2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அறுவைச் சிகிச்சை?

A.P.Mathan   / 2014 ஜூன் 17 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

"தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்த்தப்படும்' என்று தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். 1949ல் துவங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை புத்துயிரூட்ட 2014இல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு கமிட்டி அமைப்பது, கருத்துக்களைப் பெறுவது என்பது அக்கட்சியில் வழக்கமான ஒன்று என்றாலும், இந்த முறை நடைபெற்ற ஆத்ம பரிசோதனை சற்று வித்தியாசமானது. கட்சி தோல்வி பெறும் நேரங்களில் கூட ஜெயித்துக் கொண்டிருந்த கலசப்பாக்கம் பெ.சு.திருவேங்கடம் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டது. ஆறு ஏழு தினங்களுக்குள்ளாகவே அது அறிக்கையையும் கொடுத்தது. அதனடிப்படையில் இப்போது முதல் கட்டமாக தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளன. 65 மாவட்டச் செயலாளர்கள் இனி தி.மு.க.விற்கு இருக்கப் போகிறார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கு கிடைத்த தோல்விக்கு கட்சிக்குள் எடுக்கப்பட்டுள்ள முதல் கட்ட சீர்திருத்த நடவடிக்கை இது.

இந்த அதிரடி மாற்றம் தி.மு.க.விற்குள் புத்துணர்ச்சியை புகுத்தும் என்பது கட்சியில் உள்ள முக்கியப் பிரமுகர்களின் எண்ணவோட்டமாக இருக்கிறது. "தேர்தல் தோல்விக்கு எப்படி பதலளிக்கப் போகிறது தி.மு.க' என்று எதிர்பார்த்துக் காத்திருந்த தொண்டர்களுக்கு இது ஒரு சாம்பிள் நடவடிக்கை. இது வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதை தி.மு.க. நிர்வாகிகளின் பேச்சிலிருந்து தெரிகிறது. நம்மிடம் பேசிய தி.மு.க. முக்கிய நிர்வாகி ஒருவர், " மாவட்டங்கள் இப்போது விரிவுபடுத்தப்பட்டிருப்பது முக்கியமாக பலம் பொருந்திய மாவட்டச் செயலாளர்கள் என்று கருதப்படுவோரிடமிருந்து கட்சியை மீட்கும் நடவடிக்கை. இந்த மாவட்டச் செயலாளர்கள் எல்லாம் மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்கள் அல்ல. அதற்கு பதில் கட்சிக்குள் இவர்களது ஆதிக்கத்தால் வேலை செய்யும் தொண்டர்களும் சோர்ந்து போய் கிடந்தார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் மாவட்டச் செயலாளர்கள் 15 வருடம், 20 வருடம் என்று பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதால், இவர்கள் தங்களுக்கு ஏற்ற ஆமாம் சாமிகளை ஒன்றியச் செயலாளர்களாக, கிளைச் செயலாளர்களாக வைத்துக் கொள்கிறார்கள். இதன் விளைவுதான் கட்சிக்கு கிராம அளவில், நகர அளவில் எங்கும் அடையாளம் இல்லாமல் போய் விடுகிறது. குறிப்பாக கட்சி துவங்கிய காலத்தில் இருந்த மாவட்டச் செயலாளர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது இருக்கின்ற மாவட்டச் செயலாளர்களுக்கு மக்களிடமும் செல்வாக்கு இல்லை. கட்சிக்காரர்களிடமும் செல்வாக்கு இல்லை. அதனால் இந்த மாற்றம் இந்த நேரத்தில் கட்சிக்கு மிகவும் அவசியம்' என்றார்.

