2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'ஒழுங்காக நடந்து கொள்ள'; ஒரு வருட சலுகைக் காலம்

Kanagaraj   / 2014 மார்ச் 09 , பி.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்

அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்தை மேலும் ஒரு வருடத்திற்கு விட்டு வைத்துள்ளது. இலங்கை தொடர்பாக தாம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கவிருக்கும் பிரேரணையின் நகலை அமெரிக்கா கடந்த திங்கட்கிழமை பேரவையின் உறுப்பினர்களிடம் கையளித்தது எனினும் இலங்கையின் மனித உரிமை நிலைவரம் தொடர்பாக சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதை அமெரிக்கா அதன் மூலம் மேலும் ஒத்திப் போட்டுள்ளது.

அந்த நகல் பிரேரணையின் பிரகாரம் இலங்கை சர்வதேச சமூகம் திருப்தியடையும் வகையில் இவ்வருடத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த வருடம் தான் மனித உரிமை பேரவை சர்வதேச விசாரணையை நாடும். இலங்கை அரசாங்கம் அமெரிக்காவின் பிரேரணைகள் தொடர்பாக அந்த நாட்டை விமர்சித்தாலும் அமெரிக்கா தமது பிரேரணைகள் மூலம் இலங்கையை சர்வதேச பிடியிலிருந்து காப்பாற்றிவிட்ட மூன்றாவது முறை இதுவாகும்.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே 2012 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பான அமெரிக்காவின் முதலாவது பிரேரணை முன்வைக்கப்படும் முன் சர்வதேச மட்டத்தில் இருந்த பொதுவான அபிப்பிராயமாகும். இலங்கை விடயத்தில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன், மர்சூகி தருஸ்மானின் தலைமையில் நியமித்த குழுவும் சர்வதேச விசாரணையையே சிபார்சு செய்திருந்தது.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் படி தேசிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி 2012 ஆம் ஆண்டு அமெரிக்கா மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்த பிரேரணையின் மூலமே அந்த நிலைமை மாறியது.

ஆனால் அமெரிக்கா வழங்கிய அந்த சலுகையால் பயன் பெற இலங்கை தவறிவிட்டது. 2012 ஆம் ஆண்டில் அமெரிக்கா சமர்ப்பித்த அந்த பிரேரணையை அடுத்து சர்வதேச சமூகம் திருப்தியுறும் வகையில் நடந்துகொள்ள இலங்கை அரசாங்கம் தவறியது. அந்த நிலையில் கடந்த வருட ஆரம்பத்தில் மனித உரிமை ஆணையாளர் கலாநிதி நவநீதம் பிள்ளை பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையிலும் இலங்கை விடயத்தில் சர்வதேச விசாரணையொன்று கோரப்பட்டிருந்தது.

ஆனால், அதற்கு சில தினங்களுக்குப் பின்னர் அமெரிக்கா சமர்ப்பித்த இரண்டாவது பிரேரணையிலும் சர்வதேச விசாரணைக்கு இடம் கொடுக்கப்படவில்லை. அந்தப் பிரேரணையின் மூலமும் அமெரிக்கா நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை அமுலாக்க வேண்டும் என்றே மீண்டும் கூறியது.

அந்த முறையும் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகம் திருப்தியுறும் வகையில் நடந்து கொள்ளவில்லை. எனவே மனித உரிமை ஆணையாளர் இதற்கு சில தினங்களுக்கு முன்னர் சமர்ப்பித்த அறிக்கையில் சர்வதேச விசாரணையை மிகப் பலமாக வலியுறுத்தியிருந்தார். எனவே இந்த முறை அமெரிக்கா சமர்ப்பித்த மூன்றாவது பிரேரணையில் சர்வதேச விசாரணையொன்று சிபாரிசு செய்யப்பட்டு இருக்கும் என பலர் நினைத்தனர்.

