2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பொல்லாத எபோலா

George   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜோசப் அன்டன் ஜோர்ஜ்

உலகையே அச்சத்துக்குள்ளாக்கிய அந்தராக்ஸ், டெங்கு, இ.கொலி, எச்.என் (ஸ்வைன்புளூ), என்.5.என் (பறவைக்காய்ச்சல்), மலேரியா, எலிக்காய்ச்சல் வரிசையில் தற்போது புதிதாக, எபோலா (குருதிப்பெருக்கை ஏற்படுத்தும் வைரஸ்) இடம்பிடித்துகொண்டு உலகையே ஆட்டிப்படைத்துகொண்டிருக்கின்றது.

எபோலா, குருதிப்பெருக்கை ஏற்படுத்தும் வைரஸாகும். குருதி நாளங்களின் கலச்சுவர்களை சிதைவடையச்செய்து உட்புறத்திலும் வெளிப்புறங்களிலும் அதிகளவான குருதிக்கசிவை இந்த வைரஸ் ஏற்படுத்தி இறுதியில் மூச்சையே உறிஞ்சிவிடும்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கணிப்பீட்டின் படி, ஆட்கொல்லி வைரஸ்களில் வரிசையில் நான்காவது இடத்திலுள்ள இந்த எபோலா நோய்க்கு, இதுவரையிலும் 1013 பேர் தென் ஆபிரிக்க நாடுகளில் பலியாகியுள்ளதாக அந்த ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

சியோராலியோனி, லைபீரியா மற்றும் கினியா ஆகிய மூன்று நாடுகளிலேயே எபோலா நோயால் மரணங்கள் அதிகரித்துள்ளதுடன் எபோலா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாமையினால் இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகள் விழிப்படைந்து முன்னெச்சரிக்கை செய்துகொண்டுள்ளன.

இலங்கையை பொறுத்தவரையில் வெளிநாடுகளிலிருந்து வருகின்றவர்களிடத்தில் எபோலா தொற்றியுள்ளதா? என்பதை கண்டறிவதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க மற்றும் மத்தல, மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இரு சர்வதேச விமான நிலையங்களிலும் வைரஸை கண்டறிவதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த வைரஸ் மனிதர்களை மட்டுமன்றி, குரங்குகள், மனித குரங்குகளை பாதிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எபோலா என்றால் என்ன?



எபோலா தீ நுண்ம நோய் (Ebola virus disease) (EVD) அல்லது எபோலா குருதி ஒழுக்கு காய்ச்சல்(Ebola hemorrhagic fever) (EHF) என்று, எபோலா தீ நுண்மத்தின் நான்கு வகைகளால் மனிதரில் ஏற்படும் நோய் பெயரிடப்பட்டுள்ளது.

இது ஓர் உயிருக்கு கேடு விளைவிக்கும் கடுமையான நோயாகும். கடுமையான குருதி இழப்பு ஏற்பட்டு நோய்வாய்ப்பட்ட பத்து பேரில் சராசரியாக ஐந்து முதல் ஒன்பது பேர் உயிரிழக்கின்றனர்.

1976ஆம் ஆண்டு ஆபிரிக்காவின் சையர் நாட்டின் எபோலா ஆற்றங்கரையில் இத் தீ நுண்மம் முதலில் கண்டறியப்பட்டதால் இதற்கு எபோலா தீ நுண்மம் என்ற பெயர் ஏற்பட்டது. சையர், கோட் டிவார், சூடான் ஆகிய நாடுகளில் இத் தீ நுண்மம் பற்றுவதற்கான வாய்ப்புள்ளது.

நோய் பரவல்


இத் தீ நுண்ம நோய் வாய்ப்பட்ட நோயாளியின் நீர்மங்களுடன் தொடர்பு கொண்டவர்களுக்கு அவற்றின் மூலமாக தீ நுண்மம் உட்செல்கிறது. இது காற்றின் மூலமாகப் பரவுவதில்லை. எபோலா நோயுற்றவர்கள் ஏராளமாக குருதி இழப்பர். அவர்களது வயிற்றுப் போக்கிலும் வாந்தியிலும் குருதி இருக்கும். கடுமையான நோயுற்றவர்களின் மூக்கு, காதுகள் மற்றும் ஆண், பெண் குறிகளிடமிருந்து குருதி வெளியேறும். இந்த நீர்மங்கள் மற்றவர்களுக்கு இந்த நோய் பற்றிக்கொள்ள காரணமாக அமைகின்றன.

