2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையை அரவணைக்கிறதா அமெரிக்கா?

Suganthini Ratnam   / 2014 மே 09 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா கொண்டுள்ள கரிசனையை அரசாங்கம் தவறாகப் புரிந்துகொண்டுள்ளதா என்ற சந்தேகம் அண்மையில் ஏற்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் கடந்த வார இறுதியில் அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல  வெளியிட்டிருந்த கருத்துத் தான்.

இலங்கை தொடர்பான தமது நிலைப்பாட்டில் அமெரிக்கா மென்போக்கை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றி சுமார்  ஒரு மாதம் கழித்து, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இந்தக் கருத்து வெளியாகியிருந்தது.

அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டமைக்கு காரணம்  தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்த மக்களுடனும் அரசாங்கத்துடனும் இணைந்து செயற்பட அமெரிக்கா தயாராக இருப்பதாக கூறியிருந்ததே.

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை அமெரிக்கா தற்போது புரிந்துகொள்ள ஆரம்பித்திருப்பதாகவும் அமைச்சர் ரம்புக்வெல்ல  சுட்டிக்காட்டியிருந்தார்.
இலங்கை தொடர்பாக அமெரிக்கா மென்போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் இலங்கை அரசாங்கமும் நம்புகின்ற வகையில் வொஷிங்டனின் போக்கில் பெரியளவிலான எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை.

ஆனால், அண்மைக்காலத்தில் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இரண்டு சந்தர்ப்பங்களில் வெளியிட்ட கருத்துக்கள், இத்தகைய மாற்றம் ஒன்றுக்கான அறிகுறிகளை அரசாங்கத்துக்குக் குறிப்புணர்த்தியிருக்கலாம்.

முதலாவது  ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் அவர் நிகழ்த்திய உரை. அடுத்தது, அமெரிக்க காங்கிரஸின் வெளிவிவகாரக் குழுவின் ஆசிய பசுபிக் வலயத்துக்கான உபகுழுவின் முன்பாக கடந்த மாதம் 30ஆம் திகதி நிகழ்த்திய உரை. இந்த இரண்டு உரைகளிலும் இலங்கையுடனான உறவு குறித்த அமெரிக்காவினது எதிர்பார்ப்பு என்னவென்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம்  16ஆம் திகதி ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் கென்னடி அரசாட்சிப் பாடசாலையில், 'தெற்காசியாவில் அமெரிக்காவின் பாதுகாப்புக் கொள்கை: செழிப்பு மற்றும் பாதுகாப்புக்கான ஒரு பார்வை' என்ற தொனிப்பொருளில்  நிஷா பிஸ்வால் உரையாற்றியிருந்தார்.

அதில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் நல்ல முன்னேற்றத்தை எட்டியதும்,  இலங்கை அரசாங்கத்துடன் இன்னும் விரிவான இராணுவ உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக்கொள்வதற்கு  அமெரிக்கா எதிர்பார்த்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது இலங்கையுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்திக்கொள்வதற்கான அமெரிக்காவினது விருப்பத்தைப் பிரதிபலிக்கின்ற கூற்று என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்க முடியாது.

ஏனென்றால் இலங்கையினது அமைவிடம், அமெரிக்காவுக்கு மட்டுமன்றி, உலகின் எந்தவொரு நாட்டிற்குமே முக்கியத்துவம் வாய்ந்தது தான்.

தற்போது இலங்கையுடனான உறவுகளில் முறிவுகள் தென்பட்டாலும், இது நிரந்தரமானதாக இருந்துவிடக்கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இது ஆச்சரியமளிக்கக்கூடிய நிலைப்பாடாக இருக்க முடியாது.

ஏனென்றால், உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவுக்கு  ஆசிய - பசுபிக் பிராந்தியத்துக்கான நுழைவாயிலிலிருக்கும் இலங்கையுடன் சிறந்த உறவும் - பாதுகாப்பு ரீதியான நிலையான ஒத்துழைப்பும் அவசியமானது.

எனவே, இலங்கையில் அமெரிக்கா எதிர்பார்க்கும் மாற்றங்கள் நடந்தேறியதும், இயல்பாகவே இலங்கை அரசுடனான உறவுகளை அது வலுப்படுத்திக்கொள்ள முனையும்.

