2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

டெல்லியில் ஆட்சி அமைப்பது யார்?

A.P.Mathan   / 2014 மார்ச் 11 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. 9 கட்டமாக நடைபெறும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 24ஆம் திகதி நடக்கப் போகிறது. மே மாதம் 16ஆம் திகதி அனைத்து மாநிலங்களில் உள்ள வாக்குகளும் எண்ணப்பட்டு, ஒவ்வொரு கட்சிகளின் எம்.பி.க்களின் எண்ணிக்கையும் தெரிய வரும். அதில் தனிப்பெரும் கட்சியாக அதிக எம்.பி.க்களைப் பெற்று, அந்தக் கட்சியோ அல்லது அக்கட்சியை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகளோ 272 எம்.பி.க்களின் எண்ணிக்கையைத் தொட்டு விட்டால், அந்தக் கூட்டணியின் சார்பில் தேர்வு செய்யப்படுவர் இந்திய பிரதமராவார். 543 எம்.பி.க்களைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தில் 272 எம்.பி.க்கள் என்பது ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.பி.க்களின் பலம்.

தேசிய அளவில் பாரதீய ஜனதாக் கட்சி நரேந்திரமோடியே முன்னிறுத்தி தேர்தல் பிரசாரத்தில் குதித்து விட்டது. அக்கட்சியின் சார்பில் வேட்பாளர் பட்டியலும் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியோ ராகுல் காந்தியை முன்னிறுத்தாமல், தேர்தல் பிரசாரத்தில் குதித்து விட்டது. பத்தாண்டு காலம் பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன்சிங் அமைதி காக்கிறார். அடுத்த பிரதமர் பதவி ரேஸில் தான் இல்லை என்று அவர் முடிவு செய்து விட்டதால், காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாடும் ராகுல் காந்தி வசம் வந்து விட்டது. இதில் காங்கிரஸ் கட்சிக்கும் உருப்படியான கூட்டணி கிடைக்கவில்லை. சொல்லிக் கொள்ளும்படி கூட்டணி என்பது பீஹாரில் லாலு பிரசாத் யாதவுடன் உள்ள கூட்டணி மட்டும்தான். ஏற்கனவே கூட்டணியிலிருந்த கட்சிகள் எல்லாமே காங்கிரஸை விட்டு காததூரம் ஓடுகின்றன. அந்த அளவிற்கு காங்கிரஸ் கட்சியின் இமேஜ் பாதிக்கப்பட்டு நிற்கிறது. அதை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் காங்கிரஸ் தலைவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. போர்களத்திற்குப் போகும் முன்பே தோல்வியை ஒப்புக்கொண்ட படை தளபதி போல்தான் இன்று காங்கிரஸ் கட்சி களத்தில் நிற்கிறது.

ராகுல் காந்தியின் நடவடிக்கைகள் காங்கிரஸை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதை விட, கட்சியை தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்குடன் இருப்பதாகவே தெரிகிறது. அதனால்தான் காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூட தீவிர பிரசாரங்கள் எதையும் செய்யாமல் ராகுல் பாணிக்கு விட்டு விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். சோனியா காந்தியும் முன்பு போல் பிரசாரம் செய்ய முடியாத நிலையில், பிரதமர் மன்மோகன்சிங்கும் "ரிட்டையர்மென்ட் லைப்' நோக்கி பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறார். கூட்டணிக் கட்சிகள் இல்லாமல், தவித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு அக்கட்சி உருவாக்கிய தெலுங்கானா மாநிலத்தில் கூட கூட்டணி கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்திருக்கிறது. ஆனாலும் இன்றைய திகதியில் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் தனித்து நிற்கக் கூடிய கட்சியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

