
இந்திய நாடாளுமன்றத்தில் தன்னுடைய அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி. இந்த பட்ஜெட்டை அவையில் தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண்ஜேட்லி, "இப்போது வழங்கப்பட்டுள்ள சலுகைகள் நிதிநிலை சரியானதும் மீண்டும் விரிவுபடுத்தப்படும்' என்று அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடியோ, "மக்களின் விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையாக மாற்றும் பட்ஜெட் இது' என்று கூறிவிட்டு பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்க பிரேசில் நாட்டிற்குச் சென்றுள்ளார். வழக்கம் போல் எதிர்கட்சிகள் இந்த பட்ஜெட்டை விமர்சித்துள்ளன. "நூறுகோடி நிதி ஒதுக்கீடுகளின் லாண்டரி லிஸ்ட் போல் இருக்கிறது பட்ஜெட்' என்று அவையில் தூங்கினார் என்ற குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருக்கும் ராகுல் காந்தி கருத்துக் கூறியிருக்கிறார். முன்னால் பிரதமர் மன்மோகன்சிங்கோ, "எந்த ரோட் மேப்பும் இல்லாத பட்ஜெட் இது' என்று குறை கூறியிருக்கிறார்.
சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், "என் பட்ஜெட் நடவடிக்கைகள் சரி என்பதை ஜெட்லியின் நிதிநிலை அறிக்கை உறுதிசெய்திருக்கிறது' என்று கூறியுள்ளார். மாநிலக் கட்சிகள் பெரும்பாலும் பட்ஜெட்டை குறை கூறியிருந்தாலும், தமிழகத்தில் உள்ள கட்சிகளில் காங்கிரஸ் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுமே பாராட்டியிருக்கின்றன. குறிப்பாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் போட்டி போட்டுக் கொண்டு பட்ஜெட்டிற்கு புகழாரம் சூட்டி மகிழ்ந்திருக்கின்றன. இவ்வளவு பாராட்டுக்குள்ளான மத்திய அரசின் பட்ஜெட்டில் வித்தியாசமான அம்சங்கள் என்ன இருக்கின்றன என்பது அனைவரும் எதிர்பார்க்கும் கேள்வியாகியிருக்கிறது.
பிரதமர் நரேந்திரமோடி அரசின் முதல் பட்ஜெட்டின் இலக்கு என்ன? நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சமாளிப்பது, பிஸ்கல் டிபெசிட் எனப்படும் நிதிப்பற்றாக்குறையை இப்போது இருக்கின்ற 4.1 சதவீதத்திலிருந்து அடுத்த இரு வருடங்களுக்குள் 3.0 சதவீதமாக குறைத்து விடுவது, இந்தியாவின் வளர்ச்சி சதவீதத்தை இப்போது இருக்கும் ஐந்து சதவீதத்திற்கும் குறைவு என்ற நிலையிலிருந்து 7 முதல் 8 சதவீதம் வரை அடுத்த மூன்று அல்லது நான்கு வருடத்திற்குள் எட்டுவது போன்றவைதான் முக்கிய நோக்கங்கள். பட்ஜெட்டிற்கென உருவாக்கப்பட்டிருக்கும் பாதையும் கூட. இந்த அம்சங்களில் முக்கியமாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதும், அந்நிய செலாவணி கையிருப்பை திருப்திகரமான நிலையில் வைத்துக் கொள்வதும் போன்ற பணிகளும் அடங்கியிருக்கின்றன. இவ்வளவு விஷயங்களை நோக்கமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்திய பட்ஜெட்டில் என்ன மாதிரியான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது சற்று சுவாரஸ்யமானதுதான்.
