2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

முதல் போடாத தொழில் ஹஜ் கோட்டா: ஏ.எச்.எம்.பௌஸி

Thipaan   / 2014 ஓகஸ்ட் 13 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

அல்லாஹ்வுக்குப் பயந்து ஹஜ் விவகாரத்தை மேற்கொண்டுவருகின்றேன். எந்த வொரு ஹஜ் முகவருக்கும் கோட்டா விவகாரத்தில் அநியாயம் செய்யவில்லை. இதை நீதியாகவும் நேர்மையாகவும்; கையாண்டுள்ளேன். இந்த விவகாரத்தை பிரதியமைச்சர் காதரே குழப்பிவிட்டார் என்று ஹஜ் விவகாரங்களுக்கான இணைத்தலைவரும் சிரேஷ்;ட அமைச்சருமான ஏ.எச்.எம்.பௌஸி தெரிவித்தார்.

ஹஜ் கோட்டா விவகாரம் தொடர்பில் தமிழ்மிரர் இணையத்தளத்துக்கு அவர் வழங்கிய நேர்காணலின் முழு விவரம்:-

கேள்வி:  ஹஜ் கோட்டா விவகாரம் இவ்வாறு பிரச்சினையாவதற்கு காரணமென்ன?

 பதில்:  இலங்கையின் ஹஜ் விவகாரங்களுக்கு கடந்த 15 வருடங்களாக தலைமை தாங்கி அதை சிறப்பாக செய்து வருகின்றேன். கடந்த 2011ஆம் ஆண்டு மாத்திரம் இதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டு அந்த குழுவுக்கு இந்த ஹஜ் விவகாரம் அரசினால் ஒப்படைக்கப்பட்டது.

 அப்போது நான் அந்தக்குழுவில் இருந்து ஒதுங்கியிருந்ததுடன் அந்த ஆண்டு இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்கு சென்றவர்களினால் பல முறைப்பாடுகள் அரசுக்கு தெரிவிக்கப்பட்டதுடன் ஹஜ்ஜாஜிகள் சீரழியும் வகையிலும் பல் வேறு சம்பவங்கள் இடம் பெற்றிருந்தன.

 இந்த நிலையில் நான் ஒதுங்கியிருக்காமல் ஹஜ்ஜாஜிகளின் நன்மை கருதி மீண்டும் என்னிடம் ஹஜ் விவகாரங்களுக்கான தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

 நான் எந்த வொரு ஹஜ் முகவருக்கும் அநியாயம் செய்யாமல் நீதியாகவும் நேர்மையாகவும் அல்லாஹ்வுக்கு பயந்து இதை சிறப்பாக செய்து வருகின்றேன். கடந்த 2012ஆம் ஆண்டு பிரதியமைச்சர் காதரையும் ஹஜ் விவகாரங்களுக்கு இணைத்தலைவராக நியமித்ததையடுத்து இது பிரச்சினையாக மாறியுள்ளது.
 
கேள்வி : ஹஜ் கோட்டாவை எந்த பொறிமுறையில் பிரித்தீர்கள்?

பதில் : கடந்த காலங்களில் ஹஜ்முகவர்கள் எவ்வாறு ஹஜ்ஜாஜிகளை நடத்தினார்கள் ஹாஜிகளின் நலனில் எவ்வாறு அக்கறையாக ஹஜ்  முகவர்கள் செயற்பட்டார்கள் என்பதையெல்லாம் கவனத்திற் கொண்டே நாங்கள் ஹஜ்முகவர்களுக்கு ஹஜ் கோட்டாக்களை பிரித்துக் கொடுத்து வருகின்றோம்.

ஹஜ் முகவர்கள் நேர்முகப்பரீட்சையில் பெறப்பட்ட புள்ளிகளின் அடிப்படையிலேயே முகவர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

நேர்முகப்பரீட்சையின் போது முகவர்கள் கடந்த ஆண்டு அவர்களின் செயற்பாடு மற்றும் ஹாஜிகளுக்கு அவர்கள் செய்த நலன் என்பவற்றை கருத்திற் கொண்டு புள்ளிகளின் அடிப்படையில் ஹஜ் முகவர்களுக்கு கோட்டாக்களை பிரித்துக் கொடுப்பது எனவும் இதில் 50 புள்ளிகளுக்கும் குறைவாக எடுக்கும்  எந்த வொரு ஹஜ் முகவர் நிலையத்துக்;கும் இந்த முறை ஹஜ் கோட்டா வழங்குவதில்லையென முடிவெடுத்தோம்.
அந்த தீர்மானத்தின் படி 50 புள்ளிகளுக்கும் குறைவாக எடுத்த ஹஜ் முகவர்களுக்கு ஹஜ் கோட்டா வழங்கப்படவில்லை.

