2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விசாரணை ஆரம்பம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 17 , பி.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் அரச படைகளுக்கும் இடையில் போர் நடைபெற்ற காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களைப் பற்றிய சர்வதேச விசாரணையை தடுத்துக் கொள்வதற்காக அரசாங்கம் நாட்டுக்குள்ளும் சர்வதேச ரீதியிலும் பெரு முயற்சியை எடுத்தது.

ஆனால், இப்போது அந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் அதைப் பற்றி தெரியாததைப் போல் கவனமில்லாமல் இருக்கிறது.

ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகரின் அலுவலகத்தால் நடத்தப்படும் அந்த விசாரணை கடந்த 4ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதைத் தடுப்பதற்காக எதையும் செய்ய முடியாததனாலோ என்னவோ அரசாங்கம் அதைப் பற்றி கருத்து வெளியிடவில்லை.

அதன் காரணமாக அந்த விசாரணை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு உள்ளதை நாட்டு மக்களில் பலருக்குத் தெரியாது. குறைந்தபட்சம் அரசாங்கத்தின் அமைச்சர்களிலும் ஒரு சிலர் மட்டுமே அதைப் பற்றி அறிந்திருக்கிறார்கள் போலும்.

இந்த விசாரணையையும் அதற்கு அடித்தளமாக அமைந்த அமெரிக்கா உட்பட ஐந்து நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

எனவே, தற்போது அரம்பிக்கப்பட்டுள்ள விசாரணையைப் பற்றி கருத்து வெளியிடும் அவசியம் இல்லை என அரச தலைவர்கள் வாதிடலாம்.

ஆயினும், விசாரணையின் பெறுபேறுகள் இலங்கை அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என தேசிய மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் ஏற்கெனவே கூறியுள்ளனர்.

இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் 2010ஆம் ஆண்டு மர்சூக்கி தருஸ்மானின் தலைமையில் நியமித்த மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் அங்கத்தவராக கடமையாற்றிய தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த யஸ்மின் சூக்கா, இந் நாட்டு ஆங்கில பத்திரிகையொன்றுக்கு அண்மையில் அளித்திருந்த பேட்டியொன்றில் இந்த தாக்கங்களைப் பற்றி கூறியிருந்தார்.

இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் மோதினால் நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகள் அல்லது நாட்டின் தலைவர்களுக்கு எதிராக பயணத் தடை போன்றவை விதிக்கப்படலாம் என அவர் கூறியிருந்தார்.

தருஸ்மான் குழுவின் உறுப்பினராக சூக்கா கடமையாற்றியதால் அரசாங்கத்தில் பலர் அவரது அந்த கூற்றை நிராகரிக்கலாம். ஆனால், அவர் தென்ஆபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவிலும் கடமையாற்றியவராவார்.

அந்த ஆணைக்குழுவைப் போன்றதோர் பொறிமுறையொன்றை இலங்கையிலும் உருவாக்கிக் கொள்வதற்காக உதவி வழங்குமாறு கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜாகொப் சூமாவிடம் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பான ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் விசாரணையைப் பற்றி அவ் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவித்தலின் பிரகாரம் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் மனித உரிமை பேரவையின் அடுத்த கூட்டத் தொடரின் போது அவ் விசாரணையின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அறிக்கை நகல் தயாரிக்கப்பட்டு முடிந்து இருக்க வேண்டும்.

அதே போல், விசாரணைக் குழுவிடம் முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காலம் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதன் பிரகாரம் எத்தனை முறைப்பாடுகள் கிடைத்த போதிலும் அவற்றை விசாரித்து பகுப்பாய்வு செய்து அறிக்கையின் நகலை தயாரிப்பதற்காக நவம்பர் மற்றும் டிசெம்பர் ஆகிய இரு மாதங்களும் ஜனவரி மாதத்தில் ஓரிரு நாட்களும் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

இந் நேர அட்டவணை உறுதியாக பின்பற்றப்படுமேயானால், அதேவேளை முறைப்பாடுகள் ஆயிரக் கணக்கில் கிடைத்து ஆராயப்பப் பட வேண்டிய ஆவணங்களும் ஆயிரக் கணக்காக இருந்தால் விசாரணை அவசர அவசரமாக செய்து முடிக்க வேண்டியிருக்கும். அது விசாரணையின் நம்பகத்தன்மையை சந்தேகத்துக்கு உள்ளாக்கிவிடும்.

