2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மேதினத்தில் கொல்லப்பட்ட பெண் தொழிலாளி

A.P.Mathan   / 2014 மே 06 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மே தினம் (1.5.2014) இந்தமுறை உயிர்ப்பலியுடன் சென்னையில் தொடங்கியது. தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமையை நினைவுபடுத்தும் விதத்தில் கொண்டாடப்படும் இந்த தினத்தில் தமிழக தலைநகரான சென்னையில் உள்ள சென்ரல் ரெயில்வே ஸ்டேஷனில் இரட்டைக் குண்டு வெடித்தது. அதில் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த இளம்பெண் சுவாதி ஸ்பாட்டிலேயே குண்டு துகள்கள் பாய்ந்து உயிரிழந்தார். அவர் பெங்களூரில் பணிபுரிந்து கொண்டிருப்பவர். தனது திருமண நிச்சயதார்த்தம் செய்யும் பொருட்டு விடுப்பு எடுத்துக் கொண்டு வீடு திரும்பிய தொழிலாளி. கொல்லப்பட்ட சுவாதி ஒரு புறமென்றால், ஏறக்குறைய 14க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்தனர். கவுகாத்தி விரைவு ரயில் பெட்டியில் வெடித்த இந்த இரட்டைக் குண்டுகள் ரெயில்வே ஸ்டேஷனை மட்டுமல்ல, தமிழகத்தையே உலுக்கி விட்டது.

இரட்டைக் குண்டு வெடிப்பிற்கு இரு நாட்களுக்கு முன்புதான் ஐ.எஸ்.ஐ. உளவாளி என்று ஜாகீர் உசேன் என்பவரைக் கைது செய்தது தமிழக காவல்துறை. இந்த கைது நடைபெற்ற பிறகு நிகழ்ந்த ரயில் குண்டு வெடிப்பு, தமிழகத்தில் இன்னொரு பக்கம் பீதியைக் கிளப்பியது. "ஜாகிர் உசேன் கைது செய்யப்பட்டும், ஏன் இந்த குண்டு வெடிப்பை தடுக்கத் தவறியது காவல்துறை' என்று கேள்வி எழுப்பி, முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சாடினார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதாவோ, "ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் நடந்த கோவை குண்டு வெடிப்பை சுட்டிக்காட்டி' தி.மு.க. தலைவர் கருணாநிதியைச் சாடினார். அவர்களுக்குள் "நீங்கள் ஆர்ம் சேர் அரசியல்வாதி' என்று முதலமைச்சர் ஜெயலலிதா கலைஞர் கருணாநிதியை விமர்சித்தார். உடனே, "கோவை குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற நானா ஆர்ம்ஸ் சேர் பாலிட்டிஷியன்' என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன் ஸ்பாட்டிற்குப் போன தமிழக காவல்துறை தலைவர் ராமானுஜம் மற்றும் தேர்தல் கால டி.ஜி.பி. அனுப் ஜெய்ஸ்வால் ஆகியோர் விசாரணை மேற்கொண்டார்கள். அதன் முடிவில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. அந்த துறையின் ஐ.ஜி. மகேஷ் குமார் இது பற்றிய விசாரணையை மேற்கொண்டார். இதற்கிடையில் தீவிரவாதம் தொடர்புடைய வழக்கு என்பதால் இந்த வழக்கினை தேசிய புலனாய்வு அமைப்பு  (நேஷனல் இன்வெஸ்டிகேட்டிவ் ஏஜென்ஸி) விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.  ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பொறுத்தவரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த தேசிய புலனாய்வு அமைப்பினைஆரம்பத்திலிருந்தே ஏற்றுக் கொள்ளவில்லை. மாநில அரசின் சட்டம் ஒழுங்கு அதிகாரத்தில் குறுக்கிடும் செயல் இது என்று மத்திய அரசை சாடிக் கொண்டிருந்தார். குறிப்பாக இதைக் கொண்டு வந்த தமிழகத்தைச் சேர்ந்த உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தைக் கூட சாடினார். பிரதமர் தலைமையிலான கூட்டங்களில் கூட இதை எதிர்த்து பேசியுமிருக்கிறார். கடிதங்களும் எழுதியிருக்கிறார்.