ஆனால், எவ்வளவுதான் இந்த கோட்டாவை பிரித்துக் கொடுத்து நன்மை செய்தாலும் ஹஜ் முகவர்கள் நன்றாக கதைப்பதில்லை. இதில் எந்தவொரு முகவரும் திருப்தியாக கதைப்பதில்லை. எனக்கு கோட்டா போதாது போதாது என்றே சண்டை பிடித்துக் கொண்டு இருப்பார்கள்.
ஹஜ்ஜாஜிகளின் பாதுகாப்பு மற்றும் ஹாஜிகளுக்கான சிறந்த சேவை ஆகியவற்றை கருத்திற் கொண்டு அல்லாஹ்வுக்கு பயந்து இந்த ஹஜ் கோட்டாவைப் பிரித்துக் கொடுத்தோம்.

 நாங்கள் எந்தவொரு முகவர் நிலையததுக்;கும் அநியாயம் செய்வதில்லை

 ஆனால், எந்த வொரு முகவருக்கு விஷேட சலுகைகள் வழங்குவதில்லை. சலுகைகள் கொடுத்து அதிக கோட்டாக்களை கொடுக்க வேண்டிய ஹஜ் முகவர்களுமுண்டு. ஆனால், அப்படி சலுகை செய்வதில்லை. உதாரணமாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன ஹஜ் முகவர் என்பது சிறந்த ஹஜ் முகவர் அவர்கள் சிறப்பான ஹஜ் சேவையை செய்து வருகின்றனர்.

 அவர்கள் 45 பேரை அழைத்துச் சென்று பெற்ற இலாபம் இருபது இலட்சம் ரூபாய் அந்த இலாபத்தை பள்ளிவாயல்களுக்கு மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கு, நோயாளிகளுக்கு செலவு செய்கின்றனர்.

அப்படியான சம்மேளனத்துக்கு 50 கோட்டாவை கொடுக்க வேண்டிய நிலையில் 75 கோட்டாவை கொடுக்க வேண்டும். அது எங்களது கடமை ஆனால் அப்படி நாங்கள் செய்வதில்லை.

அதே நேரம் ஒரு சில ஹஜ் முகவர்கள் ஹஜ் கோட்டாவைப் பெற்று அதை விற்பனை செய்கின்றனர். கோட்டாவை பெற்றவுடனேயே விற்பனை செய்கின்றனர். கோட்டாவை வாங்கிய முகவரும் சொல்லமாட்டார்கள் வாங்கியது என்று அதை விற்றவரும் சொல்ல மாட்டார் விற்பனை செய்தது என்று இதைப் பிடித்துக் கொள்வதும் கஷ்டம்.

ஹஜ் முகவர்கள் ஒரு ஹஜ் கோட்டாவை குறைந்தது ஐம்பதாயிரத்துக்கும் கூடியது ஒரு இலட்சத்துக்கும் அதற்கு மேலும் விற்பனை செய்கின்றனர். இந்த பணத்தை யார் ஈடு செய்வது. இந்த பணத்தை ஹாஜிமார்தான் கொடுக்க வேண்டும். இந்த மாதிரியான அநியாயங்களை சில ஹஜ் முகவர்கள் செய்கின்றனர்.

இந்த முறை ஹஜ் கோட்டாக்களை முகவர்களுக்கு வழங்கும் போது இதையெல்லாம் கவனத்திற் கொண்டு கோட்டாக்களை பிரித்துக் கொடுத்தோம்.

கேள்வி :   ஹஜ் கோட்hவை எப்படி பிரித்து கொடுத்தீர்கள்?

பதில்:  கடந்த முறை 85 கோட்டாவை வழங்கிய ஹஜ் முகவருக்கு இந்த முறை 45 கோட்டாவும், கடந்த முறை அனுதாபப்பட்டு 5 கோட்டாவை வழங்கிய முகவருக்கு இந்த முறை 18 கோட்டாவும் கொடுத்தோம்.

இந்த வகையில் மனச்சாட்சியின் படி நியாயமாக இதில் நடந்து கொண்டேன் என என்னால் துணிவாக சொல்லமுடியும்.

உதாரணமாக ஹாரா மற்றும் சேப்வே போன்ற ஹஜ் முகவர்களுக்கு 400, மற்றும் 300, 250, 200 என குறைந்து வந்தன. இதில் 400 கொடுக்கும் போது எங்களுக்கு 6,000 ஹஜ் கோட்டாக்கள் இருந்தன.

