2025 மே 19, திங்கட்கிழமை

மூக்குடைபடும் இலங்கை

Suganthini Ratnam   / 2014 மார்ச் 21 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் மூலமாக அனைத்துலக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் ஜெனீவாவில் தீவிரமடைந்துள்ளன. 

இந்தச் சூழலில் இத்தகைய பரந்துபட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என்று கடந்த திங்கட்கிழமை கொழும்பில் நடந்த கருத்தரங்கொன்றில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.

ஏற்கெனவே சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்திய தமிழர் தரப்பு, அத்தகைய நேரடியான சர்வதேச விசாரணைப் பொறிமுறை குறித்து அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்தத் தவறியதால், சற்றுக் குழம்பிய நிலையில் உள்ளது.

இத்தகைய கட்டத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு விசாரணைகளை மேற்கொள்வதற்கான சட்ட ரீதியான அதிகாரமோ, நிதி ஆதாரமோ கிடையாது என்ற வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் கருத்து அவர்கள் மத்தியில் இன்னும் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும்.

அவ்வாறாயின், உண்மையில் ஜெனீவாவில் என்ன தான் நடக்கிறது என்ற சந்தேகம் இந்தக் கட்டத்தில் எழுவது இயல்பு.
கொழும்பில் நடந்த கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மூன்று விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

முதலாவது விரிவான விசாரணைகளை நடத்துவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு தார்மீகப் பொறுப்பு இல்லை என்பது. இரண்டாவது இத்தகைய விசாரணைகளைச் செய்வதற்கு சட்ட ரீதியான அதிகாரம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு கிடையாது என்பது. மூன்றாவது இத்தகைய விசாரணைகளை முன்னெடுப்பதற்கான  நிதி ஆதாரம் இல்லை என்பது.

இவற்றில் முதலாவது தவிர்ந்த, ஏனைய இரண்டு காரணங்களும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸினால் மட்டும் முன்வைக்கப்பட்டவை அல்ல.

அமெரிக்கா தலைமையிலான நாடுகளினால் முன்வைக்கப்பட்ட தீர்மான வரைவு குறித்து ஜெனீவாவில் நடத்தப்பட்ட இணைக் கலந்துரையாடல்களின்போது, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், கியூபா போன்ற இலங்கை ஆதரவு நாடுகளாலும் இது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அந்த நாடுகள் நவநீதம்பிள்ளையின் தார்மீகப் பொறுப்புக் குறித்து வாய் திறக்கவில்லை. ஆனால், இலங்கை அரசாங்கம் தாராளமாகவே அவருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகிறது.

நவநீதம்பிள்ளைக்கு தார்மீகப் பொறுப்பு இல்லை என்பதற்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ள காரணம் இது தான்.
'விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு திறந்த மனம் வேண்டும்.

போர் நடந்த காலப்பகுதியிலேயே நாட்டில் தீவிரவாதம் இல்லை, இலங்கை அரசாங்கம் தீவிரவாதம் இருப்பதாகக் காட்டி போரை நடத்துவதாக கூறியவர் தான் நவநீதம்பிள்ளை.

போர் முடிந்து ஒருவார காலப் பகுதிக்குள் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியதுடன், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை சர்வதேச விசாரணை தேவை என்று பிரசாரம் மேற்கொண்டு வந்தவர். இத்தகைய தார்மீக உணர்வு இல்லாத ஒருவரால் எப்படி விரிவான விசாரணைகளை மேற்கொள்ள முடியும்?'

இதுதான், நவநீதம்பிள்ளைக்கு விரிவான விசாரணை நடத்தும் தார்மீக உரிமை இல்லை என்று இலங்கை கூறுவதற்கான காரணம்.
அதாவது அரசாங்கம் எப்போதும் கூறுவது போல வெளிப்படையாகச் சொல்வதானால் பக்கச்சார்பானவர், பாரபட்சமாக நடப்பவர் என்று கூறலாம். ஆனால், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மான வரைவில் எங்குமே நவநீதம்பிள்ளை என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
எந்தவொரு தனி மனிதருக்கும் பொறுப்பளிக்கும் வகையில் இந்தத் தீர்மான வரைவு அமைந்திருக்கவில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகமே விசாரணையை முன்னெடுக்க வேண்டும். அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தான் தீர்மான வரைவில் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு நவநீதம்பிள்ளை தலைமை தாங்குவதால், அவரது செல்வாக்கு விசாரணையிலிருக்கும் என்ற கருத்தும் தவறானது.