இது காயங்கள், சளி, இரத்தம் அல்லது உடலில் இருந்து வெளியேறும் திரவங்கள் (மலம், சிறுநீர், எச்சில், விந்து) மூலம் பரவுகிறது. எபோலா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பயன்படுத்திய துணி, படுக்கை விரிப்பு, பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மூலமும் இந்த நோய் பரவுகிறது.
நோய் அறிகுறிகள்

ஒருவருக்கு எபோலா தொற்றும்;போது முதல் அறிகுறிகள் மற்ற நோய்களை ஒத்திருக்கும். காய்ச்சல், உடல் தளர்ச்சி, தலைவலி, வயிற்றுவலி, மூட்டுவலி மற்றும் தொண்டைவலி ஆகியன முதல் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளால் மலேரியா அல்லது குடற்காய்ச்சல் நோயென தவறாக எண்ணப்படுவதுண்டு.

பின்னர் நோய் தீவிரமாகி குருதி இழக்கத் தொடங்குகின்றனர். இந்நிலையில் அதிர்ச்சி, குறைந்த குருதி அழுத்தம், விரைவான நாடித்துடிப்பு (இதயத் துடிப்பு), மற்றும் உறுப்புகளுக்கு குறைந்த குருதி வழங்கல் ஆகியன அறிகுறிகளாகும். இவற்றால் உறுப்புக்கள் செயலிழக்கத் ஆரம்பிக்கின்றன. இதனை உறுப்பு செயலிழப்பு என்கின்றனர். மேலும் நோயாளியின் உடலை இறுக்கமாக்குவதால் படுக்கையிலேயே இருக்க வேண்டியதாக உள்ளது.

மருத்துவ சிகிச்சை


இந்த நோய் தீ நுண்மத்தால் உண்டாவதால் மருந்துகள் இல்லை. ஆயினும் நோயாளிகளுக்கு நோயைத் தாங்க தகுந்த மருத்துவ சிகிச்சை அளித்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உயிர் பிழைக்கும் வாய்ப்பு ஏற்படும். எபோலா நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குருதி இழப்பினால் நேர்ந்த நீர்ம இழப்பைச் சரிகட்ட அவை தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வர வேண்டும்.

திடீர் காய்ச்சல், தீவிர பலவீனம், தசை வலி, தலைவலி, வறண்ட தொண்டை ஆகியவை எபோலா நோயின் அறிகுறிகளாகும். இதற்கு பிறகு வாந்தி, பேதி, தோல் தடித்தல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பு, உட்புறம் மற்றும் வெளிபுறம் இரத்த கசிவு ஏற்படலாம். குறைந்த வெள்ளை அணுக்கள், இரத்ததட்டுக்களின் எண்ணிக்கை மற்றும் அதிக அளவிளான கல்லீரல் சுரப்பிகள் உற்பத்தி என்பனவும் காணப்படும்.

குறித்த நோய்கிருமிகள் தாக்கியதிலிருந்து அதன் ஆரம்ப அறிகுறிகள் தெரிவதற்கான காலம் 2 முதல் 21 நாட்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் தென்படும்போது அவரால் பிறருக்கு இந்த நோய் பரவியிருக்கக்கூடும்.

குடும்ப நபர்களோ அல்லது சுகாதாரா மையங்களோ எபோலாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அதற்கான அறிகுறிகளுடன் தென்படுபவர்களுக்கு தாமாகவே சிகிச்சை அளிக்கக் கூடாது. எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தகுந்த மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட மருத்துவமனையை அணுகவேண்டும்.

பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அவர்கள் அதிக அளவில் உடல் உள்ள நீரை இழப்பதால் அவர்களுக்கு சத்துள்ள திரவங்கள் கொடுக்க வேண்டும். தற்போது இந்த நோய்யை குணப்படுத்த எந்த சிகிச்சையும் இல்லை. ஆனாலும், சில நோயாளிகள் தகுந்த மருத்துவ சிகிச்சையால் மீண்டு வரலாம். எபோலா நோய்க்கு அங்கீகரிக்கப்பட்ட மருந்தோ, தடுப்பூசியோ இல்லை.

