2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

எங்கும் சர்வாதிகாரம்

Kanagaraj   / 2014 மே 05 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி என்ற அர்த்தப்பட பேசிவிட்டு அதைப் பற்றி விளக்கமளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தின் போது தான் முதலமைச்சர இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

அதை சர்ச்சைக்குரிய கருத்தாக சிலர் கூறிய போதிலும் முதலமைச்சர் தாம் அதனை கூறவில்லை என்று மறுக்கவோ அல்லது அதனை வாபஸ் பெறவோ இல்லை. அவர் அதனை வலியுறுத்தி விளக்கம் அளித்து அறிக்கையொன்றையே வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் கோரிக்கைகள் விடயத்தில் இறுமாப்புடன் செயற்படுவதாகவும் அவர் எப்போதோ ஒருநாள் பிரபாகரனைப் போல் தாமும் அதிகாரத்திலிருந்த சருகி விழ நேரிடும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதே அவரது நோக்கமாக இருந்தள்ளது.

'வட மாகாணத்தில் இருந்து இராணுவத்தை வாபஸ் பெற மாட்டோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இறுமாப்புடன் கூறியதாக பத்திரிகை ஒன்றில் வாசித்தேன். ஒரு காலத்தில் பிரபாகரனும் கேட்பாரின்றி இருந்தார்.

அதை ஜனாதிபதி அறியாதவர் அல்ல. அப்படியிருக்க அவ்வாறான சவாலான கருத்தை ஜனாதிபதி வெளியிட்டதற்காக நான் அவருக்காக பரிதாபப்படுகிறேன்' ஏன முதலமைச்சர் தமது மே தின உரையின் போது கூறியிருந்தார்.

பின்னர் பிபாகரன் சர்வாதிகாரியைப் போல் எவரது கருத்தையும் கேட்காது நடந்து கொண்டார் என்று முதலமைச்சர் பேசினார் என்று சிலர் கூறியிருக்கிறார்கள் போலும். தேர்தல் காலத்தில் முதலமைச்சருக்கு பிரபாகரன் வீரனாக இருந்தார் இப்போது அவர் சர்வாதிகாரியாகிவிட்டாரா என்றும் சிலர் கேள்வி எழுப்பியிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தான் அவர் விளக்கமளித்து அறிக்கை வெளியிட நேரிட்டது.

அந்த விளக்கத்தில் அவர் இவ்வாறு கூறுகிறார். 'அலெக்ஸாண்டர் மகா வீரன். ஆதற்காக அவன் அதிகாரங்கள் அனைத்தையும் தம் வசம் வைத்திருக்கவில்லை என்று கூற முடியாது. பிரபாகரன் ஒரு வீரன் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் கூறியிருக்கிறார். அதற்காக பிரபாகரன் அதிகாரங்கள் அனைத்தையும் தம் வசம் வைத்திருக்கவில்லை என்று கூற முடியாது.

நான் பேச்சை முடித்துவிட்டு மண்டபத்தில் இருந்து வெளியே வந்த போது எவருமே என்னை அண்டி எதுவும் கேட்கவில்லை. கேட்க எத்தனிக்கவும் இல்லை. வழமைப் போல் கை கூப்பி வணக்கம் தெரிவித்தே வழியனுப்பினர்'

பிரபாகரன் கேட்பாரின்றி செயற்பட்டார் என்று தமது உரையில் கூறிய முதலமைச்சர் அந்த வார்த்தைகளை பாவிக்காது பிரபாகரன் அதிகாரங்கள் அனைத்தையும் தம் வசம் வைத்திருந்தார் என்று தமது விளக்கத்தில் கூறுகிறார். அதாவது அவர் தாம் முன்னர் கூறியதை வலியுறுத்துகிறாரேயல்லாமல் அதனை வாபஸ் பெறுவதில்லை.

உண்மையிலேயே பிரபாகரன் மற்றவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு செயற்பட்டாரா இல்லையா என்பதை அவரது நெருங்கிய சகாக்கள் மட்டுமே அறிந்திருக்க முடியும். ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்கள் பிரபாகரன் பாலசிங்கம் போன்றவர்களினது கருத்துக்களையாவது ஏற்றுக் கொள்ளவில்லை என்றே கூறுவார்கள்.

ஒரு அமைப்பு என்று வரும் போது அது போரில் ஈடுபடும் அமைப்பாகவன்றி ஜனநாயக வழியில் இயங்கும் அமைப்பாக இருந்தாலும் அதில் தலைமைத்துவ ஆதிக்கம் என்பது கொஞ்சமாவது இல்லாமல் போவதில்லை. அவ் அமைப்பின் உறுப்பினர்களை ஒன்றாக இணைத்து வைப்பதும் அவ் அமைப்பின் ஓழுங்கையும் ஓழுக்கத்தையும் பாதுபாப்பதும் இந்த ஆதிக்கமே. நூறு வீத ஜனநாயம் ஒரு அமைப்பில் இருந்தால் அந்த அமைப்பு இலகுவில் சிதறிப் போய்விடுவது மட்டுமன்றி அதில் ஒழுக்கமோ அல்லது ஒழுங்கோ இருக்காது.

