2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அளுத்கமை வன்முறைக்கு யார் பொறுப்பு?

Suganthini Ratnam   / 2014 ஜூன் 20 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

இலங்கைத் தீவின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு காலகட்டத்தில் அளுத்கமை வன்முறைகள் அரங்கேறியுள்ளன.  அளுத்கமையில் தொடங்கி தர்கா நகர், பேருவளை, தெஹிவளை, பதுளை என்று பல்வேறு இடங்களுக்கும் பரவிய இந்த வன்முறைகள் உலகின் கவனத்தை இலங்கையின் பக்கம் திரும்ப வைத்துவிட்டது.

இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் ஒரு விசாரணைக்குழுவை நியமித்துள்ளது. குறித்த தகவல் கூட இந்தளவுக்கு உலகளாவிய கவனத்தை ஈர்த்திருக்கவில்லை.

கடந்த வாரம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 26ஆவது அமர்வில் தொடக்க உரை நிகழ்த்திய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இந்த விசாரணைக்குழு பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

அதற்குப் பின்னர் இவ்வன்முறைகள் நிகழ்ந்திருப்பது இலங்கைக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இவ்வன்முறைகளின் அடிப்படையாக கூறப்படும் சம்பவங்கள் எல்லாமே திட்டமிடப்பட்டவையென்று கூறமுடியாது.

அதேவேளை, ஏதேச்சையாக நடந்த சில சம்பவங்களைக் கொண்டு இதனையொரு பெரும் வன்முறையாக மாற்றப்பட்டதை எதிர்பாராத நிகழ்வெனவும் கருதமுடியாது.

கடும் போக்குவாத பொது பல சேனா நடத்திய கூட்டத்தின்போது, ஞானசார தேரர் நிகழ்த்திய உரையும்  அதற்குப் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளும் நாட்டில் மத ரீதியான பதற்றநிலையொன்று உள்ளதென்பதை  உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.

சர்வதேச அரங்கில் இலங்கை அண்மைக்காலமாக இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி அவப்பெயரைச் சந்தித்துவருகின்றது. எனினும், இலங்கை அரசாங்கம் ஒருபோதும் அதனை ஏற்றுக்கொண்டதில்லை. நாட்டில் இன, மத நல்லிணக்கச் சூழல் நிலவுவதாக அரசாங்கம் எப்போதுமே வாதிட்டுவந்துள்ளது.

எல்லா இன, மத மக்களும் பாதுகாப்புடனும் நிம்மதியாகவும் சகோதரத்துவத்துடனும் வாழ்வதாக அரசாங்கம் வெளியுலகிற்கு காண்பிக்க முற்பட்ட விம்பத்தை ஒரே நொடியில் நொறுக்கிப்போட்டு விட்டது அளுத்கமை வன்முறைகள்.

அளுத்கமை வன்முறைகளுக்கு காரணம் தாமல்ல, மறுதரப்பே என்று இருதரப்பும் வாதிடுகின்றன. யார் இந்த வன்முறைகளுக்கு காரணமென்று ஆராய்வது இப்பத்தியின் நோக்கமல்ல.

இதுபோன்ற வன்முறைகளின் அடிப்படை,  இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படாமை,  இதன் விளைவுகள்  என்பனவே இப்பத்தியின் ஆய்வுப் பரப்பாகும்.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், தீவிரம் பெற்றுவரும் பௌத்த கடும்போக்குவாதம் நாட்டை ஆபத்தான திசையில் கொண்டுசெல்லத் தொடங்கியுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பெறப்பட்ட வெற்றியின் மிதப்பே ஏனைய மதங்கள், இனங்களை அடக்கியாளும் பௌத்த கடும்போக்குவாதம் தீவிரம் பெறக் காரணம்.

தமிழருக்கு எதிராக கடைப்பிடிக்கப்பட்ட இந்த கடும்போக்குவாதம், போர் முடிவுக்கு வந்த பின்னர் மெதுவாக ஏனைய மதங்களை நோக்கித் திரும்பத் தொடங்கியது.

குறிப்பாக கத்தோலிக்க, பெந்தெகொஸ்தே மற்றும் இஸ்லாமிய மதங்கள் மீதான வெறுப்பை தூண்டத் தொடங்கியது இந்த பௌத்த அடிப்படைவாதம்.

