2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தூக்குத் தண்டனை: இந்திய சுப்ரீம் கோர்ட்டின் புரட்சிகர தீர்ப்புகள்

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜீவ் வழக்கு மீண்டும் தமிழகத்தில் லைம்லைட்டிற்கு வந்திருக்கிறது. அவ்வழக்கில் மூவரின் தூக்குத்தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றி தீர்ப்பளித்தது இந்திய உச்சநீதிமன்றம். இத்தீர்ப்பை அளித்த தலைமை நீதிபதி சதாசிவம், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய 14 வருடங்களாக நடைபெற்ற கருணை மனு போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியதை ஏற்று, அவர்களின் எஞ்சிய தண்டனையையும் ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு மட்டுமல்ல விடுதலை. அவர்களுடன் ராஜீவ் வழக்கில் தண்டனை பெற்று, ஏற்கனவே சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய நால்வருக்கும் சேர்த்தே இந்த விடுதலை வழங்கப்பட்டுள்ளது.

ஏழு பேரின் விடுதலை தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் "அதிகார யுத்தமாக" மாறியிருக்கிறது. இதனால் மாநில அரசின் விடுதலையை உச்சநீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இது ஒரு புறம் என்றால், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் வேறு மாதிரியான தலைவலி வந்து விட்டது. குறிப்பாக தமிழக காங்கிரஸ் கட்சிக்கும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவிற்கும் அது திருகுவலியாகவே அமைந்துவிடும் போலிருக்கிறது. விரைவில் வரப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி "தீண்டத்தகாத" கட்சியாக இருக்கிறது. எந்த அரசியல் கட்சியும் அவர்களுடன் மனமுவந்து கூட்டணி வைக்க முன்வரவில்லை. இன்னும் சொல்லப்போனால் "2-ஜி" விவகாரத்தை காண்பித்து இன்னமும் கூட கூட்டணிக்கு வாருங்கள் என்று தி.மு.க.வை மிரட்டிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி என்ற பத்திரிகை செய்திகளுக்குப் பஞ்சமில்லை. காங்கிரஸுடன் கூட்டணி வைக்க யாருக்கும் இஷ்டமில்லை என்பதை விட அவர்களுக்கு சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த 16 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொடுக்கவும் யாருக்கும் மனமில்லை.

இந்நிலையில் ராஜீவ் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டதில் தமிழக காங்கிரஸ் கட்சி "கான்கிரீட்டாக" கண்டனத்தைச் சொல்லமுடியாமல் தவிக்கிறது. அதற்கு காரணம் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி இருப்பதால் கடுமையான கருத்துக்களைச் சொல்லி வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்றே பல மாநில காங்கிரஸ் தலைவர்களும் நினைக்கிறார்கள். மத்திய அமைச்சர்களாக இருக்கும் வாசன் போன்றோரே, "இது துரதிர்ஷ்டவசமானது" என்றுதான் கூறியிருக்கிறாரே தவிர, அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க முடியவில்லை. தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனோ அ.தி.மு.க.வை மட்டும் விமர்சித்தால் சிக்கல் என்று கருதி தி.மு.க. மீதும் பாய்ந்து பிராண்டியிருக்கிறார். "இலங்கை தமிழர் பிரச்சினையை வைத்து அரசியல் பண்ணுகிறார்கள்" என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

ராகுல் காந்தி, டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் இதில் கண்டனம் தெரிவித்த பிறகே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் உள்ள இளைஞர் காங்கிரஸின் சார்பில் இதைக் கண்டித்து ஓர் உண்ணாவிரதம் தொடங்கப்பட்டது. அக்கூட்டத்தில் கூட, "எங்கள் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ஏன் தாக்குகிறீர்கள். எங்கள் மத்திய மந்திரிகள் அனைவரும் தமிழகத்திற்குள் வரப் போகிறார்கள். அவர்களைத் தாக்கிப் பாருங்கள்" என்று பிரகடனம் செய்தார். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மீது அவருக்கு அவ்வளவு கோபம் ஏன் என்பது விளங்கவில்லை. இவர்கள் அனைவரையும் மிஞ்சி பிரதமர் அலுவலக அமைச்சர் நாராயணசாமி மட்டும்தான் நேரடியாக அ.தி.மு.க.வை விமர்சித்தவர். அதனால் தான் "நீதிமன்றமே தன்னிச்சையாக நாராயணசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுக்க வேண்டும்" என்று புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் அறிக்கை விடுத்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு எம்.பி.யாகி நாடாளுமன்றத்திற்குப் போக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு கூட்டணி வேண்டும். இந்த விஷயத்தில் அளவுக்கு அதிகமாக எதிர்த்துப் பேசினோம் என்றால் யாரும் நம்முடன் கூட்டணியும் வர மாட்டார்கள். நாம் நாடாளுமன்றத்திற்கும் போக முடியாது என்ற கவலை அவர்களை வாட்டி வதைக்கிறது. இதனால் அடக்கி வாசிக்கிறார்கள். தி.மு.க.வும் வேண்டாம். அ.தி.மு.க.வும் வேண்டாம். விஜயகாந்துடன் கூட்டணி போவோம் என்றாலும் அவர் தரப்பில் விதிக்கப்படும் நிபந்தனையில் காங்கிரஸ் கட்சியின் டெல்லித் தலைவர்களே அதிர்ச்சியடைந்து போயிருக்கிறார்கள். இதனால் விஜயகாந்த் கட்சியுடன் மட்டும் நேரடியாக கூட்டணி வைக்கும் விஷயமும் கை கூடி வராமல் காங்கிரஸ் காரர்களுக்கு கடுக்காய் கொடுக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் நிலை இது என்றால், வைகோவிற்கு வேறு தலைவலி. அவர் இப்போது அகில இந்தியக் கட்சியான பாரதீய ஜனதாக்கட்சியுடன் (பா.ஜ.க.) கூட்டணி சேர விரும்புகிறார். அந்தக்கூட்டணிக்கான பல ரவுண்ட் பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டன. ஆனாலும் இன்னும் இறுதி உடன்படிக்கைக்கு வர முடியவில்லை. இது போன்ற சூழ்நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினையில் பா.ஜ.க. எடுக்கும் நிலைப்பாடுகள் அவருக்கு உடன்பட்டதாக இல்லை. இன்னும் சொல்லப்போனால் ராஜீவ் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்த விவகாரத்தில் அகில இந்திய பா.ஜ.க. கடுமையாகவே எதிர்த்திருக்கிறது. ஏனென்றால் அக்கட்சிக்கு பயங்கரவாத எதிர்ப்பு என்பது ஒரு பிரசாரமாகவே இந்த தேர்தலில் முன் வைக்க காத்திருக்கிறது. ஏற்கனவே இந்திய நாடாளுமன்றத் தாக்குதலில் தண்டனை பெற்ற அப்சல் குரு, மும்பை தாக்குதலில் (26/11 தாக்குதல்) தண்டனை பெற்ற கசாப் போன்றவர்களை எல்லாம் ஏன் தூக்கிலிடவில்லை என்று கேள்வி எழுப்பியது பா.ஜ.க.தான். அவர்கள் உடனடியாக தூக்கிலிடப்பட்டார்கள் என்றால் அதற்கு பா.ஜ.க. கொடுத்த அழுத்தம்தான் காரணம்.

