2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தி.மு.க.வின் புகார் மனு

Kanagaraj   / 2014 ஜூலை 07 , பி.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}



மழை ஓய்ந்தாலும் தூரல் விடவில்லை என்பது போல் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தாலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டுகள் தமிழகத்தில உறங்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் நடந்த பொழுது இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக இருந்தது என்பதுதான் பல எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாகும்.

இக்குற்றச்சாட்டை ஆட்சியிலிருக்கும் பாரதிய ஜனதாக் கட்சி கூட முன் வைத்தது. இந்நிலையில், இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புது கோரிக்கைகளை முன் வைத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து உள்ளார்கள். தி.மு.க., எம்.பியான கனிமொழி, தங்கவேலு, திருச்சி சிவா ஆகியோர், குடியரசுத் தலைவரை சந்தித்து அரசியல் சட்ட ரீதியாக சில முக்கிய கேள்விகளை எழுப்பும் புகார் மனுவைக் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் புகார் மனுவை தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என்ற முறையில் க.அன்பழகன் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளார்.


இந்திய தலைமை தேர்தல் ஆணையம் என்பது அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்ற சுதந்திரமான அமைப்பு.  அரசியல் சட்டப் பிரிவு 324ன் கீழ் அமைக்கப்பட்ட இந்திய தேர்தல் ஆணையம் 16ஆவது நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தி முடித்து விட்டது.
தேர்தல் ஆணையத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், இந்திய அரசியல் சட்டத்தின் ஆரம்பம்; என்பது 1950ஆம் வருடம் ஜனவரி 26ஆம் திகதிதான். ஆனால், இந்த அரசியல் சட்டத்தில் உள்ள தேர்தல் ஆணையம் தொடர்பான 324 என்ற பிரிவு, 1949ஆம் வருடம் நவம்பர் மாதம் 26ஆம் திகதியே அமலுக்கு வந்து விட்டது. அந்த அளவிற்கு இந்திய தேர்தல் ஆணையம் முக்கியத்துவம் வாய்ந்தது.

இன்னும் சொல்லப்போனால் இந்திய தேர்தல் ஆணையம், இந்திய அரசியல் சட்டம் முறைப்படி அமுலுக்கு  வருவதற்கு முன்பு வந்த அமைப்பு என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புக்கு தலைவராக இருக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் மீதுதான் இப்போது தி.மு.க. சரமாரியான குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறது.
அந்தப் புகார் மனுவில் கூறப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் இதுதான்.

1.தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல், மேட்ச் பிக்ஸிங் என்பது போல் பிக்ஸ்டு எலெக்ஷனாக அமைந்து விட்டது. இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் அதிகாரி மற்றும் அ.தி.மு.க. ஆகியோர் இணைந்து பணியாற்றி 39க்கு 37 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

2. இதனால் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் வி.சம்பத் மீது இலஞ்ச ஒழிப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக வழக்குத் தொடர முன் அனுமதி தர வேண்டும்.

3. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ப்ரவீன் குமார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. இந்தப் புகார்கள் விசாரித்து முடியும் வரை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அழிக்கக் கூடாது. ஏனென்றால், பல இடங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் அ.தி.மு.க.விற்கே வாக்களிக்கும் விதத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோல்மால் நடந்து விட்டது.

இப்படி தங்களது  21 பக்க புகார் மனுவில் 38 குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் மீது சுமத்தியிருக்கிறது, தி.மு.க. அது மட்டுமின்றி, அந்தப் புகார்களுக்கு வலு சேர்க்க 22 கடித ஆதாரங்களையும் அந்த புகார் மனுவுடன் இணைத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொடுத்திருக்கிறது.

இந்திய தேர்தல் வரலாற்றில் இது ஒரு வித்தியாசமான புகார். ஏனென்றால், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு குடியரசுத் தலைவரிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். அதுவும் 65 வருடம் பழைமை மிக்க அரசியல் கட்சி ஒன்று அப்படிக் கேட்டிருக்கிறது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள ஒரு கட்சியே இப்படி கோரிக்கை எழுப்பியிருப்பது, மற்ற அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மீது ஊழல் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா? என்பது சற்று விவகாரமான கேள்வி. ஏனென்றால், தலைமை தேர்தல் ஆணையரை நீக்குவதற்கு வேறு விதமான வழி முறைகள் இந்திய அரசியல் சட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இந்திய அரசியல் சட்டப் பிரிவு 324 (5)ன்படி தலைமை தேர்தல் ஆணையர் தவறு செய்திருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டால், அந்த ஆணையரை, உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்குவதற்கு அரசியல் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளைப் பயன்படுத்திதான் நீக்க முடியும். அது என்ன விதி?  அரசியல் சட்டம் 124(4)இல் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பதவி நீக்கம் எப்படி நடைபெற வேண்டும் என்று விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்கும் முன்பு கீழ்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

1)உச்சநீதிமன்ற நீதிபதியின் மீது சொல்லப்பட்டுள்ள புகார் விசாரணையில் நிரூபணம் ஆக வேண்டும்.
2)அப்படி புகர்கள் நிரூபிக்கப்பட்ட பிறகு, அதனடிப்படையில் இரு அவைகளிலும் (நாடாளுமன்றம், ராஜ்ய சபை) தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடைபெற வேண்டும்.