திடீரென இத்தகைய போராட்டங்களினூடாக பொது பல சேனா, இராவண பலய உள்ளிட்ட அமைப்புகள் பலம்பெற்றதுடன், இந்த கடும்போக்குவாதம் மத தீவிரவாதமாக மாறியது.

தம்மை மத அடிப்படைவாதிகள் என்றும் இனவாதிகள் என்றும் அழைப்பதாகவும் அது சரியே என்றும் கொழும்பில் செய்தியாளர்களிடம் கடந்த திங்களன்று பெருமையாக குறிப்பிட்டிருந்தார் பொது பல சேனாவின் பொதுச்செயலரான ஞானசார தேரர்.

சிங்கள பௌத்த மக்களின் காவலர்களாக தம்மை காட்டிக்கொள்வதில், அவர்களுக்காக போராடும் தீவிரவாதிகளாக காட்டிக்கொள்வதில் பொது பல சேனா போன்ற அமைப்புகள் பெருமைப்படுகின்றன. இங்கிருந்துதான் மத ரீதியான பதற்றநிலை உருவாகத் தொடங்கியது.

கிறிஸ்தவர்களின் மதப் பரப்புகைக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்தியிருந்த பொது பல சேனா, அது மேற்குலகில் கடும் எதிர்ப்பை உருவாக்குவதை உணர்ந்துகொண்டு மெதுவாக இஸ்லாமியர்கள் பக்கம் திரும்பியது.

ஹலாலுக்கு எதிரான போராட்டங்கள் ஆங்காங்கே. பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களென்று நடந்துவந்த வன்முறைகளின் தொடர்ச்சியாகவே அளுத்கமை, பேருவளை வன்முறைகளை குறிப்பிடலாம்.

இவை அளுத்கமையில் பௌத்த பிக்கு ஒருவரின் வாகனம் தாக்கப்பட்ட சம்பவத்தின் விளைவாக இடம்பெற்ற வன்முறைகளல்ல.

இதற்கான அடிக்கல் ஏற்கெனவே பொது பல சேனாவின் கோட்பாடுகளிலேயே நாட்டப்பட்டுவிட்டது. அதனால்தான் சிறு சம்பவங்கள் கூட ஊதி பெரிதாக்கப்பட்டு வன்முறைகளாக வெடித்தன.

அளுத்கமை  வன்முறைகளின் பின்னர் அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில், அளுத்கமை வன்முறைகள் குறித்து ஊடகங்கள் பொறுப்பற்று செய்திகளை வெளியிடுவதாக குற்றஞ்;சாட்டப்பட்டிருந்தது. அதில் அளுத்கமை வன்முறைகளை சிறு சம்பவங்களென்றும் அதை ஊடகங்களே பெரிதாக காட்டியுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

நான்கு பேர் கொல்லப்பட்டு ஏராளமானோர் காயமடைந்து பெருமளவு வீடுகள், கடைகள், வாகனங்கள் அழிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீடுவாசல்களை விட்டு வெளியேறிய  பெரும் அனர்த்தத்தை சிறு சம்பவமென்று கூறி அடக்க முயன்றது அரசாங்கம்.

இதுபோன்ற ஊக்கங்கள்தான் பொது பல சேனா போன்ற கடும்போக்குவாத அமைப்புகள் இந்தளவுக்கு பலம் பெறக் காரணமாகியுள்ளன.
இத்தகைய அமைப்புகள் அரசாங்கத்தின் நிழலிலிருந்தோ, அதன் சிறகிலிருந்தோ இலகுவாக வலுப்பெறமுடிகிறது.

அளுத்கமையில் பௌத்த பிக்குவின் வாகனம் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து அங்கு உரிய பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் செய்யப்பட்டு, இன அல்லது மத ரீதியான பதற்றம் தீவிரம் பெறாமல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தால், இவ்வன்முறைகள் ஏற்பட்டிருக்காது.

ஆனால் அரசாங்கமோ, சட்டம் ஒழுங்கை பேணவேண்டிய பாதுகாப்புத் தரப்பினரோ அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கவில்லை என்பதையே இந்த வன்முறைகளின் கோரம் எடுத்துக்காட்டியுள்ளது.

இந்த வன்முறைகளின் காயத்திலிருந்து இரத்தம் வடிவது நின்றுபோக முன்னரே, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவனெல்லையில் மற்றொரு கூட்டத்தை ஒழுங்குசெய்து மீண்டுமொரு வன்முறைக்கு தூபம் போடத் தயாராகியிருந்தது பொது பல சேனா.