பா.ஜ.க.வைப் பொறுத்தமட்டில் களத்தில் அந்த கட்சியோ, அக்கட்சியின் கொள்கைகளோ களத்தில் இல்லை. அக்கட்சியின் அடிப்படைக் கொள்கைகளான ராமர் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது, காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் கொடுத்துள்ள அரசியல் சட்டப் பிரிவு 370 யை நீக்குவது எல்லாவற்றையும் பற்றி எந்த பா.ஜ.க. தலைவர்களும் வாய் திறக்கவில்லை. தேர்தல் களத்தில் இருப்பது எல்லாம் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் கொள்கைகள் மட்டுமே. வளர்ச்சி நாயகன், காங்கிரஸ் எதிர்ப்பு, ஊழல் ஒழிப்பு போன்ற மூன்று மோடியின் தாரக மந்திரங்களை முன் வைத்தே அக்கட்சி தேர்தல் களத்தில் நுழைந்திருக்கிறது. அந்தக் கட்சி தலைமையோ அல்லது பிரதமர் வேட்பாளராக இருக்கும் நரேந்திரமோடியோ பா.ஜ.க.வின் அடிப்படைக் கொள்கைகள் பற்றி விளக்காமல் இருப்பதால், மோடியின் மீது ஒரு தரப்பு வாக்காளர்களுக்கு இன்னும் சந்தேகப்பார்வைதான் இருக்கிறது. குஜராத் கலவரத்திற்கு கூட பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்தான் பட்டும் படாமலும் வருத்தம் தெரிவித்திருக்கிறார். நாட்டை ஆள விரும்பும் நரேந்திரமோடி இன்னும் "என் கொள்கை இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காப்பாற்றுவதுதான்' என்று வாய்திறந்து எந்த உறுதிமொழியையும் கொடுக்கவில்லை.

இந்த பிரச்சினையால் நரேந்திரமோடிக்கும் கூட்டணி கிடைப்பதில் சிக்கல் இருந்தாலும், மோடி இமேஜை நம்பி தங்கள் தேர்தல் அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்ள விரும்பும் கட்சிகள் மட்டும் இப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி கண்டிருக்கின்றன. பீஹாரில் ராம்விலாஸ் பாஸ்வான், தமிழகத்தில் வைகோ, விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் எல்லோருமே இந்த கேட்டகிரியில்தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். இவர்களுக்கு திராவிடக் கட்சிகளான அ.தி.மு.க.வுடனும், தி.மு.க.வுடனும் கூட்டணி வைப்பதில் சிக்கல். இவர்கள் எதிர்பார்க்கும் சீட்டுகளும் கிடைக்காது. இந்நிலையில், இருக்கின்ற கட்சிகளில் பா.ஜ.க.விடம் போய் சீட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்ற நோக்கில்தான் இப்படியொரு கூட்டணி உருவாகியிருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு பா.ஜ.க.வுடன் கூட்டணி சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடி இமேஜை வைத்துக் கொண்டு போதிய கூட்டணிக் கட்சிகளை திரட்ட பா.ஜ.க. முயன்று கொண்டிருக்கிறது. அதை வைத்துத்தான் அந்தக் கட்சியின் எதிர்காலம் பற்றி குறி சொல்ல முடியும்.

இந்த இரு அணிகளுக்கும் போட்டியாக மூன்றாவது அணி உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இடது சாரிக் கட்சிகளின் தலைவர் பிரகாஷ் காரத் அதற்கான முயற்சிகளில் இறங்கினார். முலயாம் சிங் யாதவ், நவீன் பட்நாயக், நிதிஷ்குமார், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களை அந்த அணிக்குக் கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொண்டார். பதினோரு கட்சியினர் கூடி சென்ற பிப்ரவரி 22ஆம் திகதி "கூட்டுக் கொள்கைப் பிரகடனம்' செய்தார்கள். அந்த பிரகடனத்தில் நான்கு அம்சத்திட்டம் ஒன்றைச் சொல்லி மூன்றாவது அணி என்று முழங்கினார்கள். ஆனால் அந்தக் கூட்டம் முடிந்த கையோடு, கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தமிழகத்தில் எந்த தொகுதியும் அலாட் பண்ணாமல் ஒதுக்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டும் குழம்பிப் போயிருக்கிறார்கள். அ.தி.மு.க. கூட்டணி என்று தொலை தூரம் பயணித்து விட்டு வேறு கூட்டணிப்பக்கமாக திரும்பி வரமுடியாமல் தவிக்கிறார்கள். தமிழகத்திற்கு வந்த பிரகாஷ் காரத் கூட, "மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்தே போட்டியிடும். நாங்கள் இல்லாமல் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸுக்கு மாற்று அரசை யாராலும் மத்தியில் அமைக்க முடியாது' என்று வேறு சொல்லி வைத்து விட்டார்.

