2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தீர்வு வருமா?

Suganthini Ratnam   / 2014 ஜூலை 25 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் காணாமல் போனோர் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்தனவா என்பது குறித்து விசாரிக்கும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜுலை 15ஆம் திகதியிட்டு வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இதற்கான ஆணையை பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் அரசாங்கம் இதுவரை மறுத்துவந்த ஒரு விடயத்துக்கு இணங்கிப் போயுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது, போர்க்குற்றங்கள் ஏதும் நிகழவில்லையென்றும் பொதுமக்கள் ஒருவர் கூட கொல்லப்படவில்லையென்றும் இதுவரை அரசாங்கம் கூறி வந்தது. அத்துடன், போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையை நடத்தவும் மறுத்துவந்தது.

ஆனால், இப்போது போர்க்குற்ற விசாரணை என்பதை நேரடியாக வெளிப்படுத்தாவிட்டாலும், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும்  சம்பவங்கள், மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

இதன் மூலம் அரசாங்கம் தனது பிடிவாதத்திலிருந்து சற்று தளர்ந்துபோயுள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்தப் படியிறக்கம் நிகழ்ந்ததற்கு சர்வதேச அழுத்தங்கள்தான் காரணமென்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

போர் முடிந்து 05 வருடங்களுக்கு மேலாகியும் எடுக்கப்படாத ஒரு நடவடிக்கைக்கு அரசாங்கம் இப்போது இறங்கி வந்துள்ளது. அதுவும் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டுவரும் சூழலில்தான் அரசாங்கம் இந்த உள்ளூர் விசாரணைக்கான ஆணையை பிறப்பித்துள்ளது.
ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் ஆணையாளரினால் உருவாக்கப்பட்ட சன்ட்ரா பெய்டாஸ் தலைமையிலான விசாரணைக்குழு - மார்ட்டி அதிசாரி, அஸ்மா ஜஹாங்கீர், சில்வியா கார்ட்ரைட் ஆகிய சர்வதேச நிபுணர்களின் வழிகாட்டலுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ள தருணத்தில்தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுவரை காலமும் பொறுத்திருந்துவிட்டு இப்போது மட்டும் திடீரென இலங்கை அரசாங்கத்துக்கு எப்படி இந்தப் பொறுப்பு வந்தது?

இலங்கை அரசாங்கம் சுயமாக, எவ்வித அழுத்தங்களுமின்றி இம்முடிவை எடுத்திருந்ததென்று கூறமுடியாது. அவ்வாறாயின், இந்த முடிவு எப்போதோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

புறநிலை அழுத்தங்கள், குறிப்பாக மிக வலிமையான சர்வதேச விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு அது செயற்படத் தொடங்கியுள்ள நிலையில்தான், அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. எனவே, சர்வதேச விசாரணையின் அழுத்தங்களே இந்த முடிவுக்கான முதன்மையான காரணமென்பதை உறுதியாக நம்பலாம்.

சர்வதேச விசாரணையொன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதனைப் பலவீனப்படுத்துவதற்கு அல்லது அதன் முக்கியத்துவத்தை குறைப்பதற்கு இந்த விசாரணைகளை அரசாங்கம் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. இலங்கை அரசாங்கத்தால் வழக்கமாகக் கையாளப்படும் அதே தந்திரோபாயம் இங்கும் கையாளப்பட்டுள்ளது. கோடு ஒன்றை சிறிதாக்க வேண்டுமானால், அதனருகே பெரியதொரு கோடு போடுவது வழக்கம். அதுபோலத்தான், சர்வதேச விசாரணையின் முக்கியத்துவத்தை குறைப்பதற்கு அல்லது அதனை சர்வதேச அரங்கில் பலவீனப்படுத்துவதற்கு தானும் ஓர் ஆணைக்குழுவை நியமித்துள்ளது அரசாங்கம்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்  ஆணையாளர் நவநீதம்பிள்ளையை போலவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தானும் ஒரு சட்ட நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக்குழுவை உருவாக்கியிருக்கிறார்.

எனினும், இந்த விசாரணைக்குழு மற்றும் ஆலோசனைக்குழு மூலமாக அரசாங்கம் எதனைச் சாதிக்க முனைகிறது?

போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மீறல்கள் குறித்து விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் என்று இனங்காணப்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கின்ற அர்ப்பணிப்புடன் அரசாங்கம் செயற்படுகிறதா? அல்லது சர்வதேச விசாரணையின் முக்கியத்துவத்தை குறைத்து அதனால் ஏற்பட்ட அழுத்தங்களிலிருந்து விடுபட்டு, சர்வதேச சமூகத்தை திசை திருப்புவதற்காக இந்த நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளதா?
இதில் முதலாவது காரணத்துக்காக அரசாங்கம் இந்த விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தால் அது நாட்டில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்காக,  நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என்று கருதலாம்.