இன்னொரு தி.மு.க. முன்னாள் எம்.பி. நம்மிடம், "கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆட்சியில் உள்ள மாவட்ட கலெக்டர்கள் போன்றவர்கள் என்ற காலம் போய் இப்போது மாவட்டச் செயலாளர்கள் என்றாலே மக்கள் சளித்துக் கொள்ளும் அளவிற்கு ஆகி விட்டது. பல மாவட்டச் செயலாளர்கள் மீது இருக்கும் சொத்துக் குவிப்பு வழக்குகள், சில மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களிலேயே கல்லூரிகள், தொழில்கள் என்று மக்களின் கண்ணில் படும் அளவிற்கு வளர்ந்து நிற்பது எல்லாமே கட்சியின் செல்வாக்கிற்கு வேட்டு  வைக்கும் சம்பவங்களாக அரங்கேறி விட்டன. ஒரு காலத்தில் ஆளுங்கட்சியை எதிர்த்துப் போராடும் சக்தி படைத்தவர்கள் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் என்ற நிலை மாறி இப்போது ஆளுங்கட்சி பிரபலங்களுடன் ஆங்காங்கே ரகசிய கூட்டணி வைத்துக் கொள்ளும் நிலைக்கு வந்து விட்டனர். ஆளுங்கட்சியாக அ.தி.மு.க. இருக்கின்ற ஒவ்வொரு காலகட்டத்திலும் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் முதல் அடிமட்டத்தில் உள்ள கிளைக் கழகம் வரை உள்ளவர்கள் பயனடைகிறார்கள். அந்த நிலை தி.மு.க.ஆளுங்கட்சியாக இருக்கும் போது இல்லை. குறிப்பிட்ட மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் மட்டுமே பயன்பெறும் இயக்கம் தி.மு.க. என்ற நிலைமை உருவானதுதான் இக்கட்சிக்கு பெரும் சோதனையை இப்போது ஏற்படுத்திக் கொடுத்து விட்டது. அதற்கு இந்த மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது ஒரு துளி நடவடிக்கை. இதை ஒன்றியச் செயலாளர் வரை எடுத்துச் சென்றால்தான் தி.மு.க. அடுத்து வருகின்ற 2016 சட்டமன்றத் தேர்தலை துணிவுடன் சந்திக்க முடியும்' என்றார் தீர்க்கமாக.

65 மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்ட, பிறகு ஒன்றியச் செயலாளர்கள் அளவிலான மாற்றங்களும் தி.மு.க.வில் மேற்கொள்ளப்படும் என்றே தெரிகிறது. இந்த அறிவிப்பை வெளியிட்ட தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகனே அதை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த மாற்றங்கள் தி.மு.க.வின் தலைமைக் கழகம் வரை வந்தால் நல்லது என்பதே இப்போது தி.மு.க.வினர் மத்தியில் பரவலாக ஏற்பட்டுள்ள பேச்சு. கட்சிக்குள் இருந்த "மு.க. அழகிரி' என்ற அதிகார மையம் அகன்று விட்டது. இப்போது இருக்கின்றவர்களில் தி.மு.க.வின் பொருளாளராக இருக்கும் மு.க. ஸ்டாலின்தான் கட்சியின் முகமாக இருக்கிறார். அதனால் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், மு.க. ஸ்டாலினும் இரு அதிகார மையங்களாக இருக்காமல் ஒட்டு மொத்த தி.மு.க. அதிகாரமும் ஸ்டாலினின் கீழ் வர வேண்டும் என்பதுதான் தி.மு.க.வில் உள்ள கடைக் கோடித் தொண்டனின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இப்போது ஏற்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும். தி.மு.க. வின் அதிகார மையமும் ஒரே இடமாக்கப்படும் என்பதும் இப்போது தி.மு.க.வில் நிலவும் ஒருமித்த எதிர்பார்ப்பு. இது குறித்துப் பேசிய தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், "கலைஞர் குடும்பத்தைப் பற்றி எதிர்கட்சியினர் பிரச்சாரம் செய்யலாம். ஆனால் கட்சித் தொண்டர்கள் கலைஞரையும், ஸ்டாலினையும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். கட்சித் தொண்டர்கள் கவலைப்படுவது எல்லாம் மாவட்டச் செயலாளர்களின் குடும்ப ஆட்சிதான். அந்த மாவட்டச் செயலாளர்களுக்காக கட்சித் தொண்டர்கள் இல்லை. கலைஞருக்காகவும், ஸ்டாலினுக்காவும்தான் கட்சியில் இருக்கிறார்கள். ஆகவே குடும்ப ஆட்சி நடத்தும் மாவட்டச் செயலாளர்களை ஈவு இரக்கமின்றி வெளியேற்ற வேண்டும்' என்றார்.