நீதிமன்றத் தடை உத்தரவால் இன்னொரு அனர்த்தம் தடுக்கப்பட்டது.

அதுபோன்று அளுத்கமையிலும்  முன்னெச்சரிக்கையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், எல்லாவற்றையுமே தவிர்த்திருக்கலாம்.

எல்லா வன்முறைகளுக்கும் பொது பல சேனாவே பொறுப்பெனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால், அந்த பொது பல சேனா பலம் பெறவும் அதன் நடவடிக்கைகள் தீவிரம் பெறவும் இடமளித்தது அரசாங்கமே.

அரசாங்கம் பொறுப்புடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கையாண்டிருந்தால், இவ்வன்முறைகளுக்கு இடம் ஏற்பட்டிருக்காது. இந்த வன்முறைகளின் விளைவாக நாட்டின் மத ரீதியான பதற்றநிலை பரவலாக உருவாகியுள்ளது.

நாடெங்கும் முஸ்லிம்களும் சிங்களவர்களும் கலந்து வாழ்கின்றதொரு சூழலில், இந்த வன்முறைகளால் எல்லாப் பகுதிகளிலும் வாழும் முஸ்லிம்களும் பாதுகாப்பற்றதொரு நிலையை உணரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பொது பல சேனா போன்ற அமைப்புகளினது கடும்போக்குவாதத்தையும் தாண்டி,  இனங்களுக்கு இடையிலான விரிசல் அதிகரிக்கும் நிலை தோன்றியுள்ளது. இரு சமூகங்களுக்குமிடையில் நம்பிக்கையின்மையும் குரோதங்களும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளினது அறிக்கைகளில் இந்த மத ரீதியான பாகுபாடு, மதச் சுதந்திரம் தடுக்கப்படல் உள்ளிட்ட விவகாரங்களில் இலங்கை மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுவந்தன.

அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூட, மதங்களுக்கிடையிலான பதற்றநிலை மற்றும் உரிமை மறுப்புக் குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதுபற்றிய சில அறிக்கைகள் இஸ்லாமிய நாடுகளின் கைக்கும் சென்றதால், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை, இஸ்லாமிய நாடுகளின் ஆதரவு கேள்விக்குறியானதையும் மறுக்கமுடியாது. அதையெல்லாம் அரசாங்கம் நிராகரித்த நிலையில், இவ்வன்முறைகளின் அரங்கேற்றம் நிகழ்ந்துள்ளது.

இதனையொரு சிறு சம்பவமாக காட்ட அரசாங்கம் முயற்சித்தாலும், இச்சம்பவங்கள் உலகளாவிய கவனத்தை பெற்றுவிட்டது.

உள்ளூர் ஊடகங்கள் மீது நெருக்குதல் கொடுத்து இச்சம்பவங்களின் உண்மையான பரிமாணத்தை வெளிப்படுத்தாமல் தடுத்துவிட்டதாக  அரசாங்கம் நம்பியதால்தான், இதனையொரு சிறிய சம்பவமென்று குறிப்பிடத் துணிந்தது.

ஆனால், பல்கிப் பெருகிவிட்ட சமூக ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களும் வன்முறைகளால் நிகழ்த்தப்பட்ட அநியாயங்களையும் அத்துமீறல்களையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டன.

சர்வதேச ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியான படங்கள், இவ்வன்முறைகளின் கோரத்தை மிகத்துல்லியமாக வெளிப்படுத்திவிட்டன.

ஆனாலும், இதனையொரு சிறு சம்பவமாக காட்ட அரசாங்கம் முயற்சித்தமையை  சிறுபிள்ளைத்தனமானது என்பதா, கோமாளித்தனமானது என்பதா  அல்லது வேறேதும் வகையில் கூறுவதா என்று தெரியவில்லை.

மூடப்பட்ட போர் அரங்கில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றதாகக் கூறப்படும்  அநீதிகள் மறைக்கப்பட்டது போல, இவற்றையும் மறைத்துவிடலாமென்று அரசாங்கம் நம்பியதுபோலும்.

