் தைரியத்தில், இலங்கை அரசாங்கம், இந்தியாவினது கருத்துகளையும் நிலைப்பாட்டையும் பொருட்படுத்தாமல், ஜெனிவா தீர்மானத்துக்கு சவால் விடுவதிலேயே கவனத்தை செலுத்தி வருகிறது.

இது இன்னொரு முறை, சர்வதேச அரங்கில் மூக்குடைபடுவதற்கான முன்னோட்டமாகவே தெரிகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X