2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இந்தியா இந்தியாவே தான்

Menaka Mookandi   / 2014 ஜூன் 01 , பி.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் நடுப்பகுதி வரை, இந்தியாவில் நடைபெற்ற லோக் சபா தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெறுவதற்கு ஊடகங்களே முக்கிய காரணமாக இருந்தன. சில அரசியல் விமர்சகர்கள் கூறுவதைப் போல், அந்தத் தேர்தல் வெற்றியானது, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் ஊழல் மலிந்திருந்தமை தான் காரணம் என்று கூற முடியாது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஊழல் மலிந்திருந்தமை உண்மை தான். ஆனால், ஊழல் என்ற விடயம் மக்களால் விளங்கிக்கொள்ளக்கூடிய விடயமா என்பது சந்தேகமே. மக்கள் ஊழல் என்ற விடயத்தை புரிந்துகொண்டு தேர்தல்களின் போது நடந்து கொள்வதாக இருந்தால், இலங்கையில் கடந்த காலத்தில் நடைபெற்ற பல தேர்தல்களில் பெருமளவில் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர்கள் படு தோல்வியடைந்திருக்க வேண்டும். ஆனால், ஊழலுக்குப் பெயர் போன சிலர், தமது மாவட்டங்களில் ஆகக் கூடுதலான வாக்குகளை பெற்றவர்களுள் அடங்கியிருந்தனர்.

இலங்கை வாக்காளர்களுக்கு ஊழல் என்பது விளங்காவிட்டாலும், இந்திய வாக்காளர்கள் அதனை விளங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று வாதிடவும் தமிழ்நாட்டு தேர்தல் முடிவுகள் தடையாக இருக்கின்றன. தமிழகத்தில் 39 லோக் சபா தொகுதிகளில் 37 தொகுதிகளை, ஜெயலலிதா ஜெயராம் தலைமையிலான அகில இலங்கை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக என்பது ஊழலோடு சம்பந்தப்படாத கட்சியல்ல.

அக்கட்சியில் ஜெயலலிதாவும் ஊழல் குற்றச்சாட்டுக்களை அடிக்கடி எதிர்நோக்குபவராவார். அக்கட்சியின் தலைவர்களுக்கு எதிராக, ஊழல் தொடர்பான வழக்குகள்; தாக்கல் செய்யப்பட்டு உள்ளமை சகலரும் அறிந்த உண்மையாகும். சில வருடங்களுக்கு முன்னர் ஜெயலலிதா, தமது வளர்ப்பு மகனென்ற ஒருவரது திருமணத்திற்காக 100 கோடி ரூபா செலவழித்ததாக அக்காலத்தில் செய்திகள் கூறின. அந்த அ.தி.மு.க.வே தமிழகத்தில் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை தமதாக்கிக் கொள்வதாக இருந்தால் மோடியின் வெற்றியானது, ஊழல் எதிர்ப்புப் போராட்டமொன்றின் வெற்றியாக கருத முடியாது.

பா.ஜ.க.வின் வெற்றியானது, தெளிவாகவே ஊடகங்களினால் தட்டில் வைத்து வழங்கப்பட்ட வெற்றியாகும். கடந்த வருடம் முதல் இந்திய ஊடகங்கள் இம்முறை லோக் சபா தேர்தலில் மோடி வெற்றி பெறுவார்... வெற்றி பெறுவார்... என்று இடைவிடாது கூறி வந்தன. அந்த எதிர்வுகூறல்களில் எவ்வித தர்க்க ரீதியிலான அடிப்படையும் இருக்கவில்லை.

ஆனால், ஒரு வருடத்துக்கும் மேலாக ஊடகங்கள் மக்களின் மனங்களின் பலாத்காரமாக திணித்த இக்கருத்தின் காரணமாக, மக்கள் தாமும் வெற்றி பெறும் பக்கத்தில் இருக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். சுருக்கமாக கூறின், மோடி அலை என்பது ஊடகங்களினால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

மிகக் கூடுதலான கோடீஸ்வரர்களும் பாரிய குற்றச்செயல்களுக்காக நீதிமன்றங்களின் படியேறியவர்களும் இம்முறையே இந்திய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று கூறியிருந்தது. மோடியும் ஆயிரக் கணக்கானவர்களின் உயிரைக் குடித்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநில இந்து முஸ்லிம் கலவரத்தின் போது கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்.

இலங்கையில் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான போரின் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை, அவரவர் விரும்பியவாறு அவரவரது அரசியல் நோக்கங்களுக்குப் பொருத்தமானவாறு முன்வைப்பதைப் போல், குஜராத் கலவரத்தின் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலர் பல விதமாக முன்வைக்கிறார்கள்.