முதலில் வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்து இழுக்க வேண்டிய கட்டாயம் மோடி அரசாங்கத்திற்கு இருக்கிறது. ஏனென்றால் கடந்த காலத்தில் இருந்த அரசியல் ஸ்திரத்தன்மையின் விளைவாக அரசின் பல கொள்கை முடிவுகள் இந்திய சுப்ரீம் கோர்ட்டின் ஸ்கேனர் பார்வையில் சிக்கிக் கொண்டது. சென்டிரல் விஜிலென்ஸ் கமிஷன், சி.ஏ.ஜி. போன்ற அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட்டன. அதன் விளைவாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் உள்ள அரசாங்கத்திடம் முடிவு எடுக்கும் உரிமை முழுமையாக இல்லை என்று நினைத்தனர். அதனால் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவிற்கு நுழைவது தடை பட்டது. அதற்கு "வோடோபோன்' தொடர்புடைய "ரெஸ்ட்ராபெக்டிவ் லெஸிஸ்லேஸன்' விவகாரம் பெரிய முட்டுக்கட்டையாகவே அமைந்திருந்தது. இப்போது இந்த பட்ஜெட்டில் அந்த "ரெட்ராஸ்பெக்ட்டிவ் லெஸிஸ்லேஸன்' விவகாரம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அந்நிய முதலீட்டாளர்களுக்கு புதிய லைபிலிட்டிகளை உருவாக்க மாட்டோம் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இது மாதிரி இனி வரும் வரி விவகாரங்களைக் கவனிக்க ஒரு உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதே மாதிரி செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யும் "ஃபாரின் போர்ட்போலியோ இன்வெஸ்டார்கள்' அதன் மூலம் வரும் வருமானம் பற்றிய தெளிவு இல்லாமல் இருந்தனர். அந்த விஷயம் இப்போது பட்ஜெட்டில் தெளிவுபடுத்தப்பட்டு, இது போன்ற வருமானங்கள் இனி "கேபிட்டெல் கெயின்' (மூலதன வருமானம்) என்று எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் சென்ற ஆட்சியில் வீழ்ந்து விட்ட தொழில். அதை ஊக்கப்படுத்த "ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்' உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 50000 சதுர மீட்டர் உள்ள ரியல் எஸ்டேட் தொழிலில் அந்நிய முதலீட்டை கொண்டு வர முடியும் என்ற நிலை மாற்றப்பட்டு, இந்த பட்ஜெட்டில் அந்நிய முதலீட்டைக் கொண்டு வர 20000 சதுர மீட்டர் இருந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் "இன்ப்ராஸ்ட்ரக்ஷர் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்' உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு எல்லாம் மேலாக இன்ஸþரன்ஸ் துறையில் முன்பு 26 சதவீதம் என்று அந்நிய முதலீடு இப்போது 49 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறையிலும் இதே மாதிரி 49 சதவீதம் வரை அந்நிய முதலீடு கொண்டு வரலாம் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் அந்நிய முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆக்கமும், ஊக்கமும் என்பது சற்று ஆறுதலான செய்தி.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சென்ற வருடங்களில் கை கொடுத்தது விவசாயம். அந்த விவசாயப் பொருள் உற்பத்திதான் பணவீக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்தவும், வளர்ச்சிப் பாதையில் இந்தியப் பொருளாதாரம் பயணிக்கவும் வழி வகுத்தது. ஆகவே விவசாயத்திற்கு பிரமாண்டமான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 8 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சேமிப்புக் கிடங்குகள், விவசாயத்திற்கு நீண்ட கால மற்றும் நடுத்தர, குறுகிய காலக் கடன்கள், விவசாயத்திற்கு தனியாக "கிஸôன் டி.வி', விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கு தனி நிதி ஒதுக்கீடு, (ப்ரைஸ் ஸ்டபிளிúஸஷன் ஃபன்ட்), நாடு முழுவதும் விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருள்களை நேரடியாக சந்தையில் விற்றுக்கொள்ள "உழவர் சந்தைகள்' என்று கலக்கல் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இது வரை வந்த பட்ஜெட்டுகளில் விவசாயத்திற்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது இது மைல்கல் என்றே சொல்லலாம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் விவசாயிகள் வாங்கியிருந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால் இந்த பட்ஜெட்டில் கடன்தள்ளுபடிக்குப் பதிலாக விவசாயிகள் குறித்த காலத்தில் கடனைக் கட்டினால் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறையைப் பொறுத்தமட்டில் மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி, பகிர்மானம் மற்றும் அது தொடர்பான திட்டங்களுக்கு பத்துவரும் "டேக்ஸ் ஹாலிடே' வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பத்துவருடத்திற்கு அவர்கள் வரிச்செலுத்த வேண்டியதில்லை. சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் "ஈ}விஸô' முறை