2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கருணாநிதியின் ஆத்ம பரிசோதனை

Super User   / 2014 ஜூன் 02 , பி.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கருணாநிதியின் 91ஆவது பிறந்ததினம் இன்று (ஜூன் மூன்றாம் திகதி) கொண்டாடப்படுகிறது. 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், தொடர்ந்து இரண்டாவது முறையாக மோசமான தேர்தல் தோல்விக்குப் பின் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் கருணாநிதி.

கடந்த சட்டமன்றத் தேர்தல், இப்போது நாடாளுமன்றத் தேர்தல் என்று இரு தேர்தல்களில் தி.மு.க. தோல்வியைத் தழுவியிருந்தாலும், இரண்டிற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் நிரம்பி வழிகின்றன. சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, காங்கிரஸுடன் அமைத்த கூட்டணியே தோல்விக்கு காரணமாக அமைந்தது என்ற கூற்று நிலவியது.

ஆனால், இப்போது தோல்விக்கு தி.மு.க.வே காரணம் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. நாட்டில் உள்ள முதுமையான மாநிலக் கட்சிகளில் ஒன்றான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, ஏன் இந்த சோதனை என்ற கேள்வி தமிழக மக்கள் மனதில் எழாமல் இல்லை. ஏன், அகில இந்திய அரசியல் தலைவர்கள் மனதில் கூட இக்கேள்வி ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

சமூக நீதி, ஹிந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி போன்ற முக்கிய கொள்கைகளை தன் பிரத்தியேக இலட்சியமாக முன் வைத்து, காங்கிரஸை வீழ்த்தி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது தி.மு.க.  1949இல் தொடங்கிய கட்சி, அடுத்த மூன்று வருடத்தில் அதாவது 1952இல் நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை. அதற்குப் பதில் திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன். இந்தக் கொள்கைக்கு ஆதரவு தேடும் விதத்தில் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பணியாற்றுவேன். சுரண்டலையும் எதேச்சாதிகாரத்தையும் ஒழிக்க தி.மு.க.விற்கு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் துணை நிற்பேன் என்ற இந்த மூன்று உறுதிமொழிகளை ஒப்புக்கொண்டு தி.மு.க. கொடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடும் வேட்பாளர்களுக்கு, தி.மு.க. ஆதரவு கொடுக்கும் என்ற ஒரு வித்தியாசமான போக்கை கடைப்பிடித்தது.

எதேச்சாதிகாரத்தை ஒழிப்பேன் என்று உறுதிமொழி எடுத்து வந்த தி.மு.க.வில் மாவட்ட ரீதியாக, ஒன்றிய ரீதியாக கட்சிக்குள் எழுந்துள்ள எதேச்சாதிகாரம், இன்று அக்கட்சிக்கு சவாலை ஏற்படுத்தியிருக்கிறது என்பதுதான் உண்மை. தான் சந்தித்த முதல் தேர்தலில் இப்படி ஆதரவு அளித்து விட்டு, 1957 பொதுத் தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டு, 15 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே பெற்றது. இந்த தேர்தலில்தான் முதன் முதலாக வெற்றி பெற்று கலைஞர் கருணாநிதி சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். அப்போது சட்டமன்றத்தில் அவர் எடுத்துரைத்த திருக்குறள், இடிப்பாரா இல்லாத ஏமரா மன்னன் கொடுப்பாரி லானும் கெடும்.

இதன் உட்பொருள், ஆளுகின்றவர்களின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டும். அப்படி சுட்டிக்காட்ட ஆள் இல்லை என்றால் ஆளுவோர் கெட்டு விடுவார்கள் என்பதுதான். இந்த திருக்குறள் இப்போது தி.மு.க.விற்குத்தான் முழுவதும் பொருந்தும். கட்சிக்குள் நடக்கும் ஒழுங்கீனங்களைச் சுட்டிக்காட்டுவதற்கு தலைமைக்கு ஆள் இல்லை என்பதுதான் இன்றைய தி.மு.க.வின் நிலைமை. அப்படியே சுட்டிக்காட்டினாலும் திருந்துவதற்கு யாரும் தயாராக இல்லை என்பதும் உருவாகி விட்ட இன்னொரு நிலைமை.

இப்படி தேர்தல் பாதையில் மெல்ல மெல்ல நகர்ந்து வந்து 1967இல் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. அன்று விடைபெற்ற காங்கிரஸ் கட்சி, இன்றுவரை தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியவில்லை. அப்படி 1967இல் ஆட்சியைப் பிடிப்பதற்கு ஏதுவாக அமைந்தது தி.மு.க.விற்கு கிடைத்த கூட்டணி. ராஜாஜி, காயிதே மில்லத், அண்ணா இப்படி வௌ;வேறு துருவங்கள் எல்லாம் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட அந்தக் கூட்டணிதான் காங்கிரஸை வீட்டுக்கு அனுப்பியது. அறிஞர் அண்ணா முதலமைச்சரானார். கலைஞர் கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சரானார். இரு வருடங்களில் அண்ணா மறைந்து விட்டார்.