ஆரம்பத்தில் 2000 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இப்போது அது 1000ஆக குறைக்கப்பட்டுள்ளது. இருந்தும் அது தொடர்பாக மோடிக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டின் பாரதூரத் தன்மை குறையவில்லை. அமெரிக்கா இந்தக் குற்றச்சாட்டின் காரணமாக அவருக்கு தொடர்ந்தும் விசா வழங்க மறுத்து வந்துள்ளது.

இந்தப் பின்னணியில் தான் மோடி வெற்றி பெற்றார். இப்போது அவர் தமது பெயருக்கு ஏற்பட்டு இருக்கும் இழுக்கை அகற்றிக்கொள்ள முயற்சி செய்வதை நன்றாகக் காணக்கூடியதாக இருக்கிறது. இதற்கு முன்னர் இந்திய பிரதமர்கள் தமது பதவிப் பிரமாண வைபவங்களின் போது செய்ததற்கு மாறாக, மோடி தமது பதவிப் பிரமாண வைபவத்திற்கு தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு (சார்க்) நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தமை அதில் ஒரு அம்சமாகும்.

தேர்தலில் தமது பேரம் பேசும் சக்தியை இழந்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு, தாமும் ஒரு சக்தி என்று காட்ட இந்த அழைப்பு சிறந்த சந்தர்ப்பமாகியது. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை வென்ற அ.தி.மு.க.வும், பா.ஜ.க அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளதால் பேரம் பேசும் சக்தியை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்கட்சிகள் மோடியின் அழைப்பின்படி, இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு வருவதை எதிர்த்தனர். ஜெயலலிதா, மோடியின் பதவிப்பிரமாண வைபவத்தையே பகிஷ்கரித்தார். தமிழகத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட வைகோ, புதுடெல்லியில் நடத்திய ஆர்;ப்பாட்டமொன்றின்போது கைது செய்யப்பட்டார்.

ஆனால், மோடி அந்த எதிர்ப்புக்களை திரும்பிக்கூட பார்க்கவில்லை. அதேவேளை, தமிழக தலைவர்களை அவமதிப்பதற்காக மோடி இந்த அழைப்பை விடுக்கவும் இல்லை. தமது இமேஜை மேம்படுத்திக்கொள்வதே அவரது பிரதான நோக்கமாகியது. நாம் கடந்த வாரம் கூறியதைப்போல், தமது பதவிப் பிரமாண வைபவத்திற்கு பாகிஸ்தான் பிரதமரை அழைப்பதே அவரது நோக்கமாக இருந்திருக்கலாம்.

இந்தியாவும் பாகிஸ்தானும் நீண்ட காலமாக எதிரிகளாக கருதப்படும் நாடுகளாகும். இந்த நிலையில் இந்தியாவின் எதிரி நாடாக பலரால் கருதப்படும் பாகிஸ்தானின் பிரதமரை அழைப்பது, அதிலும், தம்மை பலர் ஒரு முஸ்லிம் விரோதியாக கருதும் நிலையில் பாகிஸ்தான் பிரதமரை அழைப்பது, சர்வதேச ஊடகங்களின் முன் அவருடன் கை குலுக்குவது, அதன் மூலம் தாம் ஊடகங்களினால் சித்தரிக்கப்பட்ட மோடி அல்ல என்று காட்டுவதே மோடியின் நோக்கமாகும்.

ஆனால், அதற்காக பாகிஸ்தான் பிரதமரை மட்டும் அழைத்தால், அது அளவுக்கு அதிகமான செயலாக தென்படலாம். அது போலி நாடகம் போல் தென்படலாம். எனவே தான் அவர் சகல சார்க் நாடுகளினதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். உண்மையிலேயே மோடியின் பதவிப் பிரமாண வைபவத்தின் போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முக்கிய பிரமுகராக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துக்கொள்ளவில்லை. அவரும் அங்கு மற்றொரு சார்க் தலைவர் மட்டுமே.

ஆனால், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபின் இந்திய விஜயம் சர்வதேச ஊடகங்களுக்கு முக்கிய செய்தியாகியது. மோடி, ஷரீபை வரவேற்று அவருடன் கை குலுக்குவதை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கைகுலுக்கல் (hளைவழசiஉ hயனெ-ளாயமந) என்றே பி.பி.சி. தொலைக்காட்சி வர்ணித்தது. இலங்கை ஜனாதிபதி அந்த இடத்தில் இல்லாதிருந்தாலும் வித்தியாசம் எதுவும் தென்பட்டு இருக்காது. ஆனால், ஷரீப் அங்கு செல்லாதிருந்தால் அது சர்வதேச ஊடகங்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துக்கொண்டிருக்கும்.

