2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அமிலப் பரீட்சை

Kanagaraj   / 2014 ஜூலை 06 , பி.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

அளுத்கம, பேருவளை மற்றும் வெலிப்பென்னை ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 15, 16ஆம் திகதிகளில் இடம்பெற்ற கொலை, கொள்ளை மற்றும் தீ வைப்புச் சம்பவங்களைப் பற்றி இலங்கை மக்களும் இலங்கையின் ஊடகங்களும் தமது முழுக் கவனத்தையும் செலுத்தியிருந்த சந்தர்ப்பத்தில், ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை, இலங்கையில் பேரின் இறுதிக் கட்டத்திலும் அதன் பின்னரும் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களைப் பற்றி விசாரணை செய்வதற்கான குழு தொடர்பான முடிவுகளை பூர்த்தி செய்துள்ளார்.

அதேவேளை, அளுத்கம மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் அந்த விசாரணைக்கு மேலும் தகவல்களை திரட்டிக் கொடுத்திருக்கும். ஏனெனில், அந்த விசாரணைக்கு கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா உட்பட ஐந்து நாடுகளால், ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையே அடித்தளமாக அமைந்துள்ளது. அந்த பிரேரணையில் இலங்கையில் சிறுபான்மை சமயத்தவர்கள் மீதான தாக்குதல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

மனித உரிமை உயர் ஸ்தானிகர் ஏற்பாடு செய்துள்ள விசாரணை பொறிமுறை இரண்டு அம்சங்களை கொண்டிருக்கின்றது. ஒன்று 12 பேரைக் கொண்ட விசாரணைக் குழுவாகும். அதில் சாட்சிகளை விசாரிப்போர், குற்றவியல் நிபுணர்கள், பாலியல் தடயவியல் நிபுணர்கள் மற்றும் சட்ட ஆய்வாளர்கள் ஆகியோர் அடங்குவர்.

இரண்டாவது அந்த விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்கவும் அதனை வழிநடத்தவும் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவாகும். அதில்; உலகிலேயே பிரசித்தி பெற்ற மூன்று பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியும் நொபெல் சமாதானப் பரிசு பெற்றவருமான மார்டி ஆட்டிசாரி, நியூசிலாந்தின் முன்னால் மகா தேசாதிபதியும் மேல் நீதிமன்ற நீதிபதியுமான சில்வியா காட்ரைட் மற்றும் பாகிஸ்தானின் உயர் நீதிமன்ற சட்டத்தரணிகளின் சங்கத்தினதும் மனித உரிமை ஆணைக்குழுவினதும் முன்னாள்; தலைவி அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோரே இந்த மூவராவர்.

இந்த மூவரும் ஏற்கெனவே மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளில் கலந்து கொண்டு அல்லது பல நாடுகளின் சமாதானத் திட்டங்களில் கலந்து கொண்டு அனுபவம் மிக்கவர்களாகும்.

ஆட்டிசாரி, இதற்கு முன்னர் சர்வதேச ரீதியில் மிகவும் சிக்கலான பிரச்சினையாகியிருந்த கொஸொவோ சமாதானத் திட்டத்தில் ஐ.நா சார்பில் கலந்து கொண்டவர். காடரைட் உலகிலேயே மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற இடங்களில் ஒன்றான கம்போடியாவில், அம் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்த விசேட சர்வதேச விசாரணை நீதிமன்றத்தின் உறுப்பினராகவிருந்தார்.

அஸ்மா ஜஹாங்கீரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் பல சர்வதேச பொறுப்புக்களை வகித்து அனுபவம் உள்ளவராவார்;. பலஸ்தீனப் பகுதிகளில், இஸ்ரேலிய குடியிருப்புக்கள் தொடர்பான தகவல் திரட்டும் அண்மைய ஐ.நா. குழுவிலும் அவர் பணி புரிந்தார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களைப் பற்றி மேற்படி விசாரணைக் குழுவே விசாரணைகளை மேற்கொள்ளும். ஆனால், அந்த விசாரணையின் அறிக்கை நிபுணர்கள் மூவரின் கையொப்பத்திலேயே மனித உரிமை உயர் ஸ்தானிகரின் அலுவலகத்திடம் கையளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