1969இல் கலைஞர் கருணாநிதி, முதன் முதலாக தமிழகத்தின் முதலமைச்சரானார். அப்படி பொறுப்பேற்றவர் - ஆளுநர் உரையில் பேசும் போது, நான் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் பின்தங்கிய வகுப்பினர்களின் நலனுக்காக என் உயிரையை பணயமாக வைத்துப் போராடுவேன். நான் இப்படிக் கூறுகின்ற காரணத்தால் முற்போக்கு சமுதாயத்திற்கு எந்தவிதமான ஆபத்தும் வந்து விடாதபடி பார்த்துக் கொள்வேன் என்றார்.

கலைஞர் கருணாநிதி ஆட்சி காலங்களில் எல்லாம் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்காக போராடியிருக்கிறார். ஆனால், அதுவே மற்ற சமுதாயத்தினர் மத்தியில் வெறுப்பாகவே அமைந்தது. இந்த பிரச்சினையால் முற்போக்கு சமுதாயத்தினர் மத்தியில், தி.மு.க. மீது ஓர் இனம் புரியாத வெறுப்பை உருவாக்கி வைத்திருப்பதுதான் இன்றளவும் இருக்கின்ற நிலைமை. அதை போக்குவதற்கு, தி.மு.க. எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது கவலைக்குரியது.

1969இலிருந்து வௌ;வேறு காலகட்டங்களில் முதலமைச்சராகி, 19 வருடங்கள் தமிழக முதல்வராக இருந்து விட்டார் கலைஞர் கருணாநிதி. அவருக்கு 1977, 1980, 1984, 1991, 2001 ஆகிய தேர்தல்களில் தோல்வி கிடைத்துள்ளது. ஆனால், அதெல்லாம் அவருடையை வாக்கு வங்கியை பாதித்தது கிடையாது. 2011 சட்டமன்றத் தேர்தலில் கூட தோல்வி கிடைத்தது. அதுவும் தி.மு.க.வின் வாக்கு வங்கியை அசைத்துப் பார்த்தது கிடையாது.

ஆனால், இப்போது கிடைத்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி, தி.மு.க.வின் வாக்கு வங்கியிலேயே லீக்கேஜ் உருவாக்கி விட்டது என்பதுதான் உண்மை. தி.மு.க.வை எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றபோது, தி.மு.க.விற்கு கை கொடுத்த வன்னியர்கள் இந்தமுறை விலகிச் சென்று விட்டார்கள். கள்ளர்களே என்னை வாரிசாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். நீங்கள் என்ன கேள்வி கேட்பது என்று, தமிழக சட்டமன்றத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டி.என். அனந்தநாயகியிடம் சவால் விட்டவர் கலைஞர் கருணாநிதி.

ஆனால், அந்த கள்ளர் இனமே இப்போது தி.மு.க.வை விட்டு வெளியேறும் ஆபத்து இந்த தேர்தலில் உருவாகி விட்டது. தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடிய இயக்கம் தி.மு.க. ஆனால், அந்த இனமும் இந்த நேரத்தில் கைவிட்டு விட்டது. இப்படி ஒவ்வொரு சமுதாயமாக தி.மு.க. விடமிருந்து விலகிச் செல்லும் நிலைமை, 2014இல் அதாவது தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 91ஆவது பிறந்த நாள் விழாவினைக் கொண்டாடும் நேரத்தில் அரங்கேறியிருக்கிறது.

இப்போது வெளியிட்டுள்ள பிறந்தநாள் செய்தியில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தி.மு.க. தொண்டர்கள் ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார் கலைஞர் கருணாநிதி. தேர்தல் தோல்விக்கு தி.மு.க. தொண்டர்கள் காரணமல்ல என்பதுதான் அக்மார்க் உண்மை. 2006இல் இருந்தே தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி வலுவாகவே எழுந்திருக்கிறது. அந்தக் கேள்விக்குரிய பதில், அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினை தலைவராக்குவதுதான் என்பதும் அனைவருக்கும் தெரியும். இது கலைஞர் கருணாநிதிக்கும் தெரியாதது ஒன்றுமில்லை. அதனால்தான் அவரும் அடுத்த தலைவர் ஸ்டாலின் என்ற தோரணையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