மோடியின் நோக்கத்தை தமிழக தலைவர்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை. அவர் இலங்கை ஜனாதிபதிக்கு முக்கியத்துவம் அளிக்க இந்த வைபவத்தை ஏற்பாடு செய்யவில்லை. இதனை புரிந்துகொள்ளாமலும் மோடியின் பலத்தை புரிந்துகொள்ளாமலும் அவசரப்பட்டு எதிர்ப்பு தெரிவித்ததில், தமிழக தலைவர்கள் அநாவசியமாக மூக்குடைபட்டுக் கொண்டார்கள்.

மோடிக்கு மற்றொரு நோக்கமும் இருந்தது. தமது ஆட்சியல் இந்திய வெளியுறவுக் கொள்கையில் பாரிய மாற்றம் ஏதும் இருக்கப்போவதில்லை என்பதை காட்டுவது தான் அவரது இந்த இரண்டாவது நோக்கமாகும். மோடியின் பா.ஜ.கவை இந்து தீவிரவாத கட்சியாகவே சர்வதேச ஊடகங்கள் எப்போதும் வர்ணிக்கின்றன.

அதேவேளை, குஜராத் கலவரங்களின் போது கை கட்டி நின்றார் என்றும் இடம்பெற்ற கொலைகளுக்காக இதுவரை கவலை தெரிவிக்காதவர் என்றும் எழும் குற்றச்சாட்டுக்கள் காரணமாக, மோடியின் தலைமையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இதுவரை காணப்பட்ட முதிர்ச்சி இனி காணப்படாது என்று பலர் சூட்சுமமாக கருத்து வெளியிட்டு இருந்தனர்.

தேர்தல் காலத்திலும் மோடி, சீனாவையும் பாகிஸ்தானையும் சாடிப் பேசியிருந்தார். எனவே அவரது ஆட்சியின் கீழ் காங்கிரஸ் காலத்தில் வெளியுறவுக் கொள்கையில் காணப்பட்ட முதிர்ச்சி காணப்படாது என பலர் நினைத்ததில் நியாயம் இல்லாமல் இல்லை.

தமக்கேற்பட்டு இருக்கும் அவப்பெயரை அகற்றிக்கொள்ள, மோடி தமது பதவிப் பிரமாண வைபவத்தை வித்தியாசமான முறையில் ஏற்பாடு செய்திருந்த நிலையிலும் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் எவ்வித தயக்கமுமின்றி அந்த வைபவத்தில் கலந்துகொண்டனர். இலங்கையில் இது போன்றதோர் நிலைமையை எதிர்பார்க்க முடியாது.

இலங்கையில் பலர், மோடியின் கீழ், இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கை மாறுபடும் என எதிர்பார்த்தனர். குறிப்பாக இலங்கையில் சிங்கள மக்களில் பலர் இனப் பிரச்சினை விடயத்தில் அவ்வாறானதோர் மாற்றத்தை மோடியிடமிருந்து எதிர்பார்த்தனர்.

காங்கிரஸ் ஆட்சியின் கீழ், இந்தியா நீண்ட காலமாக இலங்கை மீது பல்வேறு விதமான நெருக்குதல்களை தொடுத்துள்ளது. உண்மையிலேயே, இலங்கையின் இனப் பிரச்சினை ஆயுதப் போராக மாறுவதற்கும் இந்தியா பெரும் பங்களிப்பை அளித்துள்ளது. 1980களில் இந்தியா, புலிகள் இயக்கத்திற்கு மட்டுமன்றி டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் போன்ற இயக்கங்களுக்கும் ஆயுதம், பணம் மற்றும் ஆயுதப் பயிற்சி போன்றவற்றை வழங்கியது. அதன் பின்னர் இலங்கை அதிகார பரவலாக்கல் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதற்கும் இந்தியாவே முக்கிய காரணமாகியது.

இலங்கை பாதுகாப்புப் படைகள், 1987ஆம் ஆண்டு புலிகளை தோற்கடிக்கும் நிலைக்கு நெருங்கியிருந்த நிலையில், இந்தியா தமது படைப் பலத்தை பாவித்து அதனை தடுத்தது. இந்திய கடற்படை, தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு வரும் போர்வையில் இலங்கை கடல் எல்லையை நெருங்கி, இலங்கை அரசாங்கத்துக்கு எச்சரிக்கை செய்தியொன்றை வழங்கியது.

இந்திய விமானப் படைகளும் அதேபோல் நிவாரணப் பொருட்களுடன் வந்து இலங்கையின் வான் எல்லையை மீறியது. அவ்வாறு நெருக்குதல் கொடுத்து இறுதியில் இந்திய அரசாங்கம், இலங்கை மீது, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தையும் திணித்தது. அதன் பின்னர் இன்று வரை, இந்திய அரசாங்கம் அதிகார பரவலாக்கல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்திக் கொண்டே இருக்கிறது.