இலங்கை அரசாங்கம் இந்த விசாரணையை நிராகரித்துள்ளது. ஆனால்,  உலகெங்கும் உள்ள புலி ஆதரவாளர்கள் இந்த விசாரணையை ஆதரிக்கிறார்கள். எனவே, இது அரசாங்கத்திற்கு எதிரான விசாரணை போன்றதோர் தோற்றம் காணப்படுகிறது. ஆனால், இது போரில் ஈடுபட்ட இரு சாராரும் இழைத்த குற்றங்களை விசாரிக்கும் விசாரணை என்பதை ஐ.நா. அதிகாரிகள் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்.

இலங்கை விடயத்தில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2010ஆம் ஆண்டு ஐ.நா. செயலாளர் நாயகத்தால், மர்சூகி தருஸ்மானின் தலைமையில் நியமித்த குழு, ஆறு தலையங்கங்களின் கீழ் புலிகள் தமிழ் மக்களுக்கு இழைத்த குற்றங்களை பட்டியல் போட்டிருந்தது. மக்களை கேடயமாக பாவித்தல், தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற சாதாரண மக்களை படுகொலை செய்தமை, மக்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்து படையினரை நோக்கி போர் தளபாடங்களை பாவித்தல், சிறுவர்களை பலாத்காரமாக படையில் சேர்த்தமை, பலாத்காரமாக மக்களை வேலைகளில் அமர்த்தியமை மற்றும் தற்கொலை குண்டுதாரிகளை பாவித்து சாதாரண மக்களை படுகொலை செய்தமை அவையாகும்.

இவற்றைப் பற்றியும் விசாரணை செய்வதாகவே ஐ.நா. அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், உலகில் பல பாகங்களில் வாழும் புலி ஆதரவாளர்கள் இந்த விசாரணையை ஆதரிக்கிறார்கள். இவற்றை விசாரித்தாலும் அவற்றுக்காக பொறுப்பை சுமத்த புலிகளின் தலைவர்கள் எவரும் இல்லை. சிலவேளை இதன் காரணமாகவே புலி ஆதரவாளர்கள் விசாரணையை ஆதரிக்கிறார்கள் என்று ஊகிக்கலாம்.

விசாரணையை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கிறது என்பதை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸும், ஜெனீவாவில் ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத ஆர்யசிங்ஹவும் மனித உரிமை பேரவையிடமும் ஊடகங்களிடமும் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் மனித உரிமை பேரவையின் விசேட அமர்வு நடைபெற்ற போது அதன் முதல் நாளிலேயே ஆர்யசிங்ஹ அதனை தெரிவித்தார்.

விசாரணைக்கு அடித்தளமாக அமைந்த அமெரிக்கப் பிரேரணை, இலங்கையின் இறைமைக்கும் சுதந்திரத்திற்கும் சவாலாக அமைந்துள்ளதால் தமது அரசாங்கம் இந்த விசாரணையை ஏற்பதில்லை என ஆர்யசிங்ஹ கூறினார். இந்த விசாரணையை ஏற்பதானது நாட்டின் கௌரவத்தைப் பற்றிய பிரச்சினையாகும் என வெளிவிவகார அமைச்சர் டெய்லி மிரர் பத்திரிகையுடனான பேட்டியொன்றின் போது கூறினார்.

இதற்கு புறம்பாக, அரசாங்கம் இந்த விசாரணை தொடர்பாக பின் வரிசை உறுப்பினர்கள் மூலம் நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை சமர்ப்பித்து தமது பெரும்பான்மை வாக்குப் பலத்தை உபயோகித்தும் விசாரணையை நிராகரித்துள்ளது. இந்த நாடாளுமன்ற பிரேரணை மீதான விவாதத்தின் போது தமிழ் தேசிய கூட்;டமைப்பு மட்டுமே விசாரணையை ஆதரித்தது. அந்த விவாதத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சமபந்தன் மிக முக்கியமானதோர் உரையை ஆற்றினார்.