200 கொடுக்கும் போது 3,800 கோட்டாக்கள் இருந்தன. இப்போது 2,840 கோட்டாக்கள் வந்துள்ள நிலையில் ஒரு நியாயமான கோட்டாவை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

அவர்களுக்கு நியாயமாக கொடுத்துள்ளதுடன் சில சலுகைகளும் வழங்கியுள்ளோம். பழையவர்கள் என்பதையும் கவனத்திற்கொண்டு செயற்பட்டுள்ளோம்.

 85 கோட்டாவை கடந்த வருடம் பெற்ற ஒரு முகவருக்கு இம் முறை 45 கொடுத்துள்ளோம். 5 கோட்டாவை பெற்ற ஒரு முகவருக்கு இம் முறை 18 கோட்டாவை வழங்கியுள்ளோம்.

இந்த 18 கோட்டாவையும் விற்பனை செய்து விடுவார் இந்த ஹாஜிமாரின் பணத்தில் தான் இவர்கள் பணக்காரர்களாகின்றனர். முதல் போடாத தொழில்தான் இந்த ஹஜ் முகவர் தொழில் என்பதாகும்.

ஹஜ் முகவராகுவதற்கு எத்தனையோ வழிகளில் சிலர் வருகின்றனர். வீதியினால் செல்பவனும் ஹஜ் முகவராக வருவதற்கு முயற்சி செய்கின்றான்.

அமைச்சர்கள் கூட என்னிடம் ஹஜ் முகவர் ஒன்றை பதிவு செய்து தாருங்கள் என வருவார்கள் அதைக்கூட நான் பதிவு செய்வதில்லை.
கல்லில் நார் உரித்தாலும் அமைச்சர் பௌசியிடம் ஹஜ் முகவர் ஒன்றை பதிவு செய்து கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் கூறியதையும் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றோம்.

அந்தளவு கட்டுப்பாடுடனும், பொறுப்புணர்வுடனும்தான் இந்த ஹஜ் விவகாரத்தை செய்து வந்தேன்.

கடந்த 2011ஆம் ஆண்டு அசாத்சாலி போன்றோர் அரசுக்க வந்த போது ஏதாவது அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக ஹஜ் குழு ஒன்றை அமைப்போம் என ஜனாதிபதி கூறினார். அப்போது குழு அமைப்பதென்றால் நான் அதற்கு வரவில்லை எனக் கூறினேன்.

அந்தக் குழு கோட்டாவை பிரிக்கும் போது குழு உறுப்பினர்கள்  அவர்களுக்குத் தேவயானவர்களுக்கு சலுகை செய்ய முற்படுவார்கள் அவர்களுக்கு தனிப்பட்ட சுய விருப்பு வெறுப்பு இருக்கும் அதனால் பிரச்சினை வரும் என்பதற்காக நான் அந்தக் குழுவில் இருந்து இராஜினாமா செய்தேன்.

நான் அந்தக் குழுவில் இருந்து இராஜினாமா செய்ததையடுத்து  அலவி மௌலானா தலைமையில் ஆசாத் சாலி மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோரை உள்ளடக்கி ஒரு குழுவை அமைத்து அந்த ஆண்டு ஹஜ் விவகாரங்களை செய்தார்கள்.

அந்த முறை மிகவும் மோசமாக நடவடிக்கை இடம் பெற்றதுடன் சீரழிவுகளும் இடம் பெற்றன. இந்த விவகாரம் சீரழிக்கப்பட்டது.
இதையடுத்து என்னிடம் மீண்டும் பாரம் தரப்பட்டது.

கேள்வி : பிரதியமைச்சர் காதர் ஹாஜியார் இணைத்தலைவராக ஏன் இதற்கு நியமிக்கப்பட்டார்?

பதில்:
பிரதியமைச்சர் காதர் ஹாஜியார் பிரதம மந்திரியின் நெருங்கிய நண்பர் அவர் பிரதம மந்திரியிடம் அடிக்கடி சென்று தன்னையும் ஹஜ் விவகாரங்களுக்கு இணைத்தலைவராக நியமிக்குமாறு கூறிவந்தார். அந்த நிலையிலேயே பிரதியைமச்சர் காதர் ஹாஜியாரும் இணைத்தலைவராக இதற்கு நியமிக்கப்பட்டார். பிரதியமைச்சர் காதர் ஹாஜியார் அரசாங்கத்தில் இணைந்து கொண்ட அன்றிலிருந்து இந்த ஹஜ் விகாரங்களைப் பெற வேண்டும் என்ற பிடிவாதத்தில்தான் இருந்தார். என்ன காரணமோ எனக்கு தெரியாது.

கேள்வி:
இணைத்தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து அவர் ஒத்துழைப்புடன் இயங்கினாரா?

