2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பிள்ளையின் கையில் சிக்குமா குடுமி?

Suganthini Ratnam   / 2014 மார்ச் 14 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் தான் இப்போது எல்லோராலும் விவாதிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது. 

ஜெனீவாவில் அடுத்து என்ன நடக்கப் போகிறது?. இலங்கைக்கு எதிரான தீர்மானம் கடுமையானதாக இருக்குமா? நீர்த்துப் போகுமா?
உண்மையில் இந்தத் தீர்மானம் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்குமா? அல்லது அரசாங்கம் சொல்வது போல இதனால் எதையுமே சாதிக்க முடியாதா?

இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் பலருக்கும் உள்ளதை மறுக்க முடியாது.

ஜெனீவாவில் அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு குறித்த வாதப் பிரதிவாதங்கள் ஜெனீவாவில் மட்டுமன்றி இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் கடுமையாகவே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்தத் தீர்மான வரைவை இப்படியே நிறைவேற்றுவதானது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியை வழங்காது என்ற கருத்து பலரிடமும் காணப்படுகிறது. அதனால், இது இன்னமும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழர் தரப்பில் மிகப் பெரிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தத் தீர்மானத்தை மிகப் பெரிய ஏமாற்றமாக காண்பிக்கும் போக்கு ஒன்று ஆரம்பத்தில் தென்பட்டாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை அத்தகைய முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விட வலுவானதாக இருப்பதாக இதனை அவர்கள் வரவேற்றுள்ளதுடன் சர்வதேச விசாரணைப் பொறிமுறை பற்றிய தெளிவான அம்சங்களுடன் இது வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று ஜனநாயக ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ள ஒன்றாக இருப்பதால் இரா.சம்பந்தனினதும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முதல்வர் என்ற வகையில் சி.வி.விக்னேஸ்வரனினதும் குரல்கள் நிச்சயம் சர்வதேச சமூகத்தினால் கவனத்தில் கொள்ளப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இலங்கை அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை நிராகரிக்கின்ற நிலையில், தமிழர் தரப்பும் இதை நிராகரித்து விட்டால் சர்வதேச சமூகம் இந்தப் பிரச்சினையை கைவிட்டு விடும் ஆபத்து உள்ளது என்பதை இரா.சம்பந்தன் பேட்டி ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், பொறுப்பற்ற முறையில் இதனை நிராகரிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது ஒரு முக்கியமான விடயம்.

இதற்கிடையே, ஜெனிவாவில் தற்போதைய வரைவின் உள்ளடக்கங்கள் நீர்த்துப் போகாமல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டால், அதை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு சர்வதேச பொறிமுறை உருவாவதற்கு வழியேற்படும்.

அது நேரடியாக விசாரணைகளை மேற்கொள்கிறதோ, இல்லையோ உள்நாட்டுப் பொறிமுறைகளை கண்காணிப்பதற்காகவேனும் அமைக்கப்பட்டேயாக வேண்டும்.

அது இந்தத் தீர்மான வரைவில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் இணங்கினாலும் சரி, இணங்காது போனாலும் சரி, உள்நாட்டுப் பொறிமுறைகளுக்கு ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் அவற்றைக் கண்காணிக்கவும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலையீடுகள் இருக்கப்போகின்றன.
எனவே அரசாங்கத்தினால், சர்வதேச தலையீடுகளிலிருந்து இனித் தப்பிக்கொள்ள முடியாது.

உள்நாட்டுப் பொறிமுறைகளுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில்  கடந்த 5ஆம் நாள் உரையாற்றியபோது குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையை பொறுத்தவரையில் கொடுத்த வாக்குறுதிகளை மீறுவது ஒன்றும் அதற்குப் புதியதல்ல.

அது அரசாங்கத்துக்கு கைவந்த கலையாகவே இருந்தாலும், பொறுப்புமிக்கதொரு சபையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை அதனால் அவ்வளவு இலகுவாக மீறமுடியாது.

எனவே, குறைந்தபட்சம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கண்காணிப்புப் பொறிமுறைக்குள்ளேனும் இந்தத் தீர்மான வரைவு அரசாங்கத்தைச் சிக்கவைக்கப் போகிறது என்பது உறுதியாகத் தெரிகிறது. இதில் அரசாங்கத்தின் விருப்பு, வெறுப்புகள் எதுவுமே கணக்கில் எடுக்கப்பட போவதில்லை.

அடுத்த விவகாரம், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள முதல் தீர்மான வரைவு  இப்படியே நிறைவேற்றப்படுமா  அல்லது பலவீனப்படுத்தப்படுமா  அல்லது வலுப்படுத்தப்படுமா? என்பது.  தமிழர் தரப்பும் சரி, மனிதஉரிமை அமைப்புகளும் சரி, தீர்மானத்தை முன்வைக்கவும் அதற்கு ஆதரவளிக்கவும் துடிக்கும் நாடுகளும் சரி தீர்மான வரைவு இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன.

அதாவது, சர்வதேச விசாரணைப் பொறிமுறை பற்றிய தெளிவான வழிகாட்டுதல் தீர்மானத்தில் இடம்பெற வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

அதேவேளை, தமிழர் தரப்பில் மிதவாதப் போக்காளர்களாக உள்ள ஒரு தரப்பினர், இந்த தீர்மான வரைவு தமிழரின் இனப் பிரச்சினையை தெளிவாக சுட்டிக்காட்டத் தவறிவிட்டதாக குறைபடுவதையும் அவதானிக்க முடிகிறது.

ஒரு உள்நாட்டுப் போரில் நடந்த மீறல்களுக்குப் பரிகாரம் தேடும் வகையிலும் இலங்கையில் ஆட்சி மாற்றத்தின் ஊடாக நல்லாட்சியை ஏற்படுத்தும் வகையிலும் தான் இந்தத் தீர்மான வரைவு கவனம் செலுத்துவதாக அவர்கள் வாதிடுகின்றனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழரின் இனப்பிரச்சினையும் அதற்கான தீர்வும் முதன்மைப்படுத்தப்படாது போனால், சர்வதேச கவனிப்பிலிருந்து அது முற்றாகவே நழுவிப் போய்விடக் கூடும் என்றும் அதற்கான சூழல் இனிக் கிடைக்காமல் கூடப் போகலாம் என்றும் அவர்கள் அச்சம் வெளியிடுகின்றனர். இதனைத் தவறான பார்வையாக கொள்ள முடியாது.

முக்கியமாக இந்தத் தீர்மான வரைவு போர்க்காலச் சம்பவங்கள், அதற்கு அடிப்படையான பிரச்சினைகள் என்பதை விட போருக்குப் பிந்திய சூழலை மாற்றியமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்துகிறது என்பதை மறுக்க முடியாது.

இந்த நிலையில், இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காண்பதற்கு இந்தத் தீர்மான வரைவு ஒரு ஆவணமாக மாற்றப்பட வேண்டும் என்ற தமிழர் தரப்பின் கோரிக்கை மீதுள்ள நியாயங்களை உதாசீனம் செய்யவும் முடியாது.

இந்தக் கட்டத்தில் தீர்மான வரைவு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தே, ஜெனீவாவில் ஒங்கி ஒலிப்பதாக அதிகாரபூர்வமற்ற கலந்துரையாடல்கள் வெளிப்படுத்தியுள்ளன.

குறிப்பாக ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகள் தீர்மானத்தை தேவையற்றது என்றும் அதனை நீர்த்துப் போகச் செய்யவும் முனைந்தாலும் முக்கியமான நாடாக இந்தியா மட்டும் வெளிப்படையாக எதையும் செய்யமுடியாத நிலையில் உள்ளது.

தீர்மான வரைவு கையில் கிடைக்கவில்லை என்று கூறிவந்த இந்தியா, இப்போது அது கையில் கிடைத்துவிட்ட நிலையில், அதை ஆராய்கிறோம் என்கிறது.

அதேவேளை, இன்னொன்றையும் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

தேவைப்பட்டால் தீர்மான வரைவு குறித்து அமெரிக்காவுடன் பேச்சு நடத்துவோம் என்று கூறியுள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன்.

முன்னர் தீர்மானம் குறித்து அமெரிக்காவுடன் நேரடியாகப் பேசுமாறும் வெளிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாக தகவல்கள் வெளியானது நினைவிருக்கலாம்.

திடீரென இப்போது தேவைப்பட்டால் அமெரிக்காவுடன் பேசுவோம் என்கிறது இந்தியா.

இந்தப் பின்னணியில் அண்மையில் புதுடில்லிக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால்
இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுக்களும் முக்கியம் பெற்றுள்ளன.

இது பற்றி செய்தி வெளியிட்டிருந்த ஹிந்துஸ்தான் ரைம்ஸ், இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு போதுமான எதையும் செய்யவில்லை என்பதில் இருநாடுகளும் உடன்பட்டுள்ளபோதிலும், ராஜபக்ஷ அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைக்கும் விடயத்தில் வேறுபட்ட கண்ணோட்டத்தில் உள்ளதாக குறிப்பிட்டிருந்தது. வழக்கம் போலவே சீனாவைக் காரணம் காட்டி ஒதுங்கப் பார்ப்பதாக அந்தச் செய்தியின் சாரம் அமைந்திருந்தது.

இத்தகைய பின்னணியில் அமெரிக்கத் தீர்மான வரைவை நீர்த்துப்போகச் செய்ய இந்தியா முனையுமா என்ற கேள்வியும் இருக்கிறது. ஆனால், இப்போது சவுத்புளொக்கிற்குப் பிடித்துள்ள சனி என்னவென்றால் நாடாளுமன்றத் தேர்தல் தான்.

ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் யாருமே கூட்டணியில் சேர்க்கவில்லை. இதனால், இந்தியாவுக்கு மிகவும் இக்கட்டான நிலை ஒன்று உள்ளது.

தீர்மானம் பெரியளவில் வலுப்பெறுவதற்கு அதாவது சர்வதேச விசாரணை விடயத்தில் இன்னும் வலுவான வார்த்தைகள் அதில் உள்ளடக்கப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவாகவே தென்படுகிறது. ஆனால், இலங்கைக்கு நெருக்கடியை அதிகரிக்கும் வகையில் இது மேலும் வலுப்படுத்தப்படலாம்.

எது எவ்வாறாயினும், இந்த தீர்மான வரைவு இலங்கைக்கு இன்னும் ஒரு வருடகால அவகாசத்தை அளிக்கும் என்றும் அதற்குள் எதையாவது செய்து தப்பிக்கப் பார்க்கலாம் என்றும் அமைச்சர்கள் சொல்வதையும் கேட்க முடிகிறது.

அதே அமைச்சர்களும் ஜனாதிபதியும் தான், எந்த சர்வதேச அழுத்தங்களுக்குப் பணிந்துபோகப் போவதில்லை என்றும் கூறுகின்றனர்.
உண்மையிலேயே இந்தத் தீர்மான வரைவைக் கண்டு அரசாங்கம் அச்சம் கொள்ளவில்லை என்றால், இதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்றால், எதற்காக நாடு நாடாக ஓடித் திரிய வேண்டும்?

இஸ்ரேலைப் போன்று  இந்தப் பேரவையும் வேண்டாம். அதன் தீர்மானங்களையும் ஏற்கமாட்டோம் என்று தூக்கியெறிந்து விட்டுப் போயிருக்கலாமே.  ஆனால், இலங்கையால் அவ்வாறு செய்ய முடியாது. இஸ்ரேலுக்கு இருக்கும் தற்துணிவு இலங்கைக்கு இல்லை.

அது மட்டுமன்றி, அத்தகைய முடிவை எடுத்து விட்டு, சர்வதேச சமூகத்துடன் மோதுகின்ற நிலையிலும் இலங்கை இல்லை.
எனவே, இப்போதைக்கு தேர்தல் மேடைகளில் அரசாங்கம் வேண்டுமானால், இந்த தீர்மானத்தை நிராகரிக்கலாம், அடிபணியமாட்டோம் என்று வீம்பு பேசலாம்.

ஆனால்,  எங்கோ ஒரு புள்ளியில் இலங்கை அரசாங்கம் சர்வதேச பொறிமுறையுடன் முட்டித் தான் ஆகவேண்டியிருக்கும்.
இதை அரசாங்கம் தவிர்க்க நினைத்தாலும், கூடத் தடுக்க முடியாது.

ஆனாலும், தனது குடுமி முழுதாக நவநீதம்பிள்ளையிடம் சிக்கப் போவதில்லை என்று அரசாங்கம் கொஞ்சம் நிம்மதி கொள்ளலாம்.
அவரது பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் முடிவடையவுள்ளதால், அரசாங்கத்தின் குடுமி அடுத்த வரப் போகிறவரிடம் தான் தான் சிக்கப் போகிறது.

அடுத்த வரப்போகும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்ற கலக்கம் இப்போதே அரசாங்கத்துக்கு வந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X