கட்சி ரீதியாக இந்த மாற்றத்தைச் செய்யும் தி.மு.க. இப்போது இருக்கின்ற செல்வாக்கு இல்லாத மாவட்டச் செயலாளர்களை நீக்கிவிட்டு மாநிலம் முழுவதும் தி.மு.க.விற்கு புது முகம் கொடுக்க வேண்டும் என்பதே கட்சியினர் மட்டுமல்ல, அக்கட்சிக்காக வாக்களிக்கும் அனுதாபிகளும் எண்ணமுமாக இருக்கிறது. குறிப்பாக 17 வருடங்கள் மத்திய அதிகாரத்தில் இருந்ததும், அதிலும் காங்கிரஸýடன் பத்து வருடம் மத்திய அமைச்சரவையில் பங்கேற்றதும் தி.மு.க.விற்கு தீர்க்க முடியாத பிரச்சினைகளை வாரிக் குவித்து வைத்திருக்கிறது. இன்றைக்கு நிலவும் காவிரி பிரச்சினையாக இருந்தாலும் சரி, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, இலங்கை தமிழர் பிரச்சினையாக இருந்தாலும் சரி} எல்லாவற்றிலுமே காங்கிரஸின் அணுகுமுறை தி.மு.க.வின் மீதான பழியாக வந்திருக்கிறது. மத்திய அரசு எதுவாக இருந்தாலும், மாநிலப் பிரச்சினையில் அக்கறை காட்டவில்லை என்றால் அந்த மத்திய அரசுடன் மோதுவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தயங்குவதில்லை என்ற தோற்றத்தை உருவாக்க விட்டார். அந்தத் தோற்றம் அவருக்கு வாக்குகள் கிடைக்க பேருதவியாக இருக்கிறது. ஆனால் தி.மு.க.விற்கு அப்படியொரு தோற்றம் கிடைக்கவில்லை. மத்திய அரசுடன் இனக்கமாகச் செல்லுவதுதான் மாநிலத்தில் நலத்திட்டங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பது பொதுவான விதி. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மத்திய அரசுடன் மோத வேண்டும் என்பதுதான் எதிர்பார்க்கப்படும் விதி. அதன் ஒரு கட்டமாகத்தான் இப்போது கர்நாடக மாநிலத்துடன் ஏற்பட்டிருக்கும் காவிரிப் பிரச்சினையில் பிரதமர் நரேந்திரமோடிக்கு 31 பக்கங்களில் விரிவான கடிதத்தை எழுதி மோதலுக்குத் தயாராகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா. இதே அணுகுமுறை வரப்போகின்ற காலங்களில் இலங்கை தமிழர் பிரச்சினையிலும், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையிலும் கூட அ.தி.மு.க. அரசு மேற்கொள்ளத் தயங்காது. ஆகவே தமிழகம் சார்ந்த பிரச்சினைகளில் தி.மு.க. மென்மைப் போக்கை கடைப்பிடிக்கிறது என்ற தோற்றத்தை மாற்றுவதற்கு அக்கட்சி ஒரு ஆக்ஷன் ப்ளானை தயாரிக்க வேண்டும்!

