2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவில் நடந்தது பஞ்சாயத்துத் தேர்தலா, பிரதமர் தேர்தலா?

A.P.Mathan   / 2014 மே 13 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய ஜனநாயகத்தின் 16ஆவது பொதுத் தேர்தல். இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள 543 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப் பதிவு நேற்று முடிவடைந்தது. 9 கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த மாபெரும் ஜனநாயகத் திருவிழாவில் முக்கியப் பங்கு வகித்த அமைப்பு இந்திய தேர்தல் ஆணையம். அந்த ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது பெருமைப்பட வேண்டிய விடயம். சமீப காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்துள்ளார்கள். தேர்தல் கமிஷன் என்றால் என்ன, அதற்குள்ள அதிகாரங்கள் என்ன என்பது பற்றி மக்களுக்கு முதன் முதலில் பிரபலப்படுத்தியவர் டி.என். சேஷன். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

தமிழகத்தைச் சேர்ந்த அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி. இவர் காலத்தில்தான் போட்டோ வாக்காளர் அட்டைக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் அதற்காக பெரும் டிரைவ் நடத்தப்பட்டது. இவருக்குப் பிறகு தமிழகத்திலிருந்து தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றவர் கோபால்சாமி. இவர் காலத்தில்தான் தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட்ட அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் மறு சீரமைப்பு செய்யப்பட்டது. இப்போது தலைமைத் தேர்தல் ஆணையராக இருப்பவர் சம்பத். இவர் காலத்தில்தான் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்ட நரேந்திரமோடியே தாமரை சின்னத்தை வாக்குச்சாவடி எல்லைக்குள் காட்டினார் என்று புகார் சொல்லப்பட்டு. அதன் மீது விசாரணை நடைபெற்றது. பிறகு அதே பிரதமர் வேட்பாளர் கங்கையில் பூஜை செய்ய வேண்டும் என்றும் தான் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் பேரணி நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

நரேந்திரமோடி பேரணி மதரீதியாக உச்சகட்ட உணர்வலைகளில் மிதந்து கொண்டிருக்கும் உத்தரபிரதேச மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று கூறி அந்த பேரணிக்கும் பூஜைக்கும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்தது. உடனே மோடி "தேர்தல் ஆணையம் நடுநிலைமையாக இல்லை' என்ற குற்றச்சாட்டை முன் வைக்க, அவசர அவசரமாக பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டிய சம்பத், "தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகிறது. தேர்தலில் போட்டியிடவில்லை. ஆகவே நாங்கள் நடுநிலைமையுடன்தான் செயல்படுகிறோம்' என்று பதிலடி கொடுத்தார். இது தவிர முலயாம் சிங் யாதவ், பென்னி பிரசாத் வர்மா, சரத்பவார், பாபா ராம் தேவ், குருராஜ் சிங், அஜாம் கான், அமித் ஷா என்று பல்வேறு முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள், சாமியார்கள் தேர்தல் விதி முறைக்கு மாறாகப் பேசி வம்பில் சிக்கிக் கொண்டார்கள். அவர்களுக்கு எல்லாம் நோட்டீஸ் கொடுத்த தேர்தல் ஆணையம், சிலரை கண்டித்தது. சிலருக்கு பொதுகூட்டத்தில் பேச அனுமதி மறுத்தது. பாபாராம் தேவ் போன்றவர்கள் சில மாநிலங்களுக்குள் நுழையவே அந்த மாநில அரசுகள் தடை விதித்தன. இதற்கெல்லாம் உச்சகட்டமாக இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 144 தடையுத்தரவு பிறப்பித்து தேர்தலை நடத்தியது தேர்தல் ஆணையம். இந்தியாவின் வட மாநிலங்களில் இதுதான் நிலைமை. தேர்தல் ஆணையம் நீக்குப் போக்குடன் நடந்து கொண்டு தேர்தலை நடத்தியது.

