2025 மே 19, திங்கட்கிழமை

தி.மு.க.வரலாற்றின் அடுத்த அத்தியாயம் ஸ்டாலின்: கருணாநிதி

A.P.Mathan   / 2014 மார்ச் 03 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் இந்தமுறை தி.மு.க.வை அடுத்து அவர்தான் தலைமை தாங்கப் போகும் சக்தி என்பதை பறைசாற்றியிருக்கிறது. சென்னை மாநகரில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தி.மு.க. தொண்டர்கள் தமிழகம் முழுவதும் இருந்து வந்து க்யூவில் நின்று ஸ்டாலினை வாழ்த்தியது அவரது பாப்புலாரிட்டியை படம் பிடித்துக் காட்டுகிறது. அது மட்டுமின்றி கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாமே ஸ்டாலினுக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்கள். 65 ஆண்டு கால தி.மு.க. வரலாற்றில் இந்தக் கட்சிக்கு முதலில் அறிஞர் அண்ணா, பிறகு கலைஞர் கருணாநிதி என்று சமூக நீதிக் கொள்கைகளுக்கான போராட்டக் களம் மிகுந்த கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக அரசியலில் இருந்து வந்துள்ளதை அரசியல் அரிச்சுவடி படிக்கும் அனைவரும் அறிந்திருக்க முடியும். அந்த தி.மு.க.விற்கு இப்போது மு.க. ஸ்டாலின் தலைமைப் பொறுப்பு என்ற படிக்கட்டின் இறுதிப் படியில் வந்து நிற்கிறார்.

தி.மு.க. தோற்றுவிக்கப்பட்ட பிறகு ஈ.வி.கே. சம்பத், எம்.ஜி.ஆர், வைகோ இப்படி பலரால் அந்தக் கட்சிக்கு சோதனை ஏற்பட்டது. இந்த பிளவுகள், கட்சிக்குள் கோஷ்டிகள் தலை தூக்கிய போதெல்லாமே தி.மு.க. இனி தேறாது என்றே பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதையெல்லாம் தாண்டி கட்சி வந்த போதுதான் தி.மு.க.விற்குள் ஸ்டாலினுக்குப் போட்டியாக அழகிரி அணி, தயாநிதி மாறன் அணி, கனிமொழி அணி எல்லாம் களை கட்டியது. ஆனாலும் கட்சியின் பெருவாரியான பலம் தி.மு.க.விற்குள் ஸ்டாலின் அணிக்கு மட்டுமே இருந்து வந்திருக்கிறது.

குறிப்பாக 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இரண்டாவது முறையாக பதவியேற்ற தி.மு.க.விற்கு "யாருக்கு அமைச்சர் பதவி' என்பதில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனாலும் கனிமொழிக்கு அமைச்சர் பதவியை வாங்கிக் கொடுக்கமுடியவில்லை. ஆனால் தயாநிதி மாறனும், அழகிரியும் மத்திய அமைச்சர்களானார்கள். இந்த அமைச்சர் பட்டியலை காங்கிரஸ் ஏற்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கனிமொழியையும், ராஜாவையும் சிறையில் தள்ளும் அளவிற்கு போனது என்பது வேறு கதை. இப்படி டெல்லி அதிகாரத்தில் மையம் கொண்ட அழகிரி, தயாநிதி போன்றவர்களுக்கு தமிழக அரசியலிலும் தனி மோகம்.

அதனால் தி.மு.க.விற்குள் இருக்கும் பல்வேறு தரப்பட்ட கட்சி நிர்வாகிகள் மத்தியில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு "அதிகாரம்' செலுத்த முற்பட்டார்கள். "தனக்கு தி.மு.க.வில் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது' என்பது போல் கலாநிதி மாறன் தரப்பு நடத்திய தினப்பத்திரிகையில் சர்வே ஒன்றைப் போட்டு அதனால் தி.மு.க.விற்குள் ரணகளம் உருவானது. அதனால் அந்த பத்திரிகையின் அலுவலகம் மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு தி.மு.க.விற்குள் நடக்கும் "கோஷ்டி அரசியல்' பட்டவெளிச்சமானது. இப்படிப்பட்ட நேரத்தில்தான் தயாநிதி மாறனை விலக்கி வைக்க வேண்டிய நிர்பந்தமே தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவைக்கு வந்தவர்தான் கனிமொழி.