சம்பந்தப்பட்ட ஆவணங்களை பரிசீலிக்கும் பணியை விசாரணைக் குழு இப்போதே ஆரம்பிக்கும். அரசாங்கத்தினாலும் சிவில் சமூக அமைப்புக்களினாலும் இலங்கையில் மனித உரிமை விடயங்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள ஆவணங்களுக்குப் புறம்பாக செய்மதி ஊடாகப் பெறப்பட்ட படங்கள் நம்பகமான காணொளி மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றையும் விசாரணைக்குழு ஆராயும் எனக் கூறப்படுகிறது.

போரின் இறுதிக் கட்டத்தின் போது சாதாரண மக்கள் 40,000க்கு மேல் கொல்லப்பட்டதாக தருஸ்மான் குழு 2011ஆம் ஆண்டு வெளியிட்ட தமது அறிக்கையில் தெரிவித்திருந்தது. அவ்வாறான, சம்பந்தப்பட்ட சகல ஆவணங்களும் சனல்-4 நிறுவனம் வெளியிட்ட பிரபாகரனின் மகனின் படங்கள் உட்பட ஏனைய படங்களும் விசாரணைக் குழுவினால் ஆராயப்படும் என்றே எதிர்ப்பார்க்கப்டுகிறது.

2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி முதல் 2011ஆம் ஆண்டு 15ஆம் திகதி வரையிலான கால கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்களையே விசாரணைக் குழு ஆராயும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்கள் தீர்மானிக்கப்பட்ட அடிப்படை தர்க்க ரீதியாக அமையவில்லை.

இலங்கை அரசாங்கம் நியமித்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் தமது விசாரணைகளுக்குரிய காலத்தின் ஆரம்பமாக 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதியையே குறிப்பிட்டு இருந்தது. எனவே அந்த அடிப்படையில் இந்த விசாரணைக்கான கால எல்லையின் ஆரம்பமும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது போலும்.

இது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகள் அமைப்புக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொண்ட நாளாகும். போர் நிறுத்த உடன்படிக்கை தோல்வியடைந்ததற்கு காரணம் மற்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பனவற்றை கண்டறியுமாறே நல்லிணக்க ஆணைக்குழு பணிக்கப்பட்டது.

எனவே, அந்த ஆணைக்குழுவுக்கு விசாரணைக்கான ஆரம்ப நாளாக  2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதியை விதிப்பது பொருத்தமானதாகும்.

ஆனால், நல்லிணக்க ஆணைக்குழு போர் நிறுத்த உடன்படிக்கையின் தோல்வியைப் பற்றி ஆராய்கிறது என்பதில் மற்றொரு கவனிக்கத்தக்க அம்சமும் இருக்கிறது. நல்லிணக்க ஆணைக்குழவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நியமித்தார்.

அவரும் அவரது ஆளும் கூட்டணியும் அந்த போர் நிறுத்த உடன்படிக்கையை கடுமையாக எதிர்த்தமை சகலரும் அறிந்த விடயமாகும். எனவே, போர் நிறுத்த உடன்படிக்கை ஏன் தோல்வியடைந்தது என்று ஆராய்வதற்காக அவர் ஆணைக்குழுவொன்றை நியமித்ததானது சற்று குழப்பமானதாகவே தெரிகிறது.

அரசாங்கத்தில் ஜாதிக ஹெல உறுமயவும் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியும் அங்கம் வகிக்கின்ற போதிலும்; போர் நிறுத்த உடன்படிக்கை ஏன் தோல்வியடைந்தது என்பதை ஆராய ஆணைக்குழுவொன்றை அக் கட்சிகளும் நியமிப்பதை எதிரக்கவில்லை.