வரப் போகும் விசாரணை இலங்கைக்கு எதிரானதல்ல. அது மனிதநேய மற்றும் மனித உரிமை சட்டங்களை மீறியோருக்கு எதிரானதாகும். அது வடக்கில் இளைஞர்கள் காணாமற் போனதற்கு எதிரானது போலவே கடந்த காலத்தில் தெற்கில் இளைஞர்கள் காணாமற் போனதற்கும் எதிரானதாகும். அது வெலிவேரியவிலும் முள்ளிவாய்க்காலிலும் மிக அண்மைக் காலத்தில் தர்கா நகரிலும் இடம்பெற்ற குற்றங்களுக்கு எதிரானதாகும். இந்தக் காரணங்களால் தமிழ் தேசிய கூட்டமைப்பு இரு சாராரும் தொடர்பான இந்த விசாரணையை வரவேற்கிறது. எமது பெயரில் இழைக்கப்பட்ட குற்றங்கள் விடயத்தில், திரும்பிப் பார்ப்பதற்கு தமிழ் மக்களுக்கு கிடைத்த சந்தர்ப்பமாக நாம் இந்த விசாரணையை பார்ப்பதைப் போலவே கடந்த காலத்தில் இருந்து பிரிந்து இலங்கையில் சகல மக்களிடையேயும் நீதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அரசாங்கம் இந்த விசாரணையை பார்க்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம் என்றார் சமபந்தன்.

இது மிகவும் அர்த்தபூர்வமானதோர் கருத்து என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், அவரது ஆலோசனை அரசாங்கத்திற்கு மட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் பெரும் சவாலாகவும் அமிலப் பரீட்சையாகவும் அமையப் போகிறது என்பதே உண்மையாகும்.

கடந்த காலத்தில் இருந்து பிரிந்து இலங்கையில் சகல மக்களிடையேயும் நீதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த விசாரணையை பார்க்க தாம் தயாரில்லை என்பதை அரசாங்கம் ஏற்கெனவே விசாரணையை நிராகரிப்பதன் மூலம் காட்டிவிட்டது. அதேபோல், தமிழ் மக்களின் பெயரில் இழைக்கப்பட்ட குற்றங்கள் விடயத்தில் திரும்பிப் பார்ப்பதற்கு தமிழ் மக்களுக்கு கிடைத்த சந்தர்ப்பமாக இந்த விசாரணையை கருதி செயற்பட, உண்மையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாரா என்பதும் சந்தேகமே.

முதலாவது தடவையாக அமையப்போவது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வரலாறேயாகும். 2000ஆம் ஆண்டு முதல் தமிழ் கூட்டமைப்பிலுள்ள சகல கட்சிகளும் தமிழீழ விடுதலை புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி என்று கூறி வந்தன. தமிழர் கூட்டணி பிரிந்து அக் கூட்டணியில் இருந்த தற்போதைய தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் தனியாக செயற்பட அதுவும் ஒரு காரணமாகியது. அது மட்டுமல்லாது அக் காலத்தில் தமிழ் மக்களின் பெயரால் புலிகள் புரிந்த எந்தவொரு குற்றத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விமர்சிக்கவில்லை.

போர்க் களத்தில் ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு புலிகள் அம் மக்களை பணயமாக வைத்திருந்தமையே காரணமாகியது. கிழக்கு மாகாணத்தை படையினர் கைப்பற்றும் போது புலிகள் அவ்வாறு மக்களை பணயமாக வைத்திருக்காததால் அங்கு அவ்வறான பாரிய அழிவு ஏற்படவில்லை. வடக்கில் புலிகள் மக்களை கேடயமாக வைத்திருந்த போது அம் மக்களை விடுவிக்குமாறு தமிழ் கூட்டமைப்பு ஒரு போதும் புலிகளை கேட்கவில்லை.

வடக்கில் மக்கள் மீது ஷெல் தாக்குதல்களை நடத்தும் போது தமது கட்சி அது தொடர்பாக கரிசனை காட்டவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அண்மையில் சுய விமர்சனம் செய்து இருந்தார். அந்த சுய விமர்சனத்தால் இப்போது பயனில்லை என்பது உண்மை தான். ஆனால், அவ்வாறான சுய விமர்சனத்தையேனும் தமிழ் கூட்டமைப்பு செய்யவில்லை.

