2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வந்துவிட்டது சர்வதேச விசாரணை

Kanagaraj   / 2014 மார்ச் 30 , பி.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

'முறையான பெறுபேறுகளுடனானதும் நம்பகமானதுமான உள்நாட்டு விசாரணை பொறிமுறை ஒன்றின் அவசியம் தொடர்பாகவும் தொடர்ந்து இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் உயர்ஸ்தானிகர் செய்த சிபாரிசுகளை கருத்தில் கொள்ளும் மனித உரிமை பேரவை,
'கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கான கால எல்லைக்குள் இலங்கையில் இரு சாராரினாலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அவற்றோடு சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பாக விரிவான விசாரணையொன்றை நடத்துமாறு உயர்ஸ்தானிகரின் அலுவலகத்திடம் கேட்டுக் கொள்கிறது.'

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடரின் போது இலங்கை தொடர்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உட்பட ஐந்து நாடுகளால் சமர்ப்பிப்பட்டு கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் மிகவும் பாரதூரமான வாசகம் இதுவாகும்.
அதனை சற்று இலகுவான மொழியில் கூறுவதாயின் '2002ஆம் ஆண்டு 22ஆம் திகதி முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி வரையிலான காலக்கட்டத்தில் இலங்கையில் பாதுகாப்புப் படையினரும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பும் மேற்கொண்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையொன்றை நடத்துமாறு மனித உரிமை பேரவை உயர்ஸ்தானிகரின் அலுவலகத்திடம் கேட்டுக் கொள்கிறது' என்பதே.

இந்த பிரேரணை நிறைவேறுவதற்கு முன்னர் அதன் பூர்வாங்க நகல் பிரதியொன்று கடந்த மார்ச் 3ஆம் திகதி மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளிடம் விநியோகிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் உறுப்பு நாடுகள் மற்றும் வெளி அமைப்புக்கள் மனித உரிமை பேரவை வளாகத்தின் நடைபெற்ற கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளில் தெரிவித்த கருத்துக்களை கவனத்தில் கொண்டு அந் நகல் திருத்தப்பட்டு மீண்டும் கடந்த 14 ஆம் திகதி மற்றுமொரு நகல், உறுப்பு நாடுகளிடையே விநியோகிக்கப்பட்டது.

அந்த இரண்டாவது நகல் சற்று காரமான வார்த்தைகளால் அமைந்திருந்தது. மீண்டும் அந்த நகல் வரைவும் உறுப்பு நாடுகள் மற்றும் வெளி அமைப்புக்களின் கருத்துக்களின் படி திருத்தப்பட்டே இறுதி வரைவு தயாரிக்கப்பட்டு வியாழக்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்பட்டு இருந்தது. அதன் 10 வது வாசகத்தையே நாம் இக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டோம்.

3ஆம் திகதி முன்வைக்கப்பட்ட முதலாவது நகலில்  சர்வதேச விசாரணை என்ற விடயம் குறிப்பிடப்படவில்லை. இரண்டாவது நகலில் இவ்வளவு தெளிவாக அது குறிப்பிடப்படவில்லை. எனவே புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும் தமிழக தலைவர்களும் இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் அது தொடர்பாக தமது அதிருப்தியை தெரிவித்ததோடு மனித உரிமை பேரவை வளாகத்தில் நடைபெற்ற பல கூட்டங்களின் போது அவர்கள் சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தினர்.

அதற்காக இலங்கையிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், வட மாகாண சபை உறுப்பினரும் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி அனந்தி சசிதரன் போன்றோர் ஜெனிவாவுக்குச் சென்றிருந்தனர்.

இறுதியில் அவர்களது முயற்சி பயனளித்தது. பிரேரணையின் இறுதி வரைவில் சர்வதேச விசாரணை தொடர்பான சிபாரிசு முறையாக உள்ளடக்கப்பட்டது. அந்தப் பிரேரணையே நிறைவேற்றப்பட்டது. இப்போது மனித உரிமை ஆணையாளர் (உயர் ஸ்தானிகர்) இலங்கையில்,அரச படைகளும் புலிகளும் மேற்கொண்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த முடியும்.

