2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மோடியுடன் மோதுமா இலங்கை?

Suganthini Ratnam   / 2014 மே 23 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி  அரசாங்கம் புதுடெல்லியில் அமைவது தமக்குச் சாதகமானது போன்று கருத்து வெளியிடத் தொடங்கியுள்ளது இலங்கை அரசாங்கம்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணத் தொடங்கியதை அடுத்து வெளியான ஆரம்ப நிலவரங்களே, காங்கிரஸ் கட்சி படுதோல்வி கண்டுவிடும் என்பதையும் பா.ஜ.க. தான் ஆட்சியமைக்கப் போகிறது என்பதையும் தெளிவாகப் புலப்படுத்தின.

உடனடியாகவே, பா.ஜ.கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நரேந்திர மோடிக்கு தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவிப்பதில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முந்திக்கொண்டிருந்தார்.

முக்கியமான உலகத் தலைவர்கள் அனைவருமே தேர்தல் முடிவுகள் முறைப்படியாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வாழ்த்துத் தெரிவிப்பதற்கு முண்டியடித்தனர்.

அவர்கள் எல்லோரையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முந்திக்கொண்டு விட்டார் என்பதில் இலங்கை அரசாங்கம் திருப்திகொள்கிறது.
அது மட்டுமல்லாமல், புதுடெல்லியில் ஏற்பட்டுள்ள இந்த ஆட்சி மாற்றத்தை கொழும்பு விரும்புவது போன்ற தோற்றப்பாட்டையும் உருவாக்க அரசாங்கம் முனைகிறது என்பதில் சந்தேகமில்லை.

நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த தகவல், மின்னல் வேகத்தில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. டுவிட்டரிலும் அதுபற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.

நரேந்திர மோடி அதிகாரபூர்வமான முறையில் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட முன்னரே, அவரை கொழும்புக்கு வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

அதற்கு டுவிட்டரில் பதில் அளித்திருந்த நரேந்திரமோடி, இலங்கையுடன் வலுவான உறவுகளை எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இவையெல்லாம், புதுடெல்லியில் பா.ஜ.க. அரசாங்கம் அமைய வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது போன்றும் நரேந்திர மோடியின் வெற்றியை கொழும்பு சாதகமானதாக கருதுவது போன்றும் தோற்றப்பாட்டை உருவாக்கின.

அது மட்டுமல்லாது, அமைச்சரவைப் பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல்லவும், இந்தியாவில் பலமான ஆட்சி ஒன்று அமைவதை அரசாங்கம் விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்தியத் தேர்தல் முடிவுகளையும் நரேந்திர மோடியின் வெற்றியையும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது போன்று காட்டிக்கொள்ள முயன்றது அரசாங்கம்.

ஆனால், உண்மை அதற்கு எதிர்மாறானது. புதுடெல்லியில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் வீழ்ச்சி காண்பதை கொழும்பு விரும்பவில்லை என்பதே உண்மை.

ஏனென்றால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு காங்கிரஸ் அரசாங்கம் பெரியளவில் உதவியதே தவிர, உபத்திரவங்களை கொடுத்ததில்லை.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது எந்த எதிர்ப்பையும் காட்டாமல், புதுடெல்லி பச்சைக்கொடி காண்பித்திருந்தது.

அதன் பின்னரும் கூட, இலங்கை அரசாங்கத்துக்கு புதுடெல்லி பெரியளவில் எந்தத் தலைவலியையும் கொடுக்கவில்லை. இரண்டு தடவைகள் ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்திருந்தபோதும் கூட, அது காங்கிரஸ் அரசாங்கத்தின் சுதந்திரமான முடிவு அல்ல என்பதை கொழும்பு நன்றாகவே உணர்ந்திருந்தது.

தமிழ்நாட்டின் அழுத்தங்களால்தான், தன் மீது அழுத்தங்களைக் கொடுக்க புதுடெல்லி முனைவதாக கொழும்பு உணர்ந்திருந்ததால், இருதரப்பு உறவுகளில் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை.

அதற்காக போருக்குப் பின்னர் இந்திய - இலங்கை இராஜதந்திர உறவுகள் எந்தச் சிக்கலுமின்றி திருப்தியாக இருந்தது என்று அர்த்தமில்லை. அண்மைக்காலத்தில் தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் காப்பாற்றத் தவறிவிட்டது என்ற வருத்தம், மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்திடமிருந்து வந்தது.