ஆனால், தமிழகத்தில் இதற்கு நேர் மாறாக கடும் போக்கை தேர்தல் ஆணையம் கடைப்பிடித்தது. இந்திய மாநிலங்களில் அமைதியாக உள்ள மாநிலம் தமிழ்நாடு. வடமாநில அதிகாரிகள் கூட தமிழகத்தில் வந்து பணியாற்றவே விரும்புவார்கள். இங்கு ஜனநாயக ரீதியான போராட்டங்கள் இருக்குமே தவிர, எந்த காலகட்டத்திலும் வன்முறை போராட்டங்கள் தலை தூக்கியதில்லை.  அப்படிப்பட்ட தமிழகத்தில் அதுவும் தேர்தல் நேரத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களின் கண்களில் மாசு பட வைத்தது என்றே சொல்ல வேண்டும். தமிழர்களின் குறிப்பாக தமிழ்நாட்டின் பெருமையை சிதைக்கும் வகையில் இந்த முயற்சி இருந்தது என்றே மக்கள் நினைத்தார்கள். அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த தலைமை தேர்தல் ஆணையாளர் இருந்த போது நடைபெற்ற இந்த நிகழ்வு, வரலாற்றில் அழிக்க முடியாத கரையாக இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.

இருந்தாலும் தேர்தல் நடத்தை விதி முறைகளை கடைப்பிடிக்கும் தேர்தல் ஆணையமே இது மாதிரி உத்தரவு போட்டதால், அதை எதிர்த்து யாரும் நீதிமன்றங்களுக்குப் போக முடியாத சூழ்நிலை. ஏனென்றால் வாக்குப்பதிவுக்கு முன் தினம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, நீதிமன்றத்திற்கும் போனாலும் உடனடியாக தீர்வு கிடைக்காது என்பது அரசியல் கட்சிகளுக்குத் தெரியும். இது தவிரவேட்பாளர்கள் யாரும் கட்சித் தலைவரின் மேடையில் நிற்கக் கூடாது. அப்படி நின்றால் அந்த கூட்டத்திற்கு ஆகும் செலவுகளில் வேட்பாளர் பங்கும் சேர்க்கப்படும் என்று அறிவித்தது தேர்தல் ஆணையம். இது 1975களில் இருந்தே இருக்கின்ற தீர்ப்பின் அடிப்படையிலான நிலைமைதான் என்றாலும், அதை இந்த தேர்தலின் போது தனி அறிவிப்பாகச் செய்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது தேர்தல் ஆணையம். "வேட்பாளர்களைக் கூட அறிமுகப்படுத்தக்கூடாது என்று கெடுபிடி விதிப்பதா' என்று தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்தார் முதல்வர் ஜெயலலிதா. இது தவிர மாடல் கோட் ஆப் காண்டாக்ட்டை அமல்படுத்துவது தொடர்பாக தி.மு.க.வின் சார்பில் தேர்தல் கமிஷனுக்குமனுக்கள் கொடுக்கப்பட்டன. இறுதியில், "வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுங்கள். 144 தடையுத்தரவை ரத்து செய்யுங்கள்' என்று தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினே தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரைச் சந்தித்து புகார் கொடுத்து விட்டு வந்தார்.

இப்படி நல்லதோ, கெட்டதோ இந்த தேர்தலுடன் மிகவும் ஒருங்கிணைந்து செயல்பட்டது இந்திய தேர்தல் ஆணையம். ஜனநாயகத் திருவிழாவை செம்மையாக நடத்தி முடித்து விட்ட மன நிம்மதியில் அந்த ஆணைய அதிகாரிகள் இருக்கலாம். என்றாலும், கடைசி நேரத்தில் ஆணையத்திற்குள்ளேயே உள்ள சம்பத்திற்கும், இன்னொரு தேர்தல் ஆணையர் பிரம்மாவிற்கும் மோதல் வெடித்தது. குறிப்பாக வாரணாசி தொகுதியில் மோடியின் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட பிறகு பேட்டியளித்த பிரம்மா, "தேர்தல் ஆணையத் தலைமை பலவீனமாக இருக்கிறது' என்று குறை கூற, "அந்தத் தலைமையுடன் சேர்ந்துதான் பிரம்மா பணியாற்றி வருகிறார்' என்று பதிலடி கொடுத்தார் தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத். இதைத் தவிர்த்துப் பார்த்தால் தேர்தல் திருவிழாவின் கதாநாயகன் தேர்தல் ஆணையம். அந்த திருவிழாவில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அந்த கதாநாயகனின் கீழ் தேர்தலைச் சந்திக்கும் உப நடிகர்கள் போல்தான்!