3)அந்த விவாதம் முடிந்த பிறகு, அந்த அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் மெஜாரிட்டி உறுப்பினர்கள்  பதவி நீக்கம் செய்யும் அந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து, அத்தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

4) அந்த மெஜாரிட்டி எப்படியிருக்க வேண்டுமென்றால்,  அவையில் அன்றைய தினம் அமர்ந்திருக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்க வேண்டும்.

5) அதுபோன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட வேண்டும். அதன் அடிப்படையில் அந்த உச்சநீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து நீக்கப்படுவார்.

இதே அடிப்படையில்தான் இந்திய தலைமை தேர்தல் ஆணையரும் நீக்கப்பட முடியும். அதாவது அவர் மீது விசாரணை நடத்தி, அது நிரூபிக்கப்பட்டால் நாடாளுமன்றம் மற்றும் ராஜ் சபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

அங்கு அந்த தீர்மானம் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற வேண்டும். ஆனால் தி.மு.க.விற்கோ 543 உறுப்பினர்கள் உள்ள நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் கூட இல்லை. ராஜ்ய சபையில் 4 எம்.பி.க்கள் மட்டுமே தி.மு.க.விற்கு உண்டு. அதிலும் ஒரு எம்.பி. (கே.பி.ராமலிங்கம்) மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பிறகு எப்படி நாடாளுமன்றம் மற்றும் ராஜ்ய சபையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர முடியும்? நடவடிக்கை எடுக்க முடியும்? தி.மு.க.விற்கு அந்த தெம்பு இல்லை என்பதும், அப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்பதும் அக்கட்சி தலைமைக்கும் தெரியும்.

அரசியல் சட்ட நடைமுறைகளும் தெரியும். பிறகு ஏன் இப்படியொரு புகாரை குடியரசுத் தலைவரிடம் கொடுத்தார்கள்? அதற்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை.

இந்த முறை தி.மு.க.விற்கு கிடைத்துள்ள தோல்வி படு தோல்வி. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி பலமுறை வெற்றி பெற்றுள்ளது. பலமுறை தோற்றுள்ளது. ஆனால், இந்த மாதிரி மோசமாக குறைந்த வாக்குகளை வாங்கி தோற்கவில்லை. இந்த தோல்வி அக்கட்சிக்கு எதிர்கால கூட்டணி கிடைக்குமா என்ற கேள்விக்குறியையே ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி, தி.மு.க.விற்குள் உள்ள கட்சித் தலைவர்களே நம்பிக்கையை இழந்து கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான புதிய தமிழகம் ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தின் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. அதே மாதிரி எதிர் அணியில் போட்டியிட்ட பா.ம.க.வும் தேர்தல் ஆணையம் மீது உச்ச நீதிமன்றம் வழக்குத் தொடர வேண்டும் என்று பேசி வருகிறது. ஏன் தி.மு.க.வைக் கூட இப்படி வழக்குப் போடச் சொல்லி வற்புறுத்துவோம் என்று கூறி வருகிறது. இப்படி தமிழகத்தில் உள்ள கட்சிகளில் ஆளுங்கட்சி தவிர, அனைத்து கட்சிகளுமே தேர்தல் ஆணையம் மீது குறை கூறி வருவதால், இப்போது தி.மு.க.வும் தேர்தல் ஆணையம் மீது புகார் கொடுத்திருக்கிறது.

தி.மு.க.வில் கட்சிவிரோத செயல்களில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கும் படலம் ஒரு பக்கம் நடக்கிறது. இன்னொரு பக்கம் இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதும், தமிழகத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி மீதும் கரப்ட் மோட்டீவுடன் செயல்பட்டார்கள் என்ற கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது தி.மு.க. தேர்தல் ஆணையத்தின் மீது எல்லா அரசியல் கட்சிகளுமே அவ்வப்போது புகார்கள் கூறும்.

இது ஒவ்வொரு தேர்தல் முடிந்தவுடனும் ஒவ்வொரு கட்சியும் எழுப்பும் வழக்கமான கோரிக்கைதான். குறிப்பாக தோற்ற கட்சி எழுப்பும் புகார்தான். ஆனால் கரப்ட் மோட்டீவ் உடன் என்று அரசியல் சட்ட பதவியில் இருக்கும் தலைமை தேர்தல் ஆணையர் மீது புகார் எழுப்பியிருப்பதுதான் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள அனைவர் மீதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அதிரடி குற்றச்சாட்டிற்கு எது மாதிரியான ஆதாரத்தை தி.மு.க. கையில் வைத்திருக்கிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறது.