இவற்றையெல்லாம் விட முக்கியமாக அ.தி.மு.க. ஆட்சியின் மீதான குறைகளை இந்த முறை தி.மு.க. பெரிதாக மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்லவில்லை. சென்ற முறை தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே "மைனாரிட்டி தி.மு.க.' என்ற குற்றச்சாட்டை சுமத்தி, தி.மு.க. அரசுக்கு எதிரான போராட்டங்களை கடுமையாகச் செய்தது அ.தி.மு.க. ஆனால் அது போன்றதொரு இலக்குடன் தி.மு.க. இதுவரை செய்யவில்லை. ஆங்காங்கே குடிநீர் பிரச்சினைகளுக்கா மக்கள் போராடுகிறார்கள். மணல் எடுப்பதைக் கண்டித்து போராடுகிறார்கள். மின்வெட்டை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்துகிறார்கள். இந்த போராட்டங்கள் எதிலுமே தி.மு.க.வினர் பங்கேற்பதாகத் தெரியவில்லை. மக்களின் அன்றாடப் பிரச்சினைகளில் இருந்து தி.மு.க. விலகி நிற்பதை கட்சித் தொண்டர்கள் வெறுக்கிறார்கள். ஒரு கிளைக் கழக நிர்வாகி, "மக்கள் பிரச்சினைகளுக்காக நாங்கள் போராட தயாராக இருக்கிறோம். ஆனால் தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்த போது சம்பாதித்த ஒன்றியச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் களத்திற்கு நேரடியாக வர வேண்டும். எங்களுக்கு ஏதாவது ஆளுங்கட்சியால் பிரச்சினை என்றால் அங்கே அவர்கள் வந்து நிற்க வேண்டும். இவர்கள் ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு அடிமட்டத் தொண்டனை போராடு என்றால் எப்படிப் போராடுவான்' என்று கேள்வி கேட்கிறார். இப்படித்தான் தி.மு.க.வின் உள்கட்சி அமைப்பு பெரும் ஊசலாட்டத்தில் இருக்கிறது. மாணவர்கள், இளைஞர்களின் இயக்கமாக இருந்த தி.மு.க.வில் இன்றைக்கு அவர்களை கவர்ந்திழுக்கும் அரசியல் யுத்திகள் ஏதும் தி.மு.க.விடம் இல்லாமல் நிராயுதபாணியாக நிற்கிறது என்றே கட்சியின் மூத்த முன்னோடிகள் பலரும் கருத்துச் சொல்கிறார்கள்.

கட்சி துவங்கப்பட்ட போது, "காங்கிரஸ் எதிர்ப்பு' என்பதை முன் வைத்தே தி.மு.க.வளர்ந்தது. தேர்தலில் போட்டியிடலாமா என்பதை மாநாட்டைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தி (ரெஃபரன்டம்) 1957 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சி தி.மு.க. இப்படி கட்சி துவங்கிய  18 வருடங்களில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. இந்தி எதிர்ப்பு, தமிழ் மீதான காதலை பிரதானப்படுத்தி பிரச்சாரம், காங்கிரஸ் எதிர்ப்பு போன்றவைதான் ஆரம்ப காலத்தில் தி.மு.க.விற்கு கிடைத்த கவசங்கள். இன்றைக்கு அதே "காங்கிரஸ் எதிர்ப்புக்கு' இந்த தேர்தலில் தி.மு.க. இறையாகி விட்டது. கட்சியை வளர்த்த "காங்கிரஸ் எதிர்ப்பு' கோஷம் இன்றைக்கு கட்சியை தோற்கடிக்கவும் பயன்பட்டு விட்டது. இந்த நிலைமையை மாற்றி, மீண்டும் தி.மு.க.வை அனைத்து சமுதாயத்தினரும் ஏற்றுக் கொள்ளும் கட்சி என்ற நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் கட்சித் தலைமை இருக்கிறது. அடுத்து இரு வருடங்களே சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கும் கட்சிக்கு இரண்டு தலைமை இருப்பது சிக்கலை உருவாக்கும். மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட சீர்திருத்தங்களைச் செய்யும் தி.மு.க. இன்னொரு பக்கம் தலைமையிலும் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அக்கட்சியில் உள்ள இளைஞர் அணி, மாணவர் அணி போன்ற இளைஞர்களைக் கவரும் அணிக்கு ஏற்ற தலைவர்களை நியமிக்க வேண்டும். தமிழக பிரச்சினைகளில், குறிப்பாக தமிழர் பிரச்சினைகளில் (இலங்கை தமிழர் பிரச்சினை உள்பட) தி.மு.க.விற்கு மேலும் தீவிரமான உத்வேகம் பிறக்க வேண்டும். அப்போதுதான் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் மீது மக்களின் நம்பிக்கை திரும்பும்!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X