சிலவேளைகளில் புறச்சூழல்களில் மாற்றங்கள் ஏற்பட்டால், இலங்கையின் நிலைமைகளில் தாம் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படாது போனால் கூட, அமெரிக்கா அத்தகைய மாற்றத்துக்குத் தயாராகலாம்.

இப்போதைய நிலையில், அமெரிக்கா எதிர்பார்க்கும் மாற்றங்களான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் முன்னேற்றங்கள் ஏதும் ஏற்படவுமில்லை.

இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, இலங்கையுடனான உறவுகளை வளர்த்துக்கொள்வதற்கான புற அழுத்தங்களும் அமெரிக்காவுக்கு ஏற்படவில்லை.

எனவே, உடனடியாக இலங்கையுடனான இராணுவ உறவுகளை அமெரிக்கா வலுப்படுத்திக்கொள்கின்ற வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

அதேவேளை, கடந்த மாதம் 30ஆம் திகதி 'தெற்காசியாவில் அமெரிக்க உதவி முன்னுரிமைகளை மதிப்பிடுதல்' என்ற தலைப்பில், வெளிவிவகாரக் குழுவின் ஆசிய - பசுபிக் உபகுழுவின் முன்பாக உரையாற்றிய நிஷா பிஸ்வால் இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்த மக்களுடனும் அரசாங்கத்துடனும் இணைந்து செயற்பட அமெரிக்கா தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

அதேவேளை, மனித உரிமைகள் பற்றிய கவலைகள் மற்றும் மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள், ஏனைய துஷ்பிரயோகங்களால், இலங்கையுடனான அமெரிக்காவின் இராணுவ ஒத்துழைப்புகளை அதிகரிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அமெரிக்காவினது திட்டங்கள், ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லாட்சி, நிலையான அமைதியை உருவாக்க பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துகின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
அதாவது, இந்த உரையானது அமெரிக்காவினது தெளிவான இலக்கை ஓரளவுக்கு புலப்படுத்தத்தக்கதாகவே இருக்கிறது.

இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்துடனும் மக்களுடனும் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக நிஷா பிஸ்வால் குறிப்பிட்டதை அமெரிக்காவின் மென்போக்கு அணுகுமுறையாக அரசாங்கம் மதிப்பிட்டிருப்பது சரியானதா என்று தெரியவில்லை.

அதற்குக் காரணம் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை முன்வைக்கின்றபோதும் அறிக்கைகளை வெளியிடுகின்றபோதும் அமெரிக்கா கடைசியாக ஒரு விடயத்தை எப்போதுமே குறிப்பிடத் தவறுவதில்லை.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், ஜனநாயகம் உள்ளிட்ட விடயங்களை அடையாளப்படுத்தி  இவற்றை அடைவதற்கு இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் உதவ அமெரிக்கா எப்போதும் தயாராகவே உள்ளது என அமெரிக்காவினது எல்லா அறிக்கைகளிலும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இது இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் அறிக்கைகளில் கூட கடைசியாக இடம்பெறுவதுண்டு.
எனவே, இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்துடனும் மக்களுடனும் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக நிஷா பிஸ்வால் குறிப்பிட்டதை அமெரிக்காவின் மென்போக்கு அணுகுமுறையாக மதிப்பிடுவது பற்றி கேள்வியை எழுப்ப வைக்கிறது.

அது மட்டுன்றி, அமெரிக்க நாடாளுமன்ற உபகுழு முன்பாக உரையாற்றிய நிஷா பிஸ்வால் கூறியுள்ள ஏனைய விடயங்களையும் சற்று அலசிப் பார்க்க வேண்டியுள்ளது.

ஏனென்றால், அந்த உரையின் முழுமைப் பகுதியும் இலங்கை அரசாங்கம் சாதகமானதாக கருதும் அளவுக்கு அமைந்ததெனக் குறிப்பிட முடியாது.

இந்த உரையில் நிஷா பிஸ்வால் குறிப்பிட்டுள்ள இன்னொரு விடயம் கவனிக்கத்தக்கது.

