2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சின்ன விடயத்தையும் செய்கிறார்களில்லை

Thipaan   / 2014 ஜூலை 20 , பி.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

அரசாங்கத்திற்கும் பொதுவாக தமிழ் தரப்பினருக்கும் இடையே அல்லது அரசாங்கத்திற்கும் குறிப்பாக, வட மாகாண சபைக்கும் இடையே உறவு மோசமாகவே இருக்கிறது. அல்லது அது நாளுக்கு நாள் மோசமடைந்தே வருகிறது.

அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் இதனை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
 
இது தொடர்பில், உதாரணமாக மூன்று விடயங்களை எடுத்துக்காட்டலாம். வட மாகாண ஆளுநராகவிருந்த முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியை, ஜனாதிபதி மீண்டும் அதே பதவிக்கு நியமித்தமை, வட மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஷ், முதலமைச்சரின் சுற்றறிக்கை ஒன்றை எதிர்த்து அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்தமை மற்றும் ஆளும் கட்சியை ஆதரிக்கும் சில அமைப்புக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்யுமாறு கோரி வழக்குத் தாக்கல் செய்தமை ஆகியவற்றை சுட்டிக்காட்டலாம்.

இராணுவ அதிகாரி ஒருவரை வட மாகாண ஆளுநராக நியமிக்கக் கூடாது என்பது வட பகுதியில் ஈ.பி.டி.பி.யைத் தவிர்ந்த சகல கட்சிகளும் நீண்ட காலமாக விடுத்து வரும் கோரிக்கையாகும். முப்பதாண்டுகளுக்கு மேலாக போரொன்று இடம்பெற்று வந்த வட பகுதியில், மக்கள் தமது நிர்வாகியாக இராணுவ அதிகாரி ஒருவரை விரும்புவதில்லை என்பது வியப்புக்குரிய விடயமாகாது.

மேஜர் ஜெனரல் சந்திரசிறி நல்ல நிர்வாகியாக இருக்கலாம். அவ்வாறு இருந்தாலும் நீண்ட காலமாக இராணுவத்தை வெறுத்து வந்த வட பகுதி மக்கள் தமக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான இணைப்புப் பாலமாக இராணுவ அதிகாரி ஒருவரை விரும்பாமல் இருக்கலாம். யதார்த்தத்தில் அவர் நல்ல நிர்வாகி என்பதை விட மக்களின் வாக்குப் பலத்தால் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகிகளோடு நிரந்தரமாக மோதும் ஒருவர் என்பது தான் வெளிப்படையாக தெரிய இருக்கும் உண்மை.
 
இந்த நிலையில் முப்பதாண்டு கால போருக்குப் பின்னர் தமிழ் மக்களுக்கு நட்புச் செய்தியொன்றை வழங்க வேண்டும் என்று அரசாங்கம் நினைத்திருக்க வேண்டும். எனவே, அவருக்குப் பதிலாக ஆரம்பத்திலிருந்தே ஆளுநராக நியமிக்க அரசாங்கத்திற்கு நம்பிக்கையுள்ள சிவில் அதிகாரிகள் இல்லாமல் இல்லை.

வட மாகாண ஆளுநராக தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும் என வட பகுதி அரசியல்வாதிகளோ அம்மாகாண மக்களோ கேட்கவில்லை.
ஓர் இராணுவ அதிகாரி அல்லாமல் சிங்கள பௌத்தர் ஒருவரை அந்த பதவிக்கு நியமியுங்கள் என கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வட மாகாண சபை கூட்டத்தின் போது மாகாண சபை உறுப்பினர் பாலசந்திரன் கஜதீபன் கூறியிருந்தார்.

அதனை எதிர்த்து இதுவரை எந்தவொரு தமிழரும் குரல் எழுப்பவில்லை. அதாவது அவர்கள் அந்தக் கருத்தை ஆதரிக்கிறார்கள். அதேவேளை, சிவில் அதிகாரி ஒருவரை நியமிப்பதால் சிங்கள மக்கள் அரசாங்கத்தின் இது வெறுப்படைவார்கள் என்று அஞ்சுதற்கும் காரணமே இல்லை. பொதுவாக சிங்கள மக்கள் ஆட்சியாளர்களைப் போல் இனவாதிகளல்லர். ஆட்சியளர்கள் அல்லது வேறு குழுக்கள் தூண்டினாலன்றி அவர்கள் சிறுபான்மையினருக்கு எதிராக செயற்படுவதில்லை.

அதேவேளை, அதிகாரத்தில் உள்ள சிங்கள தலைவர்கள் தைரியமாக இனவாதத்தை எதிர்த்து நின்ற பல சந்தர்ப்பங்களின் போது சிங்கள மக்களும் அந்த நிலைப்பாட்டை ஆதிரித்த நிலைமைகளே அதிகமாக இருக்கிறது.
 