இருந்த போதிலும் போரின் இறுதிக் கட்டமானது 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதிக்கு பின்னாலான கால கட்டமே என்பது இப்போது சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாக இருக்கிறது போலும்.

மனித உரிமை உயர் ஸ்தானிகரின் அலுவலகத்தால் நடத்தப்படும் விசாரணைக்குரிய காலம் 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதிக்கு பின்னாலான கால கட்டமாக இருக்க வேண்டும் என அவ்விசாரணைக்கு அடிப்படையாக அமைந்த ஜெனீவா பிரேரணையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னர் கூறியதைப் போலவே அதற்கு தர்க்க ரீதியிலான அடிப்படை இல்லாத போதிலும் அப் பிரேரணையில் விசாரணைக்குரிய காலத்தின் இறுதி நாளாக போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி குறிப்பிடப்பட்டமை ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

ஆனால், இப்போது மனித உரிமை உயர் ஸ்தானிகரின் அலுவலகம் விசாரணைக்குரிய காலத்தின் இறுதி நாளாக 2011ஆம் ஆண்டு 15ஆம் திகதியையே குறிப்பிட்டு இருக்கிறது. இது போர் முடிவடைந்து இரண்டரை வருடங்களுக்கு பின்னரான திகதியொன்றாகும்.

அது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்ட நாள் என்பதால் அதனை விசாரணைக்குரிய இறுதி நாளாக கொள்ளப்படும் என மனித உரிமை உயர் ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கும் மனித உரிமை மீறல்களுக்கும் சம்பந்தமே இல்லை.

விசாரணைக் குழுவிடம் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க மனித உரிமை உயர் ஸ்தானிகரின் அலுவலகம்
மின்னஞ்சல் விலாசம் ஒன்றையும் சாதாரண தபால் விலாசமொன்றையும் அதன் இணையத்தளத்தில் வழங்கியிருக்கிறது.

தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய எந்த மொழியிலும் முறைப்பாடுகளை அனுப்பலாம். புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் ஒலிப்பதிவு விவரங்கள் மின்னஞ்சலில் அனுப்ப வேண்டாம் என்றும் அதற்கான மாற்று வழிகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக  அவசியமானவர்கள்  மனித உரிமை உயர் ஸ்தானிகரின் அலுவலகத்தின் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

விசாரணைக் குழுவினரிடம் சாட்சியமளிக்க விரும்புவோருக்கு அந்த விடயத்தில் உதவியளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சாட்சியமளிக்க விரும்புவோர் தமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கடந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கூறியிருந்தார்.

இலங்கை அரசாங்கம் இந்த விசாரணையை நிராகரித்த போதிலும் தாம் தொடர்ந்தும் அவ் அரசாங்கத்துடன் இந்த விடயத்தில் தொடர்பு கொள்வதாக மனித உரிமை உயர் ஸ்தானிகரின் அலுவலகம் தமது இணையத்தளத்தின் மூலம் கூறுகிறது. இந்த விசாரணைக்காக இலங்கை அதிகாரிகளை சந்திப்பதற்காகவும் தேவையான ஆவணங்களை பெற்றுக் கொள்ளவதற்காகவும் தொடர்ந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

போரின் போது பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சியமளிப்போரையும் பாதுகாப்பதில் இலங்கை அரசாங்கத்துக்கும் பொறுப்புள்ளதாக அவ் அலுவலகம் கூறுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சியமளிப்பவர்கள் தமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்வதனால் இம்சைக்கு, அச்சுறுத்தலுக்கு, மிரட்டலுக்கு, பழிவாங்கலுக்கு அல்லது கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாமல் பாதுகாக்கும் பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் தாம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவ் அலுவலகம் மேலும் கூறுகிறது.

அதற்குப் புறம்பாக பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சியமளிப்போரையும் பாதுகாப்பதற்காக தாமும் தனியானதோர் பொறிமுறையை உருவாக்குவதாகவும் அவ் அலுவலகம் மேலும் அறிவித்துள்ளது.