இந்த நோய் அதிகமாக சுகாதார ஊழியர்கள், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர் இறந்த பின், இறுதி சடங்கின் பொழுது அவர்களின் சடலத்தை தொடும் நபர்களுக்கு பரவுகிறது. வீடுகளில், பொதுக்கூட்டங்களில், மருத்துவமனைகளில் சில மருத்துவ நடவடிக்கைகள் மூலம் இந்த எபோலா வைரஸை கட்டுப்படுத்தலாம்.

தனி நபர்கள் பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் பழகுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் (பழம் தின்னி வவ்வால், குரங்குகள், மனிதக் குரங்குகள்). விலங்கு பாதிக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தால் நீங்கள் அதைக் கையாளக்கூடாது. இறைச்சி உணவுகளை சாப்பிடுவதற்கு முன்பு நன்கு சமைத்திருக்க வேண்டும்.

எபோலா காற்றில் பரவாது என்றவகையில் நாமெல்லாம் சந்தோஷபடலாம். இவ்வாறான நிலையிலேயே எபோலா தீ நுண்மத்திற்கான தடுப்பு மருந்து கண்டறிய அறிவியலாளர்கள் முயன்று வருகின்றனர்.

சோகம்

இந்த வைரஸை மேலும் பரவ விடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த வைரஸ் கடந்த டிசெம்பர் மாதம் முதல் மீண்டும் பரவியுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

கினியாவின் தென்மேற்கில் உள்ள குயக்கேடோ கிராமத்தில் வசித்த இரண்டே வயதான சிறுவனுக்கு தான் முதன் முதலில் எபோலா வைரஸ் தாக்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக அச்சிறுவன் கடந்த டிசெம்பர் மாதம் 6 ஆம் உயிரிழந்தான்.

அவனது உயிரை குடித்த எபோலா வைரஸ் அந்த சிறுவனின் தாயாரையும் விட்டுவைக்கவில்லை அதை தொடர்ந்து ஒரு வாரத்தில் அவனது தாயாரும், 3 வயது அக்காவும், அதன் பிறகு அவனது பாட்டியும் இறந்தனர்.

இதற்கிடையே பாட்டியின் மரணத்திற்கு துக்கம் விசாரிக்க சென்றிருந்த உறவினர்கள். இருவரை எபோலா வைரஸ் கிருமி தொற்றிக் கொண்டதாகவும் அந்த கிருமி தொற்றுக்கு உள்ளான அவர்கள்  தங்கள் கிராமங்களுக்கு சென்ற பின்னர் அவர்களும் சில நாளில் இறந்ததுடன் இவர்கள் மூலம் இந்நோய் மற்ற நகரங்களுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் எபோலா நோயால் பாதிக்கப்பட்ட குயக்கேயோ கிராமம் சியாரோலோன் மற்றும் லைபீரியா எல்லையில் இருப்பதால் அந்த நோய் இங்கும் பரவியது. கடந்த மார்ச் மாதத்தில் 50 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதன் பிறகு தான் எபோலா வைரஸ் நோய் பற்றி வெளியே தெரியவந்தது.

முன்னாயத்தம்


இதேவேளை,எபோலா வைரஸ் தாக்கம் அதிகமாக காணப்படும் லைபீரியா நாட்டிற்கு இனிமேல் வேலைவாய்புகளுக்காக இலங்கையர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா அண்மையில் தெரிவித்திருந்தார்.

தற்போது லைபீரியாவில் வசித்துவரும் 200 இலங்கையர்களை அவர்களது உறவினர்களின் ஊடாக மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

எது எப்படியோ, விஞ்ஞானத்திக் வளர்ச்சி விண்ணை தாண்டி வேரூன்றியிருக்கும் இக்காலத்திலும் எண்ணிலடங்காத உயிர்கொல்லி நோய்களுக்கு விடைதேடி அலைகின்றது மருத்துவ உலகம்.

வருமுன் காப்போம் என்ற கூற்றுக்கு அமைவாக எபோலா மட்டுமல்ல எந்த வைரஸாக இருந்தாலும் அவதானத்துடன் இருந்தால் வேண்டாத அழிவுகளிலிருந்தும் இழப்புகளிலிருந்தும் நம்மை பாதுகாத்துகொள்ளலாம்.

You May Also Like

  Comments - 0

  • Anandi Thursday, 20 November 2014 11:01 AM

    அட கடவுளே... தயவு செய்து மருந்து கண்டுபிடிக்க உதவுங்க...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X