அறிமுகப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நிலக்கரி மற்றும் சுரங்கம் போன்ற விஷயங்களில் இருந்த பிரச்சினைகளைத் தீர்த்து அவற்றை முழு வீச்சில் நாட்டின் மின்திட்டங்களுக்குப் பயன்படுத்தும் கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல் அரசின் செலவினத்தைக் குறைப்பதற்கு "எக்ஸ்பென்டிச்சர் மானேஜ்மென்ட் கமிஷன்' உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் மான்யங்கள் குறைக்கப்படலாம். குறிப்பாக பெட்ரோலியப் பொருள்கள், உரம், உணவுப் பொருள்கள் போன்றவற்றிற்கு அரசு வழங்கும் மான்யத்தில் ஒரு வரைமுறை கொண்டுவரப்படலாம். ஏற்றுமதியை ஊக்குவிக்க, "எக்ஸ்போர்ட் ப்ரமோஷன் மிஸன்', வர்த்தகத்தைப் பெருக்க "சிங்கிங் விண்டோவ் கஸ்டம்ஸ் க்ளியரன்ஸ்' எல்லாம் சிறப்பான முயற்சிகள் என்று பொருளாதார நிபுணர்களால் பாராட்டப்படுகிறது. அதை விட பொதுமக்களும் வங்கி நிர்வாகத்தில் பங்கேற்கும் விதமாக பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் பொதுமக்களுக்கும் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் எல்லாம் கவனம் செலுத்தினாலும், சமூக கட்டமைப்பை உயர்த்தும் திட்டங்களுக்கு பஞ்சமில்லை. பொதுவாக பட்ஜெட் பொருளாதார திட்டங்களிலும், வரிவிதிப்பிலும் கவனம் செலுத்தும் போது சமூக கட்டமைப்புக்கான திட்டங்களை கைவிட்டு விடுவார்கள். ஆனால் இந்த பட்ஜெட்டில் அதில் பிரதமர் நரேந்திரமோடியின் "டச்' தெரிகிறது. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் 2019ல் வருகிறது. அதற்குள் அனைத்து வீடுகளிலும் டாய்லட் கட்டி சுகாதாரம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்திட்டத்திற்கு "ஸ்வாட்ச் பாரத் அபியான்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 1000 கோடி ரூபாயில் விவசாய நிலங்களுக்கு நீர்பாசனமுறை சீர்செய்தல் என்ற திட்டம், "பிரதம மந்திரி கிரிஷி சஞ்சாயி யோஜனா' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட விருக்கிறது. கிராமப்புறங்களை நகர்புறமாக்கும் திட்டம் "ஷ்யாம பிரசாத் முகர்ஜி ரூர்பன் மிஸன்' என்ற பெயரில் வருகிறது. 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கும் திட்டம் "தீன்தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா' என்ற பெயரில் அமலுக்கு வருகிறது. இது தவிர டெல்லியில் நடைபெற்ற "நிர்பையா கற்பழிப்பை' மனதில் கொண்டு, அரசு வாகனங்களில் பெண்களின் பாதுகாப்பிற்கு நிதி, பெருநகரங்களில் வாழும் பெண்களின் பாதுகாப்பிற்கு நிதி எல்லாம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதை விட முக்கியமாக கம்பெனிகள் தங்கள் லாபத்தின் ஒரு பகுதியை "கார்ப்பரேட் சோஸியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி' நிதிக்கு ஒதுக்கி செலவிட வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. அந்த நிதியின் கீழ், "குடிசைப் பகுதிகளை அபிவிருத்தி செய்வதும் அடங்கும்' என்று புதிய ஷரத்து சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல் 100 ஸ்மார்ட் சிட்டிகள், 2022ம் வருடத்திற்குள் அனைவருக்கும் வீடு என்ற முழக்கம் எல்லாம் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.
ஆகவே மோடியின் முதல் பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை மட்டும் முதல் நோக்கம் என்றாலும் அதில் தொழில் வளர்ச்சிக்கும் திட்டங்கள் இருக்கிறது. வரி சீரமைப்பிற்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. அந்நிய முதலீட்டாளர்களுக்கும் தைரியம் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லவாற்றையும் செய்து விட்டு அரசு மட்டும் தான்தோன்றித்தனமாக செலவு செய்ய முடியாது என்பதை உறுதி செய்ய "எக்ஸ்பெண்டிச்சர் மானேஜ்மென்ட் கமிஷன்' உருவாக்கப்பட்டிருக்கிறது. இது எல்லாவற்றையும் விட, சமுதாயத்தில் உள்ள அடித்தட்டு மக்கள், ஏழை மக்கள், நடுத்தர மக்கள் போன்றவர்கள் மீது காங்கிரஸ் ஆட்சிதான் கவனம் செலுத்தும் என்ற மாயை அகற்றப்பட்டு, முதல் முறையாக பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு சமூகக் கட்டமைப்பில் தாழ்ந்த நிலையில் உள்ள மக்களை கை தூக்கி விடும் முயற்சிகளும் நிரம்ப இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. இந்திய ஜனநாயகத்தின் ஆணி வேராகக் கருதப்படும் கிராமங்களை மேம்படுத்தும் முயற்சிகளும் பட்ஜெட்டில் இருப்பது அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் அட்சய பாத்திரம் போல் இருக்கிறது என்றால் மிகையாகாது. வியூகம் வெளிப்பட்டிருக்கிறது. இதை செயல்படுத்தும் வேகத்தில்தான் மோடி அரசாங்கத்தின் செயல்பாட்டில் நம்பகத்தன்மை ஏற்படும்!