அதேபோல் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று, அது உச்சநீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து நடிகர் சஞ்சய் தத்திற்கு "பெரோல்" வழங்கிக் கொண்டிருப்பதை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. இது போன்ற சூழ்நிலையில் ராஜீவ் விவகாரத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக் குறைப்பை ஆதரித்துப் பேச முடியாத இக்கட்டில் பா.ஜ.க. சிக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வைகோவிற்கு வரும். தேர்தல் களத்தில் அது பற்றி பதில் சொல்வது எப்படி என்பதில்தான் வைகோ கவலைகொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. ஏனென்றால்,"தி.மு.க.வும் வேண்டாம். அ.தி.மு.க.வும் வேண்டாம். காங்கிரஸும் வேண்டாம்" என்றுதான் பா.ஜ.க. பக்கமாக கூட்டணிக்குப் போனார். ஆனால் அங்கு கூட்டணியில் இருப்பதற்கும் ராஜீவ் வழக்கில் தண்டனையடைந்தவர்களை விடுதலை செய்யும் விவகாரம் சிக்கலாக வந்து நிற்கிறதே என்ற எண்ணம் ம.தி.மு.க. தலைவருக்கு மட்டுமல்ல, அவர் கட்சியில் இருக்கும் முன்னணித் தலைவர்கள் பலருக்கும் இருக்கிறது.

இப்போதைக்கு மாநில பா.ஜ.க. தலைவர்கள் இதை ஆதரித்து கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அக்கட்சியின் மேலிடத் தலைவர்கள் வெறுத்துப் பேசுகிறார்கள். இது ஒரு புறமிருக்க புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் இந்த விடுதலையைக் கண்டித்திருக்கிறார். அவருடைய மாநிலக் கட்சித் தலைவர் இந்த விடுதலையை ஆதரித்திருக்கிறார். இப்படி ராஜீவ் வழக்கில் விடுதலையாவோரின் விவகாரம் வில்லங்கமாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு மேல் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் காரணமாக இந்த ஏழு பேரின் விடுதலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணை மார்ச் 6ஆம் திகதி வருகிறது. அரசியல் சிக்கலும், சட்டச்சிக்கலும் சூழ்ந்து நிற்கும் இந்த "விடுதலை" விவகாரம் எப்படி நாடாளுமன்றத் தேர்தலில் விஸ்வரூபம் எடுக்கும் என்பதுதான் இப்போது எஞ்சியிருக்கின்ற கேள்வி.

ஆனால் தூக்குத்தண்டனை என்பது இந்தியாவில் அரசியல்வாதிகள் நீக்க வேண்டியதில்லை. அந்த தண்டனைக்கு எதிராக மனித உரிமை அமைப்புகளும், உலக அளவில் உள்ள விழிப்புணர்வும் இந்திய உச்சநீதிமன்றத்தை உஷார்படுத்தியிருக்கிறது. "கருணை மனுக்களை தாமதமாக பரிசீலிப்பது- அதுவும் போதிய காரணம் ஏதும் சொல்ல முடியாமல் அரசு தரப்பில் தாமதம் செய்வது" தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க பொருத்தமான காரணமே என்று இந்திய உச்சநீதிமன்றம் அடுத்தடுத்து பல வழக்குகளில் தீர்ப்பளித்து வருகிறது. "சத்ருகன்சவுகான்" வழக்கில் 15 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இப்போது ராஜீவ் கொலை வழக்கில் மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இத்துடன் சேர்த்து கடந்த 18 பேரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இப்படி புரட்சிகரமான தீர்ப்புகளை வழங்கி வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, வருகின்ற ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பு இன்னும் எத்தனை இது போன்ற தூக்குத் தண்டனை விவகாரங்கள் அவர் முன்பு தீர்ப்புக்குப் போய் நிற்கப் போகின்றதோ?

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X