பதில்:
கடந்த வருடம் அவர் வரவே இல்லை. அவருக்கு கடந்த வருடம் அவர் நினைத்தமாதிரி கோட்டா அவருக்கு வழங்காததால் அவர் சில கூட்டங்களுக்கு கடந்த முறை வந்தார் சில கூட்டங்களுக்கு வரவில்லை. அவர் கடந்த முறை ஹஜ்ஜுக்கு செல்லவுமில்லை.
இந்த முறை ஹஜ் விவகாரங்களை கையாள்வது தொடர்பான கூட்டத்தை புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சு ஏற்பாடு செய்தது பிரதியமைச்சர் காதர் ஹாஜியாருக்கும் அழைப்புக் கொடுத்திருந்தது.

1.7.2014 அன்று அந்தக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்கு அவர் சமூகம் தரவில்லை. அந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன், மற்றும் அமைச்சின் செயலாளர் கே.எம்.பி.திஸாநாயக்க, மற்றும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.சமீல், மற்றும் குழு உறுப்பினர்களான என்.எம்.இக்பால், ஏ.எச்.எம்.மஸ்ஹுத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதியமைச்சர் காதர் ஹாஜியார் வரமாட்டாராம். அவருக்கு ஹஜ் கோட்டாவை ஐம்பதுக்கு ஐம்பது என பிரித்து தரவேண்டுமாம் இல்லாவிட்டால் கலந்து கொள்ள மாட்டாராம் என தெரிவித்தார் என இக் கூட்டத்தின் போது அமைச்சின் செயலாளர் கூறினார்.

அவருக்கு அரைவாசி எனக்கு அரைவாசி என கோட்டா பிரிக்க முடியாது. ஹஜ் குழுவொன்றுள்ளது. அந்தக்குழுதான் தீர்மானம் எடுக்க வேண்டும். பிரதியமைச்சர் காதர் ஹாஜியார் அநதக் கூட்டத்துக்;கு வந்து தனது ஆலோசனையை கூறியிருக்க வேண்டும். இந்த முகவருக்கு கோட்டா போதாது, இந்த முகவருக்கு கோட்டாவை அதிகரிக்க வேண்டும் என அவர் அந்தக் கூட்டத்திலேயே கூறியிருக்க வேண்டும்.

அவ்வாறில்லாமல் எனக்கு நூற்றுக்கு ஐம்பது தரவேண்டும் எனக் கேட்பது ஸக்காத் பிரிப்பது போன்றா அல்லது சாப்பாட்டை பிரிப்பது போன்றா அல்லது வெள்ள நிவாரணம் பிரிப்பது போன்றா? அல்லது நான் ஒரு பகுதியை பிரித்து எடுக்கின்றேன். நீங்கள் ஒரு பகுதியை பிரித்து எடுங்கள் என இதில் கூறமுடியாது. ஹஜ் கோட்டாவை அவ்வாறு பிரிக்க முடியாது.

1.7.2014 அன்று நடைபெற்ற ஹஜ்குழு கூட்டத்தின் தீர்மானத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே கோட்டாக்கள் பிரிக்கப்பட்டன.
அந்தக் கூட்டத்தின் தீர்மானத்தை முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.சமீல் கையொப்பம் இட்டு வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த தீர்மானத்தின் படி இவ்வாறுதான். ஹஜ் கோட்டாவை பிரிக்க வேண்டும். அத்தோடு புதிய முகவர்களுக்கு கோட்டா வழங்க முடியாது. பழைய முகவர்கள் கடந்த வருடம் ஹாஜிகளுக்கு செய்த நலன் மற்றும் அவர்களின் செயற்பாடு, இவர்கள் தகுதியா? தகுதியாயின் அவர் எப்படித்தகுதி  என்பவற்றை கருத்திற் கொண்டுதான் அவர்களுக்கு ஹஜ் கோட்டாவை பிரித்துக் கொடுக்க வேண்டும்.

ஐம்பதுக்கும் குறைவாக புள்ளிகளைப் பெறுபவர்களுக்கு கோட்டாவை கொடுப்பதில்லை என்பன போன்ற தீர்மானத்தின் அடிப்படையில்தான் ஒரு பொறி முறையின் கீழ் இந்த கோட்டா வழங்கப்பட்டன.

கேள்வி
: நீதிமன்றம் செல்லக்காரணமென்ன?

பதில்:
  பத்து ஹஜ் முகவர் நிறுவனங்கள் நீதிமன்றத்திற்கு சென்றார்கள். இவர்களில் ஒரு ஹஜ் முகவரைத்தவிர ஏனைய ஒன்பது ஹஜ் முகவருக்கும் குற்றங்கள் இருக்கின்றன. அவர்கள் ஹாஜிகளின் நலனில் அக்கறை கொள்ளவில்லை. வருமானப் பணத்தை சம்பாதிப்பதையே இலக்காக கொண்டு செயல்பட்டுள்ளனர். ஹாஜிகளை ஏமாற்றியுள்ளனர். இப்படியான ஹஜ் முகவர்கள் தான் நீதிமன்றம் சென்றனர்.