இவ்வளவு பாரதூரமான விடயமொன்று மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டு இருந்தும் இலங்கையில் டெய்லி மிரர் பத்திரிகை தவிர்ந்த எந்தவொரு பத்திரிகையும் அந்த விடயத்தை மறுநாள் தமது தலைப்புச் செய்தியில் உள்ளடக்கவில்லை. ஏனைய சகல பத்திரிகைகளும் பிரேரணைக்கான வாக்கெடுப்பின் விவரங்களையே தலைப்புச் செய்தியின் தலையங்கமாக எடுத்துக் கொண்டிருந்தன.

ஊடகங்களே இந்த விடயத்தில் இவ்வளவு தெளிவற்று இருப்பதாயின் பிரேரணையைக் காட்டி ஆட்சியாளர்களும் அரச எதிர்ப்பாளர்களும் மக்களை ஏமாற்றுவதைப் பற்றி ஆச்சரியப்படத் தேவையில்லை. எனவே பிரேரணை நாட்டுப் பிரிவினைக்கான ஆரம்பம் என்றும் புலிகளை தோற்கடித்தற்காக அரசாங்கத்தை பழிவாங்குவதற்காக கொண்டுவரப்பட்டது என்றும் அரசாங்கம் கூறலாம். புலிகளுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்படப் போகிறது என்பதை தமிழ் அமைப்புக்கள் மூடி மறைக்கலாம்.

மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் அதற்கு எதிராக 12 நாடுகளும் வாக்களித்ததோடு மிகுதி 12 நாடுகளும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத நாடுகள் உட்பட  அதற்கு ஆதரவளிக்காத 24 நாடுகளும் இருந்தமையினால் தார்மிக ரீதியில் தாமே வெற்றி பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் சார்பில் கூறப்படுகிறது. இது தேர்தல்களின் பின்னர் எதிர்க்கட்சிகள் முன்வைப்பதைப் போன்ற வாதமாகும்.

பிரேரணைக்கு ஆதரவளிக்காத நாடுகளின் எண்ணிக்கை அதற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளின் எண்ணிக்கையை விட அதிகம் என்பது உண்மை தான். ஆனால் பிரேரணை அமுலுக்கு வருவதற்கு அது தடையாவதில்லை.

வாக்களிப்பில் கலந்து கொண்ட மூன்று நாடுகள் வாக்களித்த விதம் பலரது கவனத்தை ஈர்த்துக் கொண்டது. சவூதி அரேபியா, குவைத் மற்றும் இந்தியா இந்த மூன்று நாடுகளாகும். இதற்கு முந்திய இரண்டு வருடங்களிலும் அமெரிக்கா, இலங்கை தொடர்பாக பிரேரணைகளை சமர்ப்பித்த போது சவூதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய இரண்டு முஸ்லிம் நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களித்தன. ஆனால் இவ்வருடம் அவ்விரண்டு நாடுகளும் இலங்கைக்கு எதிராக (பிரேரணைக்கு ஆதரவாக) வாக்களிக்கும் என்று அண்மையில் பல செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால் அவ்விரண்டு நாடுகளும் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. சவூதி அரேபியா கடந்த முறையைப் போலவே இம் முறையும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது. குவைத் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. கடந்த இரண்டு முறையும் இலங்கைக்கு எதிராக வாக்களித்த இந்தியா இம் முறை வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இது பலருக்கு ஆச்சரியமாக அமைந்தது.

இலங்கையில் போர் நடைபெற்ற போது இந்தியா, புலிகளை அழிப்பதற்காக இரகசியமாக இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளித்தது. புலிகளின் கப்பல்களை அழிக்க தகவல்களை வழங்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனக் கூறப்படுகிறது. எனவே மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்தியா இலங்கையை கண்டிக்க முடியாது. ஆனால் தமிழ் நாட்டின நெருக்குதலின் காரணமாக இந்தியா கடந்த இரு வருடங்களிலும் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தது.

இந்த முறையும் இந்தியா பிரேரணைக்கு ஆதரவாக (இலங்கைக்கு எதிராக) வாக்களிளக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்பட்டது. உண்மையிலேயே இந்திய அரசாங்கமும் கடைசி நேரம் வரை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவே இருந்தது. கடந்த மாதம் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்ற ஊடகவியலாளர்கள் குழுவொன்றை சந்தித்த அந் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அதனை சூட்சமமாக தெரிவித்து இருந்தார்.

பிரேரணைக்கான வாக்கெடுப்பு நெருங்கி வந்த நிலையில் வெளியிடப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அது தமிழக வாக்குகளுக்காக தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்ட வாசகமாகும். ஆனால் சர்வதேச விசாரணை என்று அதில் குறிப்பிடப்படவில்லை.