ஆகவே அந்த காலகட்டத்தில் தி.மு.க.வில் ஸ்டாலினுக்குப் போட்டியாக கனிமொழியும், மு.க. அழகிரியும் எஞ்சி நின்றார்கள். ஆனாலும் கட்சிக்குள் உள்ள 95 சதவீதம் பேர் ஆதரவு ஸ்டாலினுக்கு என்றால் மீதியுள்ள 5 சதவீதம் பேரின் ஆதரவுதான் இந்த இருவருக்குமே இருக்கும். இதுதான்  தி.மு.க.வின் நிலையாக இருந்தது. இது போன்ற சூழ்நிலையில் 2011 சட்டமன்றத் தேர்தல். மாநிலத்தில் தி.மு.க. ஆட்சியை இழந்தது. அதிலும் குறிப்பாக மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார்கள். மு.க. அழகிரியை மையப்படுத்தியே மதுரை பகுதியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டது ஓர் அதி முக்கியக் காரணம். குறிப்பாகச் சொல்லப்போனால் மதுரை வடக்கு (46400 வாக்குகள் வித்தியாசம்), மதுரை தெற்கு ( 45451 வாக்குகள் வித்தியாசம்) திருப்பரங்குன்றம் (45,502 வாக்குகள் வித்தியாசம்) போன்ற தொகுதிகளில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் படு மோசமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார்கள்.

சட்டமன்றத் தேர்தலில் இப்படிக் கிடைத்த தோல்வி மு.க. அழகிரிக்கு சோதனையை உருவாக்கியது. கட்சிக்குள் அவர் "செல்வாக்கு இழந்த தலைவர்' என்ற தோற்றத்தை உருவாக்கியது. அவரை நம்பியிருந்த தென்மாவட்ட கட்சியினர் அவரை எதிர்த்து மதுரையில் நடைபெற்ற ஊழியர்கள் கூட்டத்திலேயே பேசும் அளவிற்கு நிலைமை முற்றியது. இந்த தோல்வியில் அவரது ஆதரவாளர்கள் துவண்டு போனார்களோ இல்லையோ அழகிரியே துவண்டு போனார். அ.தி.மு.க. அரசு பதவியேற்றதும்  பெரிய அளவில் களத்தில் இறங்கி போராட வேண்டும் என்ற துணிவு அவருக்கு வரவில்லை. அந்த சந்தர்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர் மு.க. ஸ்டாலின். அ.தி.மு.க. அரசை எதிர்த்து, அந்த அரசால் தி.மு.க.வினர் எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து போராட்டம், மறியல் எல்லாவற்றிலும் ஸ்டாலின் முன்னனி வகித்தார். திருவாரூரில் அவருடன் காரில் வந்த மாவட்டச் செயலாளர் ஒருவரை கைது செய்ய நடுரோட்டில் அங்கேயே ஸ்டாலின் சாலை மறியலில் இறங்கி கைதானார். அது "ப்ளாஷ்' செய்தி போல் பரவ, தமிழகம் முழுவதுமே "தேர்தல் தோல்வியால்' சோகத்தில் இருந்த தி.மு.க.வை வீறுகொண்டு எழ வைத்தது. அன்றுதான் தி.மு.க.வின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான். வேறு எவரும் இல்லை என்பதை தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க. தொண்டர்கள் தலைமைக்கு உணர்த்தினார்கள் என்றால் மிகையாகாது.