ஜனநாயக கட்சிகள் என்று கூறப்படும் நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளைப் பார்ததால் இது புலனாகும். அவற்றிலும் அனேகமாக தலைவர்கள் உறுப்பினர்கள் மீது தினிக்கும் கருத்துக்கள் தான் செயலுருவம் பெறுகின்றன. அவற்றிலும் மிக அரிதாகவே தலைவர்கள் உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு நடந்து கொள்வார்கள். தமது அமைப்பில் இருப்பது சர்வாதிகாரமே என்று கூறியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே.

தாம் ஆட்சியைக் கைப்பற்றினால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையே கட்டி எழுப்புவோம் என கம்யூனிஸ்ட்டுகள் கூறுவார்கள். கார்ல் மாக்ஸ், லெனின் போன்றவர்களும் அவ்வாறு கூறியிருக்கிறார்கள். சோசலிஸ நாடுகளின் ஆட்சியை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என அந் நாடுகளின் தலைவர்களே அழைப்பார்கள்.

ஒரு அமைப்பில் நூறு வீத ஜனநாயகம் இருக்க முடியாததைப் போலவே எந்தவொரு அமைப்பிலும் நூறு வீத சர்வாதிகாரம் அல்லது தலைமைத்துவ ஆதிக்கமும் இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால் உறுப்பினர்களின் படைப்புத் திறனை அமைப்பின் பணிகளுக்காக பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விடும். அதற்காக உறுப்பினர்களுக்கு ஓரளவாவது சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் உறுப்பினர்கள் தலைவர்கள் சொல்வதை மட்டும் செய்துவிட்டு ஒதுங்கிவிடுவார்கள்.

அதேவேளை ஒரு அமைப்பு சாத்வீகப் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறதா அல்லது போரில் ஈடுபட்டு இருக்கிறதா என்பதைப் பொறுத்தும் அதன் ஜனநாயகத் தன்மையின் அளவு தங்கியிருக்கிறது. ஜனநாயக அரசியலில் ஈடுபட்டு இருக்கும் ஒரு அரசியல் கட்சிக்கு பிரச்சினைகளைப் பற்றிக் கலந்துரையாட அவகாசம் இருக்கிறது. ஊடகங்களும் பொது மக்களும் செய்யும் விமர்சனங்கள் அத்தனையும் ஜனநாயக அரசியலின் போது நிராகரிக்க முடியாது.

ஆனால் போரில் ஈடுபட்டு இருக்கும் ஒரு அமைப்புக்கு அல்லது ஒரு இராணுவத்திற்கு அவ்வாறு விவாதங்களை நடத்திக் கொண்டிருக்க அனேகமாக அவகாசம் இருக்காது. அதேவேளை அவ் அமைப்புக்கள் உறுதியான கட்டுக்கோப்புக்குள் இயங்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் அதிகமாக ஏற்படும். உறுப்பினர்கள் விரும்பியவாறு செயற்பட தலைமைத்துவம் இடமளிக்காது.

ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன ஒரு முறை கூறியதைப் போல் 'ஒருவர் அரசியலில் தோல்வியடைந்தால் எதிர்க் கட்சியை சென்றடைவார், ஆனால் போரில் தோல்வியடைந்தால் ஆரடி நிலத்தடியில் தஞ்சமடைவார்.'

அந்த வகையில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திலும் ஜனநாயக அரசியலில் ஈடுபடும் அரசியல் கட்சிகளில் போல் ஜனநாயக ரீதியாக பிரச்சினைகளை தீர ஆராய்து விவாதித்து முடிவு எடுக்க அவகாசம் இருக்கவில்லை. அதில் தலைமைத்துவ ஆதிக்கமே செயற்பாட்டு விதிமுறையாக இருந்தது. அது ஒருவித சர்வாதிகாரம் தான். இது போன்றதோர் அமைப்பு நீண்ட காலமாக போர் சூழுலில் செயற்படும் போது இந்த சர்வாதிகாரம் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதி முறையாகிறது.

போரில் ஈடுபடும் இராணுவத்தினது நிலைமையும் இதே தான். அங்கும் கடுமையான கட்டுப்பாடே விதிமுறையாகும். 'முன்னால் ஜொனி, பின்னால் பொனி' என்று போர் நடைபெற்ற காலத்தில் இராணுவ வீரர்கள் கூறுவார்களாம். அதாவது முன்னால் புலிகளின் ஜொனி குண்டுகள் வெடிக்கின்றன, பின்னால் பொன்சேகா இருக்கிறார், தப்பவே முடியாது என்பதே அதன் அர்த்தமாகும்.