ஆனால், தி.மு.க. போன்ற கட்சியில் தலைவர் பதவிக்கு யார் வருகிறார்கள் என்ற கேள்வி இவ்வளவு நாட்களுக்கு நீடித்திருக்க வேண்டியதில்லை. சென்ற 2006 சட்டமன்றத் தேர்தலின் போதே, ஸ்டாலின் அடுத்த முதல்வர் என்ற முடிவை அறிவித்திருக்க வேண்டும். ஏனென்றால் தலைமையில் மாற்றத்தைச் செய்வதற்கான சரியான நேரம் அது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடனும், மத்தியில் தி.மு.க. ஆதரவுடனும் காங்கிரஸ் ஆட்சி இருந்த நேரம். அ.தி.மு.க.வும் தோல்வி முகத்தில் இருந்த நேரம். ஆனால், அந்த நேரத்தைக் கோட்டை விட்டு விட்ட தி.மு.க., தற்போது ஒரு பக்கம் ஸ்டாலின், இன்னொரு பக்கம் கலைஞர் கருணாநிதி என்ற இரட்டைக் குதிரையில் சவாரி செய்கிறது. இதே நிலைமை மாவட்டச் செயலாளர்கள் வரை நீடிக்கிறது.

அப்படியில்லையென்றால் 2011 தேர்தல் தோல்விக்குப் பிறகாவது, உடனடியாக தி.மு.க.வின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்பதை அறிவித்திருக்க வேண்டும். அப்போதும் யாரும் கேள்வி எழுப்பியிருக்க முடியாது. ஏனென்றால் அழகிரி போன்றவர்களே செல்வாக்கு இழந்து நின்ற நேரம். அந்த காலகட்டத்தையும் தி.மு.க. தவற விட்டு விட்டது. இப்போது நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி தி.மு.க.வின் தலை மீது இடிபோல் வந்து இறங்கியிருக்கிறது.

இதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் சிக்கிய ராஜா, ஊழல் புகாருக்கு உட்பட்ட தயாநிதி மாறன் போன்றோரை வேட்பாளர்களாக அறிவித்தது. இப்படி ஊழல் எதிர்ப்புக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று தி.மு.க. தலைமை காட்டிக் கொள்ளும் என்று, தமிழக வாக்காளர்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. இவர்கள் வேட்பாளர்களாக வந்தது அந்த நினைப்பை வாக்காளர்களுக்கு ஏற்படுத்தி விட்டது. அதனால், பொதுமக்கள் வாக்கு -அதாவது நடுநிலையாக உள்ள மக்களின் வாக்கு தி.மு.க.விற்கு எட்டாக்கனியாகவே போய் விட்டது.

இன்னொன்று ஸ்டாலின்தான் தி.மு.க.வின் தலைவர் என்று அறிவித்து, அவருக்கு சுதந்திரம் அளிக்காதது. வேட்பாளர் அறிவிப்பில் அவருக்கு சுதந்திரம் இருந்திருக்கலாம். ஆனால், இரட்டைத் தலைமை என்பது தி.மு.க. போன்ற கட்சியில் எப்போதுமே எடுபடாது. ஏனென்றால், தீர்மானமாக தலைமையைக் கொடுத்து தமிழக மக்களை பழக்கப்படுத்திய கட்சி தி.மு.க. ஆகவே, ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டியது தொண்டர்கள் அல்ல. தி.மு.க. தலைமைதான் என்பதே தி.மு.க.வில் உள்ளவர்கள் மட்டுமல்ல, வெளியில் இருக்கும் அரசியல் பார்வையாளர்களின் கருத்துமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட சிக்கலான நேரத்தில் பிறந்த நாள் விழாவினைக் கொண்டாடும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, இனியாவது தீர்க்கமான வழியில் பயணிக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கட்சிக்கு ஸ்டாலின்தான் தலைவர் என்பதை அறிவிக்க வேண்டும். குறுநில மன்னர்கள் போலிருக்கும் மாவட்டச் செயலாளர்களை ஸ்டாலின் நீக்க வேண்டும். உட்கட்சித் தேர்தலை ஜனநாயக முறையில் நடத்தி, கிராம அளவில், நகர அளவில், மாவட்ட அளவில் செல்வாக்குள்ள தி.மு.க. தலைவர்கள் கட்சிப் பொறுப்பிற்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் மீறி, தி.மு.க. மிகவும் பழமையான கட்சி. ஏறக்குறைய 65 வருடங்களுக்கு மேலாகி விட்டது.

அக்கட்சி தொடங்கும்போது வகுத்த கொள்கைகள் பல இன்றைய இளைஞர் சமுதாயத்திற்கு ஏற்ற கொள்கைகளாக இல்லை. அல்லது அது பற்றி இளைஞர் சமுதாயம் கவலைப்படவில்லை. எஞ்சியிருக்கும் இரண்டு ஆண்டுகளில் கட்சியே உசுப்பேற்றி தேர்தல் வெற்றியைப் பெற வேண்டும் என்றால் தி.மு.க.விற்கு இன்றைக்குத் தேவை தொண்டர்களின் ஆத்ம பரிசோதனை அல்ல. தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கே ஆத்ம பரிசோதனை தேவை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X