ஆனால் அதுவும் நடக்கவில்லை. இந்த முறை அதாவது மூன்றாவது தடவையாக அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணையிலும் சர்வதேச விசாரணை சிபார்சு செய்யப்படவில்லை. அதேவேளை இந்த முறை அமெரிக்கப் பிரேரணை சர்வதேச விசாரணையை முற்றாக கைவிடவும் இல்லை. கடந்த வருடம் அமெரிக்கப் பிரேரணையில் அது முகவுரையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த முறை அது பிரேரணையின் பிரதான வாசகங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை மீறியோருக்கு எதிராக உள்நாட்டு விசாரணை நடத்தாவிட்டால் சர்வதேச விசாரணை நடத்த வேண்டியிருக்கும் என்றே இம் முறை பிரேரணை கூறுகிறது.

தமிழ்நாட்டிலும் புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலும் இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முன்னைய பிரேரணைகளும் இவ்வாறே நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளையே வலயுறுத்தியிருந்த போதிலும் பல தமிழ் அமைப்புக்கள் அந்தப் பிரேரணைகளை ஏதோ பெரும் வரப்பிரசாதமாகவே மதித்தனர்.

கடந்த வருடம் மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பித்த அறிக்கையைப் பார்க்கிலும் இம் முறை அவர் சமர்ப்பித்த அறிக்கையில் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக புலிகள் அமைப்புக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுக்களையும் விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தமையே அந்த முக்கியத்துவமாகும்.

அமெரிக்கப் பிரேரணை மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அமையும் என்று கூறப்பட்ட போதிலும் அமெரிக்கப் பிரேரணையில் புலிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அந்த விடயம் இல்லாவிட்டாலும் ஆணையாளரின் அறிக்கையில் இருந்த வேறு சில விடயங்கள் அமெரிக்கப் பிரேரணைக்குள் வந்திருக்கின்றன.

போர் முடிவடைந்ததன் பின்னர் இடம்பெற்ற வட மாகாண சபைத் தேர்தலோடு சம்பந்தப்பட்ட விடயங்கள், வெலிவேரிய சூட்டுச் சம்பவம் மற்றும் அண்மைக் காலமாக சமயத் தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களே அவைகளாகும். இந்த விடயங்களும் பிரேரணையின் பிரதான வாசகங்களிலேயே உள்ளடக்கப்பட்டுள்ளன.

வட மாகாண சபைக்கும் அதன் முதலமைச்சருக்கும் அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்பட வேண்டிய அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று பிரேரணை கூறுகிறது. மனித உரிமை பேரவைக்கும் வட மாகாண சபைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என சிலர் கேட்கலாம். நல்லிணக்க ஆணைக்குழு அதிகார பரவலாக்கலை வலியுறுத்துகிறது. அமெரிக்கப் பிரேரணை நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை அமுலாக்க வேண்டும் என்றே அடிப்படையில் கூறுகிறது. எனவே தான் முறையாக அதிகார பரவலாக்கலை அமுலாக்குவதற்காக வட மாகாண சபைக்கு உரிய அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று அமெரிக்கா கூறுகிறது.

இது மாகாண சபைகளுக்குரிய பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பறிக்க அரசாங்கம் அண்மையில் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக உள்ளடக்கப்பட்ட வாசகமாக இருக்க வேண்டும்.

வடமாகாண சபைக்கு உரிய அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று பிரேரணை கூறுவதால் இந்த வாசகத்தின் பின்னால் இந்தியா இருக்க வேண்டும் அல்லது இந்தியாவை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்வதற்காக அமெரிக்கா இந்த வாசகத்தை திணித்து இருக்க வேண்டும்.

சமயத் தலங்கள் மீதான தாக்குதல்கள் இடம்பெற்றதாக அரசாங்கமே விவரமாக மனித உரிமை பேரவையிடம் தெரிவித்துள்ளது. அதே வேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவற்றை பேரவையிடம் தெரிவித்ததற்காக கோபித்துக் கொண்டும் இருக்கிறது. இப்போது அமெரிக்கா தமது பிரேரணையின் மூலம் இந்த தாக்குதல்களைப் பற்றி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் கொண்டு வருமாறு கூறுகிறது. சிலவேளை இதற்கு முந்திய பிரேரணைகளின் போது பல முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தமையினால் அமெரிக்கா இந்த வாசகத்தை பிரதான வாசகங்களில் ஒன்றாக குறிப்பிட்டு இருக்கலாம். இது போன்ற வாசகங்களும் பிரேரணையில் இருக்கையில் முஸ்லிம் நாடுகள் அதனை எதிர்ப்பது கஷ்டமாக இருக்கும்.