ஆனால் எவ்வாறான போர் சூழலில் இயங்கினாலும் கூடிய வரை கருத்துக்களை திரட்டி சிறந்த கருத்துக்களை தேர்ந்தெடுத்து செயற்படுவதே நாட்டுக்கும் அமைப்புக்கும் நன்மையாக அமையும். ஆனால் நீண்ட காலமாக போர் சூழுலில் செயற்பட்டதனால் புலிகள் அமைப்பில் இந்தத் தன்மை இருக்கவில்லை போலும். சில முக்கிய பிரச்சினைகளின் போது பிரபாகரன் அன்டன் பாலசிங்கத்தின் கருத்துக்களையாவது மதித்தாரா என்பது சந்தேகமே.

உதாரணமாக, 1995மு; ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க முன்வைத்த தீர்வுத் திட்டத்தை நிராகரித்தமையை எடுத்துக் கொள்ளலாம். ஒற்றையாட்சி என்பதற்குப் பதிலாக மாநிலங்களின் ஒன்றியம் என்ற பதத்தையே அந்த தீர்வுத் திட்டம் பாவித்தது. புலிகள் இதனை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த காலத்தில், அதாவது 2003ஆம் ஆண்டு புலிகளின் நீதிமன்றத் தொகுதியொன்றை திறந்து வைத்து உரையாற்றும் பொது பாலசிங்கம் கூறினார்.

அதாவது இந்த விடயத்தில் பாலசிங்கம் 1995ஆம் ஆண்டு கூறியதை பிரபாகரம் ஏற்றுக் கொண்டில்லை.
காலஞ்சென்ற நீலன் திருச்செல்வம் அப்போதைய அரசியலமைப்புத்துறை அமைச்சராகவிருந்த பேராசிரியர் ஜீ.எல். பீரிஸூடன் இணைந்தே இந்தத் தீர்வுத் திட்;டத்தை வரைந்தார். புலிகள் 1999ஆம் ஆண்டு நீலன் திருச்செல்வத்தை கொலை செயதனர்.

1995 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க முன்வைத்த தீர்வுத் திட்டத்தை புலிகள் ஏற்றுக் கொண்டிருக்கலாம் என பாலசிங்கம் 2003ஆம் ஆண்டு கூறிய போது அவ்வாறாயின் அந்தத் தீர்வுத் திட்டத்தை வரைந்த திருச்செல்வத்தை ஏன் கொலை செய்தீர்கள் எனக் கேள்வி எழுப்பி மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ் ஜெயராஜ் அக்காலத்தில் கட்டுரையொன்றை எழுதியியருந்தார்.

மற்றுமொரு உதாரணம் தான் ரனில் விக்கிரமசிங்க அரசாங்கத்தோடு நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளின் மூன்றாது சுற்றின் போது சமஸ்டி முறையை புலிகள் ஏற்றுக் கொண்ட போது ஏற்பட்ட நிலைமை. நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே சமஸ்டி முறையின் அடிப்படையில் தீர்வொன்றை காண்பதென அரச தரப்பின் பிதிநிதிகளும் புலிகளின் பிரதிநிதிகளும் உடன்பட்டனர்.

ஆனால் அதற்காக பிரபாகரன் தமது பிரதிநிதிகளை எச்சரித்ததாக பின்னர் செய்திகள் கூறின. புலிகள் பின்னர் பகிரங்கமாகவே அவ்வுடன்படிக்கையை நிராகரித்ததன் மூலம் அந்த விடயத்திலும் பிரபாகரன் 'கேட்பாரின்றி' செயற்பட்டுள்ளதாக தெரிகிறது.

மூன்றாவதாக, போரின் இறுதி நாட்களில் அதாவது 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் கே. பி; எனப்படும் செல்வராசா பத்மநாதன் சர்வதேச சக்திகளுடன் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த சரணடையும் திட்டத்தை நிராகரித்தமையை சுட்டிக் காட்டலாம். அந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாததினால் புலிகள் அமைப்பு ஏறத்தாழ முற்றாகவே அழிந்துவிட்டது. சிறையிலாவது பிரபாகரன் வாழ்ந்திருந்தால் இருக்கக்கூடிய நிலைமையும் அவரது மரணத்தினால் ஏற்பட்ட நிலைமையும் ஒன்றல்ல.

அதேபோல் முதல் இரண்டு சந்தர்ப்பங்களின் போது பிரபாகரன் பாலசிங்கத்தின் கருத்தை ஏற்றிருந்தால் ஏற்பட்டு இருக்கக் கூடிய நிலைமையும் தற்போது ஏற்பட்டு இருக்கும் நிலைமையும் ஒன்றல்ல. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X