2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அமெரிக்கப் பிரேரணையின் பக்கம் இந்தியாவை மேலும் தள்ளிவிட்ட 'அம்மா'

Kanagaraj   / 2014 பெப்ரவரி 22 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம். ஐயூப்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படிருந்த முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கிய போது நீதிமன்றத்திற்கு அதற்காக இதை விட வேறு நேரம் இருக்கவே இல்லையா என்று இந்திய மத்திய அரசாங்கத்தின் தலைவர்கள் நினைத்திருக்கலாம். அந்த அளவு இந்த சந்தர்ப்பம் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு இப்பிரச்சினையை கையாள்வதில் கஷ்டமாக இருக்கிறது.

ஒரு புறம் மேலும் இரண்டு மாதங்களில் லோக்சபா தேர்தல் வரப் போகிறது. மறுபுறம் அடுத்த மாதம் அமெரிக்கா ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை விடயத்தில் மற்றொரு பிரேரணையை முன்வைக்கவிருக்கிறது. வழக்கு தீர்ப்பு விடயத்தில் இந்தியா எடுக்கும் எந்த நடவடிக்கையும் இந்த இரண்டு விடயத்திலும் இந்தியாவுக்கு நெருக்கடிகளை தோற்றுவிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

இந்த வழக்குத் தீர்ப்பும் அதை அடுத்து இடம்பெற்ற பல சம்பவங்களும் ஜனநாயகம், தேசப்பற்று மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் பலரது கண்ணோட்டங்கள் தொடர்பாக முக்கிய கேள்விகளை எழுப்புகிறது.

1991 ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி தமிழ் நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றின் போது முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி புலிகள் அமைப்பைச் சேர்ந்த தானு என்ற தற்கொலை குண்டுதாரியால் கொல்லப்பட்ட போது ஜெயலலிதா ஜெயராமின் தலைமையிலான அ.தி.மு.கவானது காங்கிரஸ் கட்சியோடு தேர்தல் கூட்டணியொன்றை அமைத்து இருந்தது. எனவே இக் கொலையின் காரணமாக தமிழகம் முழுவதிலும் காங்கிரஸ் கட்சிக்கு அப்போது அடித்த அனுதாப அலையின் மொத்தப் பயனையும் அந்தப் பொதுத் தேரிதலின் போது அடைந்தவர் ஜெயலலிதாவே.

இக் கொலை இடம்பெறும் போது கருணாநிதி புலிகளுக்கு வெகுவாக ஆதரவு வழங்கி வந்தார். எனவே புலிகள் அதற்கு முந்திய ஆண்டில் கோடம்பாக்கில் தங்கியிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் பத்மநாபா உட்பட அவ்வமைப்பின் முக்கியஸ்தர்கள் 11 பேரை கொன்றுவிட்டும், மற்றொரு சந்தர்ப்பத்தில் தமிழகத்தின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் சிலரை கொன்றுவிட்டும் மிக இலகுவாக தப்பிச் செல்ல முடிந்தது. எனவே கருணாநிதியின் நன்பர்கள் என்பதனால் ஏற்கெனவே ஜெயலலிதா, புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தார்.

எனவே ராஜீவ் காந்தி கொலையோடு அவர் புலிகளின் பரம எதிரியாக மாறினார். அவர் புலிகளின் கொலைப் பட்டியலிலும் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவரது நிலைப்பாடு அதுவாக இருந்த போதிலும், அக் கொலையின் பயனால் அந்தத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்ற போதிலும் இன்று அவர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய காட்டிய அவசரம் கவனத்தில் கொல்லக் கூடிய விடயமாகும்.

தமிழக மக்களும் அப்போது புலிகளை வெகுவாக வெறுத்தனர். ராஜீவ் கொலை இடம்பெற்று சில நாட்களாக தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு எதிரான வன்செயல்கள் வெடித்தன. அங்கு அப்போது வாழ்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டவர்களால் அடித்துக் கொல்லப்பட்டதாக அப்போதைய ஊடக அறிக்கைகள் கூறின. இன உணர்வை மீறி தமிழ்நாட்டவர்களின் தேசப்பற்று மேலோங்கியமையே இது காட்டுகிறது. ஆனால் காலப்போக்கில் அதே தமிழக மக்கள் ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்களின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட போது இனிப்பு வழங்கி மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள்.