தமிழ் மக்களின் பெயரில் இழைக்கப்பட்டட குற்றங்கள் விடயத்தில் வரலாற்றை திரும்பிப் பார்ப்பதற்கு இந்த சுய விமர்சனம் மிகவும் முக்கியமாகும். ஆனால், அதற்கு தமிழ் கூட்டமைப்பு தயாரா என்பதே கேள்வியாகும். அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிர்வகிக்கும் வட மாகாண சபையில் இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்தப் பிரேரணையில் புலிகளின் குற்றங்களை விசாரணை செய்ய வேண்டும் என்ற சாயல் கூட இருக்கவில்லை.

நாளை மனித உரிமை உயர் ஸ்தானிகர்; அலுவலகத்தினால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரலாற்றை திரும்பிப் பார்க்கும் வகையில், புலிகளின் குற்றங்களை விசாரணைக்; குழு முன் வைக்க தயாரா என்பது சந்தேகமே. அவர்களாக முன்வைப்பது ஒரு புறமிருக்க மற்றவர்கள் முன்வைத்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை குறைந்த பட்சம் எதிர்க்காமல் இருக்குமா?

அரசாங்கத்தின் நிலையும் இதே போல் முரண்பாடாகத் தான் இருக்கிறது. தமக்கு மறைக்க எதுவுமே இல்லை என அரசாங்கம் நீண்ட காலமாக கூறி வருகிறது. ஆனால், சர்வதேச விசாரணை என்று வரும் போது அரசாங்கம் பதுங்குகிறது, நடுங்குகிறது. உண்மையிலேயே இந்த விசாரணைக்கு அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய உத்தரவாதங்களே காரணமாகியது. போர் முடிவடைந்து ஒரு வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனோடு, ஜனாதிபதி வெளியிட்ட கூட்டறிக்கையில் போர் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்புக் கூறும் பொறிமுறையொன்றை உருவாக்க ஜனாதிபதி ஏற்றுக் கொண்டிருந்தார்.

அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையின் விசேட அமர்வின் போது இலங்கை சமர்ப்பித்த சிறப்புப் பிரேரணையிலும் அந்த உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவாதத்தைப் பற்றி சர்வதேச சமூகம் கேள்வி எழுப்பும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதனை ஒரே நாளில் செய்து முடிக்க முடியாது என அரசாங்கம் கூறி வருகிறது. ஆனால் அதனிடையே ஐந்தாண்டுகள் கழிந்துவிட்டன.

எனவே தான் சர்வதேச விசாரணை தலை மேல் விழுந்துள்ளது. எனவே இதனை நிராகரிப்பதானது நிலைமையை மேலும் மோசமாக்கிக் கொள்ளும் செயலாகும்.

அரசாங்கம் இந்த விசாரணையை நிராகரித்துள்ளதால் விசாரணை அதிகாரிகளுக்கு விசாரணைப் பணிகளுக்காக இலங்கைக்கு வர விசா வழங்க மறுக்கலாம். ஆனால், தொழில்நுட்பம் மிக உயர்வான நிலையில் உள்ள இக் காலத்தில் அவர்கள் இங்கு வராமலே தகவல்களை திரட்டலாம். அதேவேளை, இது போன்ற நிலைமை உருவாகினால் அரசாங்கத்தைப் பற்றிய உலக அபிப்பிராயம் மேலும் மோசமாகலாம்.

அது மட்டுமல்ல விசாரணையில் அரசாங்கம் கலந்து கொள்ளாவிட்டால் புலிகள் மீதான குற்றச்சாட்டுகளை சுமத்தவும் ஒருவரும் இருக்க மாட்டார்கள் இருந்தாலும் அதற்காக சாட்சியங்களை முன்வைக்கவும் ஒருவரும் இருக்க மாட்டார்கள்.

ஆனால், படைகள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சனல் 4 போன்ற நிறுவனங்கள் ஆதாரங்களை முன்வைக்கலாம். விசாரணையை ஏற்றுக் கொள்வது மானப் பிரச்சினை என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால், படைகள் பாரியளவில் மனித உரிமைகளை மீறியுள்ளார்கள் என்று உலகம் ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டால் அது மானப் பிரச்சினையாகாதா என்ற கேள்வியும் எழுகிறது.   




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X