மனித உரிமைகள் பற்றிய கவலைகள் மற்றும் மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள், ஏனைய துஷ்பிரயோகங்களால், இலங்கையுடனான அமெரிக்காவின் இராணுவ ஒத்துழைப்புக்களை அதிகரிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவலை அவர் வெளிப்படுத்தியுள்ளபோதிலும், அதில் எந்த இடத்திலுமே உறவுகளைப் புதுப்பிப்பதில் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஹவார்ட் பல்கலைக்கழக உரையில் நிஷா பிஸ்வால் இலங்கையுடனான இராணுவ உறவைப் புதுப்பிப்பதற்கான எதிர்பார்ப்பை குறிப்பிட்டிருந்தாலும், வெளிவிவகாரக் குழுவின் உபகுழுவில் ஆற்றிய உரையே அமெரிக்காவினது கொள்கையை சுட்டிக்காட்டுவதாகும்.

இந்த உரையில் இலங்கையுடனான இராணுவ உறவுகளைப் புதுப்பிப்பது குறித்த எதிர்பார்ப்பை அவர் வெளிப்படுத்தவில்லை.

எனவே, இலங்கையுடனான இராணுவ உறவுகளுக்கு அமெரிக்கா அவசரப்படுகிறது என்று கருத முடியவில்லை.

மேலும், வெளிவிவகார உபகுழு முன்பாக நிஷா பிஸ்வால் இலங்கையில் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என்ன என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லாட்சி, நிலையான அமைதியை உருவாக்க பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதையே அமெரிக்காவின் திட்டங்கள் கவனம் செலுத்துவதாகவும் நிஷா பிஸ்வாலின் உரையில் முக்கியமாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்கா எதிர்பார்க்கும் இந்த விடயங்களில் எதுவுமே இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை.

ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லாட்சி, நிலையான அமைதி போன்றவற்றைச் சுட்டிக்காட்டியே ஜெனீவாவில் மூன்றாவது தீர்மானத்தையும் அண்மையில் அமெரிக்கா கொண்டுவந்திருந்தது என்பதை மறந்துவிடலாகாது.

இந்த நிலையில், எந்த முன்னேற்றங்களும் ஏற்படாமலேயே திடீரென இலங்கைக்கு அமெரிக்கா மென்போக்கை காட்டினால், அது அமெரிக்காவினது பலவீனமாகவே கருதப்படும்.

எனவே, அப்படியானதொரு சமிக்ஞையை வெளிப்படுத்துவதற்கு முன்னர் அமெரிக்கா ஒன்றுக்குப் பலமுறை யோசிக்கும், அதன் பாதகத் தன்மைகள் குறித்து ஆலோசிக்கும்.

அப்படியெதுவும் நடக்காமலேயே இலங்கை அரசு அமெரிக்கா மெனண்;பாக்கைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது விந்தையாகவே உள்ளது.

அது மட்டுமன்றி, நிஷா பிஸ்வால் உரையாற்றிய அதே வெளிவிவகார உபகுழுவின் முன்பாக அதே நாளன்று (ஏப்ரல் 30ஆம் திகதி) உரையாற்றிய சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பின் ஆசிய பசுபிக் பிரிவுக்கான பணிப்பாளர்  டெனிஸ் ரோலின்ஸ் வெளியிட்ட கருத்தையும் இங்கு கவனத்திற்கொள்ள வேண்டும்.

அதாவது, இலங்கையில் கடுமையான ஏதேச்சாதிக்காரப்போக்கு வளர்ந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஏதேச்சாதிக்காரப்போக்கு இலங்கையில் வலுவடைந்தாலும், தேர்தல்களை ஒழுங்காக நடத்துவது குறித்து அவர் பாராட்டியிருந்தார்.

ஆனால், அந்தப் பாராட்டுக்குள் இலங்கையில் ஏதேச்சாதிகாரம் வலுவடைகிறது என்ற செய்தி மறைந்திருப்பதை இலங்கை அரசாங்கம் கவனத்திற்கொண்டதாகத் தெரியவில்லை.

ஏனென்றால், இதேபோன்று இலங்கை ஏதேச்சாதிகாரத்தை நோக்கி நகர்வதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கொழும்பில் வெளியிட்ட கருத்து அரசாங்கத்தைப் பெரிதும் சினமடையச் செய்திருந்தது.

அதற்கு கடுமையான எதிர்ப்பையும் அரசாங்கம் வெளிப்படுத்தியிருந்தது.