சட்டம்- ஒழுங்கு என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சப்ஜெக்ட். அதன் கீழ்தான் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இருக்கும் போது மத்திய அரசு ஏன் இதில் எல்லாம் குறுக்கிட வேண்டும் என்பது அவரது கேள்வி. இதனால் தேசிய புலானாய்வு அமைப்பிற்கு இந்த வழக்கு செல்லாது என்பதே ஊடகச் செய்திகளாக மாறின. இது பற்றி வெளிப்படையாகக் கோரிக்கை வைத்த பா.ஜ.க. மாநில தலைவர்களில் ஒருவரான இல. கணேசன், "நரேந்திர மோடியே அச்சுறுத்த வைக்கப்பட்ட வெடிகுண்டு. ஆகவே இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு அனுப்ப வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார். அது பற்றியெல்லாம் சர்ச்சை எழுந்ததும், "தேசிய புலனாய்வு அமைப்பு வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. அதுவும் விசாரணை மாநில அரசுடன் செயல்படுகிறது. அதே போல் மத்திய அரசின் நேஷனல் செக்யூரிட்டி கார்டு அதிகாரிகள் இந்த விசாரணையில் தமிழக அரசுடன் ஒத்துழைத்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று அறிக்கை விட்டார்.

இன்னும் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிற்கு போகவில்லையென்றாலும், தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.சி.ஐ.டி. அமைப்பு இதை விசாரித்து வருகிறது. இது போன்ற வழக்குகளை இந்த அமைப்புதான் மாநில அளவில் விசாரிக்கும். ஏற்கனவே பா.ஜ.க. உள்ளிட்ட இந்து தலைவர்கள் பலர் கொல்லப்பட்ட வழக்குகளையும் இந்த சி.பி.சி.ஐ.டி. அமைப்புதான் விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விசாரணையில் ரயில் நிற்பதற்கு முன்பு ஒருவர் அப்பெட்டியில் இருந்து இறங்கி ஓடும் காட்சிகள் அடங்கிய வீடியோ காட்சிகள் பத்திரிக்கைகளுக்கு வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை வைத்து வெடிகுண்டு தாக்குதலுக்கான க்ளூ பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சம்பவம் நடைபெற்ற அன்று அந்த கவுகாத்தி ரயில் இரண்டரை மணி நேரம் தாமதம் ஆகாமல் இருந்திருந்தால் ஆந்திர மாநில எல்லைக்குள் சென்றிருக்கும். அங்குதான் நரேந்திரமோடி பிரச்சாரத்திற்கு வந்திருந்தார். மோடியின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தக் குண்டுகள் வைக்கப்பட்டதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

அது மட்டுமின்றி இதே மாதிரி ஏற்கனவே பெங்களூர் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. அதேபோல் பாட்ôனாவில் நரேந்திரமோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அந்த சம்பவங்களுக்கும், சென்னை குண்டு வெடிப்பிற்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் தமிழக பொலிஸ் விரைந்து விசாரித்து வருகிறது. குறிப்பாக போலீஸ் துறையின் பல டீம்கள் தனித் தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு, இந்த மாநிலங்களுக்கு எல்லாம் சென்றுள்ளது என்று அதிகாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஜாகீர் உசேனை 5ஆம் திகதி நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை ஆஜர்படுத்தியது. அவரை 9 நாள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க க்யூ பிராஞ்ச் பொலிஸாருக்கு சென்னை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இவர் இலங்கையிலிருந்து தமிழகம் வந்ததும், பாகிஸ்தான் உளவாளியாக இருந்தார் என்றும் பல்வேறு தகவல்கள் உலா வருவதால், ஏற்கனவே இலங்கை மீது கண்டனக் கணைகள் விடுத்துக் கொண்டிருக்கும் தமிழ் அமைப்புகள் இதையும் கையிலெடுக்கும் ஆபத்து இருக்கிறது. போதாக்குறைக்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர்களில் ஒருவரான இல.கணேசன், "பாகிஸ்தான் உளவாளிகளுக்கு இலங்கையில் பயிற்சி அளிக்கப்படுகிறது' என்ற கருத்துச் சொல்ல, அதுவும் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது. இதை இலங்கைத் தூதரக அதிகாரிகள் உடனடியாக மறுத்துள்ளார்கள் என்பது ஆறுதல் தரும் செய்தியாகும்.

இது தவிர கடலூரில் அஸ்ராப் அலி என்ற நபரை ராஜஸ்தான் போலீஸôர் தமிழகம் வந்து கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். அஸ்ராப் அலியிடமும் சென்னை குண்டு வெடிப்பு குறித்து தமிழக போலீஸôர் விசாரித்துள்ளனர். இப்படி பல முனை விசாரணை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ரயில் நிலையத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் சென்னையைக் குறிவைத்து நடத்தப்பட்டதல்ல என்ற இன்னொரு வாதமும் இருக்கிறது. ரயில் தாமதமாகாமல் இருந்திருந்தால், அது ஆந்திர மாநிலத்திற்குள் சென்றிருக்கும் என்ற கூற்றும் அடிபடுகிறது. ஆனால் ரயில் சென்று கொண்டிருக்கும் போது வெடிக்கும் விதத்தில் குண்டுகள் வைக்கப்பட்டன என்று இன்னொரு கருத்தும் பரப்பப்படுகிறது. எது எப்படியோ பல வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தில் இப்போது சென்டிரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்துள்ள இந்த இரட்டை குண்டு வெடிப்பு தமிழகக் காவல்துறை மீதான விமர்சனங்களை முன் வைக்க வாய்ப்பாக அமைந்திருக்கிறது. அதனால்தானோ என்னவோ, "தீவிரவாதிகளை கண்டதும் சுட உத்தரவு' என்ற செய்தி பத்திரிக்கை வாயிலாக வேகமாக வெளிப்படுத்தப்படுகிறது. மக்கள் இது போன்ற குண்டு வெடிப்புகளைப் பார்த்து மிரண்டு விடக்கூடாது என்பதற்காகவும், மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவும் காவல்துறையின் சார்பில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