உதாரணமாக 1994ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன என்றும் அவற்றுக்காக அரசியல் தீர்வொன்று தேவைப்படுகின்றது என்றும் தாம் பதவிக்கு வந்தால் முறையான அதிகார பரவலாக்கல் முறையொன்றை அறிமுகப்படுத்துவதாகவும் கூறி ஜனாதிபதி தேர்தலில் குதித்த சந்திரிகா குமாரதுங்க 62 சதவீதம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியானார்.

ஆனால், அதே மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்குப் பின்னர் இனவாதக் கண்கொண்டு பிரச்சினைகளை அணுகும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் 2010ஆம் ஆண்டு அதேபோல் பெருமளவில் வாக்களித்தார்கள்.

எனவே அரசாங்கம் விரும்பினால் தமிழ் மக்கள் திருப்தியுறும் வகையில் அரசாங்கம் இந்த ஆளுநர் பிரச்சினையை தீர்க்கலாம்.

ஆனால், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கனேசன் கூறுவதைப் போல் வரப்போகும் தேர்தல்களின் போது தமக்கு இனி சிறுபான்மை மக்களின் ஆதரவு கிடைக்காது என்று நினைத்து அரசாங்கம் பெரும்பான்மை மக்களை தூண்டி அவர்களின் வாக்குகளை கூடுதலாக பெற முயற்சிக்கிறது போலும்.

முஸ்லிம் மக்களுக்கு எதிரான பொது பல சேனா போன்ற அமைப்புக்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்காததற்கும் காரணம் அதுவாகும் என பலர் வாதிடுகிறார்கள்.

அளுத்கமவில் இடம்பெற்ற முஸ்லிம் விரோத தாக்குதல்களின் பின்னால் அரசாங்கம் இருப்பதாக குற்றம் சாட்டபபடுவதாக பேட்டியொன்றின் போது டெய்லி மிரர் நிருபர் ஒருவர் வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிடம் கேட்ட போது முஸ்லிம்களை அந்நியப்படுத்திக்கொள்வதால் அரசாங்கத்திற்கு எந்த நன்மையும் கிடைக்காது என அவர் பதிலளித்திருந்தார். ஆனால் கணேசனின் வாதம் இதற்கு பதிலடியாக இருக்கிறது.

ஆளுநர் விவகாரத்திலும் அரசாங்கம் அவ்வாறு சிங்கள மக்களின் ஆதரவை மனதில் வைத்துக்கொண்டு செயற்பட்டதாகவே தெரிகிறது. அல்லது தமிழ் மக்களின் ஆதரவை இனிமேலும் எதிர்ப்பார்ப்பதில் பயனில்லை என்று அரசாங்கம் நினைக்கிறதோ தெரியாது. அதுவும் இல்லாவிட்டால் இவர்கள் சொல்வதை நாம் செய்யவே கூடாது என்ற மன நிலையில் அரசாங்கத்தின் தலைவர்கள் இருக்கிறார்கள் போலும்.

வட மாகாண பிரதம செயலாளர் விடயத்திலும் நிலைமை இதுவாகவே இருக்கிறது. மாகாண நிர்வாகத்தில் சுமூக நிலை நிலவ வேண்டும் என்றால் அதற்கு பிரதமச் செயலாளருக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் இடையில் சுமூக உறவு இருப்பது அத்தியாவசியமாகும். சுமூக நிலையை உருவாக்கவே முடியாவிட்டால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை மாற்ற முடியாது.
 
இந்த விடயங்களை தாம் ஜனாதிபதியை சந்தித்த போது அவரிடம் கூறியதாகவும் ஜனாதிபதி அதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் ஆனால் மேஜர் ஜெனரல் சந்திரசிறியை மீண்டும் ஆளுநராக நியமித்ததன் மூலம் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் கூறியிருந்தார்.
 
புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிரான போர் 2009ஆம் ஆண்டு முடிவடைந்ததன் பின்னர் நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் அடுத்த கடைமையாக இருக்கிறது.

அதனை சர்வதேச சமூகமும் ஐ.நா. அமைப்புக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தாம் அதற்காக நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்கமும் சர்வதேச சமூகத்திடம் கூறி வருகிறது. இந்த நிலையில் தான் இது போன்ற அநாவசியமான சர்ச்சைகள் தொடர்கின்றன.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக போரின் போது அநாவசியமாக கொல்லப்பட்டவர்களினது உறவினர்களுக்கும் காணாமற்போனவர்களின் உறவினர்களுக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகிறது.

போர் முடிவடைந்து ஒரு வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட கூட்டறிக்கையில் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறது.

அந்த வாக்குறுதியை நடைமுறையில் செயற்படுத்துவதைப் போல் அரசாங்கமும் காணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளது. தாம் அந்த விடயத்தில் நம்பகமான முறையில் நடந்துகொள்ளத் தயார் என்று கூறுவதைப் போல் அரசாங்கம் கடந்த வாரம் அக்குழுவுக்கு சர்வதேச ஆலோசகர்கள் மூவரையும் நியமித்தது.

