2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பா.ஜ.க. தலைவரான அமித்ஷா

Thipaan   / 2014 ஓகஸ்ட் 11 , பி.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரதிய ஜனதா கட்சியின் பதினோராவது தலைவராக ஸ்ரீ அமித் ஷா அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டிருக்கிறது. பா.ஜ.க. ஆட்சியின் தலைவராக நரேந்திரமோடியும், கட்சியின் தலைவராக ஸ்ரீ அமித் ஷாவும் களமிறங்கியிருக்கிறார்கள். தனி பெரும்பான்மையுடன் இருக்கும் கட்சி, ஏறக்குறைய 14 மாநிலங்களிலும், 7 யூனியன் பிரதேஷங்களிலும் எந்த இடத்திலுமே வெற்றி பெறாத காங்கிரஸ் கட்சியை எதிர்கொள்கிறது.

பா.ஜ.க.விற்கு இதுவரை 10 தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அடல் பிஹாரி வாஜ்பாய், பா.ஜ.க.வின் முதல் தலைவர். அவர் ஆறு வருடம் தலைவராக இருந்தார். அதன் பிறகு அத்வானி இரண்டாவது தலைவரானார். 1986 லிருந்து 2005 வரை சுமார் 19 வருடங்கள் பா.ஜ.க.வின் தலைவராக இருந்தார்.

இரு எம்.பி.க்களில் இருந்த பா.ஜ.க.வை இன்று தனிப்பெரும்பான்மை பெறும் கட்சியாக வளர்த்த பெருமை அத்வானியையே சாரும். அவருக்குப் பிறகு வந்த தலைவர்களில் ராஜ்நாத் சிங், நிதின்கட்கரி தவிர வேறு யாரும் நான்கு வருடங்கள் வரை பதவியில் இருந்ததில்லை. இவர்கள் தவிர பா.ஜ.க. தலைவரான முரளி மனோகர் ஜோசி, குஷாபாகு தாக்ரே, பங்காரு லட்சுமணன், ஜனா கிருஷ்ணமூர்த்தி, வெங்கய்யா நாயுடு ஆகிய அனைவருமே இரு வருடங்கள் அல்லது ஒரு வருடம் என்றுதான் பா.ஜ.க.வின் தலைவர்களாக இருந்தார்கள்.

அந்த வரிசையில் இப்போது அடல் பிஹாரி வாஜ்பாய்- அத்வானி காலம் முடிந்து. நரேந்திரமோடி- அமித் ஷா காலம் ஆரம்பித்திருக்கிறது. பிரதமராக மோடி இருக்கிறார். கட்சியின் தலைவராக அமித்ஷா வந்திருக்கிறார். பதவியேற்ற தேசிய பொதுக்குழுவில் சில தீர்மானங்கள்- அதாவது அரசியல் தீர்மானங்களை பா.ஜ.க. நிறைவேற்றியிருக்கிறது. அதில், ஜாதி, ஊழல், நிர்வாகத்திறமையின்மை, கொள்கை முடிவுகளை எடுக்க முடியாத தடுமாற்றம் போன்றவற்றில் திளைத்த காங்கிரஸுக்கு மக்கள் விடை கொடுத்துள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அதில் மதவாதம் என்றோ அல்லது வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியலைப் பயன்படுத்திய காங்கிரஸ் என்றோ குறிப்பிடப்படவில்லை. அதே போல் பா.ஜ.க.வின் அடிப்படைக் கொள்கைகளான ராமர் கோயில், காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகை இரத்து, பொது சிவில் சட்டம் போன்ற எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது மிக முக்கியமானது. அரசியல் தீர்மானத்தின் நோக்கம் எல்லாம் நல்ல நிர்வாகம் கொடுப்பது, ஊழலை ஒழிப்பது போன்ற மக்கள் நலத்திட்டங்களின் மறுபிரதிபலிப்பாகவே இருக்கிறது.

ஆனால் அரசியல் தீர்மானத்தில் மோடியின் புகழ்பெற்ற, செல்வாக்கு பெற்ற தலைமையினால்தான் இந்த வெற்றி கிடைத்தது என்றும் அதற்கு, கட்சி நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ் எல்லாம் உதவின என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதே போல் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் 71 வெற்றி பெற்றதற்கு அமித் ஷாவே காரணம் என்று புகழப்பட்டுள்ளது. அமித் ஷாவையும், மோடியையும் புகழ்ந்து அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது ஒரு முக்கிய அம்சம்.

பொதுவாக தனி நபர் புகழ் பாடுவது பா.ஜ.க.வில் வழக்கம் அல்ல. அதற்கு இந்த முறை விதிவிலக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால்தானோ என்னவோ, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத், மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள். அதனால் பா.ஜ.க. வெற்றி பெற்றது. தனிப்பட்ட நபர்களால் பா.ஜ.க. வெற்றி பெறவில்லை. நாளைக்கு பா.ஜ.க. நல்ல அரசைக் கொடுக்கவில்லை என்றால், பா.ஜ.க.வையும் மக்கள் தோற்கடிப்பார்கள். மாற்றுவார்கள் என்று பா.ஜ.க.வின் அரசியல் தீர்மானத்தின் மீது தன் கோபத்தை வெளிக்காட்டியிருக்கிறார்.