ஜாகிர் உசேன் பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்படும் போதுதான் தமிழகத்தில் எந்த மாதிரி தாக்குதல்களை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தார்கள், தமிழகத்தில்  ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறதா, இந்த தாக்குதல்களை திட்டமிட என்ன காரணம் என்பதெல்லாம் வெளிவரும் என்று போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள். அது மட்டுமின்றி, ஜாகிர் உசேன் உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு வெளிநாடுகளின் உதவி எவ்வளவு தூரம் கிடைத்துள்ளது, எங்கெல்லாம் பயிற்சி பெற்றுள்ளார்கள் என்பது போன்ற தகவல்களும் கிடைக்கலாம். அது மாதிரி தகவல் கிடைக்கும் போது மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக காவல்துறை வலியுறுத்தலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால் இதுவரை தேசிய புலனாய்வுத்துறை அமைப்பு தனியாக இது பற்றி விசாரணை நடத்துகிறதா என்ற தகவல் முழுமையாக வெளியாகவில்லை. குண்டு வெடிப்பு நிகழ்ந்த ரயில்வே நிர்வாகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு நடந்தவுடன் மத்திய அரசின் என்.எஸ்.ஜி (நேஷனல் செக்யூரிட்டி கார்டு) தமிழக அரசுக்கு உதவும் வகையில் ஸ்பாட்டிற்கு வந்திருக்கிறது.

இது தீவிரவாதம் தொடர்புடைய விஷயம் என்பதால் மாநில அரசும் தீவிர விசாரணை மேற்கொண்டிருக்கிறது. ஆனால் அனைவருமே ஆறுதல் அடையும் செய்தி ஒன்றுதான். ஏப்ரல் 24ஆம் திகதிதான் தமிழத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளின் தேர்தல் நடந்து முடிந்தது. அந்த தேர்தல் நடக்கும் நேரத்தில் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறியிருந்தால், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வது தமிழக காவல்துறைக்கு பெரும் சவாலாக அமைந்திருக்கும். அது போன்ற சூழ்நிலை உருவாகாமல், தேர்தல் நடந்த பிறகு இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அது மட்டுமின்றி, நல்ல வேளையாக உயிர்சேதம் எதுவும் பெருமளவில் ஏற்படவில்லை. ஆந்திர மாநிலத்தின் அந்த இளம்பெண் மட்டும் வாழ்க்கையின் கலர்புல் கனவுகளுடன் சிட்டாக பறந்து தன் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அவரது ரக்கையை முறித்து, உயிரைப் பறித்து விட்டது இந்த குண்டு வெடிப்பு என்பதுதான் மிகுந்த சோகம். அப்பெண்ணின் தந்தையும், தாயும் தங்கள் தலையில் பேரிடி விழுந்தது போல் தன் மகளின் உடலைப் பார்த்து நின்றது பார்ப்பவர் மனங்களை பதற வைத்தது. அதனால்தான் கட்சி வித்தியாசமின்றி அனைத்துக் கட்சி தலைவர்களும் அரசு மருத்துவமனைக்குச் சென்று காயம்பட்டவர்களை சந்தித்தார்கள். கண்டன அறிக்கைகளை வெளியிட்டார்கள்.

இதற்கிடையில் படு காயமடைந்தவர்கள் பல மாநிலத்தவரும் இருக்கிறார்கள். அவர்களில் பலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி விட்டார்கள். ஒரு சிலர் மட்டுமே இன்னும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் குண்டு வெடிப்பை நிகழ்த்திய தீவிரவாதிகளைத் தேடும் படலம் வெகு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மீண்டும் தலை தூக்க நினைக்கும் இந்த தீவிரவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிய தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் இதில் கடைசி வரை மாநில} மத்திய அரசு மோதல் ஏதும் வராத அளவிற்கு விசாரணைகள் முடிவு பெற்று தீவிரவாதிகளின் நெட்ஒர்க் உடைக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X