ஆனால், அமெரிக்காவும் கிட்டத்தட்ட அதுபோலவே கூற முற்படத் தொடங்கியுள்ளதை அரசாங்கம் எந்த வகையில் சாதகமான மாற்றமாக கருதுகிறது என்று தெரியவில்லை.

மேலும், ஜெனீவா தீர்மானத்தின் பின்னர் இலங்கையின் தென்பகுதியில் ஏற்பட்ட அமெரிக்க எதிர்ப்புணர்வைத் தணிக்க கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் முயன்றது உண்மை.

ஆனால், அது அமெரிக்கா தனது நிலையிலிருந்து கீழ் இறங்கியதாக அர்த்தப்படாது.

அதேவேளை, இலங்கையுடனான இராணுவ ஒத்துழைப்பை அமெரிக்கா எதிர்பார்த்திருப்பதாக நிஷா பிஸ்வால் ஹவார்ட் பல்கலைக்கழக உரையில் சுட்டிக்காட்டியதை இலங்கை அரசாங்கம்  தனக்குச் சாதகமான விடயமாக கருதியிருக்கலாம்.

அதாவது, இலங்கையில் அமெரிக்காவின் நலன் சார்ந்த எதிர்பார்ப்புகள் உள்ளதால், தாம் கீழ் இறங்கிப் போக வேண்டியதில்லை என்று இலங்கை அரசாங்கம் இறுக்கமான நிலைப்பாட்டை எடுத்திருக்கக்கூடும்.
எவ்வாறாயினும், தற்போதைக்கு அத்தகைய இறுக்கத்தின் மத்தியிலும் அமெரிக்கா கீழ் இறங்கிச் சென்ற இலங்கை அரசுடன் நெருக்கம் கொள்வதற்கான வாய்ப்புகளை பொருத்திப் பார்க்க முடியவில்லை.

ஏனென்றால், இரு நாடுகளுக்கும் இடையில் புற முரண்பாடுகள் அதிகமாகவே உள்ளன.

எனவே, அமெரிக்கா வலிந்து சென்று உறவைப் புதுப்பிக்கும் நிலை ஒன்று இன்னமும் உருவாகவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

மேலும், நிஷா பிஸ்வால் இம்மாத தொடக்கத்தில் வொஷிங்டனில் புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் நடத்தியுள்ள சந்திப்பும் இலங்கை அரசாங்கத்துக்கு உவகை தரக் கூடியதொன்றாக இருக்க முடியாது.
ஏனென்றால், பயங்கரவாத்துடன் தொடர்புடையவர்கள் என்ற இலங்கை அரசாங்கத்தின் தடைப்பட்டியலை அமெரிக்காவும் உறுதியாக உதாசீனப்படுத்திய நிகழ்வாக அது அமைந்துள்ளது.

ஏற்கெனவே கனடா அந்த தடைப்பட்டியலை நிராகரித்துவிட்ட நிலையில், அந்தப் பட்டியலில் உள்ளடங்கியிருந்தவர்களைக் கூட இராஜாங்கத் திணைக்களத்துக்கு அழைத்துப் பேசியிருக்கிறார் நிஷா பிஸ்வால்.

அமெரிக்காவினது இந்த அணுகுமுறையை எந்த வகையிலும் இலங்கை அரசுக்கு சாதகமானதொன்றாகவோ மென்போக்கானது என்றோ மதிப்பிட முடியாது.

அமெரிக்காவினது அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை என்று வெளிக்காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் இணக்க முயற்சிகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்வதாகவே தகவல்கள் வெளியாகின்றன.

எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கத்தினது இந்தப் போக்கு அமெரிக்காவை அமைதிப்படுத்துவதற்கோ, மென்போக்கிற்குத் திரும்பச் செய்வதற்கோ இப்போதைக்குக் கைகொடுக்கும் போலத் தெரியவில்லை.

ஒருவேளை பொறுப்புக்கூறலுக்கான ஒரு உள்ளகப் பொறிமுறையை உருவாக்கினால், இலங்கை அரசாங்கம் கூறுகின்ற அத்தகைய மென்போக்கு அணுகுமுறை ஒருவேளை அமெரிக்கத் தரப்பிலிருந்து தென்படக் கூடும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X