அதேவேளை, 13ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் இந்தியா கொடுக்கும் மென் அழுத்தங்கள் மற்றும் ஜெனீவா தீர்மானங்களில் இந்தியாவின் அணுகுமுறைகள் குறித்தும் இலங்கைக்கும் வருத்தம் இருந்தது.

இதனால், இருதரப்பு உறவுகளில் ஒரு இடைவெளி தோன்றியதை மறுக்கமுடியாது. ஆனால், அதற்காக இருதரப்பு உறவுகளில் முறிவு ஏற்பட்டு விட்டதாகவும் அர்த்தம் கொள்ள முடியாது.

தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் கருத்து வெளியிட்ட மன்மோகன் சிங், அரசாங்கத்தில் இறுதியாக வெளிவிவகார அமைச்சராக இருந்த சல்மான் குர்ஷித் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், இந்திய – இலங்கை உறவுகள் நன்றாகவே இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

போருக்குப் பிந்திய காலகட்டங்களில் பல விடயங்களில் கருத்து வேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் இருந்தாலும், அதை இருதரப்புக்குமே ஒருபோதும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை.

ஒருவரை ஒருவர் விமர்சிக்கவோ, விட்டுக்கொடுக்கவோ இல்லை. இது ஒன்றே இந்திய - இலங்கை உறவுகளில் முறிவுகள் இல்லை, வெறும் இடைவெளிதான் உள்ளது என்பதை உறுதிப்படுத்தப் போதுமானது.

மன்மோகன் சிங் அரசாங்கத்தின் பத்தாண்டு ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு, இந்தியா பல்வேறு விடயங்களில் பக்கபலமாக நின்று உதவியதுடன், பெரியளவில் முரண்படாமலும் நடந்துகொண்டிருந்தது.

ஒரேயொரு விடயத்தில்தான், இலங்கைக்கு சற்று கலக்கம் இருந்தது.

புதுடெல்லியின் முடிவுகளின் மீது செல்வாக்குச் செலுத்தத்தக்க நிலையில், தமிழ்நாடு இருப்பது ஒன்றுதான், இலங்கை அரசாங்கத்துக்கு கலக்கத்தையும் கடுப்பையும் ஏற்படுத்துவதாக இருந்தது.

தமிழ்நாட்டின் ஆதிக்கம் புதுடெல்லி மீது இருப்பது தவிர்ந்த மற்றெல்லா வகைகளிலும், காங்கிரஸ் அரசாங்கத்தின் ஆட்சியும் அணுகுமுறைகளும் கொழும்புக்கு உவப்பானதாகவே இருந்தன.

இப்படிப்பட்ட நிலையில், பா.ஜ.க. ஆட்சியமைப்பதையோ, நரேந்திரமோடி பதவிக்கு வருவதையோ இலங்கை அரசாங்கம் ஆவலுடன் எதிர்பார்த்தது என்றால், அது அப்பட்டமான பொய்யே.

காங்கிரஸ் அரசாங்கத்துக்கு தேர்தலில் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் இலங்கை அரசாங்கம் எந்தளவுக்கு அக்கறைகொண்டிருந்தது என்பதற்கு ஒரு சிறிய உதாரணமே போதும்.

இந்தியத் தேர்தல்கள் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார் ஐக்கிய தேசியக் கட்சியின்; நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள.

கடந்த வருடம் இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி வெளியிட்ட ஒரு அறிக்கையில் இலங்கையிடமிருந்தும், இந்தியா ஆயுத தளபாடங்களை வாங்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவுக்கு என்ன ஆயுதங்கள் விற்கப்பட்டன,  எந்த அடிப்படையில் அவை விற்கப்பட்டன,  அதன் மூலம் அடைந்த ஆதாயங்கள் என்ன என்ற கேள்விக்கொத்து ஒன்றை பிரதமர் டி.எம்.ஜெயரட்னவிடம் தலதா அத்துகோரள கேட்டிருந்தார்.

அப்போது பிரதமர் டி.எம்.ஜெயரட்ன, வியட்நாம் சென்றிருந்தார். அதனால், அரச தரப்பு கொரடாவான அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவே அதற்குப் பதிலளித்திருந்தார்.