இவை அனைத்தும் பிரதானமாக காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே இடம்பெற்றன. எனவே, மோடி இலங்கையின் இனப் பிரச்சினை விடயத்தில் நெருக்குதல் கொடுக்கும் கொள்கையை கை விடுவார் என்று பலர் நினைத்திருந்தனர். எனவே தான் பதவிப் பிரமாண வைபவத்தின் பின்னர் மோடிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது மோடி, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை வலியுறுத்திய போது பலர் வியப்படைந்தனர். எனவே தான், ஊடகங்கள் இன்னமும் அதனைப் பற்றி செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிடுகின்றன.

ஆனால், வரலாற்றை ஆராய்ந்தால் இதில் வியப்படைவதற்கு எதுவும் இல்லை. 1987 ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் போது, பாரதிய ஜனதாக் கட்சி சிறிதோர் அமைப்பாக இருந்தது. அக்காலத்திலும் அக்கட்சி இந்த ஒப்பந்தத்தை விமர்சிக்கவில்லை. 1998ஆம் முதல் 2004ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியே இருந்தது. அக் காலத்தில் அக் கட்சியும், இலங்கைத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கைச்சாத்திட்ட இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை பூரணமாக அமுலாக்க வேண்டும் என்றே வலியுறுத்தினர்.

2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இந்திய நாடாளுமன்ற சர்வ கட்சித் தூதுக் குழுவொன்று வட பகுதி நிலைமையை ஆரயய்வதற்கென, இலங்கைக்கு விஜயம் செய்தது. தற்போது மோடியின் அரசாங்கத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் சுஷ்மா ஸ்வராஜ்ஜே அந்தத்; தூதுக் குழுவுக்கு தலைமை தாங்கினார். அப்போது, அவர் பா.ஜ.க தலைவர்களில் ஒருவராகவும் இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவியாகவும் இருந்தார்.

அவர் இந்த விஜயத்தின் போது இலங்கை தொடர்பான காங்கிரஸ் அரசாங்கத்தின் எந்தவொரு கொள்கையையோ அல்லது எந்தவொரு நடவடிக்கையையோ விமர்சிக்கவில்லை. மாறாக, அவர் அவற்றை வலியுறுத்தியே பேசினார். தமது விஜயத்தின் இறுதியில் அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதிலிருந்த இரண்டு வசனங்களை இங்கு கவனத்தில் கொள்வது பொருத்தமாகும்.

'இலங்கை அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, அர்த்தமுள்ள அதிகார பரவலாக்கல் திட்டமொன்றின் கீழ், முறையான அரசியல் தீரவொன்றை காண்பதை நாம் எதிர்ப்பார்க்கின்றோம்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அப்பால் சென்ற திட்டமொன்றின் கீழ், இந்த நோக்கத்தை அடைவதாக எமக்கு கடந்த காலத்தில் உறுதியளிக்கப்பட்டது.' என்பனவே இந்த இரு வசனங்களாகும்.

அன்று காங்கிரஸ் அரசாங்கத்தின் தூதுக் தூகுழுவொன்று இலங்கைக்கு வந்திருந்தாலும், அந்தத் தூதுக் குழுவும் தமது விஜயத்தின் இறுதியில் இதே கருத்தை தான் வெளியிட்டு இருக்கும். தமது அறிக்கையில் சுஷ்மா நாம் என்று குறிப்பிடும் போது பா.ஜ.கவை குறிப்பிடவில்லை, இந்தியா என்ற நாட்டையே குறிப்பிட்டார். ஆனால், அவர் தமது கட்சிக் கொள்கைகளுக்கு முரணாக கருத்து வெயியிடவும் இல்லை.

எனவே, இரண்டாண்டுகளுக்கு முன்னர் 13 பிளஸ் வேண்டும் என்று கோரிய பா.ஜ.க, இன்று அதற்கு மாறாக நடந்து கொள்ள எந்த நியாயமும் இல்லை. சுருக்கமாக கூறுவதாக இருந்தால் 1980களில் பா.ஜ.க உருவானது முதல் இன்று வரை அக் கட்சி, இலங்கை விடயத்தில் காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட எந்தவொரு முடிவையோ அல்லது எந்தவொரு திட்டத்தையோ விமர்சிக்கவில்லை. எதிர்க்கவும் இல்லை.

எனவே, மோடியின் தலைமையில், இலங்கை விடயத்தில் இந்தியா மாறும் என எதிர்ப்பார்க்க முடியாது. அதாவது மோடியின் தலைமையிலும் இலங்கை விடயத்தில் இந்தியா இந்தியாவே தான்.
 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X