கட்சிக்குள் "ஸ்டாலின், அழகிரி, கனிமொழி' என்ற மூவரணி இருந்தாலும், அதிலே முதன்மை பெற்றது ஸ்டாலின்தான் என்பது நிரூபணம் ஆகிக் கொண்ட வந்தது. இது போன்ற சந்தர்பத்தில்  ஸ்டாலின்தான் அடுத்து தலைவர் என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும் என்ற அழுத்தம் தி.மு.க. முன்னணித் தலைவர்கள் மூலமே தி.மு.க. தலைவருக்கு வந்தது. அதன் ஒரு கட்டமாகத்தான் "எனக்குப் பிறகு சமுதாயப் பணிகளை ஸ்டாலின் கவனிப்பார்' என்று முதலில் வெளிப்படுத்தினார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அடுத்து, "பொதுக்குழுவில் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் ஸ்டாலினை தலைமைப் பதவிக்கு முன்மொழிவேன்' என்றெல்லாம் தி.மு.க. தொண்டர்களின் எண்ணவோட்டத்திற்கு ஈடு கொடுத்துப் பேசினார் கட்சி தலைவர் கலைஞர் கருணாநிதி.

இதை அழகிரி எதிர்த்துப் பேசத் தொடங்கினார். அங்குதான் அழகிரி தவறு செய்தார். அவர் ஸ்டாலினை எதிர்க்கிறோம் என்று நினைத்துக் கொண்டு கலைஞர் கருணாநிதியின் கருத்திற்கே மாற்றுக் கருத்துச் சொன்னார். தி.மு.க.விற்குள் வரும் இது போன்ற பிரச்சினைகளில் எவர் கலைஞர் கருணாநிதிக்கு எதிராக களத்திற்கு வருகிறார்களோ அவர்கள் தோல்வியைச் சந்திப்பார்கள். அப்படித்தான் எம்.ஜி.ஆருக்கும் நேர்ந்தது. வைகோவிற்கும் நேர்ந்தது. தயாநிதி மாறனுக்கும் நேர்ந்தது. இப்போது அழகிரிக்கும் நேர்ந்திருக்கிறது. எல்லாவற்றையும் விட விஜயகாந்துடன் கூட்டணி வைக்க தி.மு.க. தரப்பில் மூவ்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் விஜயகாந்தை விமர்சித்து பேட்டி கொடுத்தார் அழகிரி. அடுத்து தி.மு.க.வின் பொதுக்குழு பற்றியே கிண்டல் அடித்து அவரின் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டினார்கள். இது மாதிரி மோதல் போக்கால் அழகிரி தனக்குத் தானே தி.மு.க.வின் அதிகாரப் போட்டியில் இருந்து "விடை' பெறுவதற்கு பாதை அமைத்துக் கொண்டார்.

தி.மு.க.வில் இது போன்ற கோஷ்டிப் பூசல் தலை தூக்கிய நேரத்தில் ஒரு முறை தி.மு.க. தலைவர் கருணாநிதி, "எந்த கோஷ்டியும் தி.மு.க.வில் இல்லை. அப்படிக் கோஷ்டிகள் இருந்தாலும் அடக்கக்கூடிய வல்லமையும், வாய்மையும் என்னிடமும், தி.மு.க. தலைவர்களிடத்திலும் இருக்கிறது' என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். அதன்படியே "கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக' மு.க. அழகிரியை தற்காலிக நீக்கம் செய்தார். அதைத் தொடர்ந்து திருச்சியில் தி.மு.க.வின் பத்தாவது மாநில மாநாடு. அந்த மாநாட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தினார். மாநாட்டு பந்தலில் தி.மு.க. தலைவரின் வயதைக் குறிக்கும் விதத்தில் 90 அடிக் கம்பத்தில் தி.மு.க. கொடி ஏற்றப்பட்டது. அந்தக் கொடியை காரிலிருந்தவாறே முதல் இரு இழுப்புகள் மட்டும் இழுத்து விட்டு மீதிக் கொடியை கம்பத்தில் ஏற்றும் பொறுப்பை மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைத்து விட்டு மேடைக்குப் போனார். மீதி உயரத்தை ஸ்டாலினே கொடியேற்றி தி.மு.க. கொடியை அந்த 90 அடிக் கம்பத்தில் ஸ்டாலின் பறக்க விட்டார். இதை மாநாட்டில் சுட்டிக்காட்டிய திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணி, "ஸ்டாலின் மீதிக் கொடியே ஏற்றியதில் அர்த்தம் இருக்கிறது' என்று சுட்டிக்காட்டினார். தி.மு.க.வின் கொடியேற்றும் தலைமைப் பதவி ஸ்டாலினுக்கே அடுத்து கிடைக்கும் என்பதை நினைவுபடுத்தும் நிகழ்ச்சி இது என்பது வீரமணி போன்றவர்களின் கணிப்பு.