தேர்தல் ஆணையத்திற்கு பாதுகாப்புப் பணியில் பக்க பலமாக இருந்தது இந்தியாவின் பாரா மிலிட்டரி போர்சுகள்தான். அதுபோல் அந்தந்த மாநில காவல்துறை அதிகாரிகள், காவலர்கள். இவர்கள் தவிர மாவட்டங்களில் உள்ள தேர்தல் அதிகாரிகள். மத்திய, மாநில அரசுகளின் பணியாளர்கள், காவல்துறையினரை நம்பித்தான் தேர்தலில் அமைதியை நிலைநாட்டி வாக்குப் பதிவை நியாயமாக நடத்த முனைகிறது தேர்தல் ஆணையம். ஆனால் வெளிமாநில தேர்தல் பார்வையாளர்களும், பாரா மிலிட்டரி போர்ஸினரும் மாநிலத்தில் உள்ள மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள் என்பதால் பெரிய அளவில் அனைவரும் சுதந்திரமாக முடிவு எடுக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. குற்றச்சாட்டுகளுக்கு வழிகள் அமைந்து விடுகின்றன. இதை நீக்குவதற்கு தேர்தல் ஆணையம் அமைக்கும் போதே விவாதங்கள் எழுந்தன. தேர்தல் ஆணையத்திற்கு தனியாக பணியாளர்களைக் கொடுத்து விடலாம். அப்போதுதான் தேர்தலை நேர்மையாக நடத்த முடியும் என்று கருத்துச் சொல்லப்பட்டது. ஆனால், "தேர்தல் ஐந்து வருடத்திற்கு ஒரு முறைதான் வருகிறது. அதன் பிறகு அந்தப் பணியாளர்களுக்கு வேலை இருக்காது. ஆகவே மாநிலங்களில் இருந்து பணியாளர்களை டெபுடேஷனில் பெற்றுக் கொள்ளட்டும்' என்று இறுதியில் முடிவு செய்யப்பட்டு விட்டது. ஆனால் அப்படி எடுக்கப்பட்ட முடிவு தேர்தலை முற்றிலும் சுதந்திரமாக நடத்துவதற்கு வாய்ப்பாக அமையவில்லை. கடந்த 16 தேர்தல்களின் அனுபவத்தைப் பார்த்தவர்கள் இப்படித்தான் சொல்லுவார்கள்.

தேர்தல் இன்னும் சுதந்திரமாக நடக்கவேண்டும் என்றால், புகாருக்கு இடமில்லாமல் இருக்க வேண்டும் என்றால் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தனி பணியாளர்கள் கொடுக்க வேண்டும். அப்படியில்லையென்றால், ஒரு மாநிலத்திற்கு வேறு மாநிலத்தின் தேர்தல் பணியாளர்களை அமர்த்த அனுமதிக்க வேண்டும். இந்த சூழ்நிலை எழுந்தால் மட்டுமே ஒவ்வொரு தேர்தலிலும் வரும் ஆயிரக்கணக்கான புகார்கள் குறைவதற்கு வாய்ப்புகள் உருவாகும். இப்படி நடத்தி முடிக்கப்பட்டுள்ள 16ஆவது தேர்தல் பிரசாரங்கள் இதுவரை நடைபெற்ற பிரசாரங்களை விட வித்தியாசமாக இருந்தது. 2004இல் "இந்தியா ஒளிருகிறது' என்ற பிரசாரத்தை முன் வைத்து ஆட்சியிலிருந்த பிரதமர் வாஜ்பாய் தேர்தலை சந்தித்தார். அதன் பிறகு 2009இல் "ஆம் ஆத்மி' என்ற கோஷத்தை முன் வைத்து பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன்சிங் தேர்தலை சந்தித்தார். இந்த முறை 2014இல் காங்கிரஸும் தங்கள் ஆட்சியின் சாதனையை வைத்து பிரசாரத்தில் இறங்கவில்லை. காரணம் அவர்களுக்கு பிரதமராக இருக்கும் டாக்டர் மன்மோகன்சிங்கை முன்னிறுத்தினால், ராகுல் காந்தி கோபித்துக் கொள்வார் என்று கருதியதுதான். அதற்குப் பதில் "மதவாத எதிர்ப்பு' "மதசார்பற்ற அரசு' என்ற முழக்கத்தை காங்கிரஸ் கட்சி முன் வைத்தது. ஆனால் தனிமரம் தோப்பாகாது என்பதை அக்கட்சி கவனிக்கத் தவறிவிட்டது. சென்ற தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க கட்சிகள் போட்டி போட்டன. இந்த தேர்தலில் காங்கிரஸ் விட்டு வெளியேறினால் போதும் என்று கூட்டணிக் கட்சிகள் சிட்டாகப் பறந்து விட்டன. ராகுல் காந்தியின் காங்கிரஸ் தன் கைக்குள் கொண்டு வரும் முயற்சியில் அவர் மன்மோகன்சிங் போன்றவர்களை மட்டும் புறக்கணிக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளையும் புறக்கணித்தார். இதன் விளைவாக காங்கிரஸ் கட்சி முன் வைத்த "மதசார்பற்ற அரசு' கோஷம் தனி மனிதக் குரல் போலவே தேர்தல் பிரசாரத்தில் ஒலித்தது.

ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ "வளர்ச்சி' என்பதை முன் வைத்து மோடியை களம் இறக்கியது. தேர்தல் களத்திற்குள் வரும் போது "குஜராத் மாடலில் வளர்ச்சியை இந்தியா முழுமைக்கும் மோடி கொடுப்பார்' என்பதுதான் பா.ஜ.க. தலைவர்களின் பிரசாரம். ஆனால் காலப்போக்கில் அது கதைக்கு உதவாது என்பதை மோடி உள்ளிட்ட அனைத்து தலைவர்களுமே உணர்ந்து கொண்டார்கள். பிரதமர் வேட்பாளராக நிற்கும் மோடி தன் மேடையில் ராமர் படத்தை வைத்துக் கொண்டே வாக்கு கேட்டார். இந்திய மக்கள் பிரநிதித்துவச் சட்டப்படி கடவுள் பெயரால், மதத்தின் பெயரால் வாக்கு கேட்பது  நிரூபணமானால் தேர்தல் வெற்றியே பறிக்கப்படும். வெற்றி பெற்றவர் வீட்டில் வந்து அமர்ந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால் அது தெரிந்தும் உத்தரபிரதேச மாநிலத்தில் மத ரீதியாக வாக்குகளைப் பிரிக்க வேண்டும் என்பதற்காக ராமர் படத்தை தேர்தல் மேடையிலேயே போட்டு வாக்குக் கேட்டார் மோடி. "நான் கீழ் ஜாதியா' என்று பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் பாணியில் பிரசாரத்தில் இறங்கினார் மோடி. ஆகவே இந்திய வாக்காளர்கள் ஒரு நொடி திகைத்துப் போய் நின்றார்கள். நடப்பது பிரதமர் பதவிக்கான தேர்தலா, அல்லது பஞ்சாயத்துத் தலைவருக்கான தேர்தலா என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமல் திருதிருவென்று முழித்தார்கள். அந்த அளவிற்கு தேர்தல் பிரசாரம் அமைந்தது.

எல்லாம் முடிந்து நேற்றைய தினம் இந்தியா வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை கடைசிக் கட்ட தேர்தலில் பதிவு செய்தார்கள். மே 16ஆம் திகதி இந்த வாக்கு எண்ணிக்கைகள் நடக்கும். அன்றைய தினம் தேசிய அளவில் ஆட்சியமைக்கப் போகும் கட்சி பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியா அல்லது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியா என்பது இறுதியாகிவிடும். தேர்தலின் முதல் கட்டங்களில் இருந்த மோடி இமேஜ் அவரது கீழிறங்கிய பிரசாரத்தால் இறுதிக் கட்டங்களில் பாதிக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும். அதேபோல் காங்கிரஸ் தொண்டர்களை சோர்வடையைச் செய்த ராகுல் காந்தி பிரசாரம், அவரது தங்கை பிரியங்காவின் பிரசாரத்தால் கொஞ்சம் சூடுபிடித்தது. சோனியாவின் பிரசாரமும் அதற்கு கைகொடுத்தது. இதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு சீட்டுக்களைப் பெற்றுத் தரப் போகிறது என்பது உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விடயம். ஆனால் முதன் முறையாக இடது சாரிக் கட்சிகள் எழும்பவே முடியாத அளவிற்கு அதள பாதாளத்திற்குப் போய் விட்டன. மூன்றாவது அணி அமைக்கும் பொறுப்பு இப்போது மாநிலக் கட்சிகளுக்கு வந்து விட்டது. தேர்தல் முடிவுகளின் இறுதிச் சுற்றில் மாநிலக் கட்சிகள் கனிசமான இடங்களைப் பெற்றால், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அல்லாத மத்திய அரசு இந்தியாவில் உருவாகக் கூடும். அப்படியில்லையென்றால் பா.ஜ.க.தலைமையிலான அரசு உருவாகும். ஆனால் காங்கிரஸ் தலைமையிலான அரசு உருவாகும் சாத்தியக்கூறுகள் ரொம்பவும் தொலைவில் இருக்கின்றன என்பதுதான் இறுதிச் சுற்று முடிவு!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X