இந்த கோபம் பா.ஜ.க.விற்கும்,- ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும் இடையேயான மோதலின் முதல் கட்டமா அல்லவா என்பது போகப் போகப் புலப்படும்.
அரசியல் தீர்மானம் இப்படியென்றால், அக்கூட்டத்தில் தலைவர் பொறுப்பை ஏற்றுப் பேசிய அமித்ஷா, காங்கிரஸின் வாரிசு அரசியல், வாக்கு வங்கி அரசியல், குறிப்பிட்ட வாக்கு வங்கிக்கு துதி பாடுவது என்பது போன்ற செயல்களை ஒட்டுமொத்தமாக மக்கள் நிராகரித்துள்ளார்கள்.

அதுதான் இந்த தேர்தல் முடிவின் செய்தி என்று கூறியிருக்கிறார். அதே நேரத்தில், நம் அடிப்படைக் கொள்கைதான் நம்மை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஜனசங்கமோ, பா.ஜ.க.வோ கொண்டுள்ள அடிப்படைக் கொள்கைகளை நாம் எப்படி மறந்து விட முடியும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கட்சியின் அரசியல் தீர்மானத்திற்கும், தலைவராக பதவியேற்றுள்ள அமித்ஷாவின் பேச்சிற்கும் இவ்வளவு இடைவெளி இருந்தாலும், அமித்ஷாவின் மற்ற பேச்சுக்கள் பா.ஜ.க. ஆட்சிக்கு வராத மாநிலங்களில் எப்படி ஆட்சியைப் பிடிப்பது, மக்களுக்கு எப்படி நல்ல நிர்வாகத்தைக் கொடுப்பது, பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவது என்பதைச் சுற்றியே பெரும்பாலும் அமைந்திருக்கிறது.

இந்தப் பேச்சுக்கள் பா.ஜ.க.வினருக்கு தெம்பூட்டும் வகையிலும், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் இருக்கிறது என்பதே அரசியல் வட்டாரப் பேச்சு.

பா.ஜ.க. துவங்கி ஏறக்குறைய 34 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த காலகட்டத்தில் ராமர் கோயில் போன்ற விஷயங்களை முன் வைத்து அத்வானி, அடல் பிஹாரி வாஜ்பாய் போன்றவர்கள் பா.ஜ.க.வை முன்னெடுத்துச் சென்றாலும், மோடியும் அமித்ஷாவும் நடைபெற்று முடிந்த தேர்தலில் வளர்ச்சி, நேர்மையான அரசு என்ற தாரக மந்திரத்தை முன் வைத்துதான் வாக்கு கேட்டார்கள்.

அதையே ஆட்சிக்கு வந்து 70 நாட்களுக்கு மேலாகியும் தொடருகிறார்கள். பாகிஸ்தானுடன் நல்லுறவை வளர்ப்பதிலாகட்டும், முஸ்லிம் சமுதாயத்தினருக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்கட்டும், அவர்களின் பள்ளிகளை தரமுயர்த்த நிதி ஒதுக்கீடு செய்ததாகட்டும்- அனைத்திலுமே அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கம் தெரிகிறது.

ஆனால், அரசியல் தீர்மானமும், அமித்ஷாவின் பேச்சும் அந்த நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லுமா என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி. காங்கிரஸுக்கு மாற்றாக நல்ல நிர்வாகத்தை எதிர்பார்த்து வாக்களித்த இந்திய மக்கள் தேர்தலின் போது மோடி முன்னிறுத்திய நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இன்னும் காத்திருக்கிறார்கள்.

காங்கிரஸ் எதிர்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் படு தோல்வி அடைந்ததற்கு காரணமே 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு மக்கள் அளித்த வாக்குக்கு நேர் மாறாக செயல்பட்டதுதான். 2004 முதல் 2009 வரையுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகளுக்கு 2009ல் வாக்களித்தார்கள் மக்கள். ஆனால் ஆட்சி நடத்திய விதம் மக்களை வெறுப்படைய வைத்தது.

அதற்கு அக்கட்சி கூறிய காரணம்  நாங்கள் நடத்தியது கூட்டணி ஆட்சி என்பதாகும். ஆனால் இப்போது பா.ஜ.க.விற்கு இருப்பதோ தனி பெரும்பான்மை ஆட்சி. இந்த சூழ்நிலையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால், மோடிக்கு ஏற்கெனவே மன்மோகன்சிங்குக்கு கொடுத்தது போல் இரண்டாவது முறையும் வாய்ப்பைக் கொடுப்பார்கள்.

அதற்கு மோடி- அமித்ஷா கூட்டணி தங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லுமா என்பதைத்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்தியாவில் உள்ள இரு முக்கியக் கட்சிகளில் ஒன்றான பா.ஜ.க. தனக்குப் போட்டியாக வளரப் போகும் காங்கிரஸ் கட்சியை சமாளிக்க கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி அரசு நிர்வாகத்தை நடத்திச் செல்வதே தலை சிறந்த பணியாக இருக்க முடியும்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X