குளறுபடிகள் செய்யும் ஹஜ் முகவர்கள், ஏமாற்றுகின்ற ஹஜ் முகவர்களுக்கு நாங்கள் என்ன செய்வது? இப்படியான ஹஜ் முகவர்களை இடை நிறுத்தியிருக்க வேண்டும்.

 ஒரு ஹஜ் முகவர் அவருக்கு வழங்கிய ஹஜ் கோட்டாவை விற்பனை செய்து விட்டு மக்காவில் இடியப்பம் விற்பனை செய்கின்றார்.
சரி பரவாயில்லை என நினைத்து அவருக்கும் ஒரு கோட்டவை கொடுத்தோம். இன்னுமொரு ஹஜ் முகவர் சரியான வஞ்சகம் அந்த ஹஜ் முகவர் பலரை ஏமாற்றிய ஒரு பெயர் வழி;.

இந்த ஹஜ் முகவர் இந்த நாட்டிலுள்ள பிரபல்யமான முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவரின் சகோதரியை உம்றாவுக்கு அனுப்புவதற்காக பணத்தைப் பெற்றுக் கொண்டு இழுத்தடிப்புச் செய்து குறிப்பிட்ட பணத்தை விட அதிக பணத்தை பெற்றுக் கொண்டு அனுப்பிய ஒரு முகவர். இந்த முகவர் ஹாஜிகள் மற்றும் உம்றாவுக்கு செல்பவர்களை அடிக்கடி ஏமாற்றி வருகின்றார். இந்த முகவருக்கு எப்படி ஹஜ் கோட்டாவை அதிகமாக கொடுப்பது.

தெமட்டக்கொடயிலுள்ள மினன் பள்ளிவாயலின் முன்னாள் தலைவரை மரணவீட்டில் சந்தித்தேன். அவர் பக்கவாத நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார். அவர் என்னிடம் கூறினார் ஒரு ஹஜ் முகவரிடம் என்னை ஹஜ்ஜுக்கு கூட்டிப்போகுமாறு 495,000 ரூபாவை கொடுத்தேன். ஆனால் என்னை அந்த ஹஜ் முகவர் ஏமாற்றி விட்டார். ஹஜ்ஜுக்கு கூட்டிச் செல்லவில்லை. பணத்தை தாருங்கள் எனக் கேட்டேன் ஆனால் பணம் ஒருவருடமாக தரவில்லை.

கடைசியாக ஜம் இய்யத்துல் உலமாவைச் சேர்ந்த தாஸீம் மௌலவிதான் வந்து பணத்தை வாங்கித்தந்தார். இப்படி பல முறைப்பாடுகள் இந்த முகவர்களுக்கு எதிராக உள்ளன.

இப்படியான முகவர்களுக்கு எவ்வாறு ஹஜ் கோட்டாவை எப்படி அதிகமாக வழங்க முடியும்.

டிசெம்பர் மாதம் இறுதியில் அறுபதாயிரம் ரூபாவுக்கு உம்றாவுக்கு அழைத்துச் செல்லப்படும் என விளம்பரம் செய்கின்றனர். ஆனால் கடைசி நேரம் காலை வாரிவிட்டு அப்படி போக முடியாது டிக்கட் விலை அதிகரித்து விட்டது.

விஸா வரவில்லை என்றெல்லாம் கூறி இன்னும் பணம் தாருங்கள் எனக் கேட்கின்றனர். அறுபதாயிரத்துக்கு விமானப்பயணச் சீட்டு மாத்திரம் தான் வாங்க முடியும் இவ்வாறு அநியாயம் செய்து கொண்டிருக்கும் ஹஜ் முகவர்களுக்கு கோட்டாவை அதிகமாக வழங்குவது நியாயமா எனக் கேட்கின்றேன்.
 
 கேள்வி: இணைத்தலைமைக்கு நீங்கள் முடியாது என மறுத்திருக்கலாமே?

பதில்: நான் அவ்வாறு முடியாது என போனால் இது சீரழிந்து விடும். 2011ஆம் அவ்வாறுதான் நான் விட்டு விலகியிருந்த போது இது சீரழிந்தது. இப்பவும் அப்படி விட்டால் சீரழிந்து விடும். அதனால்தான் நான் இதைப் பொறுப்பேற்றேன்.
 