இந்த விசாரணை நாட்டின் நற் பெயருக்கு இழுக்காகும் என்று கூறியே அராங்கம் அதனை நிராகரித்துள்ளது. அது உண்மை தான்.

ஆனால், இந்த விசாரணையின் போது இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்படும் கொலை குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அத்தோடு அவற்றுக்காக இலங்கை அரசாங்கத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் அல்லது அதிகாரிகள் ஒரு சிலராவது குற்றவாளிகளாக பிரகடனப்படுத்தப்பட்டால் இலங்கையின் நட்பு நாடுகள் உட்பட உலகில் பெரும்பாலான நாடுகள் அதனை ஏற்றுக் கொள்ளும்.

லிபியா தொடர்பாக இலங்கை அரசாங்கமும் அவ்வாறு தான் நடந்து கொண்டது. லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபி பலம் வாய்ந்தவராக இருக்கும் போது இலங்கை அரசாங்கம் அந்நாட்டின் நெருங்கிய நட்பு நாடாக இருந்தது.

ஆனால், அவர் கொல்லப்படுவதற்கு ஒரு மாதத்துக்;கு முன்னரே அவரது அரசாங்கத்துக்குரிய ஐ.நா. பொதுச் சபையின் ஆசனத்தை மேற்கத்திய நாடுகளின் அனுசரணையுடன் நிறுவப்பட்ட லிபிய தேசிய மாற்றுக் கவுன்சிலிடம் (NTC) கையளிப்பது தொடர்பாக பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது இலங்கை அரசாங்கம் அந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது. இவ்வாறு தான் இது போன்ற வியங்களின் போது உலகம் நடந்து கொள்கிறது.

இந்த விசாரணை எதிர்க்காலத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு பெரும் தலையிடியாக அமையப் போவது திண்ணமாக இருந்த போதிலும் அதனை எதிர்கொள்ளும் எந்தவொரு திட்டமும் அரசாங்கத்திடம் இருப்பதாக தெரியவில்லை.

விசாரணையை எதிர்க் கொள்ளாததனால் தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முறியடிக்கும் வாய்ப்பையும் அரசாங்கம் இழக்கிறது.

நாட்டின் நற்பெயருக்கு இந்த விசாரணை இழுக்காக அமைவதால் அரசாங்கம் அதனை நிராகரிப்பதாக டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றின் போது வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறியிருந்தார்.

இலங்கையின் மனித உரிமை நிலைவரம் தொடர்பாக விசாரணை நடத்துவதானது நாட்டின் நற்பெயருக்கு இழுக்காக அமையும் என்பது உண்மை தான். ஆனால், அந்த விசாணையின் போது அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளப்படுமேயானால் அது அதை விட மோசமான நிலைமையை உருவாக்கும்.

முழு உலகமே பார்த்திருக்கும் போது இஸ்ரேலியப் படைகள் பலஸ்தீனத்தில் ஆயிரக் கணக்கான மக்களை குண்டு வீசி கொலை செய்யும் போது அதனை கண்டிப்பதற்குப் பதிலாக அவற்றை ஊக்குவிக்கும் மேற்கத்திய தலைவர்களுக்கு இலங்கையில் மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேச தார்மிக உரிமை இல்லை என இலங்கை அரசாங்கத்தின் தலைவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான். ஆனால், இந்த நாட்டில் போலவே சர்வதேச ரீதியிலும் அரசியல் என்று வரும் போது ஆசாரங்களுக்கு அல்லாது அதிகாரத்துக்கே அங்கீகாரம் கிடைக்கிறது.

அந்த நிலைமையை எதிர் கொண்டு நாட்டுக்கு ஏற்படப் போகும் பெரும் அவப் பெயரை தடுத்துக் கொள்வது அல்லது அதனை குறைத்துக் கொள்வதே இன்று அரசாங்கத்தின் முன் இருக்கும் சவாலாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X