அரசியல் நோக்கங்களை மதியாது இந்த பிரேரணையைப் பார்த்தால் எந்தவொரு நாடும் அதனை எதிர்ப்பது கடினமாகவே இருக்கும். அந்த அளவுக்கு அதன் வாசகங்கள் நியாயமாக தெரியும் விதத்தில் அமைந்துள்ளது. போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களைப் பற்றி இலங்கை தாமாகவே விசாரணை நடத்திக் கொள்ள வேண்டும் என்று பிரேரணை கூறும் போது எந்த நாடு தான் அதனை எதிர்க்க முடியும்?

அதேபோல் அரசாங்கம் தாமாகவே நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுலாக்க வேண்டும் என்றும் நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் வெலிவேரிய சம்பவம் தொடர்பாக தமது படைகளே நடத்திய விசாரணையின் அறிக்கையை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்றும் சமயத்தலங்கள் மீது தாக்குதல் நடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறும் போது அதில் என்ன தவறு இருக்கிறது?

இறுதியாக அரசாங்கம் இவற்றை செய்யவிட்டால் சர்வதேச விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் கொண்டு வர வேண்டும் என்று பிரேரணை கூறும் போது அதனை எவரால் தான் எதிர்க்க முடியும்?

அமெரிக்காவின் இந்த மூன்றாவது பிரேரணையும் நிறைவேறக்கூடிய சாத்தியங்களே அதிகமாக இருக்கிறது. அதனை தோற்கடிக்க இலங்கை அரசாங்கம் இந்திய உதவியை நாடுவதில் அர்த்தம் இல்லை. ஏனெனில் ஏப்ரல் மாதம் இறுதியில் இந்திய லோக் சபா தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சி இலங்கைக்காக தமிழ் நாட்டு வாக்குகளை இழக்க விரும்ப மாட்டாது. அதேவேளை இதற்கு முன்னர் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த சில முஸ்லிம் நாடுகள் இம் முறை பிரேரணைக்கு ஆதரவாக (இலங்கைக்கு எதிராக) வாக்களிக்கும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த முறை செய்ததைப் போலவே இலங்கை அரசாங்கம் இந்த முறையும் தாம் இந்தப் பிரேரணையை நிராகரிப்பதாக கூறலாம். ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை நிராகரிப்பதால் அதன் தாக்கம் இல்லாமல் போகப் போவதில்லை. எனவே அரசாங்கம் புத்திசாலித் தனமாக நடந்து கொள்வதாக இருந்தால் அடுத்த வருடம் மனித உரிமை பேரவை சர்வதேச விசாரணையை முடுக்கிவிடாது பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதற்காக அரசாங்கம் ஏதும் பெரிதாக செய்யத் தேவையில்லை. பிரேரணையை நன்றாக விளங்கிக் கொள்வது மட்டுமே போதுமானதாகும். உதாரணமாக அரசாங்கம் மாகாண சபை முறையை ரத்துச் செய்ய எடுத்த முயற்சியே வட மாகாண சபையின் பிரச்சினையை ஜெனிவா வரை எடுத்துச் சென்றது. இந்தியா அருகில் இருக்கும் போது அவ்வாறு செய்ய முடியாது என்பதை அரசாங்கம் உணர்ந்திருக்க வேண்டும். அதன் படி போர் முடிவடைந்த உடன் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தி மாகாண சபை நிர்வாகத்தை ஸ்தாபித்து இருந்தால் அப் பிரச்சினை ஜெனிவா சென்றிருக்காது.

அதேபோல் சமயத் தலங்கள் தாக்கப்படும் போது அரசாங்கம் நாட்டின் சட்டத்தை அமுலாக்கியிருந்தால் அந்தப் பிரச்சினையும் ஜெனிவா சென்றிருக்காது. அது போன்ற பிரச்சினைகளை அவ்வாறு தீர்த்துக் கொண்டாலும் போர் காலத்தில் இடம்;பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து அரசாங்கத்தை விரட்டிக்கொண்டே வரும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X