கேள்வி: பிரதியமைச்சர் காதர் ஹாஜியாரின் இந்தப்பிரச்சினையை நீங்கள் ஜனாதிபதியிடம்அல்லது பிரதம மந்திரியிடம் கூறி தீர்வு காண முயற்சிக்கவில்லையா?

பதில்:
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இந்தப்பிரச்சினை நன்கு தெரியும். ஆனாலும் இது நீதிமன்றத்திற்கு சென்று விட்டது. நீதிமன்ற தீர்;ப்பை அமுல் படுத்த வேண்டும்.

கேள்வி: சவூதி அரசாங்கம் இலங்கை நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுமா?

பதில்: சவூதி அரசாங்கம் இலங்கை நீதிமன்ற தீர்ப்பையெல்லாம் பார்க்காது. எனினும் நாங்கள் நீதிமன்ற தீர்;ப்பை மதித்து அதை சவூதி அரேபியாவுக்கு அனுப்பியுள்ளோம்.

கேள்வி :   தற்போது இந்த ஹஜ் விவகாரம் என்ன நிலையிலுள்ளது?

பதில்:  நீதிமன்றம் புதிய வழிமுறையை கையாளுமாறு கூறியுள்ளது அந்த அடிப்படையில் நாங்கள் அதைச் செய்துள்ளோம்.
ஏற்டிகனவே ஒரு பட்டியல் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்;ப்புக்குப் பின்னர் ஒரு பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.
பொறுத்திருந்து பாhக்க வேண்டும். சஊதி அரசாங்கம் எந்தப்பட்டியலை அனுமதித்து அனுப்பு கின்றதோ அதன்படியே இங்கு நடைமுறைப்படுத்த முடியும்.

இரண்டு பட்டியலை சஊதி அரசாங்கம் பாரம் எடுக்காது ஒரு பட்டியலைத்தான் அது பாரம் எடுக்கும்.
 
கேள்வி: இப் பிரச்சினையை நிரந்தரமாக தீhப்பதற்கு எதிர்காலத்தில் எவ்வாறான வழிமுறையை கையாள உள்ளீர்கள்.?

பதில்: எதி;ர்காலத்தில் இந்தப்பிரச்சினையை தீர்ப்பதாயின் அரசாங்கம் இதைப் பொறுப் பெடுத்து அரசாங்கமே ஹஜ்ஜுக்கு நேரடியாக ஹாஜிகளை அனுப்ப வேண்டும்.

ஒரு ஹஜ் முகவரிடம் கூட இந்த பொறுப்பை வழங்காமல் ஹஜ் முகவர்களை எடுத்து விட்டு அரசாங்கமே இதைச் செய்ய வேண்டும்.
பரீட்சாத்தமாக 250 ஹாஜிகளை கடந்த காலங்களில் அரசாங்கத்தால் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தேன். முஸ்லிம் அமைச்சர்களும் இதை வலியுறுத்தினார்கள்.

அவ்வாறு அரசாங்கத்தினால் அழைத்துச் சென்றால் எவ்வளவு செலவு போகின்றது என்பது பற்றி தெரிய வரும். 450,000 ரூபாவுக்கு ஹஜ் செய்யலாம் என்றால் இந்த முகவர்கள் ஆறு இலட்சம் ரூபா எடுக்கின்றனர்.

அதை ஒருவர் கூட எங்களிடம் முறைப்பாடு செய்வதில்லை. அவ்வாறு முறைப்பாடு செய்யாமல் இந்த முகவர்கள் ஹாஜிகளை ஆக்கி விடுகின்றனர். வழிகாட்டியாக செல்லும் மௌலிமார். அறபாவிலும், மினாவிலும் பெரிய துஆ ஒன்றை ஓதி நீங்கள் யாருக்கும் முறைப்பாடு செய்யக் கூடாது என ஒரு மூளைச்சலவை செய்வதால் அவர்கள் எங்களிடம் முறைப்பாடு செய்வதில்லை.

இப்படியான முகவர்களுக்கு மேலும் மேலும் அருள் புரிய வேண்டும் என பிரார்த்திக்கின்றனர் அதற்கு இந்த ஹாஜிமாரும் ஆமீன் என்கின்றனர்.
அவ்வாறு நான் பரீட்சாத்தமாக அரசாங்கத்தால் அழைத்துச் செல்ல முற்பட்டால் இந்த பிரதியமைச்சர் காதர் ஹாஜியார் பிரதமரிடத்தில் சென்று என்னை தேவையில்லாமல் முறைப்பாடு செய்கின்றார்.

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் அனைவரும் பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்படுத்தினோம்.

பதிவு செய்பவர் 25,000 ரூபாய் பணத்தை செலுத்தியே பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறையை ஏற்படுத்தினோம்.