மனித உரிமை என்று வரும் போது இந்த விடயத்தில் ராஜீவ் காந்தியின் உரிமைகளும் சம்பந்தப்பட்டு இருக்கின்றன. தண்டிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகளும் சம்பந்தப்பட்டு இருக்கினறன. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு இருக்கிறார் எனவே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஒரு புறம் வாதிடலாம். அதேவேளை மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அத் தண்டனையும் வழங்கப்படாது அவர்களின் கருணை மனு இந்திய ஜனாதிபதி அலுவலகத்தினால் 11 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்தன.

ஒரு நபரை நீண்ட காலமாக தூக்குக் கயிற்றின் கீல் வைத்திருப்பதானது பயங்கர சித்திர வதையாகுமென்று கடந்த வியாழக்கிழமை மேற்படி தீர்ப்பை வழங்கும் போது பிரதம நீதியரசர் பீ. சதாசிவம் கூறியிருந்தார். அதேவேளை மொத்தமாக இக் கைதிகள் 23 வருடங்களாக சிறையில் வாழ்கிறார்கள். அந்த விடயத்திலும் மனித உரிமை சம்பந்தப்பட்டுள்ளது. எனவே பக்கம் சாராது அணுகுவதாக இருந்தால் இது சம்பந்தமாக முடிவு எடுப்பது மிகவும் கடினமானதாகும். 

வழக்குத் தீர்ப்பு வெளியான உடன் சாந்தன், முருகன் மற்றும் பேரரிவாளன் ஆகிய மூவரை மட்டுமல்லாது இதற்கு முன்னர் இதே வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து வழங்கப்பட்ட முருகனின் மனைவி நளினி உட்பட ஏனைய நால்வரையும் விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கூறின. ஏனெனில், வேண்டுமென்றால் தமிழக மாநில அரசாங்கம் அம் மூவரையும் விடுதலை செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தமது தீர்ப்பில் கூறியிருந்தது.

ஆனால் மாநில அரசாங்கம் எடுத்த எடுப்பில் அவர்களை விடுதலை செய்ய இந்திய சட்டத்தில் இடம் இல்லை. மத்திய அரசின் பொலிஸாரால் கையாளப்பட்ட ஒரு வழக்கு என்பதால் இவர்களை விடுதலை செய்வதானால் மாநில அரசாங்கம் அதைப் பற்றி மத்திய அரசாங்கத்தோடு கலந்துரையாட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாது அவர்களை விடுதலை செய்வதாக மாநில அரசாங்கம் அறிவித்தது. அதற்கு ஜெயலலிதா ஒன்றும் சட்டம் தெரியாதவர் அல்ல.

அதேவேளை இவர்களை விடுதலை செய்வதாக அறிவித்துவிட்டு மத்திய அரசாங்கத்திற்கு கருத்துக் கூற அவர் மூன்று நாள் அவகாசம் கொடுத்தார். விடுதலை செய்வதாக அறிவித்துவிட்டு மத்திய அரசாங்கத்தின் கருத்தை ஏன் கேட்க வேண்டும்? இது தான் அரசியல்.
இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மாநிலத்தில் எத்தனை கட்சிகள் கோரிக்கை விடுத்தாலும் மாநில அரசாங்கத்தினால் மட்டுமே அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியும்;. எனவே உடனடியாக அவர்களின் விடுதலையை அறிவித்து ஜெயலலிதா மாநில மக்களிளிடம் பெரும் 'கிரடிட்டை' பெற்றுக் கொண்டார். மற்றவர்களுக்கு அதில் பங்கில்லை.

மறுபுறத்தில் பொதுத் தேர்தலொன்றை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பின் மூலம் அவர் காங்கிரஸ் கட்சியை பெரும் சிக்கலில் மாட்டிவைத்துள்ளார். அவர் இந்த அறிவித்தலை வெளியிடாது மத்திய அரசாங்கத்தின் அலோசனையை கோரியிருந்தால் மத்திய அரசாங்கம் எதையும் கூறாது தேர்தல் முடியும் வரை இழுத்தடிக்கலாம். ஆனால் இப்போது என்ன நடந்திருக்கிறது என்றால் ஜெயலலிதா விடுதலையை அறிவித்து இருக்கிறார். மத்திய அரசாங்கம் விடுதலையை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. நீதி மன்றம் விடுதலைக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இது மத்திய அரசாங்கத்திற்கு மேலும் மாநில மக்களின் வெறுப்பை தேடிக் கொடுக்கும் செயலாகும்.