இந்நிலையில் தி.மு.க.விற்குள் இப்போது ஸ்டாலினுக்குப் போட்டியாக எஞ்சியிருப்பது கனிமொழி அணி மட்டுமே. ஆனால் ""அது "ஸ்டாலினுக்கு உள்ள ஆதரவு கட்சிக்குள் மலையளவு' என்றால், கனிமொழிக்கு உள்ள ஆதரவு "கடுகு அளவுதான்'' என்றே ஒரு தி.மு.க. மூத்த கட்சி நிர்வாகி ஒருவர் நம்மிடம் காமெண்ட் அடித்தார். அந்த அளவிற்கு இப்போது தி.மு.க.வின் ஒரே அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் என்பது அரங்கேற்றத்திற்கு வந்து விட்டது. அதன் எதிரொலிதான் சமீபத்தில் மார்ச் 1ஆம் திகதி நடைபெற்ற மு.க. ஸ்டாலினின் 62ஆவது பிறந்த நாள் விழா எடுத்துக் காட்டியது. தி.மு.க.விற்குள் உள்ள கோஷ்டிகள் மறைந்து, "இனி ஸ்டாலின்தான் தி.மு.க.' என்ற வரலாற்றின் புதிய அத்தியாயம் மார்ச் 1ஆம் திகதி ஸ்டாலின் பிறந்த நாள் அன்று ஆரம்பித்து விட்டது.  அதனால்தான் "காங்கிரடன் கூட்டணி வேண்டாம்' "விஜயகாந்துடன் கூட்டணி இருந்தால் போதும்' என்றெல்லாம் தி.மு.க.வின் எண்ணவோட்டத்தை உருவகப்படுத்தும் வாய்ப்பு ஸ்டாலினுக்கு கிட்டியிருக்கிறது என்பதுதான் மாற்றுக் கட்சித் தலைவர்களின் கருத்தாக அமைந்திருக்கிறது. ஏன் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட "தமிழகத்தில் தொழில் வளர்ச்சி குறைந்து விட்டது' என்று டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கிலப் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் ஸ்டாலின் குற்றம் சாட்ட, அதற்கு சட்டமன்றத்தில் தனது பட்ஜெட் விவாதத்தில் பதிலளித்துள்ளார்!

You May Also Like

  Comments - 0

  • Mohammed Yaseen Tuesday, 04 March 2014 02:11 AM

    கட்சி துவண்டுபோகாமல் அதனை வளர்க்கும் முயற்சியில் தீவிரமாக தளபதி இறங்கியிருக்கிறார். எதிர்க்கட்சி தகுதிகூட இல்லாத, கலைஞரின் நள்ளாதார் வயதின் காலகட்டத்தில் தளபதி இல்லையென்றால் கட்சி காணாமல் போக வாய்ப்புண்டு. எனவே எல்லா நிலைகளிலும் தலைமைக்கு தலைமைக்கு மிகப் பொருத்தமானவர் தளபதிதான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X