சில முகவர்கள் போலியாக சிலரின் பெயர்களை பதிவு செய்து விட்டு கடைசி நேரத்தில் வந்து இவருக்கு போக முடியாது இவரின் மச்சானுக்கு இதைக் கொடுப்போம் என பொய் கூறுகின்றனர்.

நான் அவ்வாறு கொடுப்பதில்லை குறிப்பிட்ட ஹஜ் முகவர் பணத்தினை சம்பாதித்து கொள்வதற்காகவே இவ்வாறு செய்கின்றனர்.

25,000ரூபாவை செலுத்தி பதிவு செய்யும் ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்த்து ஹஜ்ஜுக்கு செல்லும் நேரம் அதை செலுத்தி ஹஜ்ஜுக்கு செல்வார். காணி வீடுகளை விற்று ஹஜ்ஜுக்கு செல்லத் தேவையில்லை.

ஆனால், இந்த பிரதியமைச்சர் காதர் ஹாஜியார் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் போய் நான் 25,000 ரூபா பணம் வாங்குவதாக கூறுகின்றார்.
பணத்தை எனது பக்கட்டில் வைப்பதாக இவர் கதைத்து திரிகின்றார்.

நான் இதுவரை களவு செய்ய வில்லை, கெட்ட பெயர் வாங்க வில்லை. மன் கொள்ளை அடிக்கவில்லை.

நான் ஹஜ்ஜுக் கோட்டாவுக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு வரவில்லை, எனக்கு நீதிமன்றத்தில் இருந்த வழக்கை நிவர்த்தி செய்வதற்காக இந்தக்கட்சிக்கு வரவில்லை.

அன்று ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருந்த கொழும்பு மாநகர சபையை இரத்தம் சிந்தாமல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநகர சபையாக மாற்றியவன் நான். அப்படி இந்தக்கட்சிக்கு வந்தவன் தான் நான்.

இந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கம் தாழப் போகும் நேரத்தில்தான் நான் இந்தக் கட்சியில் சேர்ந்தேன். எந்தவொரு நலனையும் எதிர் பார்த்து அன்று இந்தக் கட்சியில் நான் சேரவில்லை. இந்தக் கட்சி ஆட்சி ஆதிகாரத்தில் இருந்த நேரம் நான் இதில் சேரவில்லை.

இலங்கையிலிருந்து அடுத்த வருடம் ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் அனைவரையும் அரசாங்கம் பொறுப்பேற்று அவர்களை அனுப்பி வைக்க வேண்டும். அப்போது தான் பண வசதி குறைந்தவர்களும் ஹஜ்ஜுக்காக செல்லமுடியும்.

அரசாங்கம் இதை பொறுப்பெடுத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் கூறியுள்ளேன். அதை பரிசீலிப்பதாகவும் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அவ்வாறு அரசாங்கம் இந்த ஹஜ் விவகாரத்தை செய்தால் சில ஹஜ் முகவர்கள் இவ்வளவு காலமும் மக்களின் பணத்தை எவ்வளவு கொள்ளையடித்தார்கள் என்ற உண்மை வெளியே தெரியவரும்.

இந்தப் பிரச்சினைக்கு காரணம் பிரதியமைச்சர் காதர்தான் அவர்தான் இதில் பிரிவினையை தோற்றுவித்திருக்கின்றார். அவருக்கு ஒரு குழு சேர்த்துக் கொண்டு இதில் பிரிவினையை ஏற்படுத்தியிருக்கின்றார்.

ஹஜ் கோட்டா கிடைக்காதவர்களும், சரியாக ஹாஜிகளின் நலனை  கவனியாதவர்ளும் தான் பிரதியமைச்சர் காதருடன் சேர்ந்து கொண்டு இவ்வாறான வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

இந்த ஹஜ் முகவர்கள் தமக்கு ஹஜ் கோட்டா குறைந்து விட்டதாக கூறி அதை பொதுபல சேனாவிடம் சென்று முறையிடப் போவதாகவும் தகவல் கிடைக்கின்றது. இவர்கள் எப்படியானவர்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு பொதுபல சேனாவிடம் நியாயம் கேட்டு செல்லும் ஹஜ் முகவர்கள் அனைவருமே இந்த ஹஜ் விவகாரத்தில் ஊழல் செய்தவர்கள்.

கேள்வி: முஸ்லிம் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் இது தொடர்பில் என்ன நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்?

பதில்: அனைத்து முஸ்லிம் அமைச்சர்களுமே என்பக்கமே நின்று பேசுகின்றனர் ஏனெனில் அவர்களுக்கு தெரியும் நான் நியாயமாக இதைச் செய்கின்றேன். அவர்கள் அனைவருமே என்னிடம் இந்த விவகாரத்தை கொடுக்கு மாறே கூறுகின்றனர்.