தம்முடனிருக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகளைக் கொண்டு எல்லாவற்றையும் சமாளித்துவிடலாமென்று அரசாங்கம் கணக்கு போட்டிருக்கலாம்.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றதாகக் கூறப்படும்  அநீதிகளுக்கான சாட்சியங்களே வெளிவந்த சூழலில், அளுத்கமையிலிருந்து அவை வெளிவராதென்று அரசாங்கம் நம்பியிருந்தால், அதுபோல முட்டாள்தனம் வேறேதும் இருக்காது.

இதன் விளைவாக உலகின் அனைத்துப் பக்கங்களிலிருந்தும்  அரசாங்கம் கண்டனங்களையும் அழுத்தங்களையும் எதிர்கொண்டிருக்கிறது.

அமெரிக்கா, கனடா, போன்ற நாடுகள் வன்முறைகளை கட்டுப்படுத்தி, அதற்கு பொறுப்பானவர்களை தண்டித்து, அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென்று அரசாங்கத்தை கேட்டுக்கொண்டன.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இந்த வன்முறைகள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் ஆபத்தைச் சுட்டிக்காட்டி உரிய பாதுகாப்பு அளிக்க அரசாங்கம் முன்வரவேண்டுமென்று கூறியிருந்தார்.

ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனும் இந்த வன்முறைகளுக்காக ஆழ்ந்த கவலை வெளியிட்டார்.

சர்வதேச ஊடகங்கள் இந்த வன்முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததும் ஆசிரியர் தலையங்கங்களை எழுதியதும் குறிப்பிட்டுக் கூறத்தக்க விடயங்கள்.

இதன் மூலம், உலகம் முழுவதும் இலங்கை பற்றியதொரு எதிர்மறையான விம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும், மியான்மாரில் விராது பிக்குவின் தலைமையில் பௌத்த பிக்குகளால் நடத்தப்படுகின்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுடன் ஒப்பிட்டே,  இலங்கை பற்றிய வன்முறைகள் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டன.

இவையெல்லாம் இலங்கையை மத ரீதியாக பதற்றம் நிறைந்த நாடாக உலகின் முன் நிற்கவைத்துள்ளன.

அளுத்கமை  வன்முறைகள் இடம்பெற்ற அடுத்த நாளே, அவுஸ்திரேலியா தமது குடிமக்களுக்கான பயண எச்சரிக்கையை புதுப்பித்தது. இவற்றோடு மட்டும் இதன் விளைவுகள் நின்றுபோகப் போவதில்லை.

சர்வதேச அரங்கில் இலங்கைக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி, தற்போது நடக்கப்போகின்ற ஐ.நா. விசாரணைகளின் அவசியத்தையும் எடுத்துக்காட்டியுள்ளது. இவையெல்லாம் இலங்கைக்கு நெருக்கடிகளாக உருவெடுக்கும்.

இந்த நிலையிலும் கூட, முஸ்லிம் அரசியல் தலைமைகள் மிகுந்த பொறுமை காப்பது ஆச்சரியமானதே.

முஸ்லிம்களை காப்பாற்றமுடியாத அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதற்கே வெட்கப்படுவதாகவும் பதவியை துறக்கவும் தயங்கேன் என்றும் அளுத்கமையில் கூறிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், கொழும்பு வந்து சேர்ந்ததும் அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தமாட்டேன் என்று கூறியிருந்தார்.

இந்தளவுக்கு பொறுமை காக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகள், இதன் மூலம் தாம் சார்ந்த மக்களுக்காக எதைச் செய்யப்போகின்றன என்று தெரியவில்லை.

முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியவில்லையே என்று கண்ணீர் விட்ட முஸ்லிம் அரசியல் தலைமைகள், தொடர்ந்தும் முஸ்லிம்களின் நலனுக்காகவே அரசில் நீடிப்பதாக காரணம் கூறுவது வேடிக்கை.

அரசிலிருந்து விலகிச்சென்றால் இன்னும் ஆபத்து நேரிடும் என்று கூறியிருப்பதை வைத்துப் பார்த்தால், முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசாங்கத்தால் பணயம் வைக்கப்பட்டிருக்கிறார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஆனால் ஒன்று இந்த வன்முறைகளை முஸ்லிம் தலைமைகள் மறந்துபோனாலும், சர்வதேச சமூகம் மறக்கப்போவதில்லை. இலங்கைக்கு எதிராக நகர்த்தப்போகும் அடுத்த காயாக அவர்கள் இதனையே பயன்படுத்தக்கூடும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X