ஆனால். சர்வதேச விசாரணை என்ற விடயம் பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட போது இந்தியா இக்கட்டான நிலைமையொன்றை எதிர்நோக்கியது. பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தால் தமிழக மக்கள் திருப்பதியடைவார்கள். அது அடுத்த மாதம் நடைபெறவிருக்கம் லோக் சபா தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்திலிருந்து ஒரு சில வாக்குகளையாவது அதிகரித்துக் கொள்ள உதவும் . ஆனால் காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கி வரும் இந்தியா, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையொன்றை ஆதரித்தால் நாளை அது இந்தியாவுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த முன்னுதாரணமாக அமையும். எனவே தான் இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் காங்கிரஸ் கட்சி இதனை தமிழக மக்களுக்கு எவ்வாறு விளக்கப் போகிறது என்பது தெளிவாகவில்லை. தேர்தல் காலங்களில் மக்கள் உணர்வுகளுக்கே இடமளிப்பார்கள் என்றும் அக் காலங்களில் தர்க்க ரீதியாக எதனையும் மக்களுக்கு விளக்க முடியாது என்றும் குர்ஷித்தே மேற்படி ஊடக சந்திப்பின் போது கூறியிருந்தார். வேண்டுமென்றால் சந்தர்ப்பவாதத்தை பாவித்து காங்கிரஸ் கட்சி தமிழக மக்களிடம் சென்று தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்தலாம். அதாவது புலிகளுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப் போவதனாலேயே தமது அரசாங்கம் அமெரிக்கப் பிரேரணைக்கு ஆதரவளிக்கவில்லை என்று கூறலாம்.

இந்த விடயத்தில்  கட்சியின் நலனுக்கும் தேசிய நலனுக்கும் இடையே காங்கிரஸ் கட்சி சிக்கிக் கொண்டது. இறுதியில் காங்கிரஸ் கட்சி தேசிய நலனுக்காக கட்சியின் நலனை தியாகம் செய்தது. இலங்கையில் அரசியல் கட்சிகளுக்கும் இந்திய காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான வித்தியாசம் இது தான்.

இலங்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி தேர்தல்களின் போது கட்சி பாதிக்கப்படும் என்றே போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக விசாரணை நடத்த மறுத்து வருகிறது. சமயத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது. தொழிற்சங்கங்கள் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல்களை மறுத்து வருகிறது. அதனால் நாளை நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகள் வந்தாலும் பரவாயில்லை என்றே ஐ.ம.சு.கூ நினைக்கிறது. கட்சி நலன் அவர்களுக்கு நாட்டு நலனைப் பார்க்கிலும் முக்கியமாக இருக்கிறது.

தாம் பாரதிய ஜனதாக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்து இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்றை கொண்டு வருவதாக இப்போது ஜெயலலிதா கூறுகிறார். காஷ்மீர் விடயத்தில் காங்கிரஸ் கட்சியை விட கடும் போக்கை கடைபிடிக்கும் பா.ஜ.க. மனித உரிமை விடயத்தில் எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் சர்வதேச விசாரணை நடத்தி முன்னுதாரணம் வழங்குவதை காங்கிரஸ் கட்சியைப் பார்க்கிலும் கடுமையாக எதிர்க்கக் கூடும். அதேவேளை ஆட்சி மாறினாலும் இந்தியாவில் முடிவுகளை எடுப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய அதிகார வர்க்கம் மாறப் போவதும் இல்லை.

எனவே, சர்வதேச விசாரணை என்று வரும் போது ஜெயலலிதா நினைப்பதை எல்லாம் இலகுவில் சாதித்துவிட முடியாது. அதேவேளை ஏற்கெனவே சர்வதேச விசாரணை முடுக்கிவிட்டுள்ள நிலையில் ஜெயலலிதா வேறு எதற்காக பிரேரணை கொண்டு வரப்போகிறார்? இவையெல்லாம் தேர்தல் காலத்து தேவதைக் கதைகளே.

அமெரிக்கப் பிரேரணை மனித உரிமை பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட போது பாகிஸ்தான் பிரதிநிதி இலங்கைக்காக கடும் போராட்டத்தை நடத்தினார். அவரது போராட்டத்தின் காரணமாக பிரேரணை தொடர்பாக மேலதிக இரண்டு வாக்கெடுப்புகளை நடத்த நேரிட்டது. முதலில் அவர் பிரேரணை ஐ.நா. சாசனத்திற்கு முரணானது என வாதாடினார். அதனை ரஷ்யா சீனா மற்றும் கியூபா ஆகிய நாடுகளும் ஆதரிக்கவே அது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த நேரிட்டது.