இந்தக் கேள்விகளுக்குத் தற்போது பதிலளிக்க முடியாது என்றும் இது இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், இரண்டு மாதங்கள் கழித்து பதிலளிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

தாம் அளிக்கும் பதில் இந்திய அரசாங்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற அக்கறை இலங்கை அரசாங்கத்திடம் இருந்ததையே இது வெளிப்படுத்தியது.

இப்படிப்பட்ட சூழலில் காங்கிரஸ் அரசாங்கம் வீழ்ந்து, பா.ஜ.க. அரசாங்கம் பதவிக்கு வரவேண்டும் என்று கொழும்பு ஆவல் கொண்டிருந்தது என்று கூறினால் அதை யாரும் நம்பப் போவதில்லை. ஆனால், அப்படி நம்ப வைக்கவே அரசாங்கம் முனைவதாகத் தெரிகிறது.

புதுடெல்லியில் நரேந்திர மோடி தலைமையிலான பலமான அரசாங்கம் அமைவதை இலங்கை விரும்புவதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

இந்த விடயத்தில் இந்தியத் தேர்தல் முடிவு இலங்கை அரசாங்கத்துக்கு அளித்துள்ள ஒரே ஆறுதல், புதுடெல்லி மீது செல்வாக்குச் செலுத்தும் திறனை தமிழ்நாடு இழந்து போயிருப்பது மட்டும்தான்.

மன்மோகன் சிங்கின் பத்தாண்டு கால ஆட்சியிலும், அதற்கு முந்திய பா.ஜ.க. ஆட்சியிலும் புதுடெல்லியின் முடிவுகள் மீது தமிழ்நாடு ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இருந்து வந்தது.

அதாவது, தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம்  அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  என்று ஏதாவதொரு மாநிலக் கட்சியின் தயவுடன் தான் முடிவுகளை எடுக்கவேண்டிய கட்டாயம் புதுடெல்லிக்கு இருந்து வந்தது.

குறிப்பாக, 2012ஆம் 2013ஆம் ஆண்டுகளில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிராக தீர்மானங்களை இந்தியா ஆதரித்திருந்தது.

இது இந்தியா இதுவரை கடைப்பிடித்துவரும் வெளிவிவகாரக் கொள்கைக்கு முரணான முடிவாகவே இருந்தது. ஆனாலும், தமிழ்நாட்டின் நெருக்குதல் காரணமாக அதற்கு அடிபணிந்து புதுடெல்லி முடிவெடுக்க நேர்ந்தது. ஆனால், 2014ஆம் ஆண்டு தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை. அதற்குக் காரணம், காங்கிரஸ் அரசின் மீது தமிழ்நாடு கொண்டிருந்த கடிவாளம் கழன்று போனதுதான்.

இந்தத் தேர்தலில், எந்தவொரு மாநிலக் கட்சியினது தயவையும் நம்பியிருக்கவேண்டிய தேவையை பா.ஜ.கட்சிக்கு  இல்லாமல் செய்துவிட்டது.

தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ள பா.ஜ.கட்சியின் மீது தமிழ்நாடு அழுத்தங்களைக் கொடுக்க முடியாது என்பது ஒன்றுதான், இந்தியத் தேர்தல் முடிவு கொழும்புக்குக் கொடுத்துள்ள ஆறுதலான விடயம்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்தபோது கூட, இதனை வெளிப்படையாக கூறியிருந்தார்.

தமிழ்நாட்டில் முதல்வர் ஜெயலலிதாவின் தயவின்றி புதுடெல்லியில் ஆட்சி அமைவது மகிழ்ச்சியான விடயம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடயத்தில் பலமான அரசாங்கம் ஒன்று புதுடெல்லியில் பதவிக்கு வருவது வேண்டுமானால், இலங்கைக்கு மகிழ்ச்சி தரும் விடயமாக இருக்கலாம்.

ஆனால், வலுவான மத்திய அரசாங்கம் ஒன்று புதுடெல்லியில் ஆட்சியில் அமர்வது ஒருபோதும் கொழும்புக்குச் சாதகமானதாக இருக்க முடியாது.

ஏனென்றால், மன்மோகன் சிங் அரசாங்கம் கொள்கை ரீதியாக முடிவெடுக்கத் தயக்கம் காட்டும் ஒன்றாக இருந்ததால்தான்,  வெளிவிவகாரக் கொள்கை விடயங்களில் நெகிழ்ச்சிப் போக்குடன் நடந்துகொள்ள வேண்டியிருந்தது.