அன்று அமைச்சர் ஹக்கீம் கூட ஜனாதிபதியிடம் என்னிடமே இதை பூரணமாக ஒப்படைக்குமாறு கூறினார்.

கேள்வி: சரந்தீப் முகவர் ஊடகங்களுக்கு விடுத்த கருத்து தொடர்பில் நீங்கள் என்ன கூறவிரும்பகின்றீர்கள்.?

பதில்: அவரின் உள்ளத்தை தட்டிக்கேட்டால் அவருக்கு விளங்கும் அவர் ஹாஜிகளுக்கு எவ்வளவு அநியாயம் செய்துள்ளார் எனப்பதை விளங்கிக் கொள்வார்.

எக்ஸன் முகவருக்கு 45க்கு கீழேதான் புள்ளி கிடைத்துள்ளது இதனால் அந்த முகவருக்கு கோட்டா வழங்கப்படவில்லை.

கேள்வி : முறையற்ற விதத்தில் நேர்முகப்பரீ;ட்சைகள் நடாத்தப்பட்டதாகவும் நேர்முகப்பரீ;ட்சைக்கு முன்பே புள்ளிகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றதே அது தொடர்பில் நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்.?

பதில்: நான் புள்ளி வழங்கவுமில்லை, நேர்முகப் பரீ;ட்சைக்கு முன்பு கோட்டா பிரிக்கவுமில்லை. அவர்களின் தகுதிக்கு ஏற்பவே புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் கோட்டாக்களும் பிரிக்கப்பட்டுள்ளன.

நான்கு மில்லியன் ரூபாய் சட்டத்தரணிகளுக்கு நீதிமன்றத்தில் செலவளித்துள்ளதால் இதில் அதிகம் இலாபம் இருப்பதாலேயே அவர்கள் இதை நீமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.

நீதிமன்றத்திற்கு சென்றதால் சரந்தீப் முகவருக்கு 15 கோட்டா கூட கிடைத்துள்ளது. அந்த 15 கோட்டாவாலும் 40 மில்லியன் சம்பாதித்துக் கொள்வார்.

15 கோட்டாவை கூட எடுப்பதற்கு நான்கு மில்லியனை அவர் செலவளித்துள்ளார். இதை ஹாஜிகளிடமிருந்தே அவர் பெறவேண்டும். இது ஹாஜிகளுக்கு செய்யும் பெரிய அநியாயமாகும்.

நான் இந்த நடவடிக்கையை மக்களுக்காகவே செய்தேன். ஹாஜிகளின் நன்மைக்காகவே மேற் கொண்டேன்.

கேள்வி:   இறுதியாக நீங்கள் என்ன கூறவிரும்புகின்றீர்கள்?          
          
பதில்: நான் ஹஜ் குழுவின் வழகாட்டலிலும் குழுவின் தீர்;மானத்திற்கேற்பவுமே நடந்து கொண்டேனே தவிர நான் எனது தனிப்பட்ட முடிவின் படி நடந்து கொள்ளவில்லை. இவை அனைத்தும் குழுத் தீர்மானத்தின் படியே மேற் கொள்ளப்பட்டது . இது இறைவனுக்குப் பயந்து நீதியாகவும் நேர்மையாகவும் மேற் கொண்டோம்.

இந்த விவகாரத்தை குழப்பி விட்டவர் பிரதியமைச்சர் காதர்தான் அவர் 2012ஆம் ஆண்டு இணைத்தலைவராக வந்தவுடன் 25 கோட்டாவை கேட்டார் நான் அதற்கு உங்களது யாராவது ஹஜ்ஜுக்கு போகவேண்டும் என்றிருந்தால் ஒரு முகவரைக்காட்டுங்கள் அவர்;களுக்காக முடியுமானளவு கொடுக்கின்றேன். என்றேன். பின்னர் சேப்வே முகவரை தந்தார் அவர்களுக்கு அன்று 75 கோட்டா ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர் பிரதியமைச்சர் காதரின் கோட்டா 15யை யும் அதிகமாக்கி 90ஆக கொடுத்தோம்.

பின்னர் சேப்வே முகவர் அந்த விடயத்தில் நட்ட மடைந்திருந்தார் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

எனவே நாங்கள் நீதியாகவும் நேர்மையாகவும் இந்த ஹஜ் விவகாரத்தை மேற் கொண்டுள்ளோம்.  எதிர் காலத்தில் அரசாங்கம் பொறுப்பேற்று இந்த ஹஜ் விடயத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளும் என  கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X