ஊழல் சட்டத்தின் படி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றாலும், வேறு ஏதாவது ஒரு வகையில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மீதும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வழி வகுக்க வேண்டும் என்பது தி.மு.க.வின் நோக்கம் போல் தெரிகிறது. ஏற்கெனவே இந்திய பிரதமர் நரேந்திரமோடி போட்டியிட்ட சில குளறுபடிகள் காரணமாக இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது பிரதமர் வேட்பாளராக இருந்த நிலையிலேயே சாடியிருந்தார்.

அது போன்ற சூழல் இருக்கும் போது தி.மு.க.வும் தன் பங்கிற்கு இப்படியொரு புகாரை அளித்திருக்கிறது.  இந்தப் புகாரின் மீது நடவடிக்கை வருகிறதோ இல்லையோ இரு விஷயங்களை சாதிக்க விரும்புகிறது தி.மு.க. ஒன்று அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக ப்ரவீன்குமார் இருக்கக் கூடாது என்று நினைக்கிறது. அதற்காக இப்போதே அவர் மீது புகார் கொடுத்து வைத்து விட்டால், அடுத்த முறை தேர்தல் வரும் போது அவர் நீடிக்கக் கூடாது என்று மனுக் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. 

இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் பிறப்பித்த 144 தடையுத்தரவுதான் இப்படியொரு கோபத்தை தி.மு.க.விற்கு ஏற்படுத்தியிருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஆகவே இதே மாதிரி ஒரு நிலை மீண்டும் அடுத்து 2016ல் சட்டமன்றத் தேர்தல் வரும் போது உருவாகி விடக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் இந்த புகார் என்பது தி.மு.க. வட்டாரத்தில் உள்ள செய்தி.

குடியரசுத் தலைவரிடம் புகார் கொடுத்ததோடு இது முடிவுக்கு வந்து விடுமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் இந்தப் புகார்களின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கும் தி.மு.க. அதன் பிறகு உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடரும் என்றே தெரிகிறது. அதனால்தான் அவர்களுக்கு முன்பாகவே, தேர்தல் ஆணையத்தின் மீது வழக்குத் தொடரப் போகிறேன். தி.மு.க.வையும் வழக்குப் போடச் சொல்லி வலியுறுத்துவேன் என்று அறிவித்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.

ஆனால் தி.மு.க. கொடுத்துள்ள புகாரில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மீது இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற கேள்வி பிறந்திருக்கிறது. அது தொடர்பான விவாதங்களும், உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப் போகும் வழக்குகளும் தி.மு.க.விற்கு கிடைத்த நாடாளுமன்றத் தோல்வியை திசை திருப்ப உதவும் என்று கருதுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாதது மட்டுமின்றி, அதன் அஸ்திவாரத்தின் ஓர் அங்கமாகவும் திகழ்வது ஜனநாயகம் என்று கேசவானந்த பாரதி என்ற புகழ் பெற்ற வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அப்படிப்பட்ட ஜனநாயகத்தை உருவாக்கப் பாடுபடுவதுதான் இந்திய தேர்தல் ஆணையம் என்று பொன்னுசாமி வழக்கில் இதே இந்திய உச்சநீதிமன்றம்தான் தீர்ப்பளித்துள்ளது. அவ்வளவு சுதந்திரமான இந்திய தேர்தல் ஆணையத்தினை அலங்கரித்த தலைமை தேர்தல் ஆணையர்கள் பல பேர் செய்திகளில் அடிபட்டுள்ளார்கள்.

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்திற்கும், அதிகாரத்திற்கும் வித்திட்டவர்  என்று பெயர் வாங்கிய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன். குஜராத் கலவரத்திற்குப் பிறகு அங்கு உடனே தேர்தல் நடத்த முடியாது என்று துணிச்சலாக முடிவு எடுத்தவர் என்ற பெயரை வாங்கினார் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த லிங்டோ.

மின்னனு வாக்குப் பதிவு எந்திரம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து சிறப்பாக பணியாற்றியவர்கள் என்ற பெயரைத் தட்டிச் சென்ற தலைமை தேர்தல் ஆணையர்கள் என்றால் அந்தப் பட்டியலில் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, கோபால்சாமி போன்றோர் அடங்குவர்.

தேர்தலில் பண விநியோகத்தைத் தடுத்த இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுத்தவர் என்ற பெயரைப் பெற்றவர் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த குரோஷி. ஆனால் இப்போது தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் சம்பத் இந்திய அளவில் அமைதியாக 16ஆவது நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி முடித்தவர் என்ற பெயருக்குப் பெருமை சேர்ப்பவராக இருக்கிறார்.

ஆனால், அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர வேண்டும் என்று தி.மு.க. அனுமதி கேட்டிருக்கிறது. இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அதிர்ச்சி இது. இதை எப்படி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அணுகப் போகிறார் என்பதை இந்தியாவில் உள்ள அரசியல் சட்ட வல்லுனர்கள் மட்டுமல்ல, வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் உன்னிப்புடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X