ஆனால், அவ்வாறு கருதுவதற்கு ஏற்றதொரு புறச்சூழல் அமையவுமில்லை, அவ்வாறு இந்த அரசாங்கத்தை நம்ப முடியவுமில்லை. ஏனென்றால் அத்தகையதொரு எண்ணம் அரசாங்கத்திடம் இருந்திருந்தால், இந்த விசாரணைக்குழுவை நியமிப்பதற்கு 05 வருடங்களுக்கும்  மேல் தேவைப்பட்டிருக்காது. அதனை எப்போதோ செய்திருக்கலாம்.

அவ்வாறு, முன்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இன்று அரசாங்கம் சர்வதேச அளவில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் கூட ஏற்பட்டிருக்காது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2012, 2013ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நம்பகமான, சுதந்திரமான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை மட்டும்தான் வலியுறுத்தியிருந்தன.

ஆனால், அந்தத் தீர்மானங்களை ஏற்கமுடியாது என்றும்  அது பக்கச்சார்பானது என்றும் அரசாங்கம் நிராகரித்திருந்ததை மறந்துவிட முடியாது.
2012ஆம் ஆண்டு முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் கடைசியாக சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்படும்வரையில் நம்பகமான ஓர் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதற்கான போதிய காலஅவகாசம் அரசாங்கத்திடம் இருந்தது.

அதனைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறியதால்தான், சர்வதேச விசாரணைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சர்வதேச விசாரணைக்குழு உருவாக்கப்பட மூல காரணமாக இருந்த அமெரிக்காவே, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை மூலமே பொறுப்புக்கூறல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சுலபமானது என்று அண்மைக்காலம்வரை கூறி வந்திருக்கிறது.

அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்த அரசாங்கம், இப்போது திடீரென ஓர் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை சர்வதேச நிபுணர்களின் ஆலோசனை உதவி பெறும் வகையில் நியமித்துள்ளது.

இதனை எந்தவகையிலும் நம்பகமான உள்நாட்டு விசாரணை மூலம் பொறுப்புக்கூறல் விவகாரத்தை தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் விருப்பமாக எடுத்துக்கொள்ள முடியாது. வேறு வழியின்றி சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிக்கொள்வதற்கான ஓர் உத்தியாகவே இதனைக் கருதவேண்டும்.

சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிப்பதற்காக, அதன் கவனத்தை திசை திருப்புவதற்காக, சர்வதேச விசாரணையின் முக்கியத்துவத்தை குறைப்பதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால் அது அரசாங்கத்துக்கு எந்தளவுக்கு கைகொடுக்கும் என்றும் பார்த்துவிடலாம்.

ஆலோசனை வழங்குவதற்கான வெளிநாட்டு நிபுணர் குழுவுடன் கூடிய உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை அரசாங்கம் உருவாக்கியிருப்பினும் இந்த விசாரணைக்குழு எந்தளவுக்கு நம்பகமானது, சுதந்திரமானது என்பதை அதுவே செயல்முறையில் வெளிப்படுத்தியாக வேண்டும்.

அதற்கு இந்த ஆணைக்குழு எதையும் செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பதை விட அரசாங்கம் எதையும் செய்யாமல், தலையீடு செய்யாமல் இருக்கவேண்டும் என்பதே முக்கியமானது.

ஆனால், ஆரம்பத்திலேயே அரசாங்கம் வெளிநாட்டு நிபுணர்குழு வெறுமனே ஆலோசனை வழங்குவதற்கு மட்டும்தான் என்றும் அந்த ஆலோசனையை ஏற்பதா, இல்லையா என்று தாமே தீர்மானிப்போம் என்று கூறிவிட்டது.

இது இந்த விசாரணைக்குழுவின் பெறுமானத்தை மட்டுமன்றி, வெளிநாட்டு நிபுணர் குழுவினது பணியின் தரத்தையும் குறைத்துவிட்டது.
அரசாங்கத்தின் விசாரணைக்குழு தனியே உள்நாட்டில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் தகவல்களையும் சாட்சியங்களையும் திரட்டினால்தான் அது முழுமை பெறும். அதற்கு அரசாங்கம் இடமளிக்குமா என்றும் சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானிக்கும்.

எவ்வாறாயினும், இந்த விசாரணையின் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்தைச் சார்ந்தேயுள்ளது. அத்தகைய நம்பகத்தன்மையை சர்வதேசம் பெற்றுவிட்டால் கூட, தற்போது முன்னெடுக்கப்படும் சர்வதேச விசாரணையின் முக்கியத்துவம் குறைந்து போய் விடாது.

ஏனென்றால், சர்வதேச சமூகத்துக்கு உள்ள முக்கியமான பிரச்சினை  இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதல்ல.
அந்த விசாரணையின் முடிவில் பெறப்படும் அறிக்கையை வைத்து அடுத்த நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தே சர்வதேச சமூகத்துக்கு குறிப்பாக மேற்குலகிற்கு கவலை.

ஏனென்றால், விசாரணை அறிக்கையை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கையை  எடுப்பதற்கு ஐக்கிய நாடுகள்  பாதுகாப்புச் சபைக்குச் செல்ல வேண்டும். ஆனால், அங்கே அரசாங்கத்துக்கு ஆதரவாக  செயற்படக்கூடிய சீனாவும் ரஷ்யாவும் இருப்பதால் எதையும் செய்ய முடியாது.