அது பாரதூரமான விடயமாகவே தெரிகிறது. அது நேர்மையான நடவடிக்கையா இல்லையா என்பது எதிர்காலத்தில் தான் தெரியவரும். அது நேர்மையாக இருந்தால் அந்தளவு பாரதூரமான நடவடிக்கைகளை எடுக்கும் அரசாங்கம் மிக இலகுவாக தீர்க்கக் கூடிய ஆளுநர் தொடர்பான பிரச்சினையையும் பிரதமச் செயலாளர் தொடர்பான பிரச்சினையையும் ஏன் தீர்க்கக் கூடாது என்ற கேள்வி நியாயமாக சிந்திக்கும் எவர் மனதிலும் எழுவது இயல்பே.

நல்லிணக்கம் என்ற விடயத்தில் அரசாங்கம் எப்போதும் தயக்கத்தையே காட்டி வந்துள்ளது. போர் ணிடிவடைந்த உடன் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி வந்த போதும் அரசாங்கம் மௌனியாக இருந்தது. அதிகார பரவலாக்கலுக்காக புதிய முறைகளை கண்டறிவது ஒரு புறமிருக்க நடைமுறையில் இருக்கும் முறையிலாவது வட மாகாண சபைக்கு தேர்தலை நடத்தி அந்த மாகாண மக்களின் பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை ஓரளவுக்காவது கையளிக்க அரசாங்கம் தயாராகவில்லை.
 
சர்வதேச சமூகத்தின் நெருக்குதலின் காரணமாகவே கடந்த வருடம் வட மாகாண சபைக்கான தேர்தலை அரசாங்கம் நடத்தியது. சர்வதேச சமூகம் எந்தளவுக்கு அதைப்பற்றி அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டியதாக இருந்தது என்றால் அந்த விடயம் அமெரிக்காவினால் கடந்த வருடம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையிலும் அது உள்ளடக்கப்பட்டு இருந்தது.

மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மிக இலகுவாக வட மாகாண சபையோடு உறவை நடத்தக் கூடிய வகையில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சியுள்ள சிங்கள மக்களை நன்றாக உணர்ந்த நாட்டில் உள்ள சிறந்த புத்திஜீவிகளில் உருவரான முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசரான விக்னேஸ்வரனை தமது முதலமைச்சர் வேட்பாளராக நியமித்தது.

ஆனால் அரசாங்கத்தின் நண்பர்களான தேசிய சுதந்திர முன்னணியும் ஜாதிக்க ஹெல உருமயவும் அவரை புலியாக சித்தரித்தன. அவரது நியமனத்தை பிரிவினைக்கான ஏற்பாடாக விவரித்தன.

நல்லிணக்கத்திதை ஏற்படுத்த அரசாங்கம் உண்மையிலேயே முயற்சிப்பதாக இருந்தால் அதற்காக தமிழத்; தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கிய சிறந்த ஒத்துழைப்பு விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமித்தமையே. ஆனால் அரசாங்கம் அந்த வாய்ப்பை முறையாக பற்றிக்கொள்ளவில்லை.

அதற்கு முன்னர் 2012ஆம் ஆண்டு திவி நெகும சட்ட மூலத்தை சகல மாகாண சபைகளும் அங்கீகரிக்க வேண்டும் என்று உயர் நீதிமனறம் உத்தரவிட்டதை அடுத்து அரசாங்கம் மாகாண சபைகளை இரத்துச் செய்ய முயற்சித்தது. அது முடியாத காரியம் என்பதை உணர்ந்த அரசாங்கத்தில் உள்ள சில உறுப்புக் கட்சிகள் மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்க முயற்சித்தன.

இந்த நெருக்குதலின் காரணமாக அவர்களுக்கு அது முடியாமல் போயிற்று.
இனப் பிரச்சினைக்கு உடனடியாக புதிதாக தீர்வு தேடுவது அப்போதைய நிலையில் கடினமானதாக இருந்தது உண்மை தான். ஆனால் நடைமுறையில் உள்ள முறையிலாவது நல்லிணக்கத்திற்காக நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் தயங்கியது.

இந்திய மற்றும் சர்வதேச நெருக்குதலின் காரணமாக வட மாகாண தேர்தலை நடத்தி தமிழத்; தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதன் பின்னர் வட பகுதி அபிவிருத்திப் பணிகளை வட மாகாண சபையிடம் கையளிப்பதாக பொருளாதார அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கூறியிருந்தார். ஆனால், அது நடைபெறவில்லை. மாறாக அரசாங்கத்திற்கும் வட மாகாண சபைக்கும் இடையே முறுகல் நிலை தான் வளர்ந்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாகவே வட மாகாண ஆளுநராக மேஜர் ஜெனரல் சந்திரசிறி மீண்டும் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தமக்கு நம்பிக்கையுள்ள ஒருவரை நிமிப்பது அரசாங்கத்திற்கு சின்ன விடயம். ஆனால் செய்கிறார்களில்லையே.        




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X