இப்படி அகில இந்திய அளவில் தேர்தல் களம் சூடுபிடித்து நிற்கும் போது, தமிழகத்தில் அ.தி.மு.க. தனி அணி, தி.மு.க. தலைமையில் ஓர் அணி, விஜயகாந்த் தலைமையில் ஓர் அணி, காங்கிரஸ் தலைமையில் ஓர் அணி என்று நான்கு அணிகள் களத்திற்கு வந்து விட்டன. இரு கம்யூனிஸ்டு கட்சிகளிடத்திலும் தனித்துப் போட்டியிடுவதில் இன்னும் கருத்தொற்றுமை வரவில்லை. அப்படியேற்பட்டால் ஐந்து அணியாக உருவாகி விடும். இப்போதைக்கு ஐந்துமுனைப் போட்டிக்கு தமிழக நாடாளுமன்றத் தேர்தல் தயாராகிக் கொண்டிருக்கிறது. முதலில் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியிருப்பவர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா. அவர் தன் பிரச்சாரத்தில் மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசை தாக்குகிறார். அதற்கு ஆதரவு கொடுத்த தி.மு.க.வை சாடுகிறார். இது தவிர நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த அ.தி.மு.க. ஆதரவு கொடுக்கும் கட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகிறார். இலங்கை தமிழர் பிரச்சினையை மையப்படுத்தி பேசி வருகிறார். ஈழம் பற்றிய வாக்கெடுப்பு பற்றியும் பேசி வருகிறார். கச்சதீவைப் பற்றி கறாராக பேசுகிறார். ஆனால் மாநிலக் கட்சியால் வெளியுறவுக் கொள்கையில் எப்படியொரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்றும் தெரியவில்லை. அதேபோல் பாரதீய ஜனதாக் கட்சியே ஆட்சிக்கு வந்தால் கூட அப்படியொரு வெளியுறவுக் கொள்கை மாற்றம் வருமா என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. ஏனென்றால் இதுவரை இலங்கை தமிழர் பிரச்சினையாகட்டும், கச்சத்தீவு பிரச்சினையாகட்டும், தமிழக மீனவர்கள் பிரச்சினையாகட்டும், ஏன் ஐ.நா. மன்றத்தில் வரும் தீர்மானம் ஆகட்டும் எல்லாவற்றிலும் பா.ஜ.க.வின் நிலைப்பாடு ஓர் அகில இந்தியக் கட்சியின் நிலைப்பாடு போல்தான் இருக்கிறதே தவிர, மாநிலக் கட்சிகளின் நிலைப்பாடு போலவோ அல்லது பா.ஜ.க.வின் மாநில தலைவர்கள் சொல்லும் கருத்திற்கு ஏற்றது போல் கூட இல்லை என்பதுதான் உண்மை நிலைவரம்.

தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு தேர்தல் களத்திற்குச் செல்கிறது. தங்களுக்கு கூட்டணி இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் அக்கட்சியின் தேர்தல் பிரசாரத்தைத் தொடக்கப் போகிறார் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின். கட்சித் தலைவர் கலைஞர் கருணாநிதியைப் பொறுத்தமட்டில் முக்கிய இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேறு இடங்களில் அவர் பேச்சுக்கள் அடங்கிய டேப்புகள், அல்லது வீடியோ கான்பரன்ஸிங் மூலம் உரையாடல்கள் போன்றவை கூட தி.மு.க.வின் புதுமையான தேர்தல் பிரசாரமாக இருக்கலாம். காங்கிரஸ் கட்சி இன்னமும் தமிழகத்தில் என்ன செய்வது என்பது பற்றியே யோசித்ததாகத் தெரியவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் நாகர்கோயில் கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், "காமராஜர் காலம் முதலீடுகள் காலம். இப்போது நடக்கும் ஆட்சி இலவசங்களின் காலம். எது வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்' என்று வாய் திறந்திருக்கிறார்.

தமிழக தேர்தல் களம் நாடாளுமன்றத் தேர்தலுக்காக சூடுபிடித்திருக்கிறது. வாக்கு வங்கியை நம்பி களத்தில் குதிக்கும் கட்சிகள் எல்லாம் கச்சை கட்டி நிற்கின்றன. புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளில் அதிக இடங்களில் வெற்றி பெறும் கட்சிக்கு டெல்லி யோகம் காத்திருக்கிறது. கடந்த 17 வருடங்களில் அந்த யோகம் தி.மு.க.விற்கு இருந்தது. இப்போது அது தி.மு.க.விற்கே போகுமா அல்லது அ.தி.மு.க. கைக்கு மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் கடந்த 25 வருடங்களாக மத்தியில் ஆட்சி அமைப்பது யார் என்பதை முடிவு பண்ணும் அதிகாரம் தமிழகத்திற்கு இருந்திருக்கிறது. அது இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும் தொடரும் என்றே தெரிகிறது.

You May Also Like

  Comments - 0

  • ரமேஷ்நாத் Tuesday, 11 March 2014 08:03 AM

    இந்திய மக்கள் ஒரு தெளிவான தீர்வு அளிப்பார்கள்... வாழ்க ஜனநாயகம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X