எனவே எவரேனும் போர்க்குற்றங்கள் செய்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டால்,  போர்க்குற்றங்கள் நிகழ்ந்தன என்பதை விசாரணைகள் கண்டறிந்தால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுப்பது சிக்கலானது.

அதனால்தான், அமெரிக்கா நம்பகமான உள்நாட்டுப் பொறிமுறை மூலம் பிரச்சினையை தீர்க்கலாம் என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறது.
உள்நாட்டு விசாரணைகள் நம்பகமாக மேற்கொள்ளப்பட்டிருந்தால், சர்வதேச விசாரணையின் பெறுபேற்றை ஒட்டியே அதன் அறிக்கையும் வரவேண்டும். மாறாக, இரண்டுமே வேறுபட்டால் மீண்டும் சிக்கல் உருவாகும்.

இரண்டு அறிக்கைகளுமே ஒன்றாக அமைந்துவிட்டால், அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை சுலபமாகிவிடும். இதற்கிடையே, இந்த உள்நாட்டு விசாரணையை தொடங்குவதால் சர்வதேச கண்காணிப்பிலிருந்து தப்பிவிடலாம் அல்லது பிரச்சினையை திசை திருப்பி விடலாம் என்று அரசாங்கம் மனப்பால் குடித்தால் அது தவறாகும்.

ஏனென்றால் இந்த உள்நாட்டு விசாரணையை அரசாங்கம் விரும்பினாலும் சரி, விரும்பாது போனாலும் சரி, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் கண்காணிக்கப் போகிறது.

அதற்கான ஆணை ஏற்கெனவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலேயே வழங்கப்பட்டு விட்டது.

அதாவது, எந்தவொரு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையினதும் விசாரணையையும் கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று ஐ.நா. மனித உரிமைகள்  ஆணையாளர் பணியகத்துக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த உள்நாட்டு விசாரணைகளால் சர்வதேச கவனத்தை திசை திருப்பமுடியாது. இன்னும் உன்னிப்பாக உலகம் இதனைக் கண்காணிக்கும்.

அதேவேளை, காலதாமதமாக நியமிக்கப்பட்டுள்ளபோதும், இந்த விசாரணை நம்பகமான வகையில் இடம்பெற வேண்டுமென்று உலகம் விரும்பினாலும், இன்னொன்றையும் இங்கு கவனிக்கவேண்டியுள்ளது.

அதாவது அரசாங்கம் இந்த விசாரணைக்குழுவை அறிவித்து ஒரு வாரத்துக்கு மேலாகியும், இது பற்றி எந்தவொரு நாடுமே வரவேற்று அறிக்கை வெளியிடவில்லை.

உள்நாட்டுப் பொறிமுறையை வலியுறுத்திய இலங்கைக்கு ஆதரவாக நின்ற நாடுகள் கூட வாய் திறக்கவில்லை.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் மட்டும்தான், இதனை வரவேற்று கருத்து வெளியிட்டுள்ளார்.

அதுவும் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குத் தான் பதிலளித்துள்ளார்.

இதிலிருந்து எதுவும் உரிய காலத்துடன் முயற்சி எடுக்கப்பட்டால்தான் அதற்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
இலங்கை அரசாங்கம் இந்த உண்மையை உணராத காரணத்தினால்தான், உள்நாட்டு விசாரணைக்குழுவை அமைக்க நீண்ட காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை அரசாங்கம் இந்த விசாரணைக்குழுவை தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகப் பயன்படுத்தினால் கூட, அதனையும் உலகம் ஏற்றுக்கொள்ளாது.

எவ்வாறாயினும், அரசாங்கம் இந்த விசாரணைக்குழுவை அமைத்துள்ளதன் மூலம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டது.

இந்த விசாரணைக்குழுவின் அறிக்கை நியாயமானதாக, நேர்மையானதாக அமைந்தாலும், அரசாங்கத்துக்கு சிக்கலாகவே அமையும்.
ஏனென்றால், அதன் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களுக்காக அது பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

இல்லையேல், இந்த விசாரணைக்குழுவின் அறிக்கை நம்பகமற்றதாக, பக்கச்சார்பானதாக அமைந்தால் அதுவும் கூட அரசாங்கத்தை இன்னும் நெருக்கடியில் தள்ளிவிடும். சர்வதேசத்தை ஏமாற்ற மேற்கொண்ட முயற்சியாக கருதப்படுவதுடன், அரசாங்கத்துக்கு அவப்பெயரையும் தேடித்தரும். இப்போதைய நிலையில் இந்த உள்நாட்டு விசாரணை என்ற களத்தில் அரசாங்கம் இறங்கிவிட்டது. 

இது கத்தி மீது நடக்கின்ற பயணம். கத்தி மீது நடந்தாலும், இந்தப் பயணத்தின் முடிவு அரசாங்கத்தை இக்கட்டிலிருந்து விடுவிக்கப் போவதில்லை.
மாறாக சட்டிக்குள் இருப்பதா, அடுப்புக்குள் விழுவதா என்பதைத்தான் தீர்மானிக்கப் போகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X