ஏற்கெனவே மத்திய அரசாங்கம் இலங்கை விடயத்தில் எடுத்த சில நடவடிக்கைகள் தமிழக மக்களை ஆத்திரமூட்டியுள்ளது. இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி வழங்குவதை தமிழக அரசியல்வாதிகள் எதிர்த்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசாங்கம் அதனை நிறுத்தவில்லை. இப் பயிற்சிகள் தொடரும் என அண்மையில் இலங்கைக்கு விஜயம் செயதிருந்த இந்திய படற்படை தளபதியும் கூறியிருந்தார்.

கச்சதீவை இந்தியா மீண்டும் பெற வேண்டும் என தமிழக தலைவர்கள் கோரி வருகிறார்கள். இதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் எதிர்க்ட்சித் தலைவர் மு. கருணாநிதியும் நீதிமன்றத்தையும் அணுகியிருக்கிறார்கள். ஆனால் கச்சதீவு ஒருபோதும் இந்திய பிரதேசமாக இருக்கவில்லை என்றும் அதனை ஒருபோதும் இலங்கையிடம் கையளிக்கவில்லை என்றும் எனவே அதனை மீண்டும் பெறுவதென்ற பேச்சுக்கே இடமில்லை எனறும் மத்திய அரசாங்கம் அவ் வழக்குகளின் போது கூறியது.

தமிழக தலைவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக எவ்வளவு தான் குரல் கொடுத்தாலும் கச்சதீவை பயன்படுத்துவது அதே இலங்கை தமிழர்களாக இருந்த போதிலும் தமிழக தலைவர்கள் மத்திய அரசாங்கத்தின் இந்த முடிவை ஏற்கத் தயாராக இல்லை. எனவே அந்த விடயத்திலும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வெறுப்பைத் தான் தேடிக் கொண்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றே தமிழக அரசியல் கட்சிகள் கூறி வந்தன. அந்த கோரிக்கையை ஓரளவுக்கு ஏற்று இந்திய பிரதமர் கலாநிதி மன்மோஹன் சிங் அம் மாநாட்டில் கலந்து கொள்ளாத போதிலும் தமிழக அரசியல்வாதிகளின் கோரிக்கையின் பிரகாரம் இந்தியா மாநாட்டை பகிஷ்கரிக்கவில்லை.
இவ்வாறு தமிழக அரசியல்வாதிகளின் விறுப்பத்திற்கு மாறாக செயற்பட்டு தமிழகத்தில் பெரும்பாலானவர்களின் ஆத்திரத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே இந்தியா ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளின் விடுதலையை தடுத்துள்ளது.

எனவே வரப் போகும் தேர்தலில் இவை அனைத்தும் காங்கிரஸ் கட்சியை பாதிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. அவர்களின் விடுதலையை அறிவிக்க ஜெயலலிதா அவசரப்படாமல் இருந்தால் குறைந்த பட்சம் மத்திய அரசாங்கம் அந்த விடயத்திலாவது அசௌகரியத்திற்கு உள்ளாகியிருக்காது.

இந்த நிலையில் தேர்தலின் போது தமிழக மக்களை கவர மத்திய அரசாங்கத்திற்கு ஒரு ஆயுதம் மட்டுமே எஞ்சியுள்ளது. அது தான் அமெரிக்கா அடுத்த மாதம் இலங்கை விடயத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவையில சமர்ப்பிக்கவிருக்கும் பிரேரணை. வரப்போகும் தேர்தலைக் சுட்டிக்காட்டி தாம் இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப் போகிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் எற்கெனவே சூட்சகமாக கூறியிருக்கிறார்.

அண்மையில் இலங்கையிலிருந்த இந்தியாவுக்குச் சென்ற ஊடகவியலாளர்கள் குழுவொன்றை சந்தித்த அவர் இந்தப் பிரேரணையைப் பற்றிக் குறிப்பிடுகையில் தேர்தல் காலம் என்பது மக்களுக்கு எதனையும் விளங்கப்படுத்தக் கூடிய காலம் அல்லவென்றும் மக்கள் எதனையும் கேட்கக்கூடிய மனோ நிலையில் இல்லை என்றும் கூறினார். எனவே ஜெயலலிதாவின் செயல் இந்தியாவை மேலும் அமெரிக்கப் பிரேரணையின் பக்கம் தள்ளிவிட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X