உறுதியான அரசாங்கமாக அது இருந்திருந்தால்,  பல விடயங்களில் இலங்கை அரசாங்கத்தினால் இந்தியாவினது சொல்லைத் தட்டிக்கழிக்க முடியாமல் போயிருக்கும்.

குறிப்பாக, 13ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் இன்றுவரை நிறைவேற்றவில்லை.
இது போன்று இந்தியாவின் பல கோரிக்கைகளை கொழும்பு அலட்சியம் செய்து வந்துள்ளது.

ஆனால், புதுடெல்லியில் வலுவான ஒரு அரசாங்கம் அமைந்தால், இத்தகைய உதாசீனப்படுத்தல்களுக்கு ஒருபோதும் இடமளிக்காது என்பது கொழும்புக்கு நன்றாகவே தெரியும்.

இருந்தாலும், நரேந்திர மோடி அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள இலங்கை முந்திக்கொள்வது அதனைத் தனது கைக்குள் போட்டுக்கொள்வதற்கேயாகும்.

ஏனென்றால், காங்கிரஸ் அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையை நரேந்திர மோடியும் பா.ஜ.கட்சியும்  கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், இந்தியாவின் நிலைப்பாடுகள் மாற்றமடைவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

குறிப்பாக பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் இலங்கை கொண்டுள்ள நெருக்கமான உறவை, நரேந்திரமோடியின் அரசாங்கம் தவறான கண்ணோட்டத்துடன் அணுகிவிடக்கூடாது என்று கொழும்பு நிச்சயம் கவனம் செலுத்தும். இந்த மூன்று நாடுகளினதும் நட்பை விட்டுக் கொடுக்கும் நிலையில் கொழும்பு இல்லை.

அதேவேளை, இந்தியாவின் இரண்டு பிரதான போட்டியாளர்களான பாகிஸ்தான், சீனாவுடன் இலங்கை கொண்டிருக்கும் உறவை இந்திய அரசு சகித்துக்கொள்ளவும் வேண்டும். அதற்கான இராஜதந்திர முன்னகர்த்தலைத்தான் கொழும்பு இப்போது செய்து வருகிறது.

நரேந்திர மோடியுடன் ஏற்படுத்திக்கொள்ளத் துடிக்கும் உறவின் மூலம் தனக்கான ஒரு கவனத்தை உருவாக்கிக்கொள்ள கொழும்பு முனைகிறது.
அதற்கு பா.ஜ.கட்சியில்; உள்ள சுஸ்மா சுவராஜ் மற்றும் சுப்ரமணியம் சுவாமி ஆகியோர்தான், நம்பிக்கை நட்சத்திரங்களாக மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு உள்ளனர்.

ஆனால், நரேந்திர மோடி அரசாங்கம் பதவிக்கு வருவது இலங்கைக்கு அவ்வளவு நல்ல சகுனமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.

இருந்தாலும், புதுடெல்லியை வசப்படுத்துவதற்கு கொழும்பு உச்சக்கட்ட முயற்சிகளை எடுக்கிறது, இன்னும் எடுக்கும்.  ஏனென்றால், இந்திய மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பதவிக்கு வந்துள்ள ஒரு அரசாங்கத்தைப் பகைத்துக்கொள்வது உலகளவில் இலங்கைக்கு இன்னும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கொழும்பு அறியாதிருக்காது. எனவே, முடிந்தவரை புதுடெல்லிக்கு நேசக்கரம் நீட்டவே முயற்சிக்கும்.

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பெரும்பாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைப் புதிய இந்திய அரசாங்கத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள அரசாங்கம் நினைக்கிறது.
அது எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பது போகப்போகத்தான் தெரியவரும்.

ஆனால், ஒன்றுமட்டும் நிச்சயமானது, 13ஆவது திருத்தச்சட்ட நடைமுறைப்படுத்தல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களிலும், இதுவரை மன்மோகன் சிங் அரசாங்கத்தை ஏமாற்றியது போன்று நரேந்திர மோடி அரசாங்கத்தையும் சமாளித்துவிடலாம் என்று மட்டும் தப்புக்கணக்குப் போடப்பட்டால், அது இலங்கைக்கு பல சவால்களை ஏற்படுத்தும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X