இரண்டாவதாக பாகிஸ்தானிய பிரதிநிதி சர்வதேச விசாரணை நடத்த 14,60,900 டொலர் அவசியமாகிறது என்றும் இந்த விடயம் கடைசி நேரத்தில் முடிவு செய்தமையினால் அத் தொகையை எவ்வாறு தேடுவது என்பது தொடர்பாக முடிவு ஏதும் இல்லை என்றும் பேரவையின் நிதி மற்றும் செலவுத்துறை பொறுப்பாளர் ஹெலன் பியர்ஸ் கூறியிருப்பதை சுட்டிக் காட்டி வாதாடினார்.

தேவையான செலவை பிரேரணையை முன்மொழிந்த நாடொன்று வழங்குவதாக இருந்தால் மொத்த விவகாரமே அழுக்கடைந்துவிடும் என்றும் அவர் கூறினார். முன்மொழிந்த நாடென்று என்று அவர் அமெரிக்காவையே சூட்சமமாக குறிப்பிட்டார். செலவை ஈடு செய்ய முடியாததனால் பிரேரணையை முடக்கி வைக்க வேண்டும் என்று அவர் அடுத்ததாக பிரேரித்தார். அது தொடர்பாகவும் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போதிலும் அவரது வாதம் தோல்வியுற்றது. முப்பது ஆண்டு காலமாக பெருமளவில் படுகொலைகளை செய்த புலிகளை இப் பிரேரணையின் மூலம் பொறுப்புக் கூறச் செய்ய முடியாது என்பதால் இது மனித உரிமைகள் மீதான உண்மையான அக்கறையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையல்ல என்றும் பாகிஸ்தானிய பிரதிநிதி பேரவைக் கூட்டத்தின் போது கூறினார்.

செலவைப் பற்றி அவர் முன்வைத்த கருத்து அவ்வளவு தர்க்க ரீதியாக அமையவில்லை. 14,60,900 டொலர் என்பது ஒரு லம்போகினி மோட்டார் வாகனத்தின் விலையை விட சற்று அதிகமான தொகையே. இலங்கை போன்றதோர் நாட்டிலும் அரசியல் உறவுள்ள ஒப்பந்தக் காரர் (contractor)  ஒருவரிடம் அல்லது சில அரசியல்வாதிகளிடமும் இத் தொகையை பெற்றுக் கொள்ளலாம். எனவே ஐ. நா மனித உரிமை பேரவை போன்றதோர் பாரிய சர்வதேச நிறுவனம் ஒன்றுக்கு அது அவ்வளவு பிரச்சினையாகாது.

இப்போது பிரேரணை நிறைவேறியிருக்கிறது. மனித உரிமைகளைப் பற்றிப் பேச அமெரிக்காவுக்கோ அல்லது மனித உரிமை ஆணையாளருக்கோ உள்ள தார்மிக உரிமையைப் பற்றி இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் கேள்வி எழுப்புவதில் அர்த்தம் இல்லை. அது பயனற்றது. அதேவேளை தேசிய ரீதியில் போலவே சர்வதேச ரீதியிலும் அரசியலில் நாகரிகம் தார்மீகம் என்பவை ஏட்டில் மட்டுமே இருக்கின்றன. நடைமுறையில் அவை இல்லை. நம்மிடம் இல்லாததை நாம் மற்றவர்களிடம் ஏன் எதிர்ப்பார்க்க வேண்டும்.?

இப்போது அரசாங்கத்திற்கு அவசியமாக இருப்பது சர்வதேச விசாரணை வந்தால் அதனை எதிர் கொள்வதற்கான நடைமுறை வேலைதிட்டமொன்றே. அதேவேளை தொடர்ந்தும் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகாமல் இருப்பதற்கான அரசியல் பக்குவமம் அரசாங்கத்திற்கு அவசியமாக இருக்கிறது.

அதேவேளை சர்வதேச விசாரணை வந்தால் புலிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கப் போவது யார் என்பதையும் அவற்றை எதிர்த்து வாதாடப் போவது யார் என்பதையும் பார்த்துக் கொள்ளலாம்.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X