ஏனென்றால், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதியுடன் அவர் ஓய்வுபெறப் போகிறார். ஆக, இன்னும் ஐந்து மாதங்களுக்கு மட்டுமே அவரது செல்வாக்கு  அங்கு இருக்கப் போகிறது. ஆனால், விசாரணை பற்றிய முழு அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு ஒரு  வருடகால அவகாசம் உள்ளது.
எனவே, நவநீதம்பிள்ளை என்ற தனி மனிதரை வைத்து விசாரிப்பதற்கான தார்மீகப் பொறுப்பு இல்லை என்று நிராகரிக்கப்படுவது உலகின் காதுகளில் ஏறப் போவதில்லை.

அடுத்து, இரண்டாவது விடயத்துக்கு வருவோம்,

நவநீதம்பிள்ளைக்கு விசாரணைகளை மேற்கொள்வதற்கான சட்ட அதிகாரம் இல்லை என்கிறார் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்.
அதாவது 'ஒரு நாட்டின் மீது விரிவான விசாரணை நடத்துவது மனித உரிமைகள் ஆணையாளரின் கடமை அல்ல. இது குறித்து ஐ.நா. சாசனத்தில் எந்தப் பகுதியிலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை' என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், கடந்த திங்கட்கிழமை 17ஆம் திகதி ஜெனீவாவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பின்போது, விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரம் தமக்கு உள்ளது என்பதை நவநீதம்பிள்ளை உறுதியாக கூறியிருந்தார்.

ஐ.நா.  மனித உரிமைகள் பேரவையின் ஒப்புதலுடன் விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதுவும் உள்ளக விசாரணைப் பொறிமுறைகளுக்கு போதுமான கால அவகாசம் அளிக்கப்பட்டு, அது திருப்தியளிக்கத்தக்க பெறுபேற்றைத் தராத நிலையில் தான், சர்வதேச சமூகம் இத்தகைய விசாரணையை முன்னெடுக்கத் துணிகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேவேளை, மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு இல்லையென்று வாதிடும் இலங்கை அரசாங்கமும் சரி, அதன் தோழமை நாடுகளும் சரி இதற்கு முன்னர் நடத்தப்பட்ட விசாரணைகளை மறந்துவிட்டன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச விசாரணை ஒன்று தொடர்பான விவகாரம் விவாதத்துக்கு வருவது இதுதான் முதல்முறை அல்ல.
ஏற்கெனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய,  ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் விசாரணைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

'மனித உரிமை மீறல்கள் குறித்து தேசிய மட்ட விசாரணைகளை நடத்துவதற்கு ஒரு அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறும்போது, அனைத்துலக விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்' என்று கூறுகிறது. சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்களுக்கான ஜெனீவா அக்கடமி 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வெளியிட்டுள்ள ஒரு ஆவணம்.

இலங்கை விவகாரம் சார்ந்த இந்த ஆவணம் வெளியிடப்பட்டதல்ல. பொதுவான ஒரு உயர்மட்ட நிகழ்ச்சி நிரலுக்காவே இது தயாரித்து வெளியிட்டப்பட்டது.

எனவே, இலங்கையை பழிவாங்குவதற்காகவே சர்வதேச விசாரணை என்ற விடயம் முன்னிறுத்தப்படுவதாக எவராலும் கருதமுடியாது.
அடுத்து, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் மூலம் 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டுவரை பல சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவற்றில் சில உண்மை கண்டறியும் விசாரணைகள். அவை பெரும்பாலும் சிறப்பு அறிக்கையாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன அல்லது சுதந்திரமான நிபுர்ணர்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வேறு சில, சர்வதேச விசாரணை ஆணைக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள்.

இதற்கு உதாரணமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு அமைவாக உருவாக்கப்பட்ட சர்வதேச விசாரணை ஆணைக்குழுக்களின் சில விபரங்களை இப்போது பார்க்கலாம்.

1. இஸ்ரேலியப் படைகளால் லெபனானில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், அங்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விசாரிக்க, 2006ஆம் ஆண்டு  ஓகஸ்ட்  மாதம் 11ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய லெபனான் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

மூன்று நிபுணர்கள் இந்த விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

2. லிபியாவில் இடம்பெற்ற சர்வதேச மனித உரிமைச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக மூன்று நிபுணர்களைக் கொண்டதாக லிபியா மீதான ஐ.நா.வின் சுதந்திர விசாரணை ஆணைக்குழு 2011ஆம் ஆண்டு  பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய நியமிக்கப்பட்டது.

3. 2010ஆம் ஆண்டு ஐவரிகோஸ்ட்டில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் அதற்கான சூழமைவுகள் குறித்து  விசாரிக்க, 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம்  25ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய சர்வதேச விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

4. சிரியாவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க மூன்று நிபுணர்களைக் கொண்ட சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்குழு 2011ஆம் ஆண்டு  ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக உருவாக்கப்பட்டது.

5. வடகொரியாவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க, 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய மூன்று பேர் கொண்ட சர்வதேச விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரித்து தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவுக்குத் தலைமை தாங்கிய மர்சுகி தருஸ்மனே, வடகொரியா குறித்த  சர்வதேச விசாரணைக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.

இவையெல்லாம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு சுதந்திரமான சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என்பதற்கான உதாரணங்கள்.

இது போன்றதொரு, விசாரணைக் குழுவை உருவாக்கவே அமெரிக்கத் தீர்மான வரைவு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு அதிகாரமளிக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னொன்றையும் நினைவுகூர்வது பொருத்தம்.

2010ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மீறல்கள் குறித்து தமக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழுவொன்றை நியமித்தபோதும், இலங்கை அரசாங்கம் இது போன்று தான் கூறியது.

அதாவது இத்தகைய நிபுணர் குழுவை நியமிப்பதற்கு ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு அதிகாரமில்லை என்றும் ஐ.நா. சாசனத்தில் அது பற்றிக் குறிப்பிடவில்லை என்றும் எகிறிக் குதித்தது.

ஆனால், கடைசியில் அந்த நிபுணர் குழுவின் அறிக்கையே சுற்றி வளைத்து இலங்கையின் கழுத்தை இப்போது நெரித்துக்கொண்டிருக்கிறது.
இனி, வெளிவிகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்ட மூன்றாவது விடயத்துக்கு வருவோம்,

'விரிவான விசாரணைகளை நடத்த அதிகாரிகள், வசதிகள் மற்றும் சலுகைகள் தேவை.

இதற்கான வரவு - செலவுத் திட்டம் நவநீதம்பிள்ளைக்கு ஒதுக்கப்பட்டிருக்காத நிலையில், அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மான வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோன்று, 2015ஆம் ஆண்டு  மார்ச் மாதம் எவ்வாறு இலங்கைக்கு எதிரான விசாரணை நடத்த முடியும்?' என்று அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

முதலில் விசாரணை நடத்தும் அதிகாரமில்லை என்று கூறிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இலங்கையின் தோழமை நாடுகள், பின்னர் அதற்கு நிதி வளம் இல்லை என்று கூறுவது விந்தையானது.

அதைவிட, ஏற்கெனவே சர்வதேச விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.

மேலும், சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்களுக்கான ஜெனீவா அக்கடமி 2011ஆம் ஆண்டு டிசெம்பரில் வெளியிட்ட ஆவணத்திலும் இத்தகைய விசாரணைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐ.நா. வரவு - செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் மூலம் இதற்கான நிதியைப் பெறமுடியும் என்று கூறுகிறது இந்த ஆவணம்.

ஆக, அமெரிக்கா முன்வைக்கும் தீர்மான வரைவு தொடர்பாக இலங்கை முன்வைக்கும் வாதங்கள் எந்தளவுக்கு பலவீனமானவை என்பதை இவையே நிரூபித்துள்ளன.

இலங்கை அரசாங்கம் சர்வதேச அரங்கில் தொடர்ந்து எதற்காக மூக்குடைபட்டு வருகிறது என்பதை